புதிய ஜனாதிபதியின் வருகை மாற்றங்களை கொண்டு வரும் | தினகரன் வாரமஞ்சரி

புதிய ஜனாதிபதியின் வருகை மாற்றங்களை கொண்டு வரும்

புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர் வட புலத்து மக்கள் இப் புதிய நிலையை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை அறியும் வகையில் சிலரை சந்தித்தோம். 

முதலாவதாக நாம் சந்தித்தவர் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சுற்றுலா வாடகை வாகன சாரதியான செ. நிரேஸ்.  

புதிய ஜனாதிபதி காலி முகத்திடல் போராட்டக்காரங்கள் முன்வைக்கும் மாற்றங்களை பிரதி பலிக்கும் வகையிலான உடனடி சிறிய அமைச்சரவை அமைக்க வேண்டும். மேலும் உடனடியாக சாத்தியமாகக் கூடிய சில கோரிக்கைகளை நிறைவேற்றி வைக்க வேண்டும். தனது 50வருட அரசியல் அனுபவத்தின் மூலம் பெற்றுக்கொண்ட சர்வதேச உறவுகளை பயன்படுத்தி பொருளாதார மறு சீர்ரமைப்பை ஏற்படுத்த வேண்டும்.  

அதேபோல பாராளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ள அவர் பாராளுமன்றத்தை சுயாதீனமாக செயல்பட வைத்தல் வேண்டும்.  

அத்துடன் அரசு துறையில் அரசியல் ரீதியான நியமனங்களுக்கு உடனடியாக முற்றுப் புள்ளி வைத்து அரசாங்க அலுவலகங்களை வினைத்திறன் கொண்டவையாக மாற்றி அமைக்க வேண்டும். இவற்றை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் நடாத்தினால் சிறப்பாக இருக்கும்.  

அடுத்ததாக சமூக செயற்பாட்டாளராக உள்ள சுப்பிரமணியம் பிரபாவை சந்தித்து பேசினோம். 

புதிய ஜனாதிபதியின் வருகையினால் பொருளாதார ரீதியாக உடனடி மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. போராட்ட அணியை வலுவிழக்கச் செய்ய வேண்டுமானால் வரிசைகளுக்கு தீர்வு காணவேண்டியது அவசியம்.  

அத்தியாவசியமான எரிபொருள், எரிவாயு பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு கிடைத்தாக வேண்டும். அடுத்தது பொருள் விலையேற்றம். அதை குறைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியம். 

அடுத்து வரப்போகும் புதிய அமைச்சரவையை வைத்துத்தான் அரசியல் ரீதியிலான அடுத்த நகர்வை கணிக்க முடியும். அதற்கு இடையில் எரிபொருள், எரிவாயு, பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்டவற்றுக்கு புதிய ஜனாதிபதி தீர்வு காண்பார் என எதிர்பார்க்கிறேன் என்றார் பிரபா. 

யாழ்ப்பாணத்தை சேர்ந்த யோ.எ. ரவீந்திரனிடம் பேசினோம். 

புதிய ஜனாதிபதி, இலங்கையில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும் 

அதேவேளை, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான நீதி விசாரணையை துரிதப்படுத்தவேண்டும் 

இறுதி யுத்தத்தில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதி விசாரணை நியாயமான முறையில் முன்னெடுக்கப்படவேண்டும். 

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களை கண்டறிய ஆணைக்குழு நிறுவப்பட்டு மூன்று மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். 

முன்னைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட துறைமுக நகர் (போட்சிட்டி) போன்ற கடன் அடிப்படையிலான அபிவிருத்தி திட்டங்கள் நிறுத்தப்படவேண்டும். என எதிர்பார்க்கிறேன். இது தொடர்பில் புதிய ஜனாதிபதி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

இனிமேல் பல நாடுகள் கடன் கொடுப்பதற்கு முன்வரலாம். கடன் செலுத்தப்பட வேண்டும் என்பதற்காக இலங்கையின் பெறுமதிமிக்க நிலப்பகுதிகள் அந்நியருக்கு தாரை வார்க்கப்படக் கூடாது. 

மக்களை சாந்தப்படுத்த சிறிய அளவிலான விலைக்குறைப்புகள் இடம்பெறும். இது தொடர்பில் புதிய ஜனாதிபதி எவ்வாறான அணுகுமுறையை கடைப்பிடிக்க போகின்றார் என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என்பது இவர் கருத்தாக இருந்தது.  

முச்சக்கர வண்டி சாரதியான கே.சுதா என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். 

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாம் எமது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறோம். தற்போது வெளிநாட்டில் இருந்து பல புலம்பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணத்திற்கு தமது உறவினர்களை காண்பதற்காக வந்துள்ளனர்.  

இந்த கால பகுதி தாம் எமக்கு வருமானம் அதிகமாக கிடைக்கும் காலமாகும். ஆனால் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாம் சவாரிகளை மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளோம். எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக நாட்கணக்கில் தூங்கி நான்கு, ஐந்து லீட்டர் பெட்ரோலையே பெற முடிகிறது. அதனை கொண்டு நாம் முச்சக்கர வண்டி ஓடி உழைப்பதானால், எமக்கு வருமானம் கட்டுப்படியாவதில்லை. 

அதனால் நான் முச்சக்கர வண்டியை எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக எரிபொருளுக்காக நிறுத்தி விட்டு மேசன் வேலைக்கு செல்கிறேன். மாலையில் வந்து முச்சக்கர வண்டிக்கு பாதுகாப்பாக முச்சக்கர வண்டியில் தூங்குகிறேன். அதனால் தூக்கம் தொலைந்து பல நாட்கள் ஆகிவிட்டன.  

இவ்வாறான நெருக்கடியில் வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார நெருக்கடிகளுக்குள் வாழ்ந்து வருகிறோம். முன்னர் இருந்த ஜனாதிபதியினால் தான் நாம் இந்த நிலைமைக்கு வந்தோம் . 

புதிய ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க பழுத்த அரசியல் அனுபவம் உள்ளவர். அவருக்கு பல நாடுகளுடன் தொடர்புகள் இருக்கும். அதனூடாக பல நாடுகளின் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என நம்புகிறேன்.  

தற்போது எமக்கு உடனடியாக எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடுகளை நீக்கி, தடையற்ற மின்சாரமும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் விலைவாசிகளை குறைத்து நியாய விலைகளில் பொருட்களை பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

புதிய ஜனாதிபதியால் என்ன மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் என்பது இவர் கூற்று. 

இவ்வாறாக யாழ்ப்பாணத்து மக்கள் புதிய ஜனாதிபதியின் வருகை மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றார்கள்.

மயூரப்பிரியன்

Comments