தற்போது தேவைப்படுவது அரசின் வெளிப்படையான கொள்கைத் திட்டமே | தினகரன் வாரமஞ்சரி

தற்போது தேவைப்படுவது அரசின் வெளிப்படையான கொள்கைத் திட்டமே

அரசியல் நெருக்கடி, பொருளாதார நெருக்கடி என்ற குழப்பங்கள் இன்னும் தீரவில்லை. தீரும் போலத் தோன்றினாலும் தீருமா என்ற கேள்வி அதற்குப் பக்கத்தில் பிரமாண்டமாக எழுகிறது. காரணம், பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்காக சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சித்தார். ஆனால் அது இப்பொழுது சாத்தியமில்லை என்ற நிலைமைக்கு வந்துள்ளது. பதிலாக அனைத்துக் கட்சிகளிலிருந்தும் பங்குபெறக் கூடியவர்களை இணைத்த தேசிய அரசாங்கம் உருவாகும் என்று கூறப்படுகிறது. “இப்படித் தேசிய அரசாங்கம் ஒன்று அமையுமாக இருந்தால் மறுபடியும் மக்கள் போராட்டங்கள் வெடிக்கும். ஏனென்றால் தேசிய அரசாங்கம் என்பது ஒரு கண்துடைப்பாகவே இருக்கும். அது தீர்மானங்களைச் சுயாதீனமாக எடுக்கக் கூடியவர்களின் ஆட்சியாக இருக்காமல் ஒரு தரப்பின் கட்டுப்பாட்டில் இயங்கக் கூடியதாகவே இருக்கும். இது எந்தப் புதுமைகளையும் செய்யாது. நாட்டுக்கு இதனால் எந்தப் பயனுமில்லை. ஏறக்குறைய இது ஏனைய அரசியற் கட்சிகளை உடைத்துச் சிதைத்து, அங்கிருந்து தனியாட்களாக உருவி எடுத்து பொம்மை அரசாங்கமொன்றை உருவாக்கும் முயற்சி” என்று செயற்பாட்டியக்கங்கள் சொல்கின்றன.  

சர்வ கட்சி அரசாங்கம் என்றால் கட்சிகளுக்கு ஒரு கடப்பாடும் பொறுப்பும் ஏற்படும். அது அவர்கள் தரப்பில் நிதானமாகச் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்ற கட்டாய நிலையைத் தோற்றுவிக்கும். ஆகவேதான் சர்வகட்சி அரசாங்கம் ஒன்றைப் பற்றிச் சிந்திக்கப்படுகிறது. அல்லது அடுத்து வருகின்ற மாதங்களில் தேர்தல் ஒன்றுக்குச் செல்ல வேண்டும் என்றும் இவை கூறுகின்றன.  

இதேவேளை பொருட்களின் விலை குறைப்புப் பற்றி அரசாங்கம் அடிக்கடி சொல்கிறது. உதாரணமாக அரிசியின் விலை குறைக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது. ஆனால் சந்தையில் அப்படியில்லை.

கேட்டால் டொலர் பிரச்சினை என்று மிகச் சாதாரணமாகச் சொல்லி விடுகிறார்கள். இதேவேளை தபால் கட்டணம் உயர்ந்துள்ளது. அப்படியே மின்சாரக் கட்டணமும் உயரும் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே தொலைபேசிக்கான கட்டணம் உயர்ந்துள்ளது. இப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கிறதே தவிர, சம்பளம் யாருக்கும் உயரவில்லை. வருமான அதிகரிப்பு யாருக்கும் கிடைக்கவில்லை. மின்தடை, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி தொடக்கம் தொழில்துறை வரை அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.  

ஆகவே பொருளாதார நெருக்கடி நாளாந்த வாழ்க்கையைச் சுற்றி வளைத்துள்ளது.  

இன்னொரு பக்கத்தில் அரகலய போராட்டக் குழுவிலிருந்து மேலும் கைதுகள் இடம்பெற்றுள்ளன. இதில் சிலருக்கு நிபந்தனை அடிப்படையில் பிணை வழங்கப்பட்டுள்ளது. அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் வசந்த முதலிகமெ போன்றவர்களுக்கு தடுப்புக் காவலும் தொடர் விசாரணையும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜனநாயக ரீதியில் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் அரசுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது மேலும் மேலும் தொடரக்கூடிய சாத்தியங்களே உண்டு. ஏனெனில் மக்களுடைய வறுமை அதிகரிக்க அதிகரிக்க அரசுக்கு எதிராக அவர்களின் எதிர்ப்புணர்வும் அதிகரிக்கும். இது உலக நியதி.  

