காலிமுகத்திடல் சம்பவம்; சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் | தினகரன் வாரமஞ்சரி

காலிமுகத்திடல் சம்பவம்; சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்

ஜனாதிபதி செயலகத்துக்கு அருகாமையிலுள்ள காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ஆயுதப்படையினர் வெள்ளிக்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தியமைக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அத்தோடு ஒரு சட்டத்தரணி மற்றும் பல ஊடகவியலாளர்கள் உட்பட பலர் ஆயுதப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை அறிந்திருப்பதாக சங்கம் தெரிவித்துள்ளது. சம்பவத்தின் போது சட்டத்தரணி நுவன் போபகே உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந் நிலையில் மக்கள் தாக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதிகாரிகள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.அவர்கள் இருக்கும் இடம் தெரியப்படுத்தப்பட வேண்டுமென்று சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தேவையற்ற மிருக பலத்தை பயன்படுத்துவது இந்த நாட்டுக்கும் அதன் சர்வதேச நற்பெயருக்கும் உதவாதென்றும் அவர் கூறியுள்ளார்.நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும் பொலிஸாரும் காலி முகத்திடலுக்கான நுழைவு வீதிகளை அடைத்து பொதுமக்களை அந்த பகுதிக்குள் நுழையவிடாமல் தடுத்திருந்தனர். அத்துடன் அங்கு செல்ல முயன்ற சட்டத்தரணிகள் படையினரால் தடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments