![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/08/21/a18.jpg?itok=GjI-rC7R)
- பண வீக்கம், சுருக்க வீக்கம், தேக்க வீக்கத்தால் மக்கள் பாதிப்பு
இலங்கையில் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்கள் சேவைகளின் சராசரி விலைகள் துரிதமாக அதிகரித்துள்ள நிலையில் மக்களின் நுகர்வு நடத்தைகளில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
மக்களின் வருமானங்களில் அதிகரிப்பு ஏற்படாத நிலையில் ஏற்கெனவே நுகர்வு செய்த அளவுகளை குறைத்தல் அல்லது நுகர்வு செய்யப்படும் தடவைகளைக் குறைத்தல் அல்லது தரங்குறைந்த மலிவாக பொருட்களை நுகர்தல் ஆகிய மூன்று உபாயங்களை பின்பற்றுவதன் மூலம் மக்கள் நிலைமையைச் சமாளிக்க முயல்கின்றனர்.
மாதாந்த நிரந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பணவருமானத்தின் கொள்வனவுச் சக்தி எனப்படும் மெய் வருமானம் வெகுவாகக் குறைந்து போயுள்ள நிலையில் முன்னர் நுகர்வு செய்த அதே அளவு பொருட்கள் சேவைகளை நுகரத்தேவையான பணம் அவர்களிடம் இருக்காது. அதனால் மேலே சொன்ன சமாளிப்பு உபாயங்களை அவர்கள் பின்பற்ற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். மறுபுறம் நாளாந்த வருமானம் உழைப்பவர்கள் தமது கூலிகளை உயத்தித்தருமாறு கோரலாம்.
உதாரணமாக, முச்சக்கரவண்டிச் சாரதிகள் வீட்டு வேலை அல்லது தோட்ட வேலை செய்ய வருபவர்கள், மேசன்மார் போன்றவர்கள் உயர்ந்த கூலி கேட்கலாம். ஆனால் அது அவர்களின் வேலை இழப்புக்கு இட்டுச் செல்லும். முச்சக்கர வண்டிக் கூலி அதிகரித்தால் மக்கள் அதிகளவில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவர் சிறிய தூரமெனில் நடந்து செல்வர் அல்லது துவிச்சக்கர வண்டிகளைப் பயன்படுத்துவர். இதனால் முச்சக்கரவண்டிச் சாரதிகள் தமது வருமானத்தை இழப்பர். மேசன் அதிக கூலி கேட்டால் கட்டட வேலையை கட்டட உரிமையாளர் நிறுத்துவர் அல்லது பிற்போடுவர். வீட்டு வேலை, தோட்ட வேலை செய்பவர் அதிக கூலி கேட்டால் அதனை வழங்க முடியாத நிலையில் குடும்ப அங்கத்தவர்களே வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வீட்டுரிமையாளர் வருவர். இதனால் அதிக கூலி கேட்டவர்கள் வேலை இழப்பர்.
ஆகவே, பணவீக்க நிலைமைகளின் போது நிரந்தர வருமானம் பெறுபவர்களின் மெய்வருமானம் குறைவதுடன் நாளாந்த வருமானம் பெறுபவர்கள் தமது வேலைகளை இழப்பர். வேலை இழந்தவர்களின் நுகர்வு படுமோசமாகக் குறைவடையும். இது ஒட்டுமொத்தமாக மக்களின் நுகர்வுகளைக் குறைக்கும். சமூகத்தின் செல்வந்த சமூகம் அப்பாதிப்பிலிருந்து தப்பித்துக் கொண்டாலும் மாற்றுவழிகளில் அது பூமராங் போல அவர்களையும் தாக்கும்.
இலங்கை போன்ற நாடுகளில் மொத்தக் குடும்பங்களின் எண்ணிக்கையில் சுமார் 20சதவீதத்தினர் மாத்திரமே உயர் செல்வந்த வகுப்பினராக உள்ளனர். ஏனையோர் மத்தியதர வகுப்பினராகவோ அதைவிடக் குறைந்த பொருளாதார வலுக் கொண்டவராகவே உள்ளனர். இதனால் பணவீக்க நிலைமையொன்றின் போது நாட்டின் சனத்தொகையில் அறுதிப் பெரும்பான்மையானோர் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவதுடன் அவர்களின் மொத்த நுகர்வு குறைவடைவதால் நாட்டின் நுகர்வும் வீழ்ச்சியடையும்.
