திரைகடல் ஓடியும் திரவியம் தேடலாம் | தினகரன் வாரமஞ்சரி

திரைகடல் ஓடியும் திரவியம் தேடலாம்

தாம் பிறந்த இலங்கை மண் தான் தம் சொர்க்கம் என்றும், தங்கள் பண்பாடு, கலாசார அடையாளங்களுடன் பிறந்த மண்ணிலேயே சொந்த பந்தங்களுடன் வாழ நினைத்த பலருடைய வாழ்வையும் பொருளாதார நெருக்கடி இன்று தடம் மாறிவிட்டது. அந்தளவுக்கு விலைவாசி ஏற்றத்தாலும் பொருள் தட்டுப்பாட்டினாலும் மக்கள் தமது அடிப்படை தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த 70ஆண்டுகளில் இல்லாத ஒரு கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை தற்போது சிக்கித் தவிக்கின்றது. இதனால் வாழ்வாதாரத்திற்காக நாட்டைவிட்டு வெளியேறி, வெளிநாடுகளுக்குச் செல்ல பலரும் விரும்புகின்றனர். கடவுச்சீட்டு கோரி குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் கூட்டம் அலைமோதுகின்றது. 

ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா, மத்தியகிழக்கு நாடுகளுக்கு ஆட்களை அனுப்புவது பெரிய தொழிலாகவே உருவெடுத்து பல ஏஜன்சிகள் வெளிப்படையாகவே இயங்குகின்றன. எனினும் திரைகடல் ஓடியும் திரவியம் தேடலாம் என்ற ஔவையார் முதுமொழிக்கமைய தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு சென்று உழைக்கலாம் என்பது ஒரு பக்கமிருந்தாலும் அதை பாதுகாப்பாக மேற்கொள்ளவேண்டும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். 

பொதுவாக வெளிநாடு ஒன்றில் குடியேறுவது அல்லது தொழிலுக்கு செல்வது என்பது அவ்வளவு இலகுவான விடயமல்ல. தாம் குடியேற விரும்பும் அல்லது தொழிலுக்கு செல்ல நினைக்கும் நாட்டுக்கு விசாவுக்கு விண்ணப்பித்து, அங்கே குடியேறுவது என்பது எல்லோருக்கும் அமைவதில்லை. இது சில சமயங்களில் வெற்றியளிக்கலாம் சில சமயங்களில் பல வருடங்களும் எடுக்கலாம். எனவே தான் பலரும் ஆபத்துக்கள் நிறைந்த குறுக்கு வழியை பயன்படுத்தி வெளிநாடுகளில் சட்டவிரோதமாக குடியேற, தொழிலுக்கு செல்ல முயற்சிக்கின்றனர். இன்று பல்வேறு மேலைத்தேய நாடுகளில் குடியேறி வாழ்க்கை நடத்தும் அதிகமானோர் ஒருகாலத்தில் சட்டவிரோதமாக குடியேறி காலப்போக்கில் மற்றைய குடியேற்றவாசிகளைப் போல மதிக்கப்பட்டு அந்தந்த நாடுகளின் பிரஜாவுரிமை பெற்று வாழ்வது உண்மையாக இருந்தாலும் அவர்களுடைய பயணம் கடினமான துயரமான பாதையாகவே இருக்கும். 

பலருக்கு அந்தந்தக் காலப்பகுதியில் இருந்த அரசியல் சூழ்நிலைகள் ஒரு பக்கமாக கை கொடுத்திருக்கும். இன்னும் சிலருக்கும் அந்த பயணம் வெற்றியளிக்காது வாழ்வையே திசைமாறியிருக்கலாம். எனவே விசா இல்லாமல் வெளிநாட்டில் குடியேற நினைப்பது என்பது பலரும் நினைப்பதுபோல அவ்வளவு இலகுவான விடயமில்லை. 

வெளிநாட்டுபயணத்தினால் ஆட்கடத்தல், மனித வியாபாரம் போன்ற கடும் குற்றங்களுக்குள்ளாவீர்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். பொதுவாக சாதாரண மக்களின் பொருளாதார, சமூக , உளரீதியான பிரச்சினைகளை தமக்கு சாதமாக்கிக் கொள்ளும் மோசடிக்காரர்கள் ஆட்கடத்தல், மனித வியாபாரம் போன்ற கடும் குற்றங்களுக்கு மக்களை பலிக்கடா ஆக்குகின்றனர்.  

