இரசாயன உரம் 2021ஆம் ஆண்டு மே மாதம் தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் வந்த பெரும் போகம் மற்றும் சிறுபோக காலத்தில் எந்தவொரு பயிரையும் பயிரிட உரம் கிடைக்கவில்லை. அதனால் நெல் உள்ளிட்ட பயிர் செய்கை நடவடிக்கைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. கள்ளத்தனமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட இரசாயன உரங்கள் பாரிய விலைக்கு விற்கப்பட்டன. இரசாயன உரத்துக்கு பதிலாக சேதன பசளை அறிமுகம் செய்யப்படும் என கூறினாலும் போதுமான அளவு பசளை கிடைக்கவில்லை.
இரசாயன உரத்துக்கு பதிலாக சேதன உரம் அறிமுகம் செய்யப்பட்டதால் அறுவடை 50%தால் வீழ்ச்சியடைந்தது. அது உணவு பற்றாக்குறைக்கு வழி வகுத்தது. கடந்த சிறு போகத்தில் பயிர் செய்வதற்கு தேவையான எந்தவொரு உரமும் கிடைக்காததால் விவசாயிகள் நெற் பயிர் செய்கையிலிருந்து விலக முடிவு செய்தார்கள். மரக்கறி, சோளம் உள்ளிட்ட பயிர்களும் போதுமான அளவு அறுவடையை தரவில்லை. அதனால் அரிசி விலை மாத்திரமல்ல நெல்லின் விலையும் வேகமாக அதிகரித்தது. கொழும்பிலிருந்து பணக்காரர்கள் அனுராதபுரம், பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை போன்ற பிரதேசங்களுக்கு சென்று அதிக விலை கொடுத்து நெல் மூட்டைகளை கொழும்புக்கு கொண்டு வந்தார்கள். ஒரு கிலோ நெல்லின் விலை 300ரூபாய் வரை அதிகரித்தது. அதற்கும் கூடுதலாக பணம் கொடுத்து நெல்லை வாங்க சிலர் முன் வந்தார்கள். அறுவடை குறைந்ததால் நெல்லின் விலை அதிகரித்தது. ஒரு கிலோ அரிசியின் விலை 200ரூபாவையும் தாண்டியது.
பெரும் போகத்தில் இந்த முடிவு காரணமாக எதிர்பார்க்கப்பட்ட 40%அறுவடை கிடைக்காமற் போனது. விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்காததோடு பாவனையாளர்களுக்கும் அரிசியை குறைந்த விலைக்கு வாங்க முடியாமற் போனது. விவசாயிகள் எந்தவொரு உறுதியான காரணங்கள் இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட மாட்டார்கள். ஆனால் நாட்டில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் உரப்பிரச்சனை காரணமாக கடந்த காலங்களில் ஏற்பட்டன. மக்கள் இந்த பிரச்சினைகள் காரணமாக பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள். அன்று சேதன பசளை பற்றி பெருமையாக கூறியவர்கள் இந்த விவசாயிகள் பிரச்சினையில் அமைதியானார்கள்.
பொருளாதாரப் பிரச்சினை தீவிரம் அடைந்தவேளையில் அரசியல் துறையும் சூடாகியது. இந் நிலைமையில் மக்கள் போராட்டத்தை நோக்கி நாட்டை கொண்டு சென்றார்கள். இன்று காணப்படும் பொருளாதார பிரச்சினை உருவாவதற்கு காரணமாக அமைந்தது உரப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட உணவு பற்றாக்குறையாகும். அதனால் பெருமளவு டொலரை உணவு இறக்குமதிக்காக செலவழிக்க நேரிட்டது. அந்த டொலரை செலவு செய்து உரத்தை இறக்குமதி செய்திருந்தால் அரிசியை இறக்குமதி செய்ய நேரிட்டிருக்காது. பொருளாதார பிரச்சினை தீவிரமடைந்ததால் ஏற்பட்ட நிலைமையின் இறுதியில் அரசியல் அதிகார மாற்றம் ஏற்பட்டு ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவிக்கு வந்தார். பிரதமர் ரணிலின் தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சரவையில் விவசாய அமைச்சராக மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டார்.
பிரதமர் மக்களிடம் உணவு பிரச்சினை ஏற்படும் என கூறினார். அதனால் உணவு உற்பத்தியில் ஈடுபட தயாராகும்படி கேட்டுக் கொண்டார் . சிறு போகத்துக்காக சிறிதளவு நெற் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டிருந்ததால் பெரும் போகத்திற்கு தேவையான உரத்தை இறக்குமதி செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டது.
