சர்வகட்சி அரசாங்மொன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முன்வைத்த யோசனைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சாதகமான பதில் கிடைத்துள்ளதாக கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அங்கத்தவர்களுக்கிடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பேச்சுவார்த்தையில் தற்போது சாதகமான பக்கம் ஒன்று தெரிவதாக கூறினார். அந்த விடயங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் காரணமாகவே, இரண்டு வாரங்களில் தங்களது பாராளுமன்றக் குழுவை சந்திக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கூறியதாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க,
தற்போதைய சந்தர்ப்பத்தில், அரசியல் முரண்பாட்டுக்காக அல்லது அரசியல் கட்சிகளின் எதிர்காலத்துக்காக செயற்படுவதைத் தவிர்க்க வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வைக் காண்பதற்காக, அனைத்து கட்சிகளும் இணைந்து ஏதேனுமொரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, குறுகிய கால அரசாங்கத்துக்கான வேலைத்திட்டத்தை தயாரிக்க வேண்டமென்பதே தங்களது கட்சியின் யோசனையாகுமென துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.