மனித வியாபாரம், ஆட்கடத்தல் இவை இரண்டும் மனிதர்களை பயன்படுத்தி இலாபமடையும் வியாபாரமாக காணப்படுகின்ற போதிலும் இந்த இரண்டு குற்றங்களுக்கிடையிலும் மிகப்பெரிய வேறுபாடு காணப்படுகின்றது. மனித வியாபாரம் என்பது பல்வேறு முகங்களைக் கொண்ட ஒரு பெரும் குற்றச்செயலாகும். உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ ஒருவரின் சம்மதமின்றியே இது இடம்பெறுகின்றது. தொழில்வாய்ப்புகள், வளமான வாழ்க்கை போன்ற கனவுகளால் உந்தப்பட்ட பலர் மோசடிக்காரர்களால் வஞ்சமாக ஏமாற்றப்பட்டு மனித வியாபாரம் எனும் குற்றத்திற்குட்படுகின்றனர். ஏஜண்ட் அல்லது முகவர் தொழிலாளர்களை பணியிடத்திற்கு அழைத்துச் சென்று ஒரு நபருக்கு இவ்வளவு கமிஷன் என்ற கணக்கீட்டின் அடிப்படையில் பணத்தைப் பெற்றுக்கொண்டு முதலாளி அல்லது மேற்பார்வையாளரிடம் ஒப்படைத்து விடுவார். காலப்போக்கில் தான் ஏமாற்றப்பட்டதை இவர்கள் உணரத்தொடங்குவார்கள். அதன்பின்னர் வேறுவழியில்லாமல் கடுமையான மிக மோசமான பணிசூழ்நிலைகளில் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றனர். ஊதியமே இல்லாமல் அல்லது குறைந்த பட்ச ஊதியம், பாலியல் சுரண்டல், உடல் அவயங்களை சட்டவிரோதமாக அகற்றுவது, பிச்சையெடுக்க அனுப்புதல் போன்றவை மனித வியாபாரத்தின் பல்வேறு முகங்களாகும். பதிவுசெய்யப்பட்ட திருமணங்கள் , தத்தெடுத்தல், போன்ற செயற்பாடுகள், ஊடாகவும் இவை இடம்பெறுவதை அண்மைக்கால நிகழ்வுகள் மூலம் அறியலாம். மனித வியாபாரத்தினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் வலியும் துயரங்களும் பல இடங்களில் பணம், அதிகார செல்வாக்குகளின் பின்னால் மறைக்கப்படுகின்றன. இதனால் அச்சம், நம்பிக்கையில்லாத வாழ்க்கையை தான் இவர்கள் வாழ்கின்றனர். அடிமைத்தனம் தான் தங்களது விதி என்று மனதளவில் ஏற்றுக்கொள்கின்றனர்.  

உலகளாவிய ரீதியில் மனித வியாபாரத்தினால் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனினும் ஒப்பீட்டளவில் பெண்களும், சிறுவர்களும் மனித வியாபாரத்தினால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இலங்கை மனித வியாபாரத்துக்கு உட்படும் முக்கிய இடமாக காணப்படுகின்றது. அதுவும் பாலியல் தேவைகளுக்காக மனித விற்பனை இலங்கையில் பிரதானமாக இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.  

கொழும்பு போன்ற புறநகர பிரதேசங்களில் வேலைவாங்கி தருவதாக கூறி பலவந்தமாக விபசாரத்துக்கு உட்படுத்தப்படுகின்றனர். அதேபோல் இலங்கையிலிருந்து ஆண்களும்,பெண்களும் மத்தியகிழக்கு , தென்கிழக்காசிய நாடுகளுக்கு வீட்டுப் பணியாளர்களாக, தொழிற்சாலை மற்றும் கட்டுமாணப் பணியாளர்களாக புலம்பெயர்ந்து தொழில்புரிகின்றனர்.

இத்தகைய சந்தர்ப்பங்களிலும் சுரண்டலுக்குட்படுத்தப்படுகின்றனர். இதில் அதிகளவில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். சவூதி, குவைத், கட்டார், எமன், போன்ற நாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்லும் 80சதவீதமானவர்களுக்கு தொழில் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டவாறு வேலை இருக்காது. சென்றவுடனே அவர்களின் கடவுச் சீட்டு, அடையாள அட்டை எல்லாம் எஜமான்களின் கைகளுக்கு மாறிவிடும். அதன்பின்னர் குறைந்தது தினமும் 18மணி நேர வேலை, குறைந்த பட்ச ஊதியம், மறந்தும் கருணை காட்டாத எஜமானிகள் ,அடி, சூடு வைத்தல், ஆணி அறைதல், சுடுநீரை ஊற்றி கொடுமைப்படுத்துதல், போதாக்குறைக்கு பாலியல் கொடுமைகள் என்று சொல்லெண்ணா துன்பங்களை தாண்டித்தான் அவர்கள் அங்கு வேலை பார்க்கின்றனர். வீட்டுப் பணிப்பெண்கள் என்று கூறி வெளிநாடுகளுக்கு பாலியல் தொழிலாளர்களாக பெண்களை முகவர்கள் விநியோகிக்கின்றனர். இலங்கையில் கடந்த ஆண்டு 20-க்கும் 40வயதுக்குட்பட்ட பெண்களை வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி ஓமானில் பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்த சம்பவத்தை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். இதனால் வளமான வாழ்வுக்காக கனவு கண்ட பல பெண்களின் வாழ்க்கை கல்லறையில் முடிந்திருக்கின்றன.  

