![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/08/28/a29.jpg?itok=mGED7AJI)
வட்டுக்கோட்டை இந்துவாலிபர் சங்கத்தின் ஆலோசகரும் முன்னாள் தலைவரும் வட்டு. மத்திய கல்லூரி, அராலி சரஸ்வதி மகாவித்தியாலயம் என்பவற்றில் அதிபராகச் சிறப்புறப் பணியாற்றியவருமான நடராஜா சபாரத்னசிங்கி அகவை அறுபது நிறைத்து மணிவிழாக்காண்கிறார்.
யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்குப் பிரதேசத்தில் நன்கு அறியப்பட்ட ஆளுமையாளராகவும் சமூகப் பணியாளராகவும் சிறந்த அதிபராகவும் திகழ்ந்து சமூக நன்மதிப்பினைத் தன்வசமாக்கிக் கொண்ட சபாரத்னசிங்கி அனைவராலும் அறியப்பட்டவராவார்.
மாணவப் பருவம் முதலே சமூகப்பணியிலும் தலைமைத்துவப் பண்புகளிலும் சிறந்து விளங்கிய சபாரத்னசிங்கி இன்று வட்டு. மத்திய கல்லூரி என அழைக்கப்படும் வட்டுக்கோட்டை திருஞானசம்பந்த வித்தியாசாலை, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரி என்பவற்றில் தன் கல்வியைத் தொடர்ந்த காலத்திலேயே தன் ஆளுமைத்திறத்தால் பலரையும் ஈர்த்தவர். வட்டுக்கோட்டை இந்துவாலிபர் சங்கத்தில் இணைந்துகொண்டு தனது சமூகப் பார்வையையும் சமூகம்சார்ந்த பணிகளையும் படிப்படியாக விரித்துக்கொண்டு இன்றுவரை சமூக நேயமிக்கவராகப் பணியாற்றுபவர்.
ஆசிரியப் பணியில் இணைந்து கொண்ட சபாரத்னசிங்கியிடம் இருந்த ஆற்றலும் ஆளுமையும் சமூகப்பார்வையும் வினைத்திறனுள்ள நல்லாசிரியராக அவரை நிலைநிறுத்தின. மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் விஞ்ஞான பாட ஆசிரியராகச் சிறப்பாகப் பணியாற்றினார். பின்னர் அதிபர் சேவையினுள் இணைந்து வட்டு. மத்திய கல்லூரி, அராலி சரஸ்வதி மகாவித்தியாலயம் என்பவற்றில் அதிபராகப் பணியாற்றி அந்தப் பாடசாலைகளின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் உழைத்தவர். கொட்டுடை, தெவிண்டப்பிராய் முருகமூர்த்தி கோயிலின் பரிபாலன சபைத் தலைவராகத் தொழிற்பட்டு ஆலய வளர்ச்சிக்காகச் செயற்படுபவர். தான் பணியாற்றிய அல்லது செயற்பட்ட துறைகளில் எல்லாம் தன்முத்திரை பதித்தவர் சபாரத்னசிங்கி என்பது நிதர்சனமானது.
இன்று தனது சமூகப் பணிகளை வடக்கு, கிழக்கு மாகாணங்களெங்கும் விரிவாக்கிச் செயற்படுகின்ற அமைப்பாகத் திகழும் கொழும்பு, கனடா, அவுஸ்திரேலியா என தன்கிளைகளை விரித்திருக்கின்ற வட்டுக்கோட்டை இந்துவாலிபர் சங்கத்தின் ஆலோசகராகச் செயற்படுகின்ற சபாரத்னசிங்கிக்கும் சங்கத்திற்கும் உள்ள உறவானது மிக இறுக்கமானது. நூற்றாண்டை நோக்கிப் பயணிக்கின்ற வட்டு. இந்துவாலிபர் சங்கத்தின் வளர்ச்சியில் புத்தெழுச்சியில் சபாரத்னசிங்கியின் பணியும் பங்கும் நிராகரிக்கமுடியாதவை.
சங்கத்தின் தலைவராகப் பத்து வருடங்களுக்கும் மேலாகப் பணியாற்றிய இவரது காலத்திலேயே சங்கம் தனது செயற்பாட்டுப் பரப்பை விரித்துக்கொண்டது. மூத்தோருக்கும் இளைஞருக்குமான உறவினைக் கட்டியெழுப்பி சங்கத்தின் வளர்ச்சிக்கும் பலத்திற்கும் அவ்வுறவினை உரமாக்குவதில் வெற்றிகண்டார் இவர்.
சங்கத்தின் செயற்பாட்டை சமூகத்தை நோக்கி பிரக்ஞைபூர்வமாகத் திருப்புவதில் முயன்று பயன்கண்டார்.
