வெளிநாட்டு பணப்பரிமாற்று முறை; உண்டியல் நடைமுறைக்கு எதிராக புதிய சட்டங்கள் | தினகரன் வாரமஞ்சரி

வெளிநாட்டு பணப்பரிமாற்று முறை; உண்டியல் நடைமுறைக்கு எதிராக புதிய சட்டங்கள்

வெளிநாட்டு பண பரிமாற்று, உண்டியல் முறைக்கு எதிராக புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.  பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,  வெளிநாட்டுப் பணம் சரியான முறையில் அனுப்பப்பட்டால் 700முதல் 800மில்லியன் டொலர்கள் வரை நாட்டிற்கு வந்தடையும். 

அது நாட்டிற்கு கிடைத்துவிடுமோ என்ற அச்சத்தில் அதனை அனுப்ப வேண்டாம் என கூறப்படுகின்றது. 

இன்று உண்டியல் முறையில் பணம் அனுப்புவோரை கைது செய்ய புதிய சட்டங்களை அமல்படுத்தியுள்ளோம். இது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் செயல்படுத்தப்படுகிறது. 

உண்டியல் முறையைப் பயன்படுத்தி இலங்கைக்கு பணத்தைக் கொண்டு வந்து இலங்கையில் உள்ள அவர்களின் வங்கிக் கணக்கிற்கு மாற்றிக் கொண்டாலும் அந்த வங்கிகள் சோதனையிடப்பட்டு, அவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும்.  நேர்மையான முறையில் பணம் சம்பாதிப்பவர்கள், நேர்மையான முறையில் இலங்கைக்கு பணத்தை அனுப்புமாறு கோரிக்கை விடுக்கிறோம்.  அந்தப் பணத்தை சட்டப்பூர்வமாக அனுப்புபவர்களுக்கு, மின்சார வாகனம் வாங்க உரிமம் வழங்குதல், குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் வழங்குதல், ஓய்வூதியம் போன்ற அனைத்து சலுகைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.     

Comments