என். செல்வராஜாவின் 'நமக்கென்றொரு பெட்டகமும்' நூலகச் சிந்தனைகளும் | தினகரன் வாரமஞ்சரி

என். செல்வராஜாவின் 'நமக்கென்றொரு பெட்டகமும்' நூலகச் சிந்தனைகளும்

செல்வராஜா பெரும்பாலானவர்களுக்கு அறிமுகமானது போல - எனக்கும் நூல் தேட்டம் செல்வராஜா என்றே அறிமுகமானவர். புலம்பெயர்ந்து கனடாவிற்கு வந்து நான் புத்தக வாசிப்பிற்கு மீண்டும் திரும்பிக்கொண்டிருந்த காலப்பகுதியில் இலங்கையில் இருந்து வெளிவந்துகொண்டிருக்கும் புத்தகங்களைப் பற்றி அறிந்துகொள்வது என்பதே மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. இப்பொழுது ரொரன்றோவில் தமிழ்ப் புத்தகக் கடையென்று ஒன்றுதான் இருக்கின்றது. ஆனால் அந்தக் காலப்பகுதியில் 5புத்தகக் கடைகள் இருந்தன. இவற்றைத் தவிர தனிப்பட்ட முயற்சிகளால் புத்தகங்களை எடுத்து விற்பவர்களும் இருந்தனர். ஆனால், அப்படி இருந்தபோதும் இலங்கையில் இருந்து வெளிவருகின்ற புத்தகங்களைப் பெற்றுக்கொள்வது என்பது கடினமான ஒன்றாகவே இருந்தது.

நான் கனடாவிற்குப் புலம்பெயர்ந்து பன்னிரண்டு வருடங்களின் பின்னரே முதல்முறையாக இலங்கைக்குப் போனபோதுதான் அங்கே எத்தனை புத்தகங்கள் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கின்றன என்பதைப் பார்க்கமுடிந்தது.

அப்படி இருக்கின்றபோது இலங்கையில் இருந்து வெளிவந்த, வெளிவருகின்ற புத்தகங்களைப் பற்றிய அறிமுகத்தைப் பதிவாகவும் சாட்சியாகவும் வெளிப்படுத்திக்கொண்டிருந்தவை பெரியளவிலான நூல் தொகுதிகளாக வெளிவந்துகொண்டிருந்த நூல் தேட்டம் தொகுப்புகள். பின்னர் வலைப்பதிவுக் காலங்களில் வலைப்பதிவுகளூடாகவும் குழுமங்களூடாகவும் பல அறிமுகங்களும் உரையாடல்களும் நிகழ்ந்தன என்றாலும் முறையான பதிவுகளைச் செய்தது நூல்தேட்டமே!  

நூல்தேட்டம் போன்ற வேலைத்திட்டங்கள் அமைப்பு ரீதியாக / நிறுவன ரீதியாக செய்யப்படவேண்டிய பெரிய வேலைத்திட்டங்கள். அப்படியான வேலைத்திட்டங்களை தனி நபர்கள் செய்வதை நான் பொதுவாக ஆரோக்கியமான ஒன்றாகப் பார்ப்பதில்லை. ஆனால் நூல் தேட்டம் என்பது செல்வராஜா என்கிற ஒருவரால் முன்னெடுக்கப்பட்ட மிகப் பிரமாண்டமான வேலைத்திட்டம். இங்கே நான் பிரமாண்டம் என்ற சொல்லை மிகவும் பிரக்ஞைபூர்வமாகவே சொல்கின்றேன், ஏனென்றால் பிரமாண்டத்தை பிரமாண்டம் என்றுதான் சொல்லமுடியும்.

அதன் 15தொகுதிகளில் கிட்டத்தட்ட 15000ஈழத்துநூல்கள் பட்டியலாக்கம் செய்யப்பட்டிருப்பதுடன் அவை குறித்த சுருக்கமான அறிமுகங்களும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. நூல்தோட்டம் தொகுதிகளை எனது வீட்டு நூலகத்தில் சேர்க்கவேண்டும் என்கிற ஆர்வத்தில் ஒருமுறை செல்வராஜாவைத் தொடர்புகொண்டு நூல்தேட்டம் தொகுதிகளை எப்படி கனடாவில் பெற்றுக்கொள்வது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் சொன்னார் “ராசா, அதை நீங்கள் கனடாவுக்கு எடுக்கிறதென்றால் கனகாசு முடியும், நான் எல்லாத் தொகுதிகளையும் ஒன்லைனில் கொடுத்திருக்கிறேன் தானே, நீங்கள் அங்கேயே பார்த்துக்கொள்ளுங்கோ” என்று. இதை ஒரு முக்கியமான பண்பாக நான் பார்க்கின்றேன். புலமைச் சொத்து அனைவரிடமும், குறிப்பாக அந்தத் துறைகள் குறித்துச் செயற்படுபவர்களிடம் போய்ச்சேரவேண்டும் என்கிற அக்கறையாகவே அவர் எனக்குச் சொன்ன பதிலினை நான் பார்க்கின்றேன். அத்துடன், அந்தத் தொகுதிகளை வாங்க விரும்புவோருக்கு இருக்கக் கூடிய பொருளாதாரச் சுமைகள், வசதியீனங்கள் பற்றியும் அக்கறைகொண்டதோர் பண்பாக அதனை நான் வியக்கின்றேன்.  

