![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/08/14/a41.jpg?itok=-ILNHP84)
கடந்த ஜூலை 30ஆம் திகதி நண்பர்கள் தினத்தை கொண்டாடுவதற்கு காத்திருந்த நிலையில் ஜூலை 29ஆம் திகதி உடப்புஸ்ஸலாவை நகரில் இடம்பெற்ற ஒரு கோர சம்பவத்தில் றப்பானொக் தோட்டத்தை சேர்ந்த 19வயது இளைஞர் ஒருவரின் உயிர் அநியாயமாக பறிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் விஜயதாஸன் தனுஷன் என்ற இளைஞனை அவரது கூட்டாளி கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் உடப்புஸ்ஸலாவை பிரதேச மக்களை மற்றுமின்றி அனைவரையும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியது.
இந்த சம்பவத்தை இளங்கன்று பயமறியாது என்று எடுத்துக்கொள்வதா,அல்லது சாது மிரண்டால் காடுகொள்ளாது என்று எடுத்துக்கொள்வதா என்று ஆராயும் அளவிற்கு மக்களை யோசிக்க வைத்து விட்டது.
உடப்புஸ்ஸலாவை றப்பானொக் தோட்டத்தில் விஜயதாஸன் ஐ.விஜயலட்சுமி ஆகிய தம்பதிகளுக்கு நான்கு ஆண் பிள்ளைகள்.
இதில் திலிப் என அழைக்கப்படும் வி.தனுஷனே உயிரை பறி கொடுத்தவர். (19)வி.அரவிந்தன், வி.விஜித்ராஜ், வி.வினோத் ஆகியோர் உயிரிழந்த தனுஷின் சகோதரர்கள்.
தனுஷின் தந்தை இப்போது உயிரோடு இல்லை இவர் 2017.04.15அன்று இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கத்தி வெட்டு சம்பவ தினத்தன்று உயிரிழந்த தனுஷன் அவரின் சகோதரர் விஜித்ராஜ் மற்றும் கூட்டாளியான நவீன் என அழைக்கப்படும் உதயகுமார் கிஷாந்தன் ஆகியோர் உடப்புஸ்ஸலாவை நகருக்கு வந்து பியர், மற்றும் சாராயத்தை பெற்றுக்கொண்டு றப்பானொக் தோட்ட தேயிலை மலையில் வைத்து மது அருந்தியுள்ளனர்.
அந்த சமயத்தில் கத்தி வெட்டை நிகழ்த்திய றப்பானொக் தோட்டத்தை சேர்ந்த கிஷோர் (வயது 21) மற்றும் முச்சக்கர வண்டி சாரதியான கோபி (வயது21) ஆகியோருடன் இன்னுமொருவரும் இணைந்து தனுஷன், விஜித்ராஜ், மற்றும் இவர்களின் சகாவான நவீன் ஆகியோர் மது அருந்திய இடத்திற்கு மது போத்தல்களுடன் வந்துள்ளனர். பின்னர் இவர்கள் இருந்த இடத்திலிருந்து சுமார் ஐம்பது அடி தூரத்தில் அமர்ந்து மது அருந்தத் தொடங்கியுள்ளார்கள்.
இந்த நிலையில் கத்தி வெட்டை நடத்திய கிஷோர் தனது சகாக்களுடன் போதையில் தனூஷனின் அருகில் வந்து பேச்சு கொடுத்துள்ளார்.
அந்த இடத்தில் மது அருந்திய 19வயது தொடக்கம் 21வயதுடைய இவர்கள் அனைவரும் ஒரே பாடசாலையில் கல்வி கற்ற கூட்டாளிகள் ஆவர்.
அதேநேரத்தில் தனுஷுக்கும், கிஷோருக்கும் ஏற்கனவே பகை இருந்துள்ளதால் இருவரும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்துகொள்வதில்லை.
காரணம் கிஷோர் ஒரு உறவுக்கார பெண்ணை காதலித்ததாகவும், பின் அந்த பெண்ணை விட்டு விலகிய பின் தனுஷன் அந்த பெண்ணுடன் பழகி வந்ததாகவும் இதில் சாதி பிரச்சினை ஏற்பட்டதாகவும் தெரிய வருகிறது.
இதனால் தனுஷன் மற்றும் கிஷோர்க்கு இடையில் குரோதம் ஏற்பட்டு அடிக்கடி இருவரும் சண்டையிட்டு கொண்டதாகவும் இதில் கிஷோரை தனுஷனின் சகாக்கள் அடிக்கடி சரமாரியாக தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலைச் சம்பவம் இடம்பெற்ற மூன்று நாட்களுக்கு முன் தான் கொழும்பிலிருந்து கிஷோர் விடுமுறைக்காக தனது வீட்டுக்கு வந்துள்ளார்.
அவர் வரும்போது தான் உழைத்த பணத்தில் தங்க சங்கிலி ஒன்றும் வாங்கி கழுத்தில் அணிந்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
கிஷோர் முதல் முறையாக கொழும்புக்கு சென்றதால் தன்னுடைய பழக்கவழக்கங்களை கொழும்பில் உள்ளவர்களை போல மாற்றிக்கொண்டு உடை, நடை, பேச்சுக்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தி கொண்டுள்ளார்.
