தமிழ் மக்களது பிரச்சினைக்கு தீர்வு காண சரியான காலம் கனிந்துள்ளது; வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு இடைக்கால நிர்வாகம் அவசியம் | தினகரன் வாரமஞ்சரி

தமிழ் மக்களது பிரச்சினைக்கு தீர்வு காண சரியான காலம் கனிந்துள்ளது; வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு இடைக்கால நிர்வாகம் அவசியம்

தமிழ் கட்சிகள் தமக்குள் பேசி ஒரு முடிவுக்கு வந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அதற்கான அழுத்தத்தை கொடுக்க வேண்டும்

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும் சூழல் தற்போது இல்லாத பட்சத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலுள்ள சகல தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்து தமக்குள் பேசி ஒரு முடிவுக்கு வந்து இடைக்கால நிர்வாக கட்டமைப்பை ஏற்படுத்திக் கொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது அழுத்தத்தை ஒருமித்த குரலில் கொடுக்க வேண்டுமென ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம், கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பகிரங்க கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.  

வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ்க் கட்சிகள் இதுவரை காலமும் தமக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்ட வரலாற்றை நாங்கள் இனியும் தொடர முடியாது. அதனை மாற்றியமைத்து எமக்குள்  ஒருமைப்பாட்டை ஏற்படுத்தி அதனை மத்திய அரசாங்கத்தின் தலைமைக்கு கொண்டு வர வேண்டிய ஒரு சரியான சந்தர்ப்பம் இப்போது எழுந்துள்ளது.  

எனவே, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்காக தமிழ்க் கட்சிகள் தமக்கிடையே இதய சுத்தியுடன் ஒற்றுமைப்பட்டு ஒரு தீர்வைக் கண்டு அதனை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க முன்வர வேண்டும்.  

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மீது பெரும்பாலான தமிழ்க் கட்சிகள் நம்பிக்கை கொண்டு செயல்படுகின்ற நிலைமையை நாங்கள் காண்கின்றோம். அதேபோன்று அவரும் சிறுபான்மை கட்சிகளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளார். எனவே இந்தச் சந்தர்ப்பத்தை நாங்கள் சரியாக பயன்படுத்தி ஒரு தீர்வைக் காண முன்வர வேண்டும்.  

30வருட கால யுத்தம் குறித்து இனியும் பேசிக் கொண்டிருப்பதில் பலனில்லை. அது ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. அதில் சரி, பிழை, தவறு என்று இனியும் காலத்தைக் கடத்தத் தேவையில்லை. அதனால் எந்தப் பிரயோசனமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.  

அதனால் தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்து நாங்கள் சிந்திக்க வேண்டும். நமக்கிடையே தலைமை யார்? என்கின்ற போட்டியைத் தவிர்த்து தமிழ் மக்களின் எதிர்காலத்துக்காக சிந்தித்து ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். இதனையே தமிழ் மக்களும், தமிழ் புத்திஜீவிகளும் மதத்தலைவர்களும் கல்விமான்களும் வர்த்தகர்களும், மாணவ சமூகமுமென அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர். எனவே நாங்கள் இந்த விடயத்தை தட்டிக் கழிக்க முடியாது. உடனடியாக செயலில் இறங்க வேண்டும்.

தமிழ்க் கட்சிகள், தமிழ் மக்கள் ஒற்றுமைப்பட வேண்டிய ஒரு காலகட்டத்தில் இருக்கின்றோம். இந்த முயற்சிக்கு நான் தயாராகவே இருக்கின்றேன். எனக்கு தலைமை தாங்க வேண்டுமென்ற எண்ணம் துளி அளவும் இல்லை. இந்த நல்ல விடயத்துக்கு யார் முன் நின்று தலைமை தாங்கி நடத்தினாலும் அவர்களுடன் இணைந்து செல்ல, இணைந்து பயணிக்க நான் தயாராகவே இருக்கின்றேன்.

எனவே, பூனைக்கு யார் மணி கட்டுவது? என்பதை விடுத்து சகலரும் ஒன்றிணைந்து இந்த நல்ல பணியை முன்னெடுப்போம் என்று அனைத்து தமிழ்க் கட்சி தலைமைகள் மற்றும் உறுப்பினர்களுக்கு நான் பகிரங்கமாகவே அழைப்பு விடுக்கின்றேனென்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அத்துடன் சில வருடங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் அரங்கம் எனும் தமிழ்க் கட்சிகளின் கூட்டமைப்பை மீளவும் செயல்படுத்த விரும்பினால் அதற்கு நான் தயாராக இருக்கின்றேன். இல்லை, அது வேண்டாம் நாங்கள் புதிதாக ஒன்று கூடுவோம் என்று கூறினால் அதற்கும் நான் தயாராக இருக்கிறேனென்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நமது நிருபர்  

Comments