![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/08/06/b1.jpg?itok=7wL6uRU8)
நிவாரண காலம்முடிவடைந்ததும் ஒருவர் பத்தாயிரம் டொலர்களை மட்டுமே கையிருப்பில் வைத்திருக்கும் வகையில் சட்டங்கள் மீளவும்பிறப்பிக்கப்படலாம்
தமது தேவைக்கேற்பRFC அல்லது ரூபாவாகமாற்றி வைப்பிலிடவும்வாய்ப்பு
பல்வேறு வழிகளிலும் மக்கள் சம்பாதித்துள்ள, இதுவரை தகவல் வெளியிடப்படாத டொலர்கள், ஸ்டேர்லின் பவுண்ட்ஸ் மற்றும் வெளிநாட்டுப் நாணயங்கள் அவை எந்தளவு தொகையாக இருந்தாலும் அவற்றை எந்தவித சட்ட ரீதியான தடைகளுமின்றி வங்கிகளில் வைப்பிலிடுவதற்காக ஒரு மாத கால அவகாசத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அனுமதியை பெற்றுக் கொள்வதற்காக அதற்கான ஆவணங்கள் நேற்று ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்தன.
அதன்படி வெளிநாட்டுத் தொழில்கள், சுற்றுலா தொழில்துறை, மற்றும் பல்வேறு வேலைத் திட்டங்கள் மூலம் சம்பாதித்துள்ள பணம், பயிற்சிகள் மற்றும் கருத்தரங்குகளுக்காக வெளிநாடுகளிலிருந்து சம்பாதித்துள்ள வெளிநாட்டுப்பணத்தை அரசாங்கம் வழங்கியுள்ள இந்த கால அவகாசத்தினுள் வங்கிகளில் வைப்பிலிட முடியுமெனவும் நிதியமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த முறைமையின் கீழ் இப் பணத்தின் உரிமையாளர்கள் அவர்களது தேவைகளுக்கேற்ப RFC யாகவோ அவ்வாறில்லாவிட்டால் ரூபாயாக மாற்றி வைப்பிலிடுவதற்கும் அதன் மூலம் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதென்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
வழங்கப்படும் இந்த நிவாரண கால அவகாசம் நிறைவடைந்த பின்னர் இப் பணத்துக்கான உரிமையாளர் பத்தாயிரம் டொலர்களை மட்டுமே கையிருப்பில் வைத்துக்கொள்ளும் வகையில் சட்டங்கள் மீள அமுல்படுத்தப்படுமென்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்துக்கு பின்னர் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் சந்திப்பில் கலந்து கொண்டுள்ள மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன ஆகியோரிடம் மேற்படி கால அவகாசத்தை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டுமென அமைச்சர் பந்துல குணவர்த்தன யோசனையொன்றை முன்வைத்துள்ளார்.
அதனை கருத்திற் கொண்டே மேற்படி ஒரு மாத கால அவகாசத்தை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதியமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்தன.
லோரன்ஸ் செல்வநாயகம்