இவரின் நடத்தை சண்டித்தனம் என்பதால் இது தர்ஷனுக்கு பிடித்திருக்கவில்லை என்றும் அவரின் ஏனைய சகாக்களால் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற காதல் விவகாரம் மற்றும் தொடர்ச்சியாக தனது நண்பர்கள் தன்னை தாக்கிய சம்பவங்களை போதையில் கதைக்க ஆரம்பித்த கிஷோர் மற்றும் அவரின் சகாவான கோபி ஆகியோருக்கும் தனுஷனின் சகாக்களுக்கும் இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் நடந்து முடிந்த கசப்பான சம்பவங்களால் ஆத்திரமடைந்திருந்த கிஷோர் பலி வாங்கும் திட்டத்தை மனதில் கொண்டு சந்தர்ப்பத்தை பயன் படுத்தி வாய்தர்க்கத்தில் ஈடுப்பட்டதாகவும் தெரிய வந்தது.
கத்தி வெட்டை நிகழ்த்திய கிஷோர் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்.
அதேபோலவே இந்த கத்தி வெட்டு சம்பவத்தில் ஈடுப்பட்ட ஐவரும் சாதாரணமான குடும்பத்தை சேர்ந்தவர்களே.
இவர்கள் றப்பானொக் தோட்டத்தில் வீட்டுக்கும் ஊருக்கும் அடங்காத கட்டவிழ்த்துவிடப்பட்ட காளைகள் எனவும் மது பாவணைக்கும் போதைவஸ்து பாவனைகளுக்கு சிறுவயதில் அடிமையானவர்கள் எனவும் தெரிகிறது.
இது இவ்வாறிருக்க வாய் தர்க்கத்தில் ஈடுப்பட்ட இந்த கூட்டாளிகள் பின் சமாதானமடைந்ததும் வந்து மீண்டும் உடப்புஸ்ஸலாவை நகருக்கு வந்து மதுபானம் அருந்த தயாராகியுள்ளனர்.
அப்போது மதுபானம் பெறுவதற்கு பணம் போதுமானதாக இருக்கவில்லை உடனே கிஷோர் அணிந்திருந்த தங்க சங்கிலியை அடகு வைக்க தனுஷனின் சகாக்கள் தூண்டியிருக்கிறார்கள். அப்போது இவர்களுக்கிடையில் பணத்தகறாறு ஏற்படவே, அவர்கள் கிஷோரை தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் கிஷோரின் தங்கச் சங்கிலி தொலைந்து போனது.
இருப்பினும் இவர்களை முச்சக்கர வண்டி சாரதியான கோபி சமாதானப்படுத்திய பின் கையிலிருந்த பணத்தில் தனுஷன் அவரின் சகோதரர் மற்றும் அவரின் சகாவான நவீன் ஆகியோர் மதுபானம் அருந்தியுள்ளனர்.
ஆனால் தனது சங்கிலியையும் இழந்து மீண்டும் தான் தாக்கப்பட்டதை மறக்காத கிஷோர் தனது நண்பரிடம் பணம் கொடுத்து தனக்கு ஒரு கத்தியை பெற்று வருமாறும் வீட்டில் கேக் வெட்ட அதைக் கொண்டு போக வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதை நம்பி உடப்புஸ்ஸலாவை நகரில் கோழி கடை ஒன்றின் மேல்மாடியில் கத்திகள் விற்பணை செய்யும் கடையில் நண்பர் கத்தியை பெற்று வந்து கிஷோரிடம் கொடுத்துள்ளார்.
இதை தனது இடையில் மறைத்து கொண்டு கிஷோர் நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொரி ஒன்றுக்கருகில் ஒளிந்திருந்துள்ளார்.
இந்த சமயத்தில் முச்சக்கர வண்டி சாரதியான கோபி தனது வண்டியில் தனுஷன்,அவரின் சகோதரர் விஜித்ராஜ் இவர்களின் சகாவான நவீன் என்ற கிஷாந்தன் மற்றும் மேலும் இரு நண்பர்களுடன் ஏழுப்பேர் ஒரே வண்டியில் றப்பானொக் தோட்டத்திற்கு பயணிக்க ஆரம்பித்த போது கிஷோரையும் கூட்டிக்கொண்டு அனைவரும் போவோம் என கோபி கூறியுள்ளார்.
இவர்களின் வருகைக்காக இடைவழியில் காத்திருந்த கிஷோர் வண்டியை மறித்துள்ளார். அப்போது கோபி சட்டென வண்டியின் ஒளியை நிறுத்த வண்டியின் உள்ளே இருந்த தனுஷனை கிஷோர் வெளியில் இழுத்தெடுத்து தான் வைத்திருந்த கத்தியால் தனுஷனின் கழுத்தை அறுத்துள்ளார்.
அப்போது இதை தடுக்க முயன்ற தனுஷனின் சகாவான நவீனையும் கிஷோர் கத்தியால் வெட்டியும் தாக்கியும் உள்ளார்.