சங்கத்தின் பிற்கால வளர்ச்சிகளுக்கான உறுதியான அத்திவாரம் இவரது காலத்தில்தான் இடப்பட்டது என்பது மிகையல்ல. இவர் தலைவராக இருந்த காலத்தில் மூன்றுநாள் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்ட சங்கத்தின் மணிவிழா தொடர்பான நினைவுகள் இன்றும் பசுமையாக நினைவிலுள்ளன. அவ்விழாவில் சமூகத்திற்குப் பணியாற்றிய பல்துறைப் பணியாளர்கள் அறுபதுபேருக்கு கௌரவமளிக்க இவரெடுத்த முயற்சி சிறந்த முன்மாதிரியான பணியாகும். வட்டுக்கோட்டை இந்துவாலிபர் சங்கத்தின் வளர்ச்சியில் சபாரத்னசிங்கியின் பங்கு தவிர்க்கமுடியாததாக இருக்கும் அதேவேளையில் சபாரத்னசிங்கியின் சமூகப்பார்வை, தலைமைத்துவப் பண்பு, ஆளுமை முதலியவற்றின் வளர்ச்சியில் சங்கத்தின் பங்கும் இன்றியமையாததாக அமைந்தது.
வட்டு. இந்துவாலிபர் சங்கத்தினைப்போலவே சபாரத்னசிங்கி நீண்டகாலமாகச் செயற்பட்ட மற்றொரு தளம் வட்டு. மத்திய கல்லூரியாகும்.
வட்டு. இந்து வாலிபர் சங்கத்தின் தலைவராகச் செயற்பட்ட காலத்தில் அன்று திருஞானசம்பந்த வித்தியாசாலை என்ற பெயரொடு இயங்கிய பாடசாலையுடனான சங்கத்தின் உறவினை நெருக்கமாக்கிக்கொண்டு பாடசாலையின் வளர்ச்சியில் சங்கத்தின் உறுதியான பங்களிப்பினை படிப்படியாக அதிகரித்தார்.
அது மட்டுமன்றி பாடசாலைக்கென பழைய மாணவர் சங்மொன்றினை ஸ்தாபித்து அதன் நீண்டகாலத் தலைவராகச் செயற்பட்டு பாடசாலையின் அபிவிருத்தியில் காத்திரமான பங்களிப்பினை வழங்கினார் சபாரத்னசிங்கி.
பாடசாலையின் அதிபர்களாகச் செயற்பட்ட அமரர் சு. சிவவாகீசர், திரு. வி. சிவஞானபோதன் ஆகியோருடன் இணைந்து செயற்பட்ட சபாரத்னசிங்கி பாடசாலையின் வளர்ச்சியை நோக்கிய ஒவ்வொரு நகர்வுகளிலும் பங்காளியாய் இருந்தார் என்பது யாவரும் அறிந்ததே. பாடசாலையின் வளர்ச்சியின் முக்கிய மைல்கற்களாய் அமைந்த க.பொ.த(உ/த) வகுப்புகளின் ஆரம்பம், வட்டு. மத்திய கல்லூரி எனப் பெயர்மாற்றங் கண்டமை, மணிவிழா மற்றும் பவள விழா ஞாபகார்த்தமான கட்டடங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் அமைக்கப்பட்டமை முதலான செயற்பாடுகளில் பிற்பலமாகவும் உறுதுணையாவும் செயற்பட்டவர்.
கல்லூரி பவளவிழா கண்டபொழுது பவளவிழாச் சபையின் தலைவராகத் திறம்படச் செயற்பட்டு மூன்று நாட்கள் விழா சிறப்புற நடைபெறவும் அதனையொட்டி கல்லூரியில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவும் உழைத்தவர்.
பின்னர் 2000ஆம் ஆண்டில் கல்லூரியின் அதிபராகப் பதவியேற்று தான் பதவி வகித்த காலத்தில் கல்லூரி பலவழிகளிலும் உயர்வுபெற அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.
பாடசாலைக் காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய சபாரத்னசிங்கி ஆசிரியத்தொழிலில் இணைந்து பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியராகத் திகழ்ந்தார்.
பின்னர் கலைப்பட்டதாரியானதோடு பட்டப்பின் கல்வி டிப்ளோமா, முதுகல்விமாணி மற்றும் விவசாயம் ஹோட்டேல் முகாமைத்துவம் என்பவற்றில் டிப்ளோமா ஆகிய உயர்பட்டங்ளையும் பெற்றுச் சிறந்து விளங்குகிறார்.
அதிபர் சேவையில் இணைந்து வட்டு. மத்திய கல்லூரி, அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம் என்பவற்றில் அதிபராகச் சிப்புறப்பணியாற்றியதோடு இன்று முதலாந் தர அதிபராக அரச சேவையிலிருந்து ஓய்வுபெறுகிறார்.