அச்சந்தர்ப்பத்தில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஆரம்பமாகவுள்ள சிறுபோகத்திற்கு உரத்தைப் பெற்றுக் கொடுக்க முயற்சி செய்வோம் என்று தெரிவித்தார். அதன்படி சிறு போகத்திற்கான உரத்தை இந்திய அரசின் கடன் உதவியுடன் கொண்டு வருவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. நூற்றுக்கு நூறு வீதம் விவசாயிகளுக்கு உரத்தை வழங்க முடியாவிட்டாலும் குறிப்பிட்டளவுக்கு அம்முயற்சியால் விவசாயிகளுக்கு உரத்தை கொடுக்க முடிந்ததாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.
ஆனால் அவ்வேளையில் சிறுபோகம் ஆரம்பமாகி இருந்தாலும் விவசாயத்தில் ஈடுபடாத விவசாயிகளை அரசு இரசாயன உரத்தை பெற்று தருவோம் என கூறி விவசாயம் செய்ய அழைத்தது. அச்சந்தர்ப்பத்தில் சிறுபோகத்துக்கு தேவையான உரம் மாத்திரமே இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. அவ்வேளையில் விவசாய அமைச்சுக்கு இருந்த பெரும் சவால் மக்களை வயலில் இறங்கச் செய்வதாகும்.
உரம் கொண்டு வந்தாலும் வயலில் இறங்க விருப்பமில்லாத விவசாயிகள் அதற்கு இணங்கியது அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க உணவு தட்டுப்பாடு ஒன்று ஏற்படும் என தெரிவித்ததினாலாகும். அதனால் சாப்பாட்டிற்கு உணவு இல்லாமல் போகும் என்ற பயத்தில் விவசாயிகள் வயலில் இறங்க சம்மதித்தார்கள்.
சிறு போகத்தில் இரண்டு லட்சத்து 75ஆயிரம் ஹெக்டயாரில் பயிர் செய்ய திட்டமிட்டிருந்தாலும் அது வெற்றி பெறவில்லை. இரண்டு லட்சம் ஹெக்டயார் விவசாயத்தை ஆரம்பித்திருந்தாலும் ஏனைய பகுதியை தாமதமாகவாவது ஆரம்பிக்க விவசாயிகள் தயாரானது இரசாயன உரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலாகும்.
உரம் கிடைக்கும் என்று நம்பிக்கையில் இரண்டு லட்சத்து எழுபத்தையாயிரம் ஹெக்டயார் காணியில் நெல்லை விவசாயம் செய்ய திட்டமிட்டிருந்தாலும் அது ஐந்து லட்சம் ஹெக்டயார் வரை அதிகரித்தது. அது நாட்டில் வரலாற்று ரீதியான மாற்றமாகும். அந்த கௌரவத்தை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அணியினருக்கு வழங்குவதை விடுத்து அதனை விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
யூரியா உரம் 65,000மெட்ரிக் தொன்னை இந்தியாவிடமிருந்து பெற அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதில் 25000மெட்ரிக் தொன் சிறுபோகத்துக்காக விநியோகிக்கப்பட்டுள்ளது. உரப் பிரச்சினை காரணமாக சோள பயிர்ச்செய்கை உள்ளிட்ட பல பயிர்ச்செய்கைகள் பாதிப்படைந்துள்ளன. சோளம் கடந்த போகத்தில் 17 % மாத்திரமே பயிரிடப்பட்டது. அதனால் விலங்குணவு உற்பத்தியும் வீழ்ச்சி அடைந்தது.
அதனால் ஏற்பட்ட முக்கிய பிரச்சினை முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை விரைவாக அதிகரித்தமையாகும். விவசாய அமைச்சு தற்போது சோளப் பயிர்ச்செய்கைக்காகவும் இரசாயன உரத்தை பெற்றுக் கொடுக்க முடிவு செய்துள்ளது. சோளப் பயிர்ச்செய்கை 20,000ஆயிரம் ஹெக்டயாராக மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் அதனை 60,000ஹெக்டயராக அதிகரிக்க விவசாய அமைச்சு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி உள்ளது. நெல் மற்றும் ஏனைய பயிர்ச்செய்கை நடவடிக்கையை ஆரம்பித்தால் உணவு இறக்குமதிக்கான டொலரின் அளவை சேமிக்க முடியும். இந்த உர வகைகள் இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன.
