நாட்டிலுள்ள கோழிப் பண்ணைகளில் முட்டையிடும் கோழிகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதால் நாட்டில் முட்டைகளுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்படுமென கோழிப்பண்ணைகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேக்கர தெரிவித்துள்ளார்.
நாட்டில் கோழிக்குஞ்சுகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் இனப்பெருக்கத்துக்காக அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் 80,000முட்டையிடும் கோழிகளை இறக்குமதி செய்வதுடன் இம்முறை 9.000முட்டையிடும் கோழிகள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கோழிப்பண்ணை கைத்தொழில் தற்போது பெரும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், பெரும்பாலான பண்ணையாளர்கள் தமது தொழிலை கைவிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கால்நடைகளுக்கான தீவனங்கள் விலை அதிகரித்துள்ளதால் முட்டைகளை விற்று வரும் இலாபத்தில் தீவனங்களை கொள்வனவு செய்ய முடியாத நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ள அவர், கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தற்போது முட்டையிடும் கோழிகளை இறைச்சிக்காக விற்பனை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலை தொடருமானால் கோழி முட்டைக்கு மேலும் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்