நோர்வூட் நகைக் கொள்ளையின் சூத்திரதாரி ஒரு பெண்! | தினகரன் வாரமஞ்சரி

நோர்வூட் நகைக் கொள்ளையின் சூத்திரதாரி ஒரு பெண்!

நோர்வூட் நகரில் அடகு பிடிக்கும் நிலையம் ஒன்றை கொள்ளையிட்டு மூன்று கோடியே 54லட்சம் ரூபா பெறுமதியான 177பவுன் தங்க நகைகளுடன் நான்கு பேர் கடந்த 30ம் திகதி ஹட்டன் கோட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆறுமாதகால வேட்டையின் பின்னரேயே இவர்கள் சிக்கினர்.

நோர்வூட் நகரில் அடகு பிடிக்கும் கடை உள்ளது. 2021டிசம்பர் மாதம் 09திகதி இக்கடையை உடைத்து அங்கிருந்த தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் கடந்த 2021டிசம்பர் மதம் 11ம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரு கோடியே 75லட்சம் ரூபா பெறுமதியான அடகு பிடித்த 175பவுன் தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளதாக இந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்ட நோர்வூட் பொலிஸ் நிலையத்தார் சந்தேகத்தின் பேரில் எவரையும் கைது செய்ய தவறியிருந்ததையடுத்து அடகு நிலைய உரிமையாளர் இது தொடர்பாக மேலும் ஒரு முறைப்பாட்டினை ஹட்டன் கோட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்தார்.

அதனைத் தொடர்ந்து இதனை விசாரிப்பதற்கு 2022.06.08ம் திகதி கோட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவிடம் இப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு கோட்ட குற்றத்தடுப்பு பிரிவில் சந்திரசிறி தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. இக்குழுவில் பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரேமலால், உப பொலிஸ் பரிசோதகர் சந்திரசிறி, உப பொலிஸ் பரிசோதகர் தசநாயக்க பொலிஸ் சார்ஜன் கமல், ரணசிங்க, பொலிஸ் கான்ஸ்டபிள்களான ரத்நாயக்க, பண்டார, மங்திலக, கொத்தலாவல, ரசிக்க, சமீர, லக்ஸ்மன், குணவர்தன, ஜயமின. பிரியதர்ஷினி, விதுரங்கி பிரியங்கனி, சாரதிகளான, சச்துர, அமில ஆகியோர் அடங்குகின்றனர்.

கொள்ளைச் இடம்பெற்ற தினத்தன்று இரவு அடகு நிலையத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்று தொடர்பாக பொலிஸாருக்கு ஆரம்ப சந்தேகம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து லொறியின் சாரதியைப் பின் தொடர்ந்துள்ளனர்.

இந் நிலையிலேயே இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த கோட்ட குற்றத்தடுப்பு பிரிவு கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற அன்றிரவு அவ்விடத்தின் அருகிலிருந்து இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் பதிவுகளை பெற்றுக்கொள்வதற்கு நீதி மன்றத்தின் உதவியை நாடினர்.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இப்பதிவுகளை பரிசீலனை செய்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய தொலைபேசி இலக்கங்களின் பதிவுகள் தொடர்பாக மேலதிக விசாரணைக்காக மீண்டும் தொலைபேசி கோபுர பதிவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டது.

விசாரணைகள் தொடர்ந்து கொண்டிருக்கும்போது பொலிஸாருக்கு ஒரு சில விசாரணைக்கு உதவும் குறிப்புகள் கிடைக்கின்றன. இக் கொள்ளையில் லொரி சாரதி சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அக்கடையில் பல வருட காலமாக வேலை செய்த பெண் ஒருவர் தான் இதனை திட்டமிட்டுள்ளார் என்றும் அத்தகவல்கள் பொலிசாரை உசார்படுத்தின.

