ஜுலை 19 வேட்பு மனு; 20 இல் வாக்கெடுப்பு; ஜனாதிபதி பதவிக்கு மும்முனை போட்டி | தினகரன் வாரமஞ்சரி

ஜுலை 19 வேட்பு மனு; 20 இல் வாக்கெடுப்பு; ஜனாதிபதி பதவிக்கு மும்முனை போட்டி

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பு எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளதுடன் மூன்று பிரதான கட்சிகளை சேர்ந்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் தற்போது மும்முனை போட்டி ஆரம்பமாகியுள்ளது.

பதில் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச, பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும ஆகியோர் எதிர்வரும் 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யவுள்ளனர்.

இது தொடர்பில் பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவரிடம் கேட்ட போது, பதில் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது கட்சியை சேர்ந்த 120க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக தெரிவித்தார். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் தமது கட்சியின் தலைவர் சஜித் பிரேசமதாசவின் பெயர் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

அதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பெரும்பான்மையான எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்து வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சராகவும் பின்னர் சுயேட்சையாக பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த டளஸ் அழகப்பெருமவின் பெயரும் சுயேச்சை உறுப்பினர்கள் குழுவுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக குழுவின் பேச்சாளர் தெரிவித்தார்.

Comments