நவீன அறிவியல் யுகத்தில் முழு உலகிற்கும் பெரும் சவாலாக விளங்கியது தான் கொவிட் 19பெருந்தொற்று.
சீனாவின் வூஹான் நகரில் 2019ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் தோற்றம் பெற்ற இத்தொற்று குறுகிய காலப்பகுதியில் முழு உலகிலும் பரவி உலகிற்கே பேராபத்தாக அமைந்தது. அதனால் உலகமே பேரதிர்ச்சிக்கு உள்ளானது. மக்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
இது ஆளுக்காள் தொற்றி பரவும் ஒரு வைரஸ் நோயாகும். அதன் காரணத்தினால் இதன் பரவுதலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடுகளும் நகரங்களும் பிரதேசங்களும் கூட தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டன. அதன் ஊடாக இத்தொற்றின் பரவுதல் கட்டுப்பாட்டை அடைந்த போதிலும் இயல்பு நிலை ஏற்படுத்தப்பட்ட பின்னர் இத்தொற்று மீண்டும் பரவியது.
2020ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் முழு உலகமும் எதிர்கொண்ட இத்தொற்றின் அச்சுறுத்தலுக்கு இலங்கையும் அதேயாண்டு மார்ச் நடுப்பகுதி முதல் முகம் கொடுத்தது. உலகின் ஏனைய பல நாடுகளைப் போன்று இந்நாட்டிலும் இத்தொற்றுக்கு உள்ளானவர்களாக நாளாந்தம் அடையாளம் காணப்பட்டவர்களதும் உயிரிழந்தவர்களதும் எண்ணிக்கை இலங்கையிலும் நாளாந்தம் அதிகரிக்கவே செய்தது. இதனால் மக்கள் நம்பிக்கையற்ற பாரிய அச்ச நிலைக்கு உள்ளாகினர். இந்நிலை 2020டிசம்பர் வரையும் நீடிக்கவே செய்தது.
இந்நிலையில் முழு உலகிற்கும் பாரிய அச்சுறுத்தலாக விளங்கிய இத்தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான வழிவகைகளை கண்டறியும் நோக்கில் மருத்துவ, விஞ்ஞானத்துறையினர் அயராத முயற்சிகளை முன்னெடுத்தனர். அதன் பிரதிபலனாக இத்தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி ஒரு வருட காலப்பகுதிக்குள் கண்டுபிடிக்கப்பட்டு அவசரத் தேவையின் நிமித்தம் பயன்பட்டும் வந்தன. மருத்துவ விஞ்ஞானத் துறையில் இது ஒரு வரலாற்று சாதனையாகும்.
இப்பின்புலத்தில் 2020டிசம்பர் முதல் இத்தடுப்பூசி மக்கள் பாவனைக்கு வந்ததன் பயனாக புதிய நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் தோற்றம் பெற்றன. அதற்கு ஏற்ப இத்தொற்றின் தாக்கம் தடுப்பூசியின் ஊடாக கட்டம் கட்டாக வீழ்ச்சியடைய ஆரம்பித்தது.
2021நடுப்பகுதி முதல் இலங்கையிலும் வீழ்ச்சியடைத் தொடங்கிய இத்தொற்றின் தாக்கமும் பரவுதல் அச்சுறுத்தலும் 2022ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதி முதல் பெருவீழ்ச்சி நிலையை நோக்கி நகர்ந்தது. இந்த சூழலில் நாட்டின் சனத்தொகையில் பெரும்பகுதியினர் இத்தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களாகவும் விளங்கினர்.
அதன் விளைவாக இத்தொற்றின் பரவுதலைத் தவிர்ப்பதற்கான சமூக இடைவெளியைப் பேணுதல், முகக்கவசம் அணிதல், கைகழுவுதல், தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தல் போன்ற அடிப்படை சுகாதார செயற்பாடுகளும் மக்கள் மத்தியில் இருந்து மெதுமெதுவாக நீங்கவும் தொடங்கின.
இவ்வாறான சூழலில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன 2022ஜுன் 09ஆம் திகதி 'முகக்கவசம் கட்டாயமில்லை' என்று அறிவித்தார். ஆனாலும் முகக்கவசம் அணியும் கட்டாயத்தை நீக்குவதற்கு பொருத்தமான காலச்சூழல் இதுவல்ல' என்று மருத்துவர்களும் சுட்டிக்காட்டினர். ஆனால் மக்கள் அதனைப் பெரிதாகப் பொருட்படுத்திக் கொள்ளவில்லை. முகக் கவசமின்றியும் சமூக இடைவெளியைப் பேணாதும் பெரும்பாலான மக்கள் தம் செயற்பாடுகளை அமைத்துக் கொண்டனர். இந்நிலைமையை இன்றும் கூட அவதானிக்க முடிகிறது.
ஆனால் இத்தொற்றின் பரவுதலைப் பெருவீழ்ச்சி நிலைக்கு கொண்டு வந்திருந்த சீனா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இத்தொற்றின் பரவுதல் மீண்'டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. ஆனாலும் இந்நாட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை.