ஆகவே அரசானது மக்களுடைய வாழ்க்கைச் சுமையை முதலில் குறைக்க வேண்டும். தேசிய அரசாங்கமோ சர்வகட்சி அரசாங்கமோ எதுவாக இருந்தாலும் அது மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்க வேண்டும். இது முதலாவது. அடுத்தது, நாட்டை மெல்ல மெல்ல – படிப்படியாகக் கட்டியெழுப்பும் செயற்றிட்டங்களை உருவாக்கி அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். அதில் இலக்குகளை எட்ட வேண்டும். கடந்த கால அரசுகளைப் போல கவர்ச்சிகரமான விளம்பரப்படுத்தல்களைச் செய்து தெருவுக்குத் தெரு பெயர்ப்பலகையை நட்டதுதான் மிச்சம் என்று அமையக் கூடாது. நாடு வறுமைக்குழியில் வீழ்ந்தது என்ற வரலாற்றைத் துடைத்தெறிய வேண்டும்.  

உண்மையில் இன்னும் குழப்பத்துக்குள்ளாகியுள்ளாகித்தான் உள்ளது நாடு. எந்தப் பிரச்சினையையும் தீர்க்கக் கூடியமாதிரி யாரும் பொறுப்பாகச் சிந்திப்பதாகக் காணவில்லை. இன்னும் ஒவ்வொரு தரப்பும் பழைய பாணியில் கட்சி அரசியலைப்பற்றியே சிந்திக்கின்றன. அந்தச் சிந்தனை முறையை விட்டு வர அவை தயாரில்லை. அதற்குரிய திராணியும் அவற்றிடம் இல்லை என்பதால்தான் இவையெல்லாம் காலாவதியான சக்கைகள் என்று சொல்லப்படுகிறது.  

இதற்குள் வெளி அழுத்தங்கள் வேறு. நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை வெளியாருக்கு விற்கலாம் என்று சில தரப்புகள் கூறுகின்றன. இதை அனுமதிக்க முடியாது என்கின்றன எதிர்க்கட்சிகள். தொழிற்சங்கங்களின் நிலைப்பாடும் இதுதான். இதேவேளை சீன உளவுக்கப்பலை உள்ளே அனுமதிக்கக் கூடாது என்ற இந்திய அழுத்தத்தைக் கடந்து அந்தக் கப்பல் அம்பாந்தோட்டையில் நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்தக் கப்பல் விடயத்தில் நாம் எந்தத் தலையீடுகளையும் செய்யவில்லை. அது இலங்கையோடு சம்பந்தப்பட்ட சங்கதி. அவர்கள் அதைப் பார்த்துக் கொள்வார்கள் என்று இந்தியத்தரப்பிலிருந்து சொல்லப்பட்டாலும் இதனால் இந்தியத் தரப்புக்கு உண்டான சங்கடங்களை நாம் புரிந்து கொள்ள முடியும்.  

இதேவேளை மெல்ல மெல்ல தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டு ஜனாதிபதி நகர்கின்றார். உள்நாட்டின் அமைதியின்மையை அவர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்றாலும் பொருளாதாரப் பிரச்சினைக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கும் தீர்வைக் காணாத வரையில் எல்லாமே பிரச்சினையாகத்தானிருக்கும்.  

இப்படி பல பக்கங்களாலும் ஒரே நேரத்தில் இடிபட்டுக்கொண்டிருக்கிறது இலங்கை. இது எப்படியிருக்கிறது என்றால் 

“ஆ ஈன, மழை பொழிய, இல்லம் வீழ

 அகத்தடியாள் மெய் நோக, அடிமை சாக 

 மா ஈரம் போகுதென்று விதை கொண்டோட 

 வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ளச் 

சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத் 

 தள்ளவொண்ணா விருந்து வரச், சர்ப்பம் தீண்டக் 

 கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்டுக் 

 குருக்கள் வந்து தட்சணை கொடு 

 என்றாரே!”  

என்பதைப் போல இருக்கிறது.  