நூல்தேட்டம் செல்வராஜா என்று அறியப்பட்டு வந்த செல்வராஜாவைச் சுட்டுவதற்கான மிகப் பொருத்தமான சொல்லாக நூலியலாளர் என்பதையும் நூலியலாளர் என்ற சொல்லால் சுட்டப்படக்கூடிய பொருத்தமானவராக செல்வராஜாவையும் நான் இங்கே கூறிக்கொள்கின்றேன்.

உண்மையில் இதுகுறித்து மிக விரிவாக எடுத்துரைத்தவர் நண்பர் சத்தியதேவன், அவரது கூர்மையான அந்தக் கணிப்பிற்கும் நன்றி கூறிக்கொள்கின்றேன். நூலகராகவும், ஈவ்லின் ரட்ணம் நூலகத்திற்கான உந்துசக்தியாக அமைந்த அவரது பங்களிப்புகள், நூலகவியல், நூலகங்கள் என்கிற கருத்தாக்கம், பட்டியலாக்கம் ஆகியவற்றிற்கான அவரது பங்களிப்புகளுக்கும் மேலாக பதிப்பாக்கம், நூலொன்றினைப் பதிப்பித்தல் தொடர்பால தொழினுட்ப ரீதியிலான வழிகாட்டல்கள், உள்ளூரில் புத்தகம் ஒன்றைப் பதிப்பிப்பதிலும் சந்தைப்படுத்துவதிலும் விற்பதிலும் இருக்கக் கூடிய சவால்கள், அவற்றை எதிர்கொள்வதற்கான பொறிமுறைகள், இந்திய நூல்களால் ஈழத்துப் பதிப்புச்சூழல் எப்படி நசுக்கப்படுகின்றது, இவற்றுக்கு இடையில் நிகழக்கூடிய அசமத்துவம், வாசிப்பினைப் பரவலாக்கல், கிராமிய நூலகங்கள் என்பதை ஒரு செயற்பாடாக்குதல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து தொடர்ந்து எழுதியும் உரையாடியும் செயற்பட்டும் வருகின்ற செல்வராஜா நூலியலாளர் என்கிற சுட்டுதலுக்கு மிகப் பொருத்தமானவரே.  

நமக்கென்றொரு பெட்டகம் : தமிழ்த்தேசிய நூலகச் சிந்தனைகள் என்கிற இந்தப் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கட்டுரைகளும் பேசுகின்ற விடயங்களைத் தனித்தனியே குறிப்பிடுவதைத் தவிர்த்து இந்தப் புத்தகத்தில் உள்ள கருத்தாக்கங்கள் குறித்து நான் கவனப்படுத்துகின்றேன்.  

