![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/08/14/a28.jpg?itok=kpitgDql)
இலங்கைப் பத்திரிகைத் துறை வரலாற்றில் நீண்ட நெடுங்காலம் ஓர் தேசிய பத்திரிகையில் பிரதம ஆசிரியராக பணிபுரிந்தவர் என்ற பெருமையை தன்னகத்தே கொண்டவர் கலாசூரி இ. சிவகுருநாதன். இலங்கை தமிழ் இலக்கியத்தின் உருவாக்கத்திலும், வளர்ச்சியிலும் தினகரன் ஏற்படுத்திய பங்களிப்பும், தினகரன் பிரதம ஆசிரியர் கலாசூரி ஆர். சிவகுருநாதனின் பங்களிப்பும் மிக அளப்பரியதே.
பத்திரிகைத்துறையில் ஒரு சகாப்தம் :
எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் கலாசூரி சிவகுருநாதனின் இயற்பெயர் “இரத்தினதுரை”.(1931.10.07 - 2003.08.08) யாழ்ப்பாணம், கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும் கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட நீண்ட காலமாக பணியாற்றிய ஊடகவியலாளர் என்ற பெருமைக்குரியவர். இவரது தந்தையாரின் பெயரே சிவகுருநாதன். பத்திரிகையுலகில் பிரவேசித்த பின் தந்தையாரின் பெயரையே தன் எழுத்தாள பெயராக தன் பிதாவை கௌரவப்படுத்தினார்.
அத்துடன் கலாசூரி ஆர். சிவகுருநாதன் பலரை எழுத்தாளர்களாகவும் பத்திரிகையாளராகவும் உருவாக்கியதில் சாதனையே செய்துள்ளார் எனபதும் உண்மையே. அவரின் வல்லமை, ஆளுமை, எல்லோருடனும் நட்புடன் பழகும் தன்மை சிவகுருநாதன் அவர்களை மக்கள் மனதில் என்றும் பதிய வைத்துள்ளது
கலாசூரி ஆர். சிவகுருநாதன் பத்திரிகைத்துறைப்பணி ஒரு சகாப்தம் என்றே கூற வேண்டும். ஏரிக்கரை தேசிய பத்திரிகை ஆசிரிய பீடத்தில் சுமார் நாற்பது வருட காலம் பணியாற்றியமை என்பது சாதனைக்குரியது ஒன்றாகும். இலங்கையின் தேசிய தினசரிகளில் ஒன்றான ‘தினகரன்’ என்றவுடன் நமது ஞாபகத்திற்கு வருபவர் தினகரன் பத்திகையில் நீண்டகாலம் பணிபுரிந்த தினகரன் பிரதம ஆசிரியர் கலாசூரி ஆர். சிவகுருநாதன் அவர்களே.
கலாசூரி ஆர். சிவகுருநாதன் பத்திரிகை ஆசிரியராகப் பணியாற்றியவாறே பட்ட மேற்படிப்பை மேற்கொண்ட அவர், 'இலங்கையில் தமிழ்ப் புதினப் பத்திரிகைகளின் வளர்ச்சி" என்ற பொருளில் ஆய்வு நூலைச் சமர்ப்பித்து முதுகலைமாணிப் பட்டத்தினைப் பெற்றுக்கொண்டார். கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவராகப் பல ஆண்டுகள் தமிழ்ப்பணியாற்றியவர். இவரது பணிகளைப் பாராட்டி இலங்கை அரசு 'கலாசூரி" விருதினை வழங்கிக் கௌரவித்தது.
யாழ்ப்பாணம் இந்துவின் மாணவர்:
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றுப் பின்னர், மேற்படிப்புக்காகவும் தொழில் காரணமாகவும் கொழும்பில் பல காலம் வாழ்ந்தார். 1955ஆம் ஆண்டு தினகரன் பத்திரிகையின் உதவி ஆசிரியராகச் சேர்ந்த இவர் ஆரம்பத்தில் பாராளுமன்ற நிருபராகப் பணியாற்றிப் பாராளுமன்ற நிகழ்வுகளை பத்திரிகை மூலம் கொண்டு வர வழிவகுத்தார். பின்னர் 1957ஆம் ஆண்டு தினகரன் பத்திரிகையின் செய்தி ஆசிரியராகி 1961ஆம் ஆண்டு முதல் பிரதம ஆசிரியராகப் பணியாற்றினார்.
