ஜனாதிபதி, பிரதமரை பதவி விலக கட்சித் தலைவர்கள் வலியுறுத்து | தினகரன் வாரமஞ்சரி

ஜனாதிபதி, பிரதமரை பதவி விலக கட்சித் தலைவர்கள் வலியுறுத்து

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் உடனடியாக பதவி விலக வேண்டும் என கட்சித் தலைவர்கள் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

அரசியலமைப்பிற்கிணங்க நாட்டின் ஜனாதிபதியாக தற்பொழுது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பதவி ஏற்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் நேற்று சபாநாயகரின் இல்லத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே பெரும்பாலான கட்சித் தலைவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

சர்வ கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று பிற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் நடைபெற்றுள்ளது.

அந்த கூட்டத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் உடனடியாக பதவி விலக வேண்டும் என பெரும்பாலான கட்சித் தலைவர்கள் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அது தொடர்பில் தெரிவிக்கையில், அரசியலமைப்புக்கு இணங்க ஜனாதிபதியும் பிரதமரும் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் சபாநாயகர் தற்காலிகமாக ஜனாதிபதி பதவியை ஏற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதே வேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக மேற்படி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்;

ஜனாதிபதியும் பிரதமரும் தமது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே கட்சியின் நிலைப்பாடு என்றும் தெரிவித்துள்ளார்.

நேற்றைய இந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான அனுரகுமார திசாநாயக்க, எம் ஏ சுமந்திரன் ஆகியோரும் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக கலந்து கொண்டுள்ளனர்.

ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக நேற்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றதுடன் கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகத்தையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.

அதனையடுத்து நேற்று பிற்பகல் கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றுக்காக அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் சபாநாயகர் அழைப்பு விடுத்திருந்தார்.

பிற்பகல் 4:30மணியளவில் அந்தக் கூட்டம் ஆரம்பமாகியதுடன் பெரும்பாலான கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

அதேவேளை நேற்று பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கட்சித் தலைவர்களின் தீர்மானத்திற்கு மதிப்பளிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்ததாகவும் பிரதமர் அலுவலகம் நேற்று தெரிவித்தது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Comments