நாட்டில் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது தமது வாகனங்களை உபயோகிப்பது ஆபத்துக்குரியதென பாதுகாப்பு காரணங்களை தெரிவித்து முன்னாள் ஜனாதிபதியின் ஜனாதிபதி செயலக பிரிவிலுள்ள வாகனங்களை பெற்றுக் கொண்டுள்ளவர்களில் இருவர் இதுவரை அந்த வாகனங்களை மீண்டும் ஒப்படைக்கவில்லை.
அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட பிரிவினர்நடவடிக்கை எடுத்துள்ளதுடன்இனியும் அவர்கள் அந்த வாகனங்களை ஒப்படைக்காவிட்டால் பொது சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்தலின் கீழ் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த இரண்டு வாகனங்களினதும் சந்தை பெறுமதி சுமார் ஐந்து கோடி என தெரிவிக்கப்படுகிறது.
KT- 7233இலக்க டொயாட்டோ லேண்ட் க்ரூஸர் சூப்பர் வாகனம் மற்றும் PH- 4201இலக்க டொயோட்டா ஹைலக்ஸ் ரக வாகனம் ஆகிய இரண்டுமே மீண்டும் ஒப்படைக்கப்படாமலுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஆர்ப்பாட்ட காலங்களில் பெருமளவிலான அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதியிடம் வாகனங்களைப் பெற்றுக் கொண்டிருந்தனர்.
அவர்களில் மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரைத் தவிர ஏனையவர்கள் தாம் பெற்றுக் கொண்ட வாகனங்களை மீள ஒப்படைத்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
லோரன்ஸ் செல்வநாயகம்