இலங்கையின் தேசியமட்ட பத்திரிகை வரலாற்றில் 33வருடங்கள் பிரதம ஆசிரியராக இருந்த பெருமை இவருக்கு உண்டு. இலங்கைப் பல்கலைக்கழகம், திறந்த பல்கலைக்கழகம், இலங்கை பத்திரிகை சபை ஆகியவற்றில் பகுதிநேர விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார்.
உழைக்கும் பத்திரிகையாளர் சங்க தலைவர் :
சிறந்த பத்திரிகையாளர் சேவைக்கான விருது, சமூக மாமதி, தமிழ்மணி ஆகிய சிறப்புப் பட்டங்களைப் பெற்றுக் கொண்ட இவர், தமிழ் மக்களினால் செய்தி மன்னன் எனவும் அழைக்கப்பட்டார். இலங்கை நீதி அமைச்சினால் இலங்கை முழுவதற்குமான சமாதான நீதவானாக நியமனம் பெற்றதுடன், சிலகாலம் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் இலங்கை அரசின் அதிவிசேட விருதான கலாசூரி விருதினைப் பெற்றுள்ளார். சட்டத்துறையில் நுழைந்து படித்துச் சட்டத்தரணியாகவும், சட்டக்கல்லூரி பகுதிநேர விரிவுரையாளராகவும் பல ஆண்டுகள் கடமையாற்றினார். இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத் தலைவராக இரு தடவைகள் தெரிவுசெய்யப்பட்டுப் பணிபுரிந்தார். அச்சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழர் அவர் ஒருவரே என்பது குறிப்பிடத்தக்கது. சகல இன மக்களின் நன்மதிப்பையும் பெற்ற பண்பாளராக விளங்கினார்.
மலையக எழுத்தாளர் அந்தனி ஜீவா தினகரன் பிரதம ஆசிரியர் ஆர். சிவகுருநாதனை பற்றிக் குறிப்பிடுகையில் அவர் என்றும் பெருந்தன்மையானவர், தன்னை விமர்சிப்பவர் ஆற்றலை மதித்து அவர்களின் படைப்புகளை பிரசுரித்து ஊக்குவிப்பவர். அவர் தினகரன் பத்திரிகையில் பிரதம ஆசிரியராக இருந்த கால கட்டத்தில் வார வாரம் தனது எழுத்துக்கள் தினகரனில் இடம்பெற்றதை மறக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தினகரன் பத்திரிகையில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக பிரதம ஆசிரியராக பணியாற்றிய பெருமையும் புகழும் கலாசூரி ஆர். சிவகுருநாதனையே சாரும். நீண்ட காலம் முதல் சிவகுருநாதன் அமரராகும் வரை அவருடன் தொடர்புகளைப் பேணி வந்திருந்திருக்கிறேன் என்றும் , தனது எழுத்துமுயற்சிகளுக்கு ஊக்கமளித்து ஆக்கங்களை வாரந்தோறும் தினகரன் வாரமஞ்சரியில் பிரசுரித்து ஊக்கமளித்தவர். நாடறிந்த எழுத்தாளராக, பத்தி எழுத்தாளராக பரிணமிக்க அவரே காரணகர்த்தா என்றும் அந்தனி ஜீவா பெருமைப்படுகிறார்.
எல்லோருடனும் நண்பனாக :
அவரது மறைவின்போது நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஊடகத்துறையினர், எழுத்தாளர்கள், கலை இலக்கிய அமைப்புகளின் பிரதிநிதிகள், அமைச்சர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், பேராசிரியர்கள், அரசியல்வாதிகள் பலருட்பட ஏராளமான புத்திஜீவிகள் அஞ்சலி செலுத்தினர் என்பதை அறியும்போது அவர் நற்பண்புகளும், பத்திரிகை உலகிற்கு ஆற்றிய பங்களிப்பும் புலனாகின்றது.
ஆகையினாலேயே அவரை எல்லோருடனும் நண்பனாக வாழவைத்தது.
