அரை இறத்தால் பாணுக்காக அதிகாலையிலேயே வரிசையில் நின்ற மக்கள்! | தினகரன் வாரமஞ்சரி

அரை இறத்தால் பாணுக்காக அதிகாலையிலேயே வரிசையில் நின்ற மக்கள்!

உள்நாட்டு ஏற்றுமதி விவசாயப் பொருட்களின் உற்பத்தியில் வீழ்ச்சி; போதிய வெளிநாட்டு செலாவணி கையிருப்பில் இல்லாமை, அரிசி உற்பத்தியில் வீழ்ச்சி மற்றும் அரிசியை அதிகவிலை கொடுத்து இறக்குமதி செய்ய முடியாத நிலை... -  அரிசியை சந்திரினில் இருந்தாவது கொண்டு வந்து தருவேன் என்று உறுதிமொழி வழங்கியிருந்தாலும் அரிசியையும் மாவையும் தாராளமாகக் கிடைக்கச் செய்ய முடியாத நிலையில் ஸ்ரீமாவின் அரசாங்கம் அரிசி பங்கீட்டை அரைக் கொத்தாகக் குறைத்தது. தாராளமாகக் கிடைத்துவந்த பாணை பங்கீட்டு முறைக்குள் கொண்டுவந்தது. 

அது குடும்ப அட்டையும் அரிசி புத்தகமும் நடைமுறையில் இருந்த காலம். அச் சமயத்தில் அடையாள அட்டை நடைமுறையில் இல்லை. அரிசி பங்கீட்டு புத்தகத்தை கையில் வைத்திருப்பது இன்றைக்கு அடையாள அட்டையை வைத்திருப்பதற்கு சமம். அதைத் தொலைத்து விட்டால் திரும்பப் பெறுவது மிகக் கடினம். எனவே மக்கள் அரிசிப் புத்தகத்தையும் குடும்ப அட்டையையும் மிகப் பத்திரமாக வைத்திருந்தார்கள். கிழமைக்கு ஒரு நபருக்கு ஒரு கொத்து அரிசி 25சதத்துக்கு சங்கக் கடைகளிலும் லைசன்ஸ் (உத்தரவு பெற்ற பல சரக்கு கடைகள்) கடைகளிலும் வழங்கப்படும். ஒரு குடும்பத்தில் ஆறு நபர்கள் என்றால் ஆறு கொத்து அரிசி கிடைக்கும். செத்தல் மிளகாய், மாசி, கடுகு, சீரகம் போன்றவை ஒரு குடும்ப உறுப்பினருக்கு இத்தனை அவுன்ஸ் என்ற அடிப்படையில் குடும்ப அட்டை மூலம் அவ்வப்போது வழங்கப்பட்டன. இது நாடு சுதந்திரம்பெற்றநாள் முதல் நடைமுறையில் இருந்து வந்த பங்கீட்டு நடைமுறை. பாணையும் இந்த முறையில் பங்கீடு செய்ய அரசு முடிவு செய்தது. கோதுமையை போதுமான அளவில் இறக்குமதி செய்ய முடியாதநிலை. உலக சந்தையில் மாவுக்குத் தட்டுப்பாடு. விலை அதிகம். இறக்குமதி செய்யவும் கையில் டொலர் இல்லை. எனவே கோதுமை மா நேரடியாக பேக்கறிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது. விடியற் காலையில் பேக்கறிகள் பாணைத் தயாரித்து சங்கக் கடைகளுக்கு அனுப்பி வைத்தன. ஒரு குடும்பத்துக்கு அரை இறாத்தல் என்ற வகையில் பாண் பங்கீடு செய்யப்பட்டது. பத்துப் பேர் கொண்ட குடும்பம் என்றால் 5இறாத்தல் பாண் தினமொன்றுக்குக் கிடைக்கும். அதே குடும்பத்துக்கு கிழமைக்கு அரைக் கொத்து என்பதாக ஐந்து கொத்து அரிசி 25சதம் என்ற விலையில் வழங்கப்பட்டது. 

இப்போது பெற்றோலுக்கு டீசலுக்கும் நீண்ட வரிசைகள் காணப்பட்டதைப் போலவே அன்றைக்கு அதிகாலையிலேயே சங்கக்கடைகளில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. அப்போது நான் பாடசாலையை விட்டு விலகி வீட்டில் இருந்தகாலம். எனவே சங்கக் கடைக்கு சென்று அரிசி வாங்கி வருவது, தினசரி பாண் கியூவில் நின்று பாண் வாங்கி வருவது என்பன எனக்கு அளிக்கப்பட்டிருந்த பிரதான கடமைகள். 

