சுதந்திரம் பெற்ற நாள் முதல் இனவாதம், மதவாதம் மற்றும் அரிசி அரசியல் ஆகிய மூன்றையும் மையப்படுத்தியே இந்நாட்டின் தேசிய அரசியல் நடத்தப்பட்டு வந்துள்ளது. மதவாதம் பெரும்பாலும் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவத்துக்கு எதிரானதாகவே அமைந்திருந்தது. கத்தோலிக்க பாடசாலைகள் தேசிய மயமாக்கப்பட்டன. ஆஸ்பத்திரிகளில் கன்னியாஸ்திரிகள் சேவையாற்றி வந்தமை விரும்பத்தகாத ஒன்றாகப் பார்க்கப்பட்டது. வெளிநாட்டு கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ பாதிரியார்கள் வெளியேறிச் செல்ல ஊக்குவிக்கப்பட்டனர்.
சிங்களம் மட்டும் சட்டம் நிச்சயம் வரவேண்டிய ஒரு சட்டமே. சிங்களவர்கள் தமது தாய் மொழியில் கற்கவும் அம்மொழியிலேயே அரசுடன் தொடர்பு கொள்ளவும் அம் மொழியையே உத்தியோக மொழியாகப் பயன்படுத்தவும் உரித்துடையவர்களே. தமிழை பூர்வீகமாக உபயோகித்து வரும் இலங்கைத் தமிழ்க் குடிகளுக்கும் அதே உரிமை உண்டு என்பதை ஒக்ஸ்போர்ட்டில் ஆங்கில வழிக் கல்வி கற்ற கிறிஸ்தவரான எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க மறந்து போனது இந் நாட்டின் இன ஒற்றுமைக்கும் ஒன்றிணைந்த பொருளாதார வளர்ச்சிக்கும் குந்தகமானது. இதை அவர் நிச்சயம் உணர்ந்திருப்பார். ஆனால் சிங்களம் மட்டும் என்ற கோஷமே தன்னை பிரதமர் பதவியில் அமர்த்தும் என்பதே அவருக்கு முக்கியமானதாக இருந்தது. தாமதமாகவே தன் தவறை உணர்ந்த அவர், பண்டா - செல்வா உடன்படிக்கை மூலம் அதை சரி செய்ய முயன்ற போதிலும், அவர் வளர்த்த இனவாதத் தீயே அவரை ஆகுதி ஆக்கிக் கொண்டது.
எனினும் இலங்கை அரசியலில் வாலில் தீ வைத்த அனுமனாக நீண்ட காலமாகவே வளர்ச்சிக்கான சகல வாய்ப்புகளையும் சுட்டெரித்து வந்திருப்பது இனவாதமே. இலங்கை இனவாதம் முற்றிலும் கற்பனையானது என்பதே சரியான பார்வையாக இருக்க முடியும். அது டீ.எஸ். சேனநாயக்க பற்ற வைத்த தீ. இந்தியா, இலங்கை வாழ் தமிழர்களைத் தமக்கு சாகதமாகப் பயன்படுத்தி ஆக்கிரமிப்புகளை மேற்கொள்ளலாம் என்ற சிங்களத் தலைவர்களின் ஒரு அச்ச உணர்வு, உண்மையில் சோழர் படையெடுப்புகளுடன் சம்பந்தப்பட்டது. இந்தியா சுதந்திரம் பெற்றதும் தனிநாடாக விளங்கிய காஷ்மீரை தன்னுடன் இணைத்துக் கொண்டது. அதற்காக இந்தியா ஒரு யுத்தத்தை பாகிஸ்தானுடன் நடத்த வேண்டியிருந்தது. பின்னர் பிரெஞ்சு காலனியாக விளங்கிய பாண்டிச்சேரியை இணைத்துக் கொண்டது. அப்போது கோவா போர்த்துக்கேயர் வசமிருந்தது. அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் இராணுவத்தை அனுப்பி கோவாவை இந்தியாவுடன் இணைந்தார்.