இந்த நிலையை எப்படி எதிர்கொள்வது என்று உண்மையில் எவருக்குமே தெரியவில்லை. இப்பொழுது ரணில் விக்கிரமசிங்கதான் ஒரேயொரு மீட்பராகவும் காப்பராகவும் உள்ளார். விரும்பியோ விரும்பாமலோ அவரைத்தான் தஞ்சமடைந்திருக்கின்றனர் பலரும். அதாவது அவரை ஆதரிப்போரும் எதிர்ப்போரும். அவரை மீறிச் செல்லக் கூடிய தலைமைகள் எதுவும் இலங்கையில் இப்போது இல்லை என்பது  உண்மையே.  

ஆனால், ரணில் விக்கிரமசிங்கவினால் படு குழியிலிருக்கும் இலங்கையை விரைவில் மீட்டெடுக்க முடியுமா?  

அதற்கு உள்நாட்டிலும் வெளிச்சூழலிலும் சாதகமான நிலைமைகள் இருக்குமா? ஆதரவு கிட்டுமா? பல விதமான முயற்சிகளை ரணில் விக்கிரமசிங்க எடுத்தாலும் உள்நாட்டில் அவர் வென்றெடுக்க வேண்டிய பல விடங்கள் உள்ளன. முக்கியமாக தமிழ், முஸ்லிம், மலையகத் தரப்புகளை அவர் அரவணைத்துக் கொள்ள வேண்டும்.  

இதில் சில நல்லெண்ணச் சமிக்ஞைகளை இந்தத் தரப்புகளுக்கு அவர் விடுத்திருக்கிறார். ஒன்று, புலம்பெயர் தமிழர் அமைப்புகள் சிலவற்றின் தடையை நீக்கியுள்ளமை. அதோடு குறிப்பிட்டளவான சில தனிநபர்களின் மீதான தடையை நீக்கி இந்தத் தரப்புகளின் பொருளாதாரப் பங்களிப்புகளையும் முதலீட்டு ஊக்குவிப்புகளையும் வரவேற்றிருப்பது. இரண்டாவது, மலையத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை அங்கீகரித்திருப்பதாகும்.  

இவற்றின் மூலம் சிறுபான்மைத் தரப்புகளின் பங்கேற்பை அவர் எதிர்பார்க்கிறார். ஆனால், அது எந்தளவுக்குச் சாத்தியப்படும் என்று தெரியவில்லை.  

இதேவேளை இந்தியாவைத் தவிர, வேறு எந்த நாடும் இலங்கையை பொருளாதார ரீதியில் மீட்டெடுப்பதற்கு முயற்சிப்போம். இலங்கைக்கு உதவுவோம் என்று வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. அடுத்த வாரமளவில் ஜனாதிபதி யப்பானுக்கான பயணத்தை மேற்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதன் பயன், விளைவுகள் எப்படி அமையும் என்று உறுதியாகக் கூற முடியாதுள்ளது. ஏற்கனவே யப்பானிய உதவிகள் மட்டுறுத்தப்பட்டுள்ளன. செய்த வேலைத்திட்டங்களையும் யப்பான் இடைநிறுத்தியுள்ளது. ஜனாதிபதியின் விஜயம் இதை மீளியங்கு நிலைக்குக் கொண்டு வருமா? என்று தெரியாது.  

 

இப்படியான ஒரு இக்கட்டான நிலையில்தான் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வைக் காண வேண்டும் என்ற அவசர நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டியுள்ளது. ஆனால், இதையெல்லாம் எழுந்தமானமாக நிறைவேற்றி விட முடியாது. மட்டுமல்ல, பொருளாதார நெருக்கடிக்கான தீர்வாக எதையும் சுருக்கிக் கொண்டும் செய்ய முடியாது. முதலில் அரசு வெளிப்படையான வேலைத்திட்டத்தை –கொள்கைத்திட்டத்தை முன்வைக்க வேண்டும். அந்த வெளிப்படைத்தன்மையே பலரையும் ஒரு புள்ளியில் இணைக்க வைக்கும். அதைச்செய்வதற்கு முயற்சிக்க வேண்டும்.  

ஏனென்றால் இலங்கையின் பிரச்சினைகள் எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்பானவை. ஒன்றின் விளைவாக ஒன்றென ஒவ்வொன்றாக உருவாகிப் பெருகியவை. இவற்றுக்கான தீர்வை உரிய காலத்தில் உரிய முறையில் காணத்தவறியதன் விளைவே இன்றைய சீரழிந்த – அபாய நிலைமையாகும். 