அரசாங்கத்தைப் பொறுத்தவரை இது நன்மையான விடயமாக நோக்கப்பட்டாலும் கூட அதனால் ஏற்படும் சமூக பாதிப்புகள் மிக அதிகம். மக்களின் வேலை இழப்புகள் மிக முக்கிய பாதிப்பாக இருக்கும். உதாரணமாக, அண்மையில் இலங்கையில் விசுக்கோத்துக் கம்பனிகள் விசுக்கோத்துக்களின் விலையை சடுதியாக அதிகரித்ததால் அவற்றின் விற்பனை மோசமாகப் பாதிக்கப்பட்டது.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றைக் கூட்டிய விசுக்கோத்துக் கம்பனிகள், உள்ளீடுகளின் விலையதிகரிப்பே தமது விசுக்கோத்து விலையதிகரிப்புக்குக் காரணமெனவும் மக்கள் விசுக்கோத்துகளை வாங்க முன்வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தன. அவர்கள் நிர்ணயித்த விலைகளில் முன்பு போல விசுக்கோத்து வாங்க மக்களிடம் ஏது பணம் என்ற கேள்விக்கு அவர்களிடம் பதில் இருந்ததாகத் தெரியவில்லை. மாறாக வெற்றிகரமாக இயங்கும் தமது விசுக்கோத்து ஏற்றுமதிக் கைத்தொழிலை உள்நாட்டு மக்களின் பாராமுகம் மோசமாகப் பாதிக்குமெனவும் வேலை இழப்புகளை சந்திக்க நேரிடும் எனவும் கூறப்பட்டது.
ஆகவே நுகர்வு குறையுமாயின் அது வேலை இழப்புகளை எற்படுத்தும் என்பது வெளிப்படையானது. என்னதான் உற்பத்தியாளர்கள் நுகர்வோரைக் கசக்கிப் பிழிந்து இலாபம் பார்க்க முனைந்தாலும் நுகர்வோர் ஒரு கட்டத்தில் மெய்வருமான வீழ்ச்சியினால் நுகர்வைக் கணிசமாகக் குறைக்கும்போது விற்பனைகள் மோசமாகப் பாதிக்கப்படும். அதனைத் தடுப்பதற்காக உற்பத்திக் கம்பனிகளும் விற்பனையாளர்களும் பல்வேறு உத்திகளைக் கையாளுகின்றனர்.
உதாரணமாக, சிறுவர்கள் விரும்பி உண்ணும் உடனடி நூடில்ஸ் வகைகளின் விலை மாற்றங்களையும் அவற்றின் அளவுகள் (size) மாறுவதையும் அவதானித்திருப்பீர்கள். ஆரம்பத்தில் 100கிராம் அளவில் ஒரு பெக்கற் 12ரூபா ஐம்பது சதத்திற்கு விற்கப்பட்டது. பின்னர் படிப்படியாக விலை அதிகரித்த அதேவேளை அதன் அளவு 85கிராமாகக் குறைக்கப்பட்டது. இப்போது அளவு 72கிராமாகக் குறைக்கப்பட்டு 120ரூபாவாக விற்கப்படுகிறது. இதுபோன்ற இன்னொரு பொருள் ஜம்போ பீனட்ஸ். 200கிராம் 150ரூபாவுக்கு விற்கப்பட்ட இது இப்போது அளவு 150கிராமாகக் குறைக்கப்பட்டு 575ரூபாவுக்கு விற்கப்படுகிறது. சுவையூட்டப்பட்ட பால் பைக்கற்றுகள் 200மில்லி லீற்றரில் 25ரூபாவுக்கு விற்கப்பட்டவை இப்போது 180மில்லி லீற்றர் 120ரூபாவரை விற்கப்படுகிறது. இதேதான் சவர்க்கார வகைகளின் நிலையும். 100கிராம் நிறையில் விற்கப்பட்ட சவர்க்காரங்களின் நிறை படிப்படியாகக் குறைந்து அவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்லாமல் இன்னும் ஒருபடி மேலே சென்று ஹோட்டல்களின் கழிவறைகளில் கைகழுவப் பயன்படுத்தப்படும் மிகச்சிறிய அளவினதான சவர்க்காரக்கட்டிகளும் இப்போது சாதாரண சந்தைக்கு வந்துள்ளன.