இந்நிலையில் ஒரு தொலைபேசி இலக்கத்தில் நடைபெற்ற உரையாடல் பதிவுகளை பரிசீலித்தபோது  கடையின் உள் இருந்தும் மற்றைய தொலைபேசி இலக்கம் கடையின் வெளியிலிருந்தும் உரையாடுவதாகவும் அமைந்திருப்பது கண்டறியப்பட்டது.

அவதானமாக உரையாடல்களை பரிசீலித்தபோது ஒருவரது உரையாடல் கடையின் உள்ளிருந்தும் மற்றவருடைய உரையாடல் கடையின் வெளியிலிருந்தும் நடைபெற்றிருப்பது ருசுவானது. அதனைத் தொடர்ந்து கடை உள்ளிருந்து உரையாடியவரின் தொலைபேசி இலக்கத்தினை ஆராயும் போது குறித்த நபர் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் பின் தொடரப்படுபவர் என்பதும் தெரியவந்தது. பொலிஸார் புதிய உற்சாகத்துடன் அடுத்தகட்ட நகர்வுகளை மேற்கொண்டபோது  பொலிஸாருக்கு பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அடகுக் கடையில் வேலை செய்யும் பெண் குறித்த அக்கடையில் கடந்த பல வருடங்களாக பணி புரிந்து வந்திருப்பவர் என்பதும் இவர் குடும்பத்தில் ஒருவரைப் போல் அக்கடையில் பணியாற்றி வருபவர் என்பதை பொலிஸார் அறிந்து கொண்டனர்.  இவரின் நடத்தை காரணமாக அப்பெண்ணை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கடை உரிமையாளரின் மகன் வற்புறுத்தியிருக்கிறார்.

இதையடுத்து இந்த பெண்ணுக்கும் கடை உரிமையாளர் குடும்பத்திற்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றியுள்ளன.

இதையடுத்து கடை உரிமையாளர்களை பலி தீர்க்க வேண்டும் என்று எண்ணிய அப்பெண்  காலம் கனியும் வரை காத்திருந்துள்ளார். இந்நிலையில் உரிமையாளரின் உறவினரின்  திருமண வீடு ஒன்றுக்கு செல்ல இருப்பதாக ஒரு தகவல் அப் பெண்ணுக்கு ஆறுமாதத்திற்கு முன்பே தெரிய வருகிறது. தான் எதிர்பார்த்திருந்து நேரம் தன்மடியில் வந்து விழுந்திருப்பதாக கருதிய அப்பெண் திட்டத்தை வகுக்க  ஆரம்பிக்கிறார்.

இப் பெண்ணுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளன. மற்றொரு சந்தேக நபரான லொறி சாரதியுடன்  மது அருந்தியபடியே  பெண் தன்னுடைய மனதில் உள்ள திட்டத்தை கூறியதாகவும் அதனைத் தொடர்ந்து இதற்கு பொருத்தமாக மேலும் இருவர் அவசியம் என குறிப்பிட்டதாகவும் தெரியவந்தது. அதற்காக இந்தப் பெண் சுமார் ஐந்து லட்சம் ரூபா வரை செலவு செய்துள்ளதாகவும் அறிய முடிகிறது.

உரிமையாளர் திருமண வீட்டுக்கு செல்வதற்கு முன் அப்பெண் ரோசி தனக்கு சொந்தமான உடைமைகளை எடுத்துக் கொண்டு; அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

பிரிதொரு தினத்தன்று கடை உரிமையாளர் மற்றும் அவரது குடும்பம் கொழும்புக்கு சென்றுள்ளனர். ஏனைய நாட்களில் அவர்கள் வெளியில் செல்லும் போது ரோசி என்ற கடையில் வேலை செய்யும் அப் பெண்ணை நிறுத்தி விட்டு செல்வதே வழக்கம். எனினும் அன்று அவர் பொறுப்பாக கடையை பார்த்துக்கொள்ள மறுத்திருக்கிறார். தன்னுடைய உடைமைகளை எடுத்துச் சென்றதற்கு அதுவே காரணமாம்.