ஆகவே இதைத் தீர்க்க வேண்டும் என்றால் அதற்குரிய அடிப்படைகளை நோக்கி நகர வேண்டும். அதாவது அதற்குரிய அடிப்படைகளில் செயற்பட வேண்டும்.  

ஆனால் அப்படிச் செயற்படுவதற்கான எந்த முஸ்தீபுகளையும் காண முடியவில்லை. பதிலாக குறுக்கு வழியில் இலக்கை எட்டிவிடலாம் என்ற தந்திரோபாயத்தையே பின்பற்றப் பார்க்கின்றது அதிகாரத் தரப்பு.  

ஏற்கனவே கடந்த காலங்களிலும் இப்படித்தான். குறுக்கு வழியில் உடனடித்தீர்வைக் காண்பதையே வழிமுறையாகக் கொண்டு பழகிய இலங்கையின் அதிகாரத் தரப்புக்கு அடிப்படைப் பிரச்சினையை இனங்கண்டு, அதைத்தீர்க்கும் எண்ணம் இல்லை. உதாரணமாக இனப்பிரச்சினையின் விளைவாக உருவாகிய போரை முடித்து விட்டால் எல்லாமே சரியாகும் என்று நம்பப்பட்டது. ஆனால் அப்படி எண்ணியதைப்போன்று பின் வந்த நிலைமைகள் இருந்தனவா? இல்லையே, போர் முடிந்தாலும் நாட்டில் பொருளாதார நெருக்கடி தீரவில்லை. இனப்பிரச்சினை தீரவில்லை. அரசியல் நெருக்கடி குறையவில்லை. சுருக்கமாகச் சொன்னால் போர்க்காலத்திலும் விட இப்போதுதான் பிரச்சினைகள் அதிகம்.  

இப்பொழுது அது வேறு பல வடிவங்களில் பெருத்திருக்கிறது. காணாமல் போனார் விவகாரமாக, படைத்துறைச் செலவீனமாக, போர்க்குற்றமாக, அரசியலமைப்புத்திருத்தப் பிரச்சினையாக.. இப்படிப் பலவாக. 

இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டும் என்றால் IMF விடம் சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை என்று பல்வேறு தரப்பினராலும் சொல்லப்படுகிறது.  

அரசாங்கமும் இதே வழியில்தான் தீவிரமாகப் பயணிக்க முயற்சிக்கிறது.  

சில அமைச்சர்கள் தினமும் இதற்கான தீவிர பரப்புரைப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் சொல்கின்ற முதல் நியாயம், 199அரச நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குகின்றன - இனி இயங்க முடியாத நிலைக்குள்ளாகி விட்டன என்பதாகும். 

இந்த நிறுவனங்களை இந்த நிலைக்குக் கொண்டு வந்தது யார்? மக்களா? மக்கள் நம்பி, ஆதரவளித்து வாக்களித்து, அதிகாரத்தில் அமர்த்தப்ப்பட்ட இவர்கள்தானே!  

தேர்தலில் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக அளவுக்கதிகமாக நியமனங்களைச் செய்து திணித்தது, தமக்கிசைவான முறையில் நிர்வாகத்தை வளைத்து நெளித்தது, ஊழல்களைச் செய்தது, பொருத்தமில்லாத நடைமுறைகளை உருவாக்கியது போன்ற பொருத்தமற்ற காரியங்களைச் செய்து இந்த நிலைக்கு இவற்றைக் கொண்டு வந்து விட்டு இப்பொழுது நட்டத்தில் இருப்பதால் அவற்றை விற்போம் என்றால் சரியா?  

நட்டமும் கடனும்தான் நாட்டின் விதி. இதிலிருந்து தப்ப வேண்டும் என்றால் ஒரேயொரு காத்தற்கடவுள்தான் உள்ளது. ஒரேயொரு மீட்பர்தான் உண்டு என்று IMF இடம் சரணாகதி அடையச் சொன்னால் இதை எப்படி ஏற்றுக் கொள்வது? 

இல்லை, இந்தக் கட்டத்தில் வேறு எதுவுமே செய்ய முடியாது. நாங்கள் எரிபொருளுக்கும் எரிவாயுவுக்கும் க்யூவில் நிற்க முடியாது. அதை விட IMF விடம் போவது பரவாயில்லை என்றால்... 

அது நல்லதுதான்.

கருணாகரன்

Comments