சோளப் பயிர்ச்செய்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டால் கோழி வளர்ப்பு தொடர்பான உற்பத்திகள் அதிகரிப்பதன் காரணமாக விலையில் வீழ்ச்சி ஏற்படும். அதனால் அது மந்தபோஷணைக்கு தீர்வாக அமையும். அதேபோன்று பால்பண்ணையாளர்களும் உரம் இல்லாமையால் பிரச்சனைக்குள்ளானார்கள். ஏனென்றால் புல் வளர்ப்பிற்கு யூரியா உரம் அவசியமாகும். புல்வெளிகள் குறைவு என்பதால் யூரியா உரத்தை பயன்படுத்தி புல்லை உற்பத்தி செய்ய விவசாயிகள் பழகியுள்ளார்கள்.
யூரியா உரம் கிடைக்காமல் புல்லுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு பால் உற்பத்தியும் வீழ்ச்சி அடைந்தது. அதனால் புல் உற்பத்திக்காகவும் யூரியா உரத்தைப் பெற்றுக் கொடுக்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதேபோன்று சோயா மற்றும் கிழங்கு உற்பத்திக்கும் உரத்தை வழங்க தீர்மானித்துள்ளது. உர இறக்குமதியில் உலக சந்தையில் விலை குறைவும் நமக்கு சாதகமாக உள்ளது.
உணவு பற்றாக்குறைக்கு தீர்வாக இவ்வருட ஆரம்பத்தில் நான்கு லட்சத்து 20ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. பெருமளவு டொலரை அதற்காக செலவிட நேரிட்டது. உரத்தை போதிய அளவு வழங்குவதற்கு முடிந்துள்ளதால் எதிர்வரும் பெரும் போகத்தின் பின்னர் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அதே வேலை அரசு மீது சுமத்தப்பட்ட முக்கிய குற்றச்சாட்டு இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படும் உரம் தரம் குறைந்தது என்பதாகும். தரக்குறைவான உரத்தை கொண்டு வந்து நாட்டில் மண்ணை பாதிப்புக்கு உள்ளாக்கப் போவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டினார்கள். ஆனால் விவசாயிகள் நீண்ட காலத்துக்கு பின்னர் தங்களுக்கு கிடைத்த நல்ல உரம் என கூறியுள்ளார்கள்.
உரத்தை இறக்குமதி செய்வதற்கு பணம் அச்சந்தர்ப்பத்தில் நாட்டில் இருக்கவில்லை அதற்காக அன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது . அவ்வேளையில் இந்திய கடன் திட்டத்தின் கீழ் எஞ்சியுள்ள பணத்திற்கு உரத்தை பெற்றுக் கொடுக்க இந்தியாவை இணங்கச் செய்தார். அவ்வேளையில் உரத்தை பணம் கொடுத்து பெரும் நிலைமை இருக்கவில்லை.
அதனால் அன்றைய பிரதமரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க பிரதமர் மோடியுடன் கலந்துரையாடி இணங்கச் செய்தார். தரக்குறைவான உரம் கொண்டு வரப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை பொய்யாக்கி பரிசோதனை அறிக்கைகள் அவை மிகவும் தரமானவை என சான்றிதழ் வழங்கியுள்ளன.
ஆனால் 10,000ரூபாவுக்கு விவசாயிகளுக்கு உரத்தை ஏன் வழங்குகிறீர்கள் என எதிர்க்கட்சியினர் கேள்வி கேட்டாலும் 10,000ரூபாய்க்கு மாத்திரமல்ல 40,000ரூபாவுக்கு கூட உரத்தைப் பெற முடியாத காலம் ஒன்று காணப்பட்டது. 40,000ரூபாய்க்கு விற்கப்பட்ட உரத்தை பத்தாயிரம் ரூபாவுக்கு வழங்குவது குறித்து விவசாயிகள் வெறுப்படையவில்லை. அது எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கே உள்ளதென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
எதிர்வரும் பெரும் போகத்துக்கான உரத்தை விலைக்கு வாங்குவதற்கு தேவையான பணத்தை தேடும் நடவடிக்கையை ஜனாதிபதி செயலணி தலைவர் சாகல ரத்னாயக்கவிடம் ஜனாதிபதி ஒப்படைத்துள்ளார். அவர் தற்போது அதற்காக உலக வங்கி மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளார். இரண்டு போகங்கள் பாதிப்படைந்திருந்தாலும் இம்முறை அது வெற்றி அளித்துள்ளது அரசு தலையிட்டு உரத்தை கொண்டு வந்ததனாலாகும். அரசாங்கம் எடுத்த முடிவால் டிசம்பர் மாதம் வரை நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது.
தமிழில் வீ.ஆர்.வயலட்