விடியற் காலையில் நான்கு மணிக்கு எழுந்து விடுவேன். துவாலையை எடுத்து தலைப்பாகையாகக் கட்டிக் கொள்வேன். வாங்குவதற்கு கடைகளில் தொப்பிகள் விற்பனையில் இல்லை. கட்டைக் கால் சட்டை, முரட்டு கைத்தறி ஷர்ட்டுடன் கையில் தெரு நாய்களை விரட்ட ஒரு தடியுடன் சங்கக் கடை நோக்கிக் கிளம்பி விடுவேன். வழியில் மேலும் இரண்டு வேலை வெட்டி இல்லாத நண்பர்கள் ஓலைப் பைகளுடன் என்னுடன் சேர்ந்து கொள்வார்கள். ஒரு பத்து நிமிட நடையில் சங்கக் கடையை அடைந்து விடுவோம். அந்த நேரத்தில் 25.30பேர் எங்களுக்கு முன்பாக வரிசையில் நின்று கொண்டிருப்பார்கள்.  

விடியற் காலையிலேயே வரிசையில் நின்றால்தான் முதல் டெலிவரியிலேயே பாண் கிடைக்கும். இல்லையேல் இரண்டாவது தொகை பாண் வந்துசேர ஏழரை மணியாகிவிடும். ஐந்தரை மணியளவில் சங்கக் கடைக்கு பாண் வந்து விடும். அன்றைய விறகடுப்பு பாண். இன்றைய பாண் மாதிரி மெத்தென்று இருக்காது. கடினமானதாகவும், நடுவே ஓட்டைகளுடனும், சில சமயம் சரியாக வேகாமலும் இருக்கும். எப்போதாவது இறந்த வண்டுகளையும் காணலாம். மஞ்சள் நிறத்தில் திட்டுதிட்டாகவும் இருக்கும். அவற்றை பிய்த்து எறிந்து விட்டு சாப்பிட வேண்டும். பாண் விநியோகத்துக்கென ஒரு பாண் கார்ட் கொடுத்திருந்தார்கள். அதை நீட்டியதும் குடும்ப உறுப்பினருக்கு அரை இறாத்தல் என்றபடி பாணைத் தருவார்கள். எங்கள் குடும்ப எண்ணிக்கை பத்து. எனவே ஐந்து இறாத்தல் கிடைக்கும். அப்போது உண்மையில் வீட்டில் வசித்தவர்கள் ஆறுபேர்தான். எனவே ஐந்து இறாத்தல் பாணை வைத்து முழு நாளையும் ஓட்ட முடிந்தது. 

அக்காலத்தில் மைசூர் பருப்பெல்லாம் கிடையாது. பால் சொதி, சம்பல், சீனி சம்பல் வகையறாககளை செய்து வைப்பார்கள். மூன்று அல்லது நான்கு துண்டு பாணை சொதி அல்லது சம்பலுடன் தொட்டு சாப்பிட்டு விட்டு அடுத்த வேலைக்கு கிளம்பி விடுவேன். எங்கே மரவள்ளி அல்லது வற்றாளைக் கிழங்கு கிடைக்கும் எனத் தேடிப்போக வேண்டும். கிடைத்தால் இரவில் மரவள்ளி சாப்பாடு. கோதுமை மாவை கரைத்து தோசையாக சுட்டுத் தருவார்கள். பகலில் மாத்திரம் சோறு. வீட்டில் கோழி வளர்ப்பு இருந்ததால் எப்போதாவது முட்டைக் கறி வரும். ஒரு முட்டையின் விலை 22சதம் என்பதால் வீடுகளில் கோழி வளர்ப்போர் முட்டைகளை உண்ணாமல் விற்றுகாசாக்கி விடுவதே வழக்கம். 