அதனால் கடந்த சில தினங்களாக இந்நாட்டில் இத்தொற்றுக்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. இதனை சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் தரவுகள் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
அண்மையில் கொவிட் 19தொற்றுக்கு நாளாந்தம் உள்ளானவர்களின் விபரம்
2022.07.15 - 19பேர்
2022.07.16 - 25பேர்,
2022.07.17 - 25பேர்
2022.07.18 - 34பேர்
2022.07.19 - 62பேர்
2022.07.20 - 62பேர்
இதன்படி, 2020மார்ச் நடுப்பகுதியைப் போன்று தற்போதும் இத்தொற்று மெதுமெதுவாக அதிகரித்து வருவதையே இத்தரவுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. இதேநேரம் இத்தொற்றுக்கு உள்ளானவர்களாக 651பேர் வைத்தியசாலைகளிலும் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். அதனால் இத்தொற்று மீண்டும் தீவிரமடையுமா? என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. ஆனால் இத்தொற்றுக்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்படுகின்றவர்களின் எண்ணிக்கையில் நாளுக்கு நாள் அதிகரிப்பு ஏற்பட்டு வருவது ஆரோக்கியமானதல்ல.
இந்நாடு இத்தொற்று பரவுதல் தொடர்பில் பெற்றுள்ள அனுபவங்களின் படி, கொவிட் 19தொற்றைத் தவிர்த்துக் கொள்வதில் விரைவாகவும் வேகமாகவும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். அவ்வாறான காலப்பகுதியில் தான் இந்நாட்டு மக்கள் இருந்து கொண்டிருக்கின்றனர். கொவிட் 19தொற்று கட்டுப்பாடு தொடர்பில் இயல்புநிலை ஏற்படுத்தப்பட்டிருக்கும் சூழலில் இவை இன்றியமையாதவையாகும்.
ஏனென்றால் சீனாவின் வூஹான் பிரதேசத்தில் இத்தொற்று அடையாளம் காணப்பட்டது முதல் இற்றை வரையும் 553மில்லியனுக்கும் மேற்பட்டோரை உலகில் பாதித்துள்ள இத்தொற்று, 6.3மில்லியன் பேரின் மரணத்திற்கும் காரணமாக அமைந்துள்ளது. இலங்கையிலும் 6இலட்சத்து 64ஆயிரத்து 510பேர் இத்தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு 16ஆயிரத்து 533பேர் உயிரிழந்துமுள்ளனர்.
2020ஆம் ஆண்டின் மார்ச் நடுப்பகுதி முதல் இந்நாட்டவர் மத்தியில் தொடராகப் பதிவாகத் தொடங்கிய இத்தொற்றுக்கு சிறு எண்ணிக்கையினர் தான் நாளாந்தம் பதிவாகினர். ஆனாலும் அது சொற்ப காலத்தில் ஆயிரம், இரண்டாயிரம் என்றபடி அதிகளவில் பதிவாகும் நிலையை அடைந்தது.
அதனால் சமூக இடைவெளியைப் பேணிக் கொள்வதும் முகக் கவசம் அணிந்து கொள்வதும் கைகழுவிக் கொள்வதும் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துக் கொள்வதும் இத்தொற்றை தவிர்த்துக் கொள்வதற்கு மிகவும் அவசியமானதாகும். இதனை சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத்தும் வலியுறுத்தியுள்ளார்.
இருந்தும் கூட கொவிட் 19தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டிருப்பதால் இத்தொற்று தமக்கு ஏற்படாது என்று கருதுபவர்களாகவே மக்கள் உள்ளனர். அவர்கள் முகக்கவசம் அணிந்து கொள்வதிலும் சமூக இடைவெளியைப் பேணுவதிலும் கைகழுவுவதிலும் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துக் கொள்வதிலும் அசிரத்தையோடு நடந்து கொள்கின்றனர்.
'இத்தொற்றானது தடுப்பூசி பெற்றுக் கொண்டுள்ளவர்களுக்கும் ஏற்படலாம். ஆனால் தடுப்பூசியைப் பெற்றுள்ளவர்களை விடவும் பெற்றிராதவர்கள் மத்தியில் அதன் தாக்கமும் பாதிப்பும் அதிகமாக இருக்க முடியும் என்பது தான் மருத்துவ நிபுணர்களின் அபிப்பிராயமாகும். அதனால் இத்தொற்று தவிர்ப்பு தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துவதைத் தவிர்த்துக்கொள்ள முடியாது.
2022ஆம் ஆண்டுக்கான இலங்கை சனத்தொகை மதிப்பீட்டின் படி, இரண்டு கோடியே 15இலட்சத்து 95ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழும் இந்நாட்டில், கொவிட் 19தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசியின் முதலாவது டோஸை ஒரு கோடியே 71இலட்சத்து 4ஆயிரத்தும் மேற்பட்டவர்களும் இரண்டாவது டோஸை ஒரு கோடியே 45இலட்சத்து 55ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களும் பூஸ்டர் டோஸை 80இலட்சத்துக்கு மேற்பட்டவர்களும் தான் பெற்றிருக்கின்றனர்.
இது இத்தொற்று தவிர்ப்புக்கான தடுப்பூசியின் ஒரு டோஸைக் கூட பெற்றிராதவர்களும் சமூகத்தில் இருப்பதை வெளிப்படுத்தி நிற்கின்றது. அதனால் கொவிட் 19தொற்றின் பரவுதலைக் கட்டுப்படுத்திக் கொள்வதில் அதிக கவனம் செலுத்தப்படுவது இன்றியமையாததாகும். அதனை ஒரு சமூகப் பொறுப்பாகக் கருத வேண்டிய காலமிது. தவறும் பட்சத்தில் கடந்த காலங்களைப் போன்று இந்நாட்டிலும் இத்தொற்று மீண்டும் தீவிரமடையக்கூடிய நிலையை அடைந்து விடும். இவ்வாறான நிலை உலக நாடுகள் பலவற்றிலும் தற்போது ஏற்படுவது சுட்டக்காட்டத்தக்கதாகும்.
மர்லின் மரிக்கார்