இதேசமயம் லொரி சாரதி தன்னுடைய உதவியாளரான க. ராஜசேகரனை கொழும்பிலிருந்து வரவழைக்கிறார். அவருக்கு உதவியாக  தனது ஊரிலுள்ள மற்றுமொருவரை அவர் இணைத்துக் கொள்கிறார்.

இந்நிலையில் கடையில் பணிபுரிந்த ரோசி என்ற அந்தப் பெண் கடை உரிமையாளர் குடும்பத்தினர் கொழும்பு செல்வதற்கு முன் இரண்டாம் மாடியில் உள்ள ஜன்னலின் தாழ்ப்பாளை போடாமல் திறக்கக்கூடிய மாதிரி விட்டுவிடுகிறார்.

இந்த நிலையிலேயே கொள்ளைச் சம்பவம் 09ம் திகதி நடைபெறுகிறது. முதல் வேலையாக லொறி சாரதியும், உதவியாளரும் அவரால் கூட்டிவரப்பட்டவரும் சாரதியின் வீட்டில் மது அருந்தி தம்மைத் தயார்படுத்திக் கொண்டனர்.

அப்போது ரோசி என்ற சூத்திரதாரி லொறி சாரதியின் மாமியின் வீட்டில் அதாவது கடைக்கு பின்புறமாக உள்ள வீட்டில் இருக்கிறார். அனைவரும் திட்டமிட்டபடி எவரையும் அடையாளம் காண முடியாதபடி ஆடை அணிந்து கொண்டு வீட்டிலிருந்து புறப்பட்டு அடகு கடைக்கு முன் வருகின்றனர்.

இரண்டு பேர் கடைக்கு பின்புறமாக உள்ள சாரதியின் வீட்டிலிருந்து பெற்றோல் நிரப்பு நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறியை நோக்கி வருகின்றனர். லொரியை ஸ்டார்ட் செய்து கடையின் முன் நிறுத்துகின்றனர். அங்கே ரோசியும் வருகிறார்.

அவர்கள் லொறியின் மேல் ஏறி மின்கம்பம் வழியாக இரண்டாம் மாடியின் திறந்த ஜன்னலின் வழியாக கடையினுள் நுழைகின்றனர். ரோசியிடம் இருந்த மற்றுமொரு சாவியைக்  கொண்டு அலுமாரியை திறந்து சகல அடகு நகைகளையும் ஒரு பைக்குள் போட்டு கயிற்றின் வழியாக கீழிறக்க ரோசி அப்பையை வாங்கிக்கொள்கிறார். பின்னர் கட்டடத்தை  தீயிட்டு கொளுத்த முடிவாகிறது. எனினும் அக்கட்டடத்தை ஒட்டியதாக மருந்தகம் ஒன்று இருந்ததால் அந்த யோசனை கைவிடப்படுகிறது.

இதில் திடுக்கிடும் மற்றுமொரு சம்பவமும் தெரியவருகிறது. நகைகளைத் திருடிய பின்னர் கட்டடத்தை  தீயிட்டு கொளுத்தி விட வேண்டும் என்பதே ரோசியின் திட்டம். அதில் ரோசி மற்றுமொரு திட்டத்தையும் உள்ளடக்கியிருந்தார்.

இவரின் திட்டப்படி கொள்ளையை  8ஆம் திகதியே நடத்தியிருக்க வேண்டும். ஏனென்றால் ரோசி அவ்வீட்டில் உள்ள எரிவாயு சிலிண்டரின் குழாயை அறுத்துள்ளார். எரிவாயு கசிந்திருக்கும் நிலையில் கொள்ளையின் பின்னர் கட்டடத்தை  நெருப்பு வைக்க சுலபமாக இருக்கும் என்பதே ரோசியின் திட்டமாக இருந்தது. சில சமயம் கொள்ளையுடன் சம்பந்தப்பட்டவர்களும் தீயில் சிக்கி காலமாகிப் போனால் நகைகளை பங்கிட வேண்டிய அவசியமும் இருக்காது. கொள்ளைச் சம்பவமும் திசைதிரும்பி விடும். அப்போது அவர் மீது சந்தேகமும் ஏற்படாது என்று எண்ணியிருக்கலாம் என்பது பொலிசாரின் சந்தேகம்.

