![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/07/16/a14.jpg?itok=JMnZFM0o)
தற்போது எமது நாட்டில் பால்மா வகைகளுக்கு பற்றாக்குறை காணப்படுவதோடு, அவற்றுக்கான விலையும் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து, எமது பொதுமக்கள் மத்தியில் பசுப்பாலுக்கான வரவேற்பு அதிகரித்துக் காணப்படுவதாக, வாழ்வாதாரத் தொழிலான பாலுற்பத்தியை மேற்கொண்டுவரும் திருமதி கணேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பால்மா வகைகளின் பற்றாக்குறையைத் தொடர்ந்து, பசுப்பாலை நுகர்வோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக் காணப்படுவதாகவும், இதனால் பசுப்பாலின் விலையும் சற்று அதிகரித்துள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளிக் கிராமத்தைச் சேர்ந்த 53வயதுடைய சந்திரா என்பவர், தனது வீட்டில் பசு மாடுகளை பராமரித்து வருவதோடு, அவற்றின் மூலம் தனது குடும்ப வாழ்வாதாரத்துக்கான அன்றாட வருமானத்தையும் தேடி வருகின்றார்.
தனது குடும்ப நிலைமை பற்றியும் தனது வாழ்வாதாரத் தொழிலான பசு பராமரிப்பு பற்றியும் தினகரன் வாரமஞ்சரி வாசகர்களுடன் அவர் பகிர்ந்துகொள்கின்றார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கூலித் தொழிலாளியான எனது கணவர், வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டு வந்திருந்ததோடு மாத்திரமின்றி, வீட்டில் பசு மாடுகளை பராமரிக்கும் தொழிலிலும் ஈடுபட்டு வந்திருந்தார். அவரது பசு மாடுகளை பராமரிக்கும் தொழிலுக்கு நானும் ஒத்தாசையாக இருந்து வந்திருந்தேன். இவ்வாறிருந்து வகையில், எனது கணவர் திடீரென கால் மூட்டுவலி நோயால் பாதிக்கப்பட்டதோடு, அவரால் பாரிய வேலைகளைச் செய்ய முடியாமல் போனது.
அவ்வேளையில் 6பெண் பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு நான் செய்யப் போகின்றேன் என்று தடுமாறவில்லை. மாறாக, தைரியத்தை வரவழைத்துக்கொண்டு எமது குடும்ப வாழ்வாதாரத்துக்கான வருமானத்தை தேடும் வழி பற்றி சிந்திக்கத் தொடங்கினேன். இந்நிலையில் எனது கணவர் செய்துவந்த பசு மாடுகளை பராமரிக்கும் தொழிலை நான் பொறுப்பேற்று செய்யத் தொடங்கியதோடு, அத்தொழிலின் மூலம் எமது குடும்ப வாழ்வாதாரத்துக்கான வருமானத்தையும் தேடி வருகின்றேன். இந்நிலையில், எமது 6பெண் பிள்ளைகளில் 3பெண் பிள்ளைகளை, அவர்களது மணவாழ்க்கையில் கரை சேர்த்துள்ளோம். இன்னும் 3பெண் பிள்ளைகள் எம்மோடு உள்ளனர். அம்மூன்று பெண் பிள்ளைகளில் ஒருவர் பாடசாலைக் கல்வியை முடித்துவிட்டு வீட்டோடு இருப்பதோடு, ஏனைய 2பெண் பிள்ளைகளில் ஒருவர் 10ஆம் தரத்திலும் மற்றையவர் 9ஆம் தரத்திலும் கல்வி பயின்று வருகின்றார்கள். இம்மூன்று பெண் பிள்ளைகளினதும் எதிர்கால வாழ்க்கையே எனது தற்போதைய கனவாகும் என்கின்றார் அவர்.
எமது கிராமத்தில் நான் மாத்திரமின்றி ஏனையோரும் பசுக்களை பராமரிக்கும் தொழிலை செய்து வருகின்றார்கள். இந்நிலையில், தற்போது எம்மிடம் சுமார் 15முதல் 20பசுக்கள் உள்ளதோடு, அவற்றை எமது வீட்டில் வைத்து பராமரித்து வருகின்றேன். அப்பசுக்களிலிருந்து நாளொன்றுக்கு சுமார் 10முதல் 15லீற்றர்வரை பால் கறப்பதோடு, அப்பசுப்பாலை எமது ஊரில் உள்ளவர்களுக்கு அவர்களது தேவைக்கேற்ப விற்பனை செய்து வருகின்றேன். எமது ஊரிலுள்ளவர்களுக்கு விற்பனை செய்து எஞ்சிய பசுப்பாலை பண்ணையொன்றுக்கு விற்பனை செய்து வருகின்றேன்.
மேலும், குறித்த பண்ணைக்கு எமது வீட்டிலுள்ள பசுக்களின் மூலம் பெறப்படும் பால் மாத்திரமின்றி, பசுக்களை பராமரிக்கும் அயலவர்களிடமிருந்தும் பசுப்பாலை விலைக்கு வாங்கி பண்ணைக்கு விற்பனை செய்து வருகின்றேன். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு எமது குடும்ப வாழ்வாதாரத்துக்கான செலவைச் சமாளிப்பதுடன், அப்பசுக்களுக்கு தேவையான தவிடு உள்ளிட்ட தீவனத்தையும் கொள்வனவு செய்து வருகின்றேன்.