நீண்ட காலம் பத்திரிகை உலகின் மதிப்புப்பெற்ற தலைமகனாக விளங்கிய சிவகுருநாதன் அவர்கள் தமிழ் மக்களின் மனங்களில் என்றும் நிறைந்திருப்பார்
சிவகுருநாதனும் விருதுகளும் :
கலாசூரி சிவகுரு நாதன் இந்து மதத்தைச் சார்ந்தவர் ஆயினும் இஸ்லாமிய சமயத்தையும், முஸ்லிம்களையும் என்றும் மதித்தார். இலக்கியக் கூட்டங்களில் அவர் உரையாற்றும் போது. “பிஸ்மில்லாஹிர்ரஹ் மானிற்றஹீம”’அஸ்ஸலாமு அலைக்கும்’ என்று சொல்லி முஸ்லிம்களின் விசேட வைபவங்களில் தன் உரையை ஆரம்பிப்பார். அன்னாரின் சிரித்த முகமும் சீரியசிந்தனையும் மனதில் மாறாத பதிவுகளாகும் என மெளலவி காத்தான்குடி பெளஸ் தன் நினைவுரையில் குறிப்பிட்டுள்ளார்.
1955ஆம் ஆண்டு தினகரன் ஆசிரியர் பீடத்தில் சட்டத்தரணி சிவகுருநாதன் நுழைந்து புதிய சிந்தனைகளைப் புகுத்தி தினகரனுக்கு புதிய மகுடம் சேர்த்தார். 1955ஆம் ஆண்டு செய்தி ஆசிரியராகத் தரம் உயர்த்தபட்டு எழுத்துலகில் புதிய கோணத்தில் தினகரனை வழிநடாத்தி வந்ததனால் 1960ஆம் ஆண்டு விஜேவர்தன விருதை பெற்றதுடன் 1961ஆம் ஆண்டு தினகரன் பிரதம ஆசிரியர் கதிரையை அலங்கரித்தார். இந்தக் கால கட்டத்தில் தமிழ் முஸ்லிம் எழுத்தாளர் அணியை உருவாக்கினார்.
அன்னாரின் காலத்தில் எழுதிய எழுத்தாளர்கள் இன்னும் பிரகாசிக்கின்றனர். 1994ஆம் ஆண்டு ஜனாதிபதி விருதையும் பெற்றார்.
தினகரன் வளர்த்த இலக்கிய களம்:
ஈழத்துப் பத்திரிகைகள் நவீன இலக்கியத்திற்கு களம் அமைத்துக் கொடுக்க ஆரம்பித்த பின்னர் பல புதிய படைப்பாளிகள் உருவானதுடன், கணிசமான இலக்கிய படைப்புகளும் தோற்றம் பெற்றன. தினகரன் இவ்விடயத்தில் அதீத அக்கறை கொண்டு ஆற்றிய பணி மகத்தானது. அன்றைய காலகட்டத்தில் அதிகம் பேர் வாசிக்கும் பத்திரிகையாக தினகரன் விளங்கியதும் ஒரு காரணமெனலாம். அதன் காரணமாக இலக்கிய வளர்ச்சியில் குறிப்பாக இளம் படைப்பாளர்களின் இலக்கிய வளர்ச்சியில் காத்திரமான பங்களிப்பினை செய்தது.
தினகரன் இலக்கியப் பக்கங்களில் புதிய இளம் படைப்பாளிகளின் ஆக்கங்களை தேர்ந்தெடுத்து அவற்றை மெருகூட்டி வெளியிட்டது.தினகரன் ஆசிரியராகப் பணியாற்றிய கலாசூரி ஆர். சிவகுருநாதன் காலத்தில் இரண்டு தலைமுறை எழுத்தாளர்களை வெளிக்கொணர்ந்தாரென என்ற வரலாற்றுப் பெருமையும் அவருக்கு உண்டு.
கலாசூரி ஆர். சிவகுருநாதன் தனது ஆய்வு நூலில் குறிப்பிட்டது போல, இலங்கையின் தமிழ்ப் புதினப் பத்திரிகைகள் தோன்றி வளர்ந்த வரலாற்றை அறிவதிலும் ஆராய்வதிலும் ஒரு பத்திரிகையாளனுக்கு ஆர்வம் தோன்றுவது இயல்பானதே. இத்தகைய ஆர்வம் தனது நெஞ்சிலே நெடுநாட்களாய் ஊன்றியிருந்தது என்கிறார். இவ்வார்வமே "இலங்கைத் தமிழ்ப் புதினப் பத்திரிகை வளர்ச்சியில் 'தினகரன்' என்ற ஆய்வுக் கட்டுரையை எழுதுவதற்குத் தூண்டுகோலாயிற்று என்கிறார்.
ஐங்கரன் விக்கினேஸ்வரா