எனினும்  08ம் திகதி கொள்ளைச் சம்பவம் இடம்பெறாது 09திகதி நடததால் எரிவாயு காற்றுடன் கலந்து வெளியேறி விட்டதால் கொள்ளையிட்டவர்கள் உயிர்தப்ப முடிந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

கொள்ளையிட்ட நகைகளை லொறியில் போட்டுக்கொண்டு  நேரடியாக மட்டக்களப்பு நோக்கிச் சென்றுள்ளனர். போகும் வழியில் இவர்கள் வழமையாக குளிக்கும் இடத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நகையை புதைத்து வைத்துவிட்டு திரும்பி வந்துள்ளனர்.

இரண்டு மூன்று மாதங்கள் கழிந்த நிலையில் லொறிச் சாரதியிடம் சந்தேகத்தின் பேரில் வாக்குமூலம் பெறப்பட்டதனால் நகைகளை விற்பனை செய்வதில் தாமதம் ஏற்பட்டது.  இந்நிலையில்  மீண்டும் மட்டகளப்பு சென்று  மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை எடுத்து இதனை வேறு எங்காவது மறைத்து வைக்க முயல்கின்றனர். பின்னர் தங்க நகைகளை கொண்டு வந்து நோர்வூட் வெஞ்சர் பகுதியிலுள்ள வீட்டில் மறைத்து வைக்கின்றனர்.

பொலிசாருக்கு தொடர்ந்து இவர்கள் மீது சந்தேகம் காணப்பட்டதனால் இந்த தங்க நகைகளை விற்பனை செய்ய முடியவில்லை. இந்நிலையில் தொடர்ந்து தொலைபேசி அழைப்புக்களை கண்காணித்து வந்த பொலிஸார் கடந்த 30திகதி அவ் வீட்டைச் சுற்றி வளைத்து சோதனையிட்டனர்.  தங்க நகைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தை கண்டுபிடித்து தங்க நகைகளை மீட்டெடுத்தனர். சம்பவத்துடன் தொடர்புயை சந்தேக நபர்களான காந்தன் ராஜசேகரன், நாகன் ஸ்கந்தமுருகன், சரணமுத்து சுபராஜ், ரத்நாயக்க முதியன்சலாகே ரோசினி ஆகிய நான்கு பேரை கைதுசெய்து ஹட்டன் நீதவான் முன்னிலையில் பொலிசார் நிறுத்தினர். அவர்கள் அங்கே குற்றத்தை ஒப்புக்கொண்டதால் எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

களவாடப்பட்ட தங்க நகைகள் அடகு வைக்கப்பட்ட தங்க நகைகள் என்பதனால் அவற்றை பத்திரமாக வைக்குமாறு கூறி கையளிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கொள்ளைச் சம்பவத்தில் திருடிச்சென்ற 179.59எடை கொண்ட 54தங்கச் சங்கிலிகள் 526.16எடை கொண்ட 757தோடுகள், 144.36எடை கொண்ட 177  பெண்டன்கள், 404.71எடை கொண்ட 404மோதிரங்கள், 101.89எடை கொண்ட 84டசல்கள், 41.22எடை கொண்ட பேஸ்கட்கள், 5.99எடை கொண்ட 01வளையல், 7.32எடை கொண்ட நிக்ல்ஸ் 4.73எடை கொண்ட தங்கத்துண்டுகள் ஆகியன இதன்போது மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மலைவாஞ்ஞன்

Comments