இந்நூல் ஆவணக்காப்பகம், நூலகம் ஆகிய இரண்டினதும் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதுடன் இவை இரண்டிற்குமான வேறுபாடுகளையும் எடுத்துரைக்கின்றது. ஒரு சமூகத்தின் வரலாற்றையும் பதிவுகளையும் சமகாலத்திலும் எதிர்காலத்திலும் வரக்கூடிய ஆய்வுத்தேவைகளுக்காக பேணிப் பாதுகாத்து வழங்கக்கூடிய இடமாக ஆவணக்காப்பகத்தை செல்வராஜா குறிப்பிடுகிறார். அதேநேரம் நூலகம் என்பது அனைத்துத் தரப்பினரது வாசிப்புத் தேவைகளையும் பூர்த்திசெய்யக்கூடியதாகவும் இலகுவில் அணுகக் கூடியதாகவும் இருக்கவேண்டும் என்பதை செல்வராஜா வலியுறுத்துகின்றார். பொதுவாக நாம் நூலகம் என்று யோசிக்கும்போது அங்கே இருக்கக் கூடிய கனமான விடயங்களை உள்ளடக்கிய ”தீவிர இலக்கியம்” என்று சொல்லப்படக்கூடிய நூல்களையே நினைவில்கொள்வோம். ஆனால் செல்வராஜா நூலகங்கள் குறித்துப் பேசும்போதெல்லாம் சிறுவர் நூலகங்கள் குறித்தும் நூலகங்களை சிறுவர்களுக்கு அணுக்கமாக்குவது குறித்தும் விசேட அக்கறையுடன் இருப்பதை அவரது கட்டுரைகளூடாகத் தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது. சிறுவர் நூலகங்கள் குறித்தும் அங்கே எப்படியான புத்தகங்கள் இருக்கவேண்டும் என்பது குறித்தும் சிறுவர் நூலகங்கள் எப்படி ஒழுங்கமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது குறித்தும் அந்தப் புத்தகங்களை சிறுவர்களிடமும் சிறுவர்களைப் புத்தகங்களிடமும் சேர்த்து வைப்பதற்கும் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பது குறித்தும் அவர் கவனம் செலுத்துகின்றார்.  

இந்தப் புத்தகத்தில் தீவகப் பிராந்திய நூலகம், புங்குடுதீவுப் பிராந்திய நூலகம் ஆகிய இரண்டு கட்டுரைகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இந்த நூல் வெளியீட்டிற்குப் பிற்பட்ட காலங்களிலும் மட்டக்களப்பிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கின்ற அரங்கம் என்கிற பத்திரிகையில் மட்டக்களப்பில் உருவாகிக்கொண்டிருக்கின்ற ஒரு நூலகத்தின் உள்ளடக்கம் குறித்தும் பொதுநூலகங்களின் தன்மை குறித்தும் அவர் எழுதிக்கொண்டிருக்கின்ற கட்டுரைத் தொடர் மிகப்பெறுமதியானது. கிராமங்களில் நூலகங்கள் குறித்து அக்கறைப்படுகின்ற, விதை குழுமத்தினூடாக புத்தகக் குடில் போன்ற சிறு நூலக அமைப்புத் திட்டங்களை முன்னெடுத்துவருகின்ற எமக்கு எழக்கூடிய பல குழப்பங்களுக்கும் கேள்விகளுக்கும் தொழினுட்பரீதியில் பதிலளிக்கக்கூடியதாக இந்தத் தொடர் அமைகின்றது.  

ஒரு லண்டன் கடிதம் என்கிற கட்டுரை கடிதவடிவில் மிகமுக்கியமான ஒருவிடயத்தைப் பேசுகின்றது. புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற முதல்தலைமுறை தமிழர்கள் புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற தமக்கு அடுத்த தலைமுறையினருடன் கொண்டிருக்கக் கூடிய உறவு குறித்தும் அவர்களுடன் கொண்டிருக்கவேண்டிய ஊடாட்டம் குறித்தும் இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்படுகின்றது. அதேநேரம், புலம்பெயர் நாடுகளில் இருப்போர் தாயகத்தில் இருப்போரின் நாளாந்த நடவடிக்கைகளையும் அரசியல் நடவடிக்கைகளையும் Remote Politics செய்வது குறித்து இந்தக் கட்டுரையில் இருக்கின்ற கருத்துகள் மிகமுக்கியமானவை. இந்தப் புத்தகத்தின் சமர்ப்பணத்தை இங்கே ஒருமுறை வாசித்துக்காட்டுகின்றேன்,  

“ஈழத்தமிழர்களின் அறிவியல் முதுசொத்தை தலைமுறை தலைமுறையாகப் பெட்டகங்களில் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கையளித்துவந்த எமது மூதாதையினருக்கும் பெட்டகங்களையும் பெட்டகக் கலாசாரத்தையும் தொலைத்துநிற்கும் எமது தலைமுறையினரின் முதுசொத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்த வழிதேடி அலையும் இளைய தலைமுறையினருக்கும் இந்நூல் சமர்ப்பணம்”

இந்தச் சமர்ப்பணத்தின் விளக்கமாக அமைந்ததே ஒரு லண்டன் கடிதம் என்கிற கடித வடிவிலான கட்டுரை.  