இந்தியாவின் இப்போக்கும், திபெத் ராஜ்ஜியத்தை சீனா கபளீகரம் செய்ததும், நேபாளத்தைத் தன் பாதுகாப்பில் இந்தியா வைத்திருந்ததும், இந்தியாவுக்கு மிக நெருக்கமாக அமைந்திருக்கும் இலங்கைக்கு ஒரு பாதுகாப்பற்ற உணர்வை ஊட்டியிருந்தது. இலங்கை உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா மூக்கை அடிக்கடி நுழைப்பதற்கு இங்கு வாழும் வம்சாவளித் தமிழர்களும் தொப்புள் கொடி உறவு கொண்டிருக்கும் வட புலத்துத் தமிழர்களும் காரணிகளாக அமைவார்கள். எனவே அவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்ல; அவர்களுக்கு உரிமைகள் வழங்குவது இறுதியாக இந்தியாவின் விஸ்தரிப்பு வாதத்துக்கே உரம் சேர்க்கும் என்பது சிங்கள பௌத்த அரசியல் தலைவர்களின் பார்வையாகவும் அச்சமாகவும் இருந்தது. 1971ஜே.வி.பி ஆயுத கிளர்ச்சியில் ஈடுபடுவதற்கு முன்னர் ஜே.வி.பி. தலைவர் ரோஹண விஜேவீர ஏழு வகுப்புகளை நடத்தினார். அவற்றில் ஒன்று இந்திய விஸ்தரிப்புவாதம் என்பதாகும். இந்தியா நம்பிக்ைகக்குரிய நாடு அல்ல என்பது போலவே இங்கு வாழும் வம்சாவளித் தமிழர்களும் இந்திய அடிவருடிகளாக மாற்றப்படக் கூடியவர்களே என்பதை அந்த வகுப்பு அடிப்படையாகக் கொண்டிருந்தது. ஜே.வி.பி. இப் பாடத்தை நடத்திய சமயத்தில் வம்சாவளித் தமிழர்கள் நாடற்றவர்களாக, உரிமைகள் இழந்தவர்களாக ஆக்கப்பட்டிருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.
டீ.எஸ். சேனநாயக்க குடியுரிமையை பறித்தார். எஸ்.டபிள்யூ. ஆர். டீ. பண்டாநாயக்க தான் ஆட்சி பீடமேறுவதற்கான குறுக்கு வழியாக சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டு வந்தார். இலங்கையின் மத்திய மாகாணத்தில் வம்சாவளித் தமிழர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் தேசிய அரசியலில் அவர்களின் ஆதிக்கத்தைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஸ்ரீமா - சாஸ்திரி உடன்படிக்கையை கொண்டு வந்தார். எதிர்பார்த்த எண்ணிக்ைக சாத்தியப்படாவிட்டாலும் மூன்றரை லட்சம் தமிழர்களை தென்னிந்தியாவுக்கு அவரால் அனுப்பி வைக்க முடிந்தது. 1972குடியரசு அரசியல் சட்டத்தின் கீழ் தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன. தரப்படுத்தல் அமுலுக்கு வந்தது. தமிழர்களின் சாத்விகப் போராட்டங்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. வேறுசில இனவாதக் கொள்கைகளும் ஸ்ரீமா பண்டாரநாயக்காவிடம் இருந்த போதிலும் இடையில் வந்த உணவுப் பஞ்சம், அரசின் மீதான மக்களின் கவனத்தை வேறு பக்கம் திருப்பியது. 1978அரசியலமைப்புச் சட்டத்தில் சிங்களம் உத்தியோக மொழி. தமிழும் உத்தியோக மொழியாக (Tamil Also) இருக்கும் என்றிருக்குமாறு ஜே.ஆர். ஜயவர்தன பார்த்துக் கொண்டார். மேலும் 1983இனக்கலவரத்தின் சூத்திரதாரி யார் என்பது அனைவருக்கும் தெரியும்.
வடக்கு கிழக்கில் ஆயுத போராட்டம் கிளர்ந்தெழுந்தபோது அது பயங்கர வாதமாக மட்டுமே பார்க்கப்பட்டதே தவிர அதற்கான பின்னணிக் காரணங்களை தென்னிலங்கைக் கட்சிகள் ஆராய்ந்து தீர்வு காண முற்படவில்லை. தமிழ்ப் பயங்கரவாதம் அவர்களின் இனவாத அரசியல் படகுகளை நகர்த்துவதற்கான சமுத்திரமாக விளங்கியது. 2009இறுதிப் போரில் வாகை சூடிய மஹிந்த ராஜபக்ச, தன்னை துட்டகைமுனுவாக வரிந்து கொள்வதில் காட்டிய கரிசனையில் ஒரு சிறு பகுதியையாவது தமிழர் பிரச்சினையைத் தீர்த்து நாட்டை சுபீட்சும் நோக்கி முன் நகர்த்த வேண்டும் என்பதற்காக செலவிடவில்லை. நியாயமான ஒரு தீர்வுக்கு அவர் முன்வந்திருந்தால் அதற்கு சிங்கள மக்கள் நிச்சயம் அச் சமயத்தில் ஆமாம் போட்டிருப்பார்கள்.
