![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/07/16/a15.jpg?itok=SAmhh7Qg)
இலங்கை தனது வரலாற்றில்பல்வேறு போராட்டங்களுக்குமுகம் கொடுத்துள்ளது. பண்டைய மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் அந்நிய படையெடுப்புகளுக்குஎதிராகப் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
அதன் பின்னர் இலங்கையில் ஐரோப்பியர்கள் காலடி பதித்த பின்னர் காலத்துக்குக் காலம் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. நாடு சுதந்திரமடைந்த பின்னரும் ஆட்சியாளர்களுக்கு எதிராக பல போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
அரசியல் கட்சிகளினால் முன்னெடுக்கப்பட்டுள்ள அகிம்சைப் போராட்டங்கள், அதன் பின்னர் பிரிவினைவாதக் குழுக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டங்கள் என்பவற்றுக்கெல்லாம் நாடு பல தசாப்தங்களாக முகங்கொடுத்திருந்தது. இந்த வரிசையில் தற்பொழுது மக்கள் முன்னெடுத்த போராட்டம் இணைந்து கொண்டுள்ளது.
ஆட்சியாளர்களுக்கு எதிராக நாட்டு மக்களில் ஒரு தரப்பினர் ஒன்றுதிரண்டு நடத்திய போராட்டமாக தற்பொழுது நடைபெறும் போராட்டங்களைக் குறிப்பிட முடியும். பொருளாதார நெருக்கடியினால் உருவெடுத்த பல்வேறு காரணங்களை முன்வைத்து பெரும்பாலும் சாதாரண பொதுமக்களால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டமாக இது கூறப்படுகிறது.
அதேசமயம் அரசுக்கு எதிரான சில அரசியல் சக்திகளும் இப்போராட்டத்தின் பின்னணியில் மறைமுகமாக இயங்குவதை மறுக்க முடியாது. இன்றைய போராட்டங்களில் சில அரசியல் சக்திகள் உள்ளே புகுந்து குழப்பங்களை ஏற்படுத்துவதாக ஆர்ப்பாட்டத்தில் உள்ளவர்களே கூறும் நிலையை இன்று காணக் கூடியதாகவுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதிப் பதவியில் இருந்து வெளியேறுமாறு கோரி அகிம்சை வழியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தில் குறிப்பாக மிரிஹானவில் உள்ள அவருடைய தனிப்பட்ட வீட்டுக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் இறுதியில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.
பொதுச்சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் புகுந்த ஒரு சில குழுவினர் இதனைக் குழப்பியதாகக் கூறப்பட்டது. அதன் பின்னர் ரம்புக்கண பகுதியில் எரிபொருள் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் பெற்றோல் பவுசரை தீயிட சிலர் முயற்சித்ததாகக் கூறி பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்து, பலர் காயமடைந்தனர்.
இவ்வாறான சம்பவங்கள் சாதாரண அகிம்சை வழியிலான போராட்டங்களைக் குழப்பும் செயற்பாடுகளாகக் காணப்பட்டன. எனவேதான் போராட்டங்களுடன் அரசியல் தொடர்பும் உள்ளதாகச் சந்தேகிக்கத் தோன்றுகின்றது.
இதன் பின்னர் கடந்த மே மாதம் 09ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான தரப்பினர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்திய தாக்குதல்களின் எதிரொலியாக பெரும் களேபரம் வெடித்தது.
கொழும்புக்கு அழைத்து வரப்பட்டிருந்த மஹிந்த ஆதரவாளர்கள் தாக்கப்பட்டனர். அவர்களை அழைத்து வந்த தனியார் பேருந்துகள் அடித்து நொருக்கி நாசப்படுத்தப்பட்டன. அது மாத்திரமன்றி, மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக உள்ளார்கள் எனக் கூறி பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேச அரசியல்வாதிகள் பலருடைய வீடுகள் வன்முறைக் கும்பல்களால் தீயிடப்பட்டன.
‘அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் அகிம்சைப் போராட்டம்’ எனக் கூறப்பட்டாலும் இடதுசாரிக் கொள்கையைக் கொண்ட ஒரு சில அரசியல் கட்சிகள் பின்புலத்தில் இருந்து கொண்டு இவ்வாறான வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இருந்த போதும் குறிப்பிட்ட அரசியல் கட்சிதான் இந்த வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டது என்பதற்கான ஆதாரங்கள் இதுவரை சட்டரீதியாக உறுதிப்படுத்தப்படவில்லை.
அதேநேரம், அகிம்சை வழியிலான போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக ஆஜராகுவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினரும் ஏனைய சட்டத்தரணிகளும் தாமாகவே முன்வந்தனர். இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு மேலும் உற்சாகம் கிடைத்தது.
சட்டத்தரணிகளின் இந்தச் செயற்பாட்டை பாதிக்கப்பட்ட அரசியல்வாதிகள் பலரும் விமர்சித்தனர். இந்தப் பலத்தினால் ஆர்ப்பாட்டக்காரர்கள் எல்லைமீறி செயற்படுகின்றனர் என்ற கருத்துக்களும் அவர்களால் முன்வைக்கப்பட்டன.
இவ்வாறான பின்னணியில் கடந்த ஜுலை 09ஆம் திகதி ஆயிரக்கணக்கானவர்கள் கொழும்பில் ஒன்று கூடி அரசாங்கத்தை பதவி விலகச் செய்வதற்கான போராட்டத்தை மேற்கொண்டனர்.
இதன் ஒரு கட்டமாக கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரிமாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் என்பன ஆர்ப்பாட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டன. இவ்வாறு கைப்பற்றப்பட்ட கட்டடங்கள் பொதுச்சொத்துக்கள் என்பதற்கு அப்பால், மிகவும் பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த அலுவலகங்களாகும்.