அக் காலத்தில் சாப்பாட்டுக் கடைகளின் பாடு பெரும்பாடாகி விட்டது. கிழமையில் இரண்டு நாள் அரிசி சோறு பரிமாறத் தடை விதிக்கப்பட்டிருந்தது. கோதுமை மாவை களவாகப் பெற்றுத்தான் மாவு தோசை, ரொட்டி தயாரித்து விற்றார்கள். சேமன் கிழங்கு, மரவள்ளி, வற்றாளை என்பனவற்றை அவித்தும், கறி செய்தும், அவித்து பசையாகக் கிண்டி அதில் மார்ஜரின் சேர்த்தும் சாப்பாட்டுக் கடைகளில் விற்றார்கள். மூன்று வேளையும் ஹோட்டல்களில் சாப்பிட்டவர்கள் திண்டாடிப் போனார்கள். அக் காலத்தில் ஸ்ரீமா அரசு அரிசியை இடத்துக்கு இடம் எடுத்துச் செல்வதைத் தடை செய்திருந்ததால் அம்பாறை, பொலன்னறுவை போன்ற வயல் பிரதேசங்களில் இருந்து அரிசியை கொழும்புக்கும் வேறு இடங்களுக்கும் எடுத்துச் செல்ல முடியாதிருந்தது. சிங்களத்தில் இதை 'சஹால் பொல்ல' என அழைத்தார்கள். பம்பலப்பிட்டியில் இயங்கிய ஒரு தரமான உணவகத்துக்கு வந்த வாசுதேவ நாணயக்கார, மசிக்கப்பட்ட வற்றாளையை 'சிக்கன் டெவலு'டன் சேர்த்து சாப்பிட்டுச் சென்றது நினைவுக்கு வருகிறது. 

அக் காலத்தில் சங்கக் கடை, லைசன் கடைகளைத் தவிர ஏனைய பலசரக்கு கடைகளில் அரிசி, டின் மீன், பருப்பு, மா, செத்தல் மிளகாய் போன்ற பண்டங்கள் விற்பனையில் இருக்கவில்லை. அப்பிள், திராட்சை, பட்டர், ஜேம், மைசூர், தோரம் பருப்பு கட்டித் தயிர், யோகட், பால் வகைகள் கிடைப்பதில்லை. நெஸ்பிரே பால்மா கிடைத்ததாக நினைவு. இறக்குமதி செய்யப்பட்ட, விலை உயர்ந்த பொருட்கள் விற்பனையில் இல்லை என்பதால் மக்களும் பெரிதாக எதற்கும் ஆசைப்படவில்லை. பாண், பணிஸ் என்பனவற்றை வெளியே எங்குமே வாங்க முடியாது. மக்கள் மத்தியில் பணப் புழக்கம் குறைவாகவே இருந்தது. பணப் வைத்திருப்பவர்களினால் பொருட்களை வாங்க முடியவில்லை. மேலதிகமாக பொருட்கள் சந்தையில் இல்லை என்பதால் பணத்தை கையில் வைத்திருந்ததும் பிரயோசனம் இருக்கவில்லை. 

நாட்டில் என்ன நடக்கிறது என்பது மக்களிடம் போய்ச் சேரவில்லை. இலங்கை வானொலியும் லேக்ஹவுசும் அரசு கட்டுப்பாட்டில் இருந்தன. அரசு விரும்பியபடியே அவை செயல்பட்டன. தொலைக்காட்சி வசதி அப்போது கிடையாது. நூற்றுக்கு 80சதவீதமானோரிடம் தொலைபேசி வசதி இல்லை. அச் சமயத்தில் நடு நிலையில் நின்று உண்மை நிலையை குணசேன நிறுவனம் நடத்திய தவச குழுமப் பத்திரிகைகள் மட்டுமே வெளிக் கொண்டுவந்தன. இக் குழுமத்தில் இருந்து தவச, ரிவிரெஸ, சன், வீக் எண்ட், தினபதி, சிந்தாமணி ஆகிய பத்திரிகைகள் வெளிவந்தன. நாட்டில் நிலவும் உணவுக்கான திண்டாட்டம், வேலை வாய்ப்பின்மை, தொழில்கள் நசிந்து வருவது, தனி மனிதர்கள் படும்பாடு, போஷாக்கின்மையால் வறியவர்களும் சிறுவர்களும் பாதிக்கப்பட்டிருப்பது தொடர்பான செய்திகளும் கட்டுரைகளும் வெளிவருவது ஸ்ரீமா அரசுக்கு எரிச்சலூட்டியது. தவச பத்திரிகை போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருந்த வயிறு ஊதிப்போயிருந்த ஒரு சிறுமியின் படத்தை வெளியிட்டிருந்தது. இது போலியான படம் எனத் தெரிவித்த அரசாங்கம் அதிரடியாக தவச பத்திரிகைக் குழுமத்தை முடியாது. 

1977ம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்தன பதவிக்கு வந்த பின்னர் தவச குழுமத்துக்கு நஷ்ட ஈடாக பெருந்தொகையை வழங்கினார். அக் குழுமம் மீண்டும் பத்திரிகைகளை வெளியிட ஆரம்பித்தது. 