கோட்டாபய ராஜபக்ச தான் பதவியேற்றது முதல் இறுதி காலம் வரைத் தன்னை ஒரு பௌத்த சிங்களத் தலைவராக மட்டுமே காட்டிக்கொள்ள முனைந்தாரே தவிர சிறுபான்மை இனங்களைப் பற்றி அவர் வாயே திறக்கவில்லை. சிங்கள பௌத்த வாக்குகளினால் தெரிவானவன் என்பதை சொல்லிக் கொள்வதில் அவர் பெருமை கொண்டார் என்பது இனவாத அரசியலின் உச்சம். அவரும் புதிய அரசியலமைப்பு சட்டம், ஒரே நாடு ஒரே சட்டம் போன்றவற்றைக் கொண்டுவர எண்ணியிருந்தார். வெறும் இனவாதம் சோறு போடாதல்லவா? எனவே சிங்கள மக்களாலேயே வெகுவாகத் தூற்றப்பட்டு விரட்டியடிக்கப்பட்டார்.
இறுதியில் இனவாதம் இவர்களுக்கு மட்டுமல்ல; நாட்டுக்கும் சோறு போடவில்லை.
இதுதான் இலங்கை வரலாற்றில் இனவாத, மதவாத அரசியல்களின் வகிபாகமும் விளைவுகளும். இது ஒரு சுருக்கமான பார்வைதான்.
இனி ஹர்த்தாலுக்கு வருவோம். இது ஒரு குஜராத்தி சொல். பணி பகிஷ்கரிப்பு முழு அடைப்பு, ஒத்துழையாமை என்றும் பொருள் கொள்ளலாம். மொத்தத்தில் வேலைநிறுத்தம்.
1912ஆம் ஆண்டு இந்தியாவில் ரௌலட் சட்டம் கொண்டுவரப்பட்டது. சுதந்திரப் போராட்டத்தை நசுக்கும் ஒரு முயற்சியாகவே இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இச் சட்டத்தின் கீழ் ஒருவரை எந்தக் காரணமுமின்றி கைது செய்து இரண்டு வருடங்கள் வரை காவலில் வைத்திருக்கலாம். இச்சட்டம் 1919மார்ச் மாதம் 21ம் திகதி செயற்பாட்டுக்கு வந்தது. இச் சட்டத்தை எதிர்த்து பஞ்சாப், ஜாலிய் வாலா பாக்கில் மக்கள் கூடி நின்றபோதுதான் ஜெனரல் ஓடயரின் உத்தரவின் பேரில் அப்பாவி மக்கள் குருவி சுடுவது போல சுட்டுக் கொல்லப்பட்ட அந்த ஜாலியன் வாலா பாக் படுகொலை 1919ஏப்ரல் 13ம் திகதி நடைபெற்றது.
இச் சட்டத்தை எதிர்ந்து ஹர்த்தாலில் ஈடுபடுமாறு மகாத்மா காந்தி இந்தியர்களை அழைத்தார். இந்தியாவெங்கும் மாபெரும் போராட்டங்கள் நடைபெற்றன.
இதன் பின்னர் சத்தியாகிரகம், ஹர்த்தால் ஆகிய இரண்டு இந்திய சொற்களும் அனைத்து உலக மொழிகளுக்குள்ளும் உள்வாங்கப்பட்டன. மொழி பெயர்ப்புக்கு பதிலாக நேரடியாகவே இச் சொற்களை பயன்படுத்தத் தொடங்கினார்கள்.
அரிசியை இலவசமாகத் தருவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு அரிசி விலையை 70சதமாக உயர்த்தியதோடு ஏனைய வசதிகளையும் கொடுப்பனவுகளையும் நிறுத்தி விட்டீர்களே என்பதுதான் இலங்கை எதிர்க்கட்சிகளின், குறிப்பாக இடதுசாரிகளின், குற்றச் சாட்டு, மக்களும் ஏகோபித்த ஆதரவு அளிக்கவே ஹர்த்தால் வெற்றிகரமாக நடைபெற்றது. (தொடரும்)
அருள் சத்தியநாதன்