இதற்கும் அப்பால் பல வருட வரலாறு கொண்ட தொல்பொருள் அடையாளச் சின்னங்களாகும். ஆர்ப்பாட்டக்காரர்களால் இந்த இடங்கள் கைப்பற்ற போதும், அவர்கள் இவற்றின் பெறுமதி குறித்துப் பெரிதும் அலட்டிக் கொள்ளாமல் இருந்தனர். ஆயிரக்கணக்கானவர்கள் அவற்றைக் கண்காட்சிக் கூடங்களாக்கியிருந்தனர்.
பொழுதுபோக்கிற்காக இந்தக் கட்டடங்களுக்குள் சென்று அங்குள்ளவற்றைப் பயன்படுத்துவது, நீச்சத் தடாகத்தில் குளிப்பது, பெறுமதிமிக்க பொருட்களை சேதப்படுத்தி நாசப்படுத்துவது போன்ற விரும்பத்தகாத செயற்பாடுகள் பலவும் முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறான நடவடிக்கைகள் உண்மையில் போராட்டத்தின் நோக்கத்தை திசைதிருப்பும் வகையில் அமைந்திருந்தன.
ஒரு நாட்டின் முக்கிய பொறுப்புக்களை வகிக்கும் தரப்பினரின் உத்தியோகபூர்வ அலுவலகங்களில் பெறுமதியான ஆவணங்கள் காணப்படக் கூடிய சூழ்நிலையில், வெறுமனே வேடிக்கைக்காக மாத்திரம் அந்த இடங்களைப் பயன்படுத்துவது சாதாரண பொதுமக்கள் மத்தியில் போராட்டம் குறித்த நெருடலை ஏற்படுத்தியிருந்தது.
பிரதமர் அலுவலகத்திலும். ஜனாதிபதி மாளிகையிலும் காணப்பட்ட பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டமை குறித்தும், சிலவற்றை திருடுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் பற்றியும் ஊடகங்கள் அறிக்கையிட்டிருந்தன. இதுபோன்ற செயற்பாடுகள் போராட்டம் பயணிக்கும் திசை தொடர்பான சந்தேகங்களை ஏற்படுத்தியிருந்தன.
அது மாத்திரமன்றி, கடந்த 13ஆம் திகதி புதன்கிழமை பிரதமர் அலுவலகத்தைக் கைப்பற்றியபின்னர் பாராளுமன்றத்துக்கு அருகிலுள்ள சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்குள் நுழைவதற்கு சில ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சியெடுத்திருந்தனர்.
போராட்டத்தை தாமே ஆரம்பித்ததாகக் கூறிக் கொள்ளும் ஒரு சில சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் மக்களைப் பிழையாக வழிநடத்தி சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தை முற்றுகையிடுவதற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.
இந்தப் பகுதியில் ஏராளமான பாதுகாப்புத் தரப்பினர் குவிக்கப்பட்டிருந்த நிலையில், போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் இடையில் தேவையற்ற மோதலை ஏற்படுத்துவதற்கு இந்தத் தரப்பினர் முயற்சித்தனர்.
சபாநாயகரின் இல்லம் பாராளுமன்றத்துக்கு மிகவும் அருகில் அமைந்திருப்பதால் ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்துக்குள் நுழைந்து விடுவார்கள் என்ற அச்சமும் காணப்பட்டது. அவ்வாறான தேவையற்ற முயற்சிகள் போராட்டத்தை முற்றுமுழுதாக தோல்வியடையச் செய்து விடும் எனப் பல்வேறு தரப்பினரும் அறிவித்தனர். அத்துடன், ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் போன்ற பொதுச் சொத்துக்களை கையகப்படுத்தி வைத்திருப்பதானது சுமுகமான பதவிமாற்றத்துக்கு இடமளிக்காது. இவற்றை மீண்டும் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்காது, தேவையற்ற பதற்றங்களை உருவாக்கினால் தாம் வழங்கி வரும் முழுமையான ஒத்துழைப்பை இடைநிறுத்த வேண்டி வரும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் அறிவித்திருந்தது.
ஒருசிலரின் செயற்பாடுகளால் போராட்டம் திசைமாறிப் பயணிப்பதற்கு எத்தனிக்கப்பட்டிருந்த போதும், காலிமுகத்திடலில் உள்ள கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது அகிம்சைப் போராட்டத்தில் உறுதியாக நின்றனர். இதன் வெளிப்பாடாக ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றை மீண்டும் பாதுகாப்புத் தரப்பினரிடம் ஒப்படைக்கத் தீர்மானித்தனர். அங்கு காணப்பட்ட குப்பைகள் அகற்றப்பட்டு கட்டடங்கள் பாதுகாப்பான முறையில் ஒப்படைக்கப்பட்டன. இது இவ்விதமிருக்க, மக்கள் போராட்டம் என்ற ரீதியில் முக்கிய ஸ்தானங்களுக்குள் புகுந்து அங்குள்ளவர்களை அச்சுறுத்தி தேவையற்ற செயற்பாடுகளை மேற்கொள்வது ஏற்புடையதாக இருக்காது. ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், சுயாதீனத் தொலைக்காட்சி வலையமைப்புக்களுக்குள் நுழைந்து குழப்பம் விளைவித்தமையையும் இங்கு குறிப்பிடலாம். எனவே, இதுபோன்ற செயற்பாடுகளைத் தவிர்த்து மேற்கொள்ளப்படும் போராட்டங்களுக்கே மக்கள் மத்தியில் ஆதரவு இருக்கும் என்பதே அமைதியை விரும்புகின்ற மக்களின் எண்ணமாகும்.
பி.ஹர்ஷன்