சிறுவர்கள் உண்ணும் மாரி விசுக்கோத்துக்களின் நிலையும் இதுதான். பால்மாக் கம்பனிகள் இப்போது ஒரு கிலோ பால்மாவுக்கு 2895ரூபாவை அறவிடுகின்றன. சாதாரண குடும்பங்களால் அதை வாங்க முடியாது என்பதால் சிறியசிறிய பொதிகளில் அடைத்து விற்பனைக்கு விட்டிருக்கின்றனர். ஆனால் அவற்றின் விலையை கிலோகிராமிற்கு மாற்றிப்பார்த்தால் 3000ரூபாவை விஞ்சியதாக இருக்கும்.
இப்போது சூடாக இருக்கும் இருக்கும் இன்னொரு பொருள் கோழிமுட்டை. 20ரூபாவுக்கும் குறைவாக இருந்த முட்டையொன்றின் விலை 68ரூபாவாக அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோழி முட்டைகளின் அளவை விட தமது கோழிகள் பெரிய முட்டைகளை இடுவதால் விலையதிகரிப்பு நியாயமானது என்கிறார்கள் முட்டை உற்பத்தி சங்கத்தினர். இவற்றிற்கு மாற்றீடாக குறுங்காலத் தீர்வுகள் மக்களுக்கு இல்லை என்பதால் இவ்வாறு தாம் நினைத்த விலையை நிர்ணயித்து அவ்விலையில் மக்களை வாங்கத்தூண்டும் பல்வேறு உத்திகளை நிரம்பல் செய்பவர்கள் கையாள்கின்றனர்.
சில குடும்பங்கள் பழக்கத்தைக் கைவிட முடியாமல் இவற்றை கொள்வனவு செய்கின்றன. பலர் இவற்றின் நுகர்வை நிறுத்தி விட்டிருக்கின்றனர். ஆனால் வீட்டில் இருக்கும் சிறு குழந்தை கேட்டு அழும்போது எந்தப் பெற்றோரால் சகித்துக் கொண்டிருக்க முடி யும்? இவ்வாறு தொடர்ச்சியாக பொருட்கள் சேவைகளின் சராசரி விலைகள் அதிகரித்துச் செல்வதை நாம் பணவீக்கம் (inflation) என்போம். விலைகள் அதிகரித்துச் செல்லும் அதேவேளை விற்கப்படும் பொருட்கள் சேவைகளின் (size) அளவுகள் மேலே சுட்டிக்காட்டியது போல குறைவடைந்து செல்வதை சுருக்கவீக்கம் (shrinkflation) என்று அழைக்கிறார்கள். அதேபோல பணவீக்கம் ஏற்பட்டதன் காரணமாக உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பதால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்களின் நுகர்வு வீழ்ச்சியினால் மேலும் அடிவாங்கி விற்பனையின்றித் தேங்கிக் கிடப்பதனால் தொழிலாளர்கள் வேலையிழந்து வேலையின்மை அதிகரிக்கும் நிலைமையை தேக்கவீக்கம் (stagflation) என அழைப்பர். இம்மூன்று நிலைமைகளையும் ஒரு ங்கே அவதானித்து அனுபவிக்கும் (துர்) பாக்கியம் இப்போது இலங்கை மக்களுக்குக் கிட்டியிருக்கிறது. எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.
கலாநிதி எம். கணேசமூர்த்தி
பொருளியல்துறை
கொழும்பு பல்கலைக்கழகம்