பின் பலத்த வெட்டு காயத்துடன் இரத்த வெள்ளத்தில் வீழ்ந்த தனுஷனின் கழுத்தில் பாயும் இரத்தத்தை நிறுத்த அவரின் சகோதரர் தனது டீசேட்டை கழற்றி அவரின் கழுத்தில் கட்டுப்போட்டு கோபியின் முச்சக்கர வண்டியிலேயே டெல்மார் வைத்திய சாலைக்கு சென்றுள்ளார்.
வண்டி வேகமாக வைத்தியசாலையை நோக்கி பயணித்த போது எமஸ்ட் என்ற இடத்தில் வண்டி ஒட்டத்தை நிறுத்திய கோபி வண்டியில் ஏதோ கோளாறு; பெற்ரோல் இல்லை எனச் சொல்லி இரத்த வெள்ளத்துடன் உயிருக்கு போராடிய தனுஷனையும் அவரின் சகோதரரையும் வண்டியை விட்டு இறக்கிய பின் 'வண்டியை தள்ளு ஸ்டாட் வரும்' என தனுஷன் சகோதரரிடம் கூறியுள்ளார்.
பின் தனுஷனின் சகோதரர் தம்பியை நடு வீதியில் படுக்க வைத்து விட்டு வண்டியை தள்ளிவிட கோபி வண்டியை இயக்கி கொண்டு இவர்களை நடு வீதியில் விட்டுவிட்டு மீண்டும் உடப்புஸ்ஸலாவுக்கே வந்துள்ளார்.
அப்போது செய்வதறியாது தவித்திருந்த தனுஷனின் சகோதரர் வண்டி ஒன்றுக்காக காத்திருந்த நிலையில் இராகலை பகுதியிலிருந்து ஆடை தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி வந்த பஸ் வந்துள்ளது.
உடனே பஸ் நிறுத்தப்பட்ட நிலையில் அதில் வந்தவர்கள் நிலையை அறிந்து கூச்சலிடவே, எமஸ்ட் மக்கள் அவ்விடத்திற்கு வந்து தனுஷனின் சகோதரர் தான் கத்தியால வெட்டியிருப்பார் எனத் தவறாக புரிந்து கொண்டு அவரை தாக்கியும் உள்ளனர்.
பின் நடந்ததைக் கூற, 1990அம்புலன்ஸ்க்கு அறிவித்துள்ளனர். உடனடியாக வந்த அம்புலன்ஸ் வண்டியில் உயிருக்கு போராடிய தனது சகோதரனை ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள டெல்மார் பிரதேச வைத்தியசாலைக்கு வந்த போதிலும் தனுஷனின் மரணத்தைத் தடுக்க முடியவில்லை.
அதேநேரத்தில் வெட்டு காயங்களுக்கு இலக்கான அடுத்த இளைஞர் நவீனையும் அம்புலன்ஸ் வண்டி ஒன்றில் அதே வைத்தியசாலைக்கு கொண்டு வந்து சேர்ந்த பின் மேலதிக சிகிச்சைக்காக நவீன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் கத்தியால் வெட்டிய கிஷோர் கத்தியுடன் உடப்புஸ்ஸலாவை பொலிஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.
அத்துடன் சம்பவம் தொடர்பில் உடப்புஸ்ஸலாவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எ.டி.வசந்த துரிதமாக செயல்பட்டு முச்சக்கர வண்டிச் சாரதியான கோபியையும் கைது செய்தார்.
அத்துடன் இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எ.டி.வந்தவிடம் வினவிய போது, அதிகளவு மது அருந்திய நிலையில் நண்பர்களுக்கிடையில் இடம்பெற்ற காதல் விவகாரம்,வாய் தர்க்கம்,மோதல் சம்பவம் கத்தி வெட்டு இறுதியில் கொலையில் முடிந்துள்ளது எனத் தெரிவித்தார்.
உடப்புஸ்ஸலாவை பிரதேசத்தில் சட்ட விரோத போதை பொருட்கள் ஒழிக்கப்பட்டுள்ளதாகவும் சிலர் வீட்டுகளில் பணத்தை களவாடி வெளியிடங்களில் போதை பாவனையில் ஈடுபடுவதாகவும் இப்படி போதைக்கு அடிமையாகி வரும் இளைஞர்கள் தமது பெற்றோரையும் தாக்குவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
"இதைத் தடுக்க நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். தோட்டப்பகுதிகளில் வெறுமனே பொழுதை வெட்டியாக போக்கும் இளைஞர் கூட்டமே இத் துயர சம்பவத்துக்கு காரணம்.
இதன் பின்னணியில் ஒரு கொலைக்கான எந்த வலுவான காரணமும் இல்லை.
உடப்புஸ்ஸலாவை தோட்டங்களில் வேலை வெட்டியற்ற இளைஞர்களை தொழிநுட்ப பயிற்சி நிலையங்களில் இணைத்து தொழில் பயிற்சிகளை வழங்க அரசியல் தலைமைகள் முன்வருவது அவசியம். பொலிசாரும் இணைந்து செயற்பட தயார்" என்கிறார் இப் பொலிஸ் அதிகாரி.
ஆறுமுகம் ரமேஷ்