இரண்டு கொத்து அரிசியை வழங்குவேன் என்ற பிரதான தேர்தல் வாக்குறுதியை அளிதது பதவிக்கு வந்த ஸ்ரீமா அரசு ஒரு வருட முடிவில் அரசைக் கவிழ்க்கும் ஒரு ஆயுத போராட்டத்தையும் அதன் பின்னர் ஒரு பெரும் உணவு நெருக்கடியையும் சந்திக்க நேர்ந்தது. இதைப் பற்றி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பின்னர், நாங்கள் வாழ்தலுக்காக போராட வேண்டியிருந்தது என்றும் பொருளாதார நெருக்கடி ஏறக்குறைய எமது கழுத்தையே நெரித்துவிட்டது என்றும் அன்றைய சூழலை வர்ணித்திருந்தார். ஒன்றுமே செய்ய முடியாத இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்ட ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, கடுமையான உணவு பங்கீட்டு முறையை அமுல் செய்ய வேண்டியதாயிற்று. உள்நாட்டில் உணவு உற்பத்திசெய்ய வேண்டும், ஒவ்வொருவரும் தமது வீடுகளில் எதையேனும் பயிரிட வேண்டும் என்ற கொள்கையை கிராம மட்டத்தில் நடைமுறைப்படுத்த வேண்டியிருந்தது. 

இந்த அரிசி அரசியலை எடுத்துக் கொள்ளும் போது பிரதான கட்சிகள் தாம் ஆட்சிக்கு வந்தால் போதும் என்ற கொள்கையை - தேர்தல் அரசியலை மட்டுமே - கை கொண்டு வந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. நாட்டின் பிரதான பிரச்சினைகளுக்கு முடிவு கட்டி, அரிசி அரசியலுக்கு பதிலாக அபிவிருத்தி அரசியலுக்கு செல்ல வேண்டும் என இக்கட்சிகள் கருதவில்லை.           

அரிசியை பிரச்சினையாக்கி அரசியல் செய்வது அல்லது தமிழர்களை நம்பிக்கைக்குரியவர்கள் அல்ல என்ற அபிப்பிராயத்தை உருவாக்கி அரசியல் செய்து ஆட்சிக்கு வருவது என்பதே இக் கட்சிகளின் ஏமாற்று அரசியலாக இருந்திருக்கிறது. 

1970இல் பதவிக்கு வந்த ஸ்ரீமாவோவின் சோஷலிச கூட்டணி, முதலில் நாட்டின் நிதி நிலையை அவதானித்திருக்க வேண்டும். லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தை அவசர அவசரமாக சுவீகரித்தது, காணி உச்ச வரம்பு சட்டத்தைக் கொண்டு வந்தது, பெருந்தோட்டங்களை அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தது, தமக்கு வேண்டாதவர்களின் சொத்துகளை சுவீகரிப்பின் மூலம் அரசியல் பழிவாங்கியது, திரைப்படக் கூட்டுத்தாபனத்தை உருவாக்கியது, ஐ.தே.க ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட தொழில் முயற்சிகளை முடக்கியது என்று அன்றைய அரசு அடுத்தடுத்து செய்த பொருளாதாரத் தவறுகளின் விளைவாகவே மக்கள் உணவுக்காக கஷ்டப்பட வேண்டியதாயிற்று. ஆட்சிக் கட்டிலில் எப்படியாவது ஏறி அமர்ந்தால் போதும் என்ற சிந்தனை அபிவிருத்தி அரசியலுக்கு உதவாது. 

அன்றைய தேர்தல்களில் கொள்கை அரசியல் கோஷங்கள் அரிது. ஏனெனில் கொள்கை, அபிவிருத்தி, தன்னிறைவு என்பனவற்றைப் பேசினால் அவற்றைப் புரிந்து கொண்டு வாக்களிக்கும் வாக்காளர்கள் மிகவும் குறைவு. அரசியலில் அறிவுக்கு பதிலாக உணர்வுகளுக்கு, முதன்மை அளித்த பழகிப்போன வாக்காளர்களிடமிருந்து வாக்குகளை அள்ள வேண்டுமானால் ஒன்றில் வயிறார உணவு தருவேன் என்று சொல்ல வேண்டும். அல்லது தமிழர்களை ஒடுக்கி வைப்பேன் என்று சொல்ல வேண்டும் என்பதைக் கட்சிகள் நன்றாகவே புரிந்துவைத்திருந்தன.  (அடுத்த இதழில் தொடர் முடியும்)

அருள் சத்தியநாதன்

Comments