![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/08/21/302f18b0_22292_P_1_mr.jpg?itok=lfmHx-W1)
இந்தியாவில் இம்முறைசுதந்திர தினமானதுஅந்நாட்டின்ஜனநாயகத்தையும் இறைமையையும்மாத்திரமன்றி, ஒட்டுமொத்தஐக்கியத்தையும் ஆயுதபலத்தையும்வெளிப்படுத்துவதாக இருந்தது. உலகஅரங்கில் இந்திய தேசம் பலம் வாய்ந்தபெருந்தேசம் என்பதையும் சுதந்திரதினநிகழ்வுகள் புலப்படுத்தின.
ஆளும் பாரதீய ஜனதாவின் ஆட்சியில் இந்தியா பலம் வாய்ந்த தேசமாக உள்ளதை செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திரதின நிகழ்வுகளிலிருந்து புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.
ஆங்கிலேயர்களிடம் வசப்பட்டு இருந்த இந்தியா 1947ஆம் ஆண்டு ஓகஸ்ட் 15ஆம் திகதி சுதந்திரம் பெற்றது. இந்திய தேசம் சுதந்திரம் பெற்று 75வருடங்கள் ஆகும் நிலையில், கடந்த திங்களன்று சுதந்திர தின விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, முன்னதாகவே அழைப்பு விடுத்திருந்தார். பிரதமரின் இந்த வேண்டுகோளை ஏற்று முன்னதாகவே பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி நாட்டுப் பற்றை வெளிப்படுத்தினர்.
சுதந்திர தினத்தையொட்டி திங்களன்று காலை மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டுக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட மோடி, செங்கோட்டையைச் சென்றடைந்தார். அங்கு முப்படை வீரர்கள், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உயர் அதிகாரிகள் பிரதமரை வரவேற்றனர். அதைத் தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் ஏற்றுகொண்டார். பின்னர், நாட்டின் பிரதமராக 9ஆவது முறையாக செங்கோட்டையில் தேசியக் கொடியை பிரதமர் மோடி ஏற்றி வைத்தார்.
சுமார் 10ஆயிரம் பேர் பங்கேற்ற இவ்விழாவை முன்னிட்டு, செங்கோட்டையில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் போது, "ஜெய்ஹிந்த்" என்று கைகளை உயர்த்தி உணர்ச்சி பொங்கக் கூறினார். இதைக் கேட்டு அங்கு கூடியிருந்த பொதுமக்களும், "ஜெய்ஹிந்த்" என்று முழக்கமிட்டனர். இதனால் கோட்டையே அதிர்ந்தது.
இதற்கு முன்னதாக, மூவர்ண கொடி நிறத்தில் தலையில் தலைப்பாகை அணிந்து கம்பீரமாக செங்கோட்டையின் உள்ளே நுழைந்தார் பிரதமர் மோடி. அங்கு பாண்ட் வாத்தியங்கள் முழங்கிய கலைஞர்களின் அருகில் திடீரெனச் சென்றார். அங்கு உட்கார்ந்திருந்த அனைத்துக் கலைஞர்களின், கைகளைக் குலுக்கி அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். இந்த வாழ்த்தை அவர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
அதேபோல, செங்கோட்டையின் நுழைவாயிலை நோக்கி பிரதமர் கம்பீரமாக நடந்து வந்தார். அப்போது ஒரு யானை அங்கே நிறுத்தப்பட்டிருந்தது. அது நிஜ யானை இல்லை. ஆனால் உண்மையான யானை போலவே தத்ரூபமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஒரே கணத்தில் வேகமாக நடந்து வந்து கொண்டிருந்த மோடி, அந்த யானையைப் பார்த்ததும், அப்படியே மலைத்து நின்றார். நடந்து வந்த தன்னுடைய வேகத்தை குறைத்துக் கொண்டு, அந்த யானையின் அருகில் சென்று உற்றுப்பார்த்து ரசித்தார். பிறகு மறுபடியும் அதே கம்பீரத்துடன் செங்கோட்டையின் உள்ளே நுழைந்தார்.
பிரதமர் தன்னுடைய உரையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். சுதந்திரத்திற்குப் பின்னர் பிறந்த ஒருவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் நான்தான் முதலாமவன் என பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.