இந்நூலில் குறிப்பிடப்படுகின்ற தேசிய நூலகம் என்கிற கருத்தாக்கம் மிக முக்கியமான ஒன்று. தேசிய நூலகம் என்பது குறித்த தேசியத்தின் வரலாறு, பண்பாடு, அதன் நிலவியல், ஆளுமைகள், அந்த ஆளுமைகள் குறித்த பதிவுகள் ஆகியவற்றை எல்லாம் திரட்டிவைத்திருக்கின்ற ஓரிடமாக இருக்கவேண்டும் என்பதை செல்வராஜா வலியுறுத்துகின்றார்.

செல்வராஜா எழுதிய பல்வேறு கட்டுரைகளில் இலங்கையின் தேசிய நூலகங்கள் என்பவற்றுள் முறையாக உள்ளடக்கப்பட்டாத / வெளித்தள்ளப்படுபவர்களாக வடக்கு கிழக்கு / தமிழர்கள் சார்ந்த பதிவுகள் இருப்பதை அவர் ஆதாரபூர்வமாகவும் புள்ளிவிபரங்களூடாகவும் முன்வைத்து வருகின்றார்.

அப்படி வெளித்தள்ளப்பட்டு / உள்வாங்கப்படாதவர்கள் இலங்கை தேசியம் அல்லாத இன்னொரு தேசியர்களாக தம்மை உணர்கின்றனர் என்கிற விடயத்தையும் செல்வராஜாவின் எழுத்துகளினூடாக உணர முடிகின்றது. தமிழ், மலையக, முஸ்லிம் தேசிய இனங்களை இந்தக் கண்ணோட்டத்தில் அரசியல் ரீதியாகவும் புரிந்துகொள்ள முடிகின்றது. இவ்வாறு நூலகங்கள் எவற்றைத் தம்முள் கொண்டிருக்கவேண்டும் என்று பேசுகின்றபோது நூலகமொன்றிற்கு என்று பெரியதோர் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டதாகவும் அதற்குப் புத்தகங்கள் தேவையென்றும் வந்த அறிவிப்பொன்றைக் குறிப்பிடும் செல்வராஜா, பல்வேறு தனிநபர்களாலும் அமைப்புக்களாலும் ஏற்கனவே திரட்டப்பட்ட, சேகரித்து வைக்கப்பட்ட, ஆவணப்படுத்தி வைக்கப்பட்ட புத்தகங்களை ஒன்றிணைத்தே தேசிய நூலகங்களை உருவாக்கவேண்டும் என்று குறிப்பிடுகின்றார். நூலகம் என்பது கட்டப்பட்ட கட்டடத்தினை புத்தகங்களால் நிறைத்துவைப்பது அல்ல என்பதை செல்வராஜா ஆணித்தரமாக எடுத்தியம்புகின்றார்.

யாழ்ப்பாண பொதுசன நூலகம் உருவாக்கப்பட்டபோது அது பல்வேறு தனிநபர்களின் சேகரங்களினையும் ஒன்றிணைத்தே உருவாக்கப்பட்டது தொடர்பான விடயங்களை கமால்தீன், க.சி. குலரத்தினம் ஆகியோர் யாழ்ப்பாண பொதுசன நூலகம் பற்றி எழுதிய நூல்களில் இருந்து செல்வராஜா சுட்டிக்காட்டுகின்றார்.  

நூலகங்களை உருவாக்குதல், ஆவணக் காப்பகங்களை உருவாக்குதல் என்பவற்றைப் போன்றே புத்தகச் சந்தைகள் குறித்து செல்வராஜா குறிப்பிடுகின்ற விடயங்களை இந்த இடத்தில் பேசுவது முக்கியமானது என்றே கருதுகின்றேன்.

இந்தியாவில் இருந்து வெளிவருகின்ற புத்தகங்களை குறிப்பாக அரசியல் நீக்கம் செய்யப்பட்ட அல்லது வலதுசாரி அரசியலைப் பேசுகின்ற புத்தகங்களைப் பெற்றுக்கொள்வது கனடாவில் இலகுவானதாகவே இருக்கின்றது.

ஆனந்த விகடன், குமுதம் போன்றவற்றை பெரும்பாலான பலசரக்குக் கடைகளில் கூடப் பெற்றுக்கொள்ளக்கூடியதாகவே இருக்கின்றது. அண்மைக்காலமாக பகவத் கீதையையும் பலசரக்குக் கடைகளில் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. ஆனால் ”எங்கட புத்தகங்களை”ப் பெற்றுக்கொள்வது என்பது சிரமமானதாகவே இருக்கின்றது.

இங்கே நான் “எங்கட புத்தகங்கள்” என்று சொல்வதை தெளிவாக வரையறை செய்யவிரும்புகின்றேன்.(தொடரும்)

அருண்மொழிவர்மன்

Comments