மனித வியாபாரம் பற்றிய சர்வதேச வரைவிலக்கணமானது ஐக்கிய நாடுகள் சபையின் 2000ஆம் ஆண்டின் பெண்கள் மற்றும் பிள்ளைகளின் மனித வியாபாரத்தை தடுத்தல், கட்டுப்படுத்தல் மற்றும் வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கு தண்டனை வழங்குதல் பற்றிய நெறிமுறையின் (Palermo Protocol) 3ஆம் பிரிவில் இடம்பெற்றுள்ளது. 

இலங்கை அரசாங்கம் 2000ஆம் ஆண்டில் இந்நெறிமுறையில் கைச்சாத்திட்டு 2015ஆம் ஆண்டு பலொமோ நெறிமுறைக்கு உத்தியோகபூர்வமாக ஒப்புதல் அளித்தது. 2006ஆம் ஆண்டு நெறிமுறையின் விடயங்களுக்கு அமைவாக தண்டனை சட்டக்கோவையின் 2006ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க சட்டத்தில் திருத்தம் செய்து இலங்கை அரசாங்கம் அதனை சட்டமாக அறிமுகம் செய்தது. அதன்படி மனித வியாபாரம் என்பது சட்டப்படி குற்றமாகும். இதற்கு இரண்டு வருடங்களுக்கு குறையாத மற்றும் இருபது வருடங்களுக்கு மேற்படாத சிறைத்தண்டனையும் அபராதம் செலுத்துவதுமாகும். இதன்படி ஒரு பிள்ளையை மனித வியாபாரத்தில் ஈடுபடுத்தினால் அதாவது 18வயதுக்கு குறைந்த நபர் எனின் ஆகக்குறைந்த சிறைத்தண்டனை மூன்று வருடங்களாகும். ஆகக்கூடிய சிறைத்தண்டனை 20வருடங்களாகும். இவைதவிர ஒருவரின் சம்மதமின்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல் , ஒருவரை வாங்குவதற்கு முயற்சி செய்தல் என்பன குற்றமாக கருதப்படும். இவ்வாறான குற்றத்துக்கென குறைந்தது 2வருடம் முதல் கூடியது 10வருடம் வரையிலுமான சிறைத்தண்டனை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுதவிர மனித வியாபாரத்தால் பாதிக்கப்பட்டவர்களை இனங்காணல், பாதுகாத்தல் மற்றும் பரிந்துரைத்தல் தொடர்பில் பொலிஸ், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்,தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை போன்ற நிறுவனங்களும் செயற்படுகின்றன.  

ஆட்கடத்தல், மனித வியாபாரம் என்பன நடைமுறையில் தொடர்புபட்டவையாக காணப்பட்டாலும் ஊடகங்களில் இவை பயன்படுத்தப்பட்டாலும் சட்டத்தில் இரண்டு குற்றங்களுக்கிடையிலும் மிகப்பெரிய வேறுபாடு காணப்படுகிறது. 

ஆட்கடத்தல் (Human Smuggling )என்பது ஒரு நபரின் அல்லது நபர்களின் சம்மதத்துடன் சட்டரீதியற்ற முறையில் கட்டணமொன்றை பெற்று நாட்டைக் கடந்து செல்ல உதவி புரிதலாகும். எனவே ஆட்கடத்தலானது சர்வதேச ரீதியில் நாடுகளைக் கடத்தலை நோக்கமாகக் கொண்டது. மனித வியாபாரமானது தனிப்பட்ட நபரின் மனித உரிமைகள் மீறப்படும் செயற்பாடாகவிருப்பதுடன், ஆட்கடத்தலானது புலம்பெயர்தலுக்கான ஒரு நாட்டின் சட்டங்களுக்கு எதிராக செயற்படும் ஒரு நாட்டிற்கெதிரான குற்றமாகும். கடத்தல்காரரின் சேவைக்கு கட்டணத்தையும் செலுத்துகின்றனர். ஐக்கியநாடுகள் சபையின் நெறிமுறையில் தரை, கடல் மற்றும் ஆகாயவழி மூலம் புலம்பெயர்ந்து ஆட்கடத்தலில் ஈடுபடுவதற்கு எதிராக அரசியல் கொள்கை காணப்படுகின்றது. கடந்த சில தசாப்தங்களில் அதிகரித்துவரும் ஒரு குற்றச் செயலாக மனித கடத்தல் (ஆட்கடத்தல்) காணப்படுகின்றது. உலகெங்கிலும் பல்வேறு காரணங்களுக்காