சர்வ கட்சி ஆட்சி என்பது சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளை தீர்க்கக் கூடியதே! | தினகரன் வாரமஞ்சரி

சர்வ கட்சி ஆட்சி என்பது சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளை தீர்க்கக் கூடியதே!

தேசிய பிரச்சினைகளில் தமிழ்க்கட்சிகள் அக்கறை  கொள்வதில்லை என்பது பொய்யுரை

இன்னும் சில தினங்களில் அமைக்கப்படவிருக்கும் சர்வ கட்சி ஆட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அதில் அமைச்சுப் பதவிகளை ஏற்கவும் வேண்டும் என்ற கருத்தை பரவலாக அனைத்து சமூகங்கள் மத்தியிலும் பார்க்க முடிகிறது. 

பொதுவாக தமிழ்க்கட்சிகள் தம் இனம், பிரதேசம் சார்ந்த பிரச்சினைகளையே பேசிவருகின்றன. தேசிய பிரச்சினையைப்பற்றிச் சிந்திப்பதில்லை என்ற கருத்து பெரும்பான்மைச் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து வருகின்றது. 

அடுத்ததாக தமிழ்க்கட்சிகள் முன்வைக்கும் கோரிக்கைகள் பாராளுமன்றத்தினூடாகவே நிறைவேற்றப்பட வேண்டும். அதனை நிறைவேற்ற, இந்த நாட்டின் பெரும்பான்மையினத்தின் ஆதரவு வேண்டும். அவ்வாறு ஆதரிப்பதற்கு, அவர்கள் தமிழ்க்கட்சிகளின்மேல் ஒரு நம்பிக்கையையும், பிணைப்பையும், வைத்திருக்க வேண்டும். பெரும்பான்மைச் சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய, கருத்துக்களை கொண்டதாக தமிழ்க்கட்சிகளின் கோரிக்கைகள் அமைந்திருக்கவும் வேண்டும். 

சர்வ கட்சி அரசாங்கம் என்பது ஒரு சேிய அரசு போன்றது. அங்கு கட்சி நலன்களுக்கு அப்பால் தேசியரீதியான பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கவும், மறுபடி பொருளாதார அபிவிருத்தியை நாட்டில் ஏற்படுத்துவதையும் இலக்காகக் கொண்டிருக்க வேண்டும். எனவே இச் சந்தர்ப்பத்தை தமிழ்க் கட்சிகள் மிகச் சாணக்கியமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமல்லவா? தமிழர்கள் இந்நாட்டின் தேசிய குடிகள். நாட்டின் எழுச்சியிலும் வீழ்ச்சியிலும் நாட்டுக்காக ஏனைய சமூகங்களுடன் கை கோர்த்து நிற்பவர்கள். இந்த இக்கட்டான நிலையில் அரசுடன் ஒன்றிணைந்து உழைக்கக் கூடியவர்கள் என்பதை ஏனையோருக்கு வெளிப்படுத்த வேண்டாமா? இப்போது வெளிப்படுத்தப்படும் நல்லெண்ணம் பின்னர் நாம் எமது பிரதான கோரிக்கைகளை முன்வைக்கும்போது தேசிய கட்சிகள் அவற்றை சாதகமாகப் பார்க்கத் தூண்டும் அல்லவா? என்று இவை அனைத்தையும் ஒன்று திரட்டி பாக்கியச்செல்வம்- அரியநேத்திரனிடம் முன்வைத்தோம். 

ஒரு தசாப்தகாலத்திறகு மேலாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த அரியநேத்திரன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பட்டிருப்புத் தொகுதிக்கிளையின் தலைவராக இருந்து அரசியற்பணிகளில் ஈடுபட்டுவருபவர். 

"சர்வ கட்சி அரசாங்கத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வரவேற்கிறது. அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை ஏனைய தமிழ்க் கட்சிகளும் எமது நிலைப்பாட்டிலேயே இருந்து வருகின்றன. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு கட்சி பேதங்களற்ற அரசு இருப்பது நல்லதாகப்படுகிறது. ஆயினும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அதில் அமைச்சுப் பதவிகளை ஏற்பதில்லையென்று முடிவெடுத்துள்ளது. நாம் பதவிகளுக்கும், பட்டங்களுக்கும் அலைபவர்களல்ல. அவர்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஆணையை எமக்கு வழங்கியுள்ளார்கள். நாம் அதனை கருத்திற்கொண்டு சர்வ கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்குகிறோமே தவிர பட்டத்தையோ, பதவியையோ பெறுவதற்கல்ல. அமைச்சுப் பதவிகளை பெறவில்லையென்றால் சர்வகட்சி அரசுக்கு எதிரானவர்கள் என்று அர்த்தப்படுத்திவிடக் கூடாது  நாம் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தும் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அந்தத் தமிழ்மக்களின் பிரச்சினைகளை பேசியேயாகவேண்டும். அதற்காக இந்த நாட்டின் தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் தலைப்படும்போது நாம் எதிர்ப்புத் தெரிவித்தோமா? இல்லை.

ஆதலால், தேசியப் பிரச்சினைகள்பற்றி தமிழ்க்கட்சிகள் சிந்திப்பதில்லை என்ற கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதொன்றல்ல. பெரும்பான்மை சிங்கள மக்களை வழிநடத்தும் தலைவர்களால் இக்கருத்து தோற்றவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நாம் கருதுகிறோம். இக்கருத்தை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் 

நாம் சிங்கள மக்களை விரோதித்துக்கொணடவர்களல்ல. அதேபோல சிங்கள மக்களும் எங்களை விரோதிகளாக எண்ணியதுமில்லை. தமிழர்களுக்கு எதிராக பல கலவரங்கள் சிங்கள மக்களால் தோற்றுவிக்கப்பட்டன. அவற்றைத் தூண்டிவிட்டவர்கள் கடும் போக்காளர்களான சிங்கள அரசியல்வாதிகள் என்பதை நாம் நன்றாக அறிந்து லைத்திருக்கிறோம் அது காலம் கடந்த விடயம். 

சமீபத்தில் நடற்தேறிய 'அரகலை'யின்போதும் அவைபற்றி சிங்கள மக்கள் பேசினார்கள். இந்த நாட்டில் தேசியம், அல்லது நாம் அனைவரும் இலங்யைர் என்ற எண்ணம் ஏற்பட வேண்டுமானால் நாட்டின் தலைவர்கள் தம்மை முதலில் திருத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களின் பின்னால் வருகின்ற மக்களும் திருந்தி செயற்படுவார்கள்" என்று கூறிமுடித்தார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். 

கிழக்கு மாகாண இந்து மன்றத்தின் தலைவர் கதிர் பாரதிதாசனின் இது பற்றிக் கேட்டோம்.  நாடு பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் நாட்டு மக்கள் பலவகையான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இவை மக்களுக்கு மேலும்மேலும் வேதனையை அளித்து வருகின்றது.  

சரியான முகாமைத்துவம் இருந்தால் நம்நாட்டுக்குத் தேவையான பொருட்களை நாமே உற்பத்தி செய்து அதில் தன்னிறைவைக் கண்டிருக்கமுடியம் அயல் நாடுகளிடம், கையேந்தவோ, கடன்படவோ தேவையில்லை. இந்த நிலையில் கட்சிக்கு கட்சி குற்றமும், குறையும் கண்டுபிடிப்தை தவிர்த்து அனைவரும் ஒரே குடையின்கீழ் ஒன்று திரண்டு நாட்டை கட்டியெழுப்பும் முயற்சியில் இறங்க வேண்டிய நிலைக்கு அவை வந்துள்ளமை சர்வ கட்சி அரசாங்கம் காலத்தின் தேவை. தேசிய ஒற்றுமைக்கு ஒரு முன்மாதிரி. எந்தக் கட்சியும் இது எமது கட்சிக்கு மட்டுமே சொந்தமான அரசாங்கம் என்று தம்பட்டம் அடிக்கவும் முடியாது குறிப்பிட்ட கட்சியின் ஆதரவாளர்களும், அங்கத்தினர்கள் எமது அரசு என மார்தட்டி சலுகைகள் பெறவும் முடியாது.  

இத்தகைய அற்ப சலுகைகள் மற்றும் ஊழல்கள் சர்வ கட்சி அரசு அமைக்கப்பட்டால் இல்லாமற்போய்விடும். அனைத்துகட்சியினருக்கும் அரசின் சலுகைகளை அனுபவிக்க சந்தர்ப்பம் ஏற்படும். இது சமநிலையை பேணுவதாக இருக்கும் என நான் கருதுகிறேன் 

தமிழக் கட்சிகள் சர்வ கட்சி அரசில் பங்கேற்க வேண்டும் என்றதொரு கருத்து அரசியல் கட்சிகளின் மத்தியிலும், தேசிய இனங்களிடையேயும் இருக்கின்றது.. இக் கருத்தில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போன்ற தமிழ்க் கட்சிகள் அவர்களால் அமைக்கப்படும் அரசாங்கத்தில் பங்கு கொண்டு நாட்டு மக்களுக்கு சேவை செய்வதில் என்ன தவறு இருக்கிறது? முஸ்லிம் கட்சிகளும் டக்ளஸ் தேவானந்தாவும் அதைத்தானே செய்கிறார்கள்! தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் சர்வகட்சி அரசில் அமைச்சுப்பதவிகளை ஏற்க வேண்டும் என்பது அனேக தமிழ் மக்களின் அபிலாசையாக இருக்கிறது. கடந்துபோன நல்லாட்சி அரசின் காலத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எந்தவிதமான அமைச்சுப் பதவிகளையும் ஏற்காமல் இருந்தாலும் நல்லாட்சி அரசு கவிழப் போகும் நிலையில் அதனை நிமிர்த்திப் பிடித்ததை யாரும் இலகுவில் மறந்துவிட முடியாது. 

தமிழ்த் தரப்புகள் தேசிய அரசியலிலும், தேசிய பிரச்சினைகளிலும் பங்குபற்றுவதில்லை என்ற கருத்தை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது.

சம்பந்தன் ஐயா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். அவர் தேசிய பிரச்சினைகள் வரும்போது அரசுக்கு எதிராக அல்லது நாட்டுக்கு எதிராக செயற்பட்டாரா? அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் நாட்டுக்கும், அரசுக்கும் சார்பாகவே இருந்தார் என்பது நாடறிந்த உண்மை. ஆதலால் தமிழ்க் கட்சிகள் தேசியப் பிரச்சினைகளில் தலையிடுவதில்லை என்ற கதை ஒரு புலம்பல் கதையென்றே படுகிறது 

 தமிழ்க் கட்சிகள் என்பவை நொந்துபோனதொரு இனத்தை பிரதிநிதிப்படுத்தும் கட்சிகள். பாதிக்கப்பட்ட இனத்தின் தேவைகள் ஏராளம். அவ்வாறான நோவை எற்படுத்தியவர்கள் பெரும்பான்மைச் சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள்தான். புலிகளை அடக்குவதாக கருதி வடக்குக் கிழக்கில் பொருளாதாரத் தடையை அரசாங்கம் விதித்தது. இதனால், அங்கு உணவு பொருட்களுக்கும் மருந்துகளுக்கும், தட்டுப்பாடு ஏற்பட்டது. தமிழ் மக்கள் தங்களது வாழ்க்கையை ஓட்ட எவ்வளவோ சிரமப்பட்டிருப்பார்கள்! இதை பெரும்பான்மை இனத்தின் பாராளுமன்றப் பிரதிநிதிகள் தட்டிக்கேட்டார்களா? ஐயோ பாவம் என்று பாராளுமன்றில் குரல் எழப்பினார்களா? இது எதைக்காட்டுகிறது? தனக்குத் தனக்கென இருமல் வந்தால்தான் அது ஏற்படுத்தும் பாதிப்பு தெரியும் என்பதை காட்டுகிறது. நமது நாடு முழுவதுமே கடந்த இரண்டு மூன்று மாத காலம் அதை உணர்ந்த விட்டது. ஒருவரது வேதனையை இன்னொருவர் உணராவிட்டாலும் மனத்தளவிலாவது உணர வேண்டும் 

தமிழ் மக்களினதும், தமிழ பேசும் மக்களினதும், மலையக மக்களினதும் தேவைகளை ஒரு சிறிய வரையறைக்குள் கொண்டுவர முடியாது. அது ஒவ்வொன்றும் விசாலமானதும் ஒன்றிலிருந்த ஒன்று வேறுபடக்கூடியது. அவ்வாறான வேதனைகளையும் சோதனைகளையும் தாங்கிய மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களை தெரிவு செய்த மக்களது தேவைகளை முதன்மைப் படுத்தி அதற்கான தீர்வைத் தேடியே ஓடுவார்கள்.  

நான் இங்கு ஒன்றை ஞாபகப்படுத்த விரும்பகிறேன். நமது நாட்டில் ஆளும் கட்சி அரசியல்வாதிகளும், அதன் ஆதரவாளர்களும் அரச நிதியை சூறையாடினார்கள் என்பது உலகறிந்த உண்மை. சர்வ கட்சி அரசில் அது நடப்பது அரிது. இதைவிட இன்னொரு விடயமும் இருக்கிறது. ஆளும் அரசின் அமைச்சர்கள் தங்களது பிரதேசத்தை முன்னேற்றுவதையே எண்ணமாகக் கொண்டு அமைச்சின் நிதியை அவர்களது பகுதி அபிவிருத்திக்கு ஒதுக்குகிறார்கள். இதனால் ஏனைய பிரதேசங்கள் பின்தங்கி விடுகின்றன.

இதனால் இந்த இரண்டு பிரதேசங்களைச் சேர்ந்த மக்களிடையே வெறுப்பு உருவாவது தவிர்க்க முடியாது. நல்ல உதாரணம் சொல்கிறேன். இந்திய அரசு ரெயில் எஞ்சின்களையும், பயணிகள் ரயில் பெட்டிகளையும் எமது நாட்டுக்கு நல்லெண்ண அடிப்படையில் வழங்கியது. அதில் ஒன்றை கிழக்கு- கொழும்பு ரயில் பாதையில் பயன்படுத்த திட்டமிட்டது. அது அதிவேக ரயில். ஆனால் அந்த அதிவேக பயணிகள் ரயில் மட்டக்களப்புக்கு வரவே இல்லை. பொலன்னறுவையோடு நின்றவிட்டது. நாம் அதை மட்டக்களப்புக்கு நீடிக்க முடியாதா எனக் கேட்டோம் அது ஜனாதிபதி மைத்திரிபாலவின் உத்தரவு என்று கூறப்பட்டது.

இன்றும் பொலன்னறுவையைச் சேர்ந்த சுகாதார அமைச்சின் ஊழியர்கள் அனைவரும் பொலன்னறுவையில் இருந்தே நாள்தோறும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்க கடமைக்கு வருகிறார்கள். அதே ஊழியர்களை மட்டக்ளப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்து நியமனம் வழங்கியிருக்கலாமே! எது தடுத்தது? இந்த நிலையில் ஒரு கருத்தை முன்வைக்கிறேன் தமிழ்க் கட்சிகள் பார்வையாளராக இருக்கக் கூடாது. அமைச்சுப் பொறுப்பை ஏற்க வேண்டும்  

இனி அடுத்த விடயத்திற்கு வருவோம். தமிழ்க்கட்சிகள் பிரிவினையை கோரவில்லை. நாட்டுக்கு தீங்கும் செய்யவில்லை. அவர்கள் கோருவதெல்லாம் தங்கள் பகுதியை மாகாண சபைகள் மூலம் நிர்வகிப்பதற்கு விடுங்கள் என்பதைத்தான். மாகாண நிர்வாகத்தை அரசு கொடுத்துவிட்டது. ஆனால் அதற்கான அதிகாரத்தை முழுமையாக கொடுக்கவில்லை. பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் போன்றவற்றை மத்திய அரசே வைத்திருக்கிறது. இதனால்தான் தமிழ் மக்கள் கொதிப்படைகிறார்கள். சின்னச்சின்ன தவறுகளால் பெரிபெரிய இடர்பாடுகள் தோன்றுவதை காண்கிறோம். சர்வ கட்சி அரசாங்கமொன்று தோன்றினால் இவ்வாறான உள்ளகப் பிரச்சினைகள் மறைந்துவிடலாம்" என்று கூறிமுடித்தார். 

ஆரையம்பதி பிரதேச சபை உறுப்பினர் என். மாணிக்கராஜாவை அணுகி அவருடன் பேசினோம். 

சர்வ கட்சி அரசை அனைவரும் ஏற்க வேண்டும். இதனால், இனம், மதம்,மொழி பிரதேசங்கள் என்பனவற்றில் ஒற்றுமையும், இறுக்கமான பிணைப்பும் ஏற்படுவதோடு நாம் அனைவரும் இலங்கையர் என்ற தேசிய உணர்வும் இனங்களிடையே எற்படும். நாடு வறுமையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு குடிமகனும் ஏதாவது ஒரு வருமானம் தரக்கூடிய தொழிலில் இறங்க வேண்டும். அந்நிய நாட்டு இறக்குமதிகளை கூடியவரை தவிர்க்க வேண்டும். நம் நாட்டுக்கு என்னென்ன தேவையோ அவற்றை நமது நாட்டிலே உற்பத்தி செய்ய திட்டங்களை தீட்டி செயற்படுத்த வேண்டும். இவை எல்லாமே பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுபவை. 

இவை தவிர நமது நாட்டுக்கு அந்நியச் செலாவாணியை ஈட்டித்தரும் உற்பத்திகளை நாம் மேலும் உயர்த்த வேண்டும்.  

மலையகத்தை எடுத்துக் கொண்டால் வாக்களிக்கும் அரசியல் உரிமையை தலைவர் தொண்டமான் பெற்றுக் கொடுத்திருந்தார். ஆனாலும் அவர்கள் அன்றிலிருந்து இன்றுவரை ஏதாவது பாரியளவிலான சமூக மாற்றத்தைச சந்தித்ததாகத் தெரியவில்லை.

இதே சமயம் சிங்களத் தலைவர்களோ. சிங்கள மக்களோ மலையகச் சமூகத்தை கவனித்தாகவும் தெரியவில்லை. மலையகச் சமூகத்தின் மீது அக்கறை செலுத்தப்பட்டிருந்தால் அவர்களின் வாழ்வு தொலைதூரத்திற்கு உயர்ந்திருக்கும்.

அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கும் அவர்களது அரசியற் தலைவர்களும் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூபா 1000த்தை சம்பளமாக பெற்றுக் கொடுக்க அரசோடு போராடி வருகிறார்கள் இதுவும்கூட ஒரு தேசியப் பிரச்சினைதான் என்பதை யாவரும் எற்றுக் கொள்வார்கள். இங்கே ஒன்றை நான் சொல்லியாக வேண்டும். அதாவது தேசியப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டால் அனேக போராட்டங்கள் தோன்றும் மலையகத்தில் அது நடந்தேறியிருக்கின்றன.. சர்வகட்சி அரசு ஆட்சி இதைத் தவிர்க்கும் என நம்புகிறேன்.  சர்வ கட்சி அரசாங்கம் என்று உருவாகும்போது அது. நல்லதொரு இணக்கப்பாடு கொண்டதாகவும் தேசிய ஒற்றுயை கொண்டதாகவும் இருக்கும். இதனால் நாட்டின் பொருளாதார முன்னேற்றம் நிச்சயமாக ஏற்படும். நாட்டின் தேசிய உற்பத்தி பெருகும். அரசியல் கட்சிகளிடையே எதிர்ப்பு தோன்றுவதற்கு இடமில்லை என்பதே தனது கருத்த என்றார் மாணிக்கராஜா. 

தொகுத்துத் தந்தவர்
புளியந்தீவு தவபாலன் 

Comments