எனது பசு பராமரிப்பின் மூலம் கிடைக்கும் வருமானமானது, எமது குடும்பச் செலவைச் சமாளிப்பதற்கு மட்டுமட்டாகத்தான் இருக்கின்றது. இருந்தபோதிலும் 'போதும் என்ற மனமே பொன் செய்யும்' என்ற பழமொழிக்கு அமைய கிடைக்கும் அவ்வருமானத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு, எமது செலவுகளை மட்டுப்படுத்தி அடிப்படைத் தேவைகளை மாத்திரம் பூர்த்தி செய்து வருகின்றேன் என்கின்றார் அவர்.
தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில், பால்மா வகைகளுக்கு காணப்படும் பற்றாக்குறை மற்றும் அவற்றுக்கான விலை அதிகரிப்புக் காரணமாக எம்மிடம் பசுப்பாலை கொள்வனவு செய்யும் நுகர்வோரும்; அதிகரித்துக் காணப்படுவதோடு, பசுப்பாலுக்கான கேள்வியும் அதிகரித்து வருகின்றது. அத்தோடு, பசுப்பாலின் விலையும் சற்று அதிகரித்துக் காணப்படுகின்றது.
இந்நிலையில், எம்மிடம் பசுப்பால் விலைக்கு வாங்குவதற்காக நுகர்வோர் வந்த வண்ணமுள்ளனர். பசுப்பாலுக்கான தற்போதைய விலை அதிகரிப்பினால், எமது வருமானமும் சற்று அதிகரித்துக் காணப்படுகின்றது என்றே கூற வேண்டும் என்கின்றார் அவர்.
நான் தினமும் அதிகாலை சுமார் 3மணிக்கு எழுந்து எனது வீட்டுக் கடமைகளை கவனிப்பதோடு, பசுக்களுக்கும் உணவு இடுவேன்.
அதன் பின்னர் பசுப்பாலை கறந்து ஒவ்வொரு வீடு, வீடாகக் கொண்டு போய்க் கொடுப்பதோடு, பண்ணைக்கும் பசுப்பாலை வழங்குவேன். பண்ணையைச் சேர்ந்தவர்கள், அவர்களாகவே எமது வீடு தேடி வந்து பசுப்பாலை பெற்றுச் செல்கின்றார்கள். குறித்த பண்ணைக்கு தினமும் 20முதல் 25லீற்றர்வரை பசுப்பால் விநியோகித்து வருகின்றேன் என்கின்றார் அவர்.
காலை 8மணிக்குள் அனைத்து வீடுகளுக்கும் கொண்டு சென்று பசுப்பால் விநியோகித்து முடித்து விடுவேன். அதன் பின்னர் எஞ்சிய வீட்டு வேலைகளைக் கவனிப்பேன். வீட்டு வேலைகளுடன் பசுக்களை பராமரிப்பது எனக்கு சிரமமாகத் தெரியவில்லை. வீட்டு வேலை, பசுப் பராமரிப்பு ஆகிய இவ்விரு வேலைகளிலும் நேர முகாமைத்துவம் செய்வது எனக்கு ஒரு பிரச்சினையாக காணப்படவில்லை என்கின்றார் அவர்.
தற்போது மேய்ச்சல்தரை பிரச்சினை பாரிய பிரச்சினையாக காணப்படுவதால், அப்பசுக்களுக்கு இயற்கையான, ஆரோக்கியமான மற்றும் போதியளவான உணவு கிடைப்பதில் கூட பாரிய சிக்கல் காணப்படுகின்றது. இருந்தபோதிலும், வாயில்லா பிராணிகளாகிய பசுக்களுக்கு எந்தக்குறையும் வைக்கக்கூடாது என்பதால், புல் காணப்படும் இடங்களாகத் தேடிக்கொண்டு, பசுக்களை நான் தினமும் மேய்ச்சலுக்கு கொண்டு செல்வேன்.
என்னதான் நாம் பசுக்களுக்கு தவிடு உள்ளிட்ட தீவனத்தை உணவாகக் கொடுத்தாலும், இயற்கையான புல் பூண்டுகளை உண்பதை போன்று வராதல்லவா. இயற்கையான, ஆரோக்கியமான உணவை பசுக்கள் உட்கொள்ளும் பட்சத்திலேயே, அப்பசுக்களும் ஆரோக்கியமாக இருக்குமென்பதோடு, அவற்றின்; மூலம் கிடைக்கும் பசுப்பாலும் சிறந்ததாக, சுவையானதாக இருக்கும் என்கின்றார் அவர்.
பசு மாடுகளை பராமரிக்கும் தொழிலானது புனிதத்தன்மை கொண்ட வரப்பிரசாதமான தொழிலாகும். ஆகையால், அத்தொழிலை நானும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு செய்து வருகின்றேன்.
அதனால்தான் என்னவோ, பசுக்களின் புனிதத்தை பேணிப் பாதுகாக்கும் வகையில், கோவில்களில் கூட பசுக்களை பராமரித்து வருவதோடு, கோவில்களுக்கு வரும் பக்தர்கள், அப்பசுக்களுக்கு உணவளித்து புண்ணியத்தை தேடும் வகையிலான வாய்ப்பையும் கோவில் உபயகாரர்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள்.
வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிப்பது, அவற்றை பேணிப் பராமரிப்பது உன்னதமான சேவையாகும். வாயில்லா ஜீவன்களுக்கு அவ்வாறான உன்னதமான சேவையை செய்வதற்கான வாய்ப்பு எனது தொழிலோடு சேர்ந்து இயற்கையாகவே கிட்டியுள்ளது. இதையிட்டு மிகவும் பெருமையடைகின்றேன் என்கின்றார் அவர்.
ஆர்.சுகந்தினி