பிரதமர் மோடி தனது உடையில் எப்போதும் தனி கவனம் செலுத்தும் நபராவார். தமிழ்நாட்டிற்கு அவர் வரும்போதெல்லாம் பாரம்பரியான வேட்டி, சட்டை அணிந்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதேபோல பல்வேறு மாநிலங்களுக்கு பயணிக்கும்போதும் அவர் அம்மாநிலத்தின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் உடையணிந்து செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில், அவர் சுதந்திரதின விழாவில் அணிந்திருந்த தலைப்பாகை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மோடி பிரதமராக தேர்வானதிலிருந்து ஒவ்வொரு குடியரசு மற்றும் சுதந்திர தின கொண்டாட்டத்திலும் தலைப்பாகை அணியும் வழக்கத்தை கடைப்பிடித்து வருகிறார். வட இந்தியாவில் பல்வேறு நிறங்களில் தலைப்பாகை அணிவது பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் முறையாகக் கருதப்படுகிறது.
அவர் தனது உரையில் "இந்திய வரலாற்றில் அடுத்த 25ஆண்டுகள் முக்கியமானது. பெரிய இலக்குகளை நிர்ணயிப்பது மட்டுமே இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும். அடிமைத்தனத்தை முழுவதுமாக வேரறுக்க வேண்டும். நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும். 2047- ஆம் ஆண்டுக்குள் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும். புதிய பாதையில் இந்தியா காலடி வைக்கும் நாள் இது" என்று குறிப்பிட்டார்.
"நமது பாரம்பரியத்தின் மீது கர்வம் கொள்ள வேண்டும். பெருமைப்பட வேண்டும். நாட்டின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும். சுதந்திரம் பெற்று 100ஆண்டுகளில் முக்கிய குறிக்கோள்களை அடைந்திருக்க வேண்டும். ஒருங்கிணைந்த உணர்வுதான் இந்தியாவின் பலம். புதிய இந்தியாவிற்கு இதுதான் பலம். இந்தியாவின் வளர்ச்சிக்கு அனைத்து குடிமகன்களும் பங்காற்ற வேண்டும். என்னுடன் சேர்ந்து அனைவரும் உறுதியேற்றுக் கொள்ளுங்கள். நமது குறிக்கோள்கள், எண்ணங்கள் பெரியதாக இருக்க வேண்டும். அனைவருக்கும் குடிநீர், மின்சாரம் அளிக்கும் திட்டங்கள் வென்றுள்ளன. இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக உருவாக வேண்டும். கனவுகளை நனவாக்கக் கூடிய காலம் இது. இந்தியாவில் உள்ள பல மொழிகள் நம் நாட்டின் பெருமை, இந்தியாவில் அடிமைத்தனத்தின் எந்த ஒரு அடையாளத்தையும் துடைத்தெறிய வேண்டும். அனைவருக்கும் நல்லாட்சி, அனைவருக்கும் வளர்ச்சி என்பதே நம் இலக்கு ஆகும். பாலின சமநிலை காக்கப்படுவது நமது முக்கிய இலக்கு. பெண்களை அவமரியாதை செய்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது" என்று மோடி தெரிவித்தார்.
"பொருட்களின் உற்பத்தி மையமாக மாறி வருகிறது இந்தியா. நமது சுயசார்பு மின்சாரத் துறையிலும் சிறப்பாக உள்ளது. இரசாயனங்கள் இல்லாத உரங்கள் மூலம் விவசாயத் துறையை வளர்ச்சி அடைய செய்ய வேண்டும். புதிய கண்டுபிடிப்புகள் மூலம் நாட்டை வலிமைப்படுத்த வேண்டும். ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்திய நாட்டு மக்கள் எனக்கு ஆசிர்வாதங்களை வழங்க வேண்டும். அப்பொழுதுதான் இந்தப் போரில் என்னால் வெற்றி பெற முடியும். ஊழல் செய்தவர்கள் எத்தனை பெரிய நபர்களாக இருந்தாலும் அவர்கள் தப்பிக்க முடியாது. நாட்டைக் கொள்ளை அடித்தவர்கள் நிச்சயம் அதற்கான விலையைக் கொடுத்தே ஆக வேண்டும்" என்று நரேந்திர மோடி குறிப்பிட்டார். இந்தியாவின் ஆளுமையை பிரதிபலிக்கும் வகையிலேயே இந்திய சுதந்திர தினம் இம்முறை அமைந்திருந்தது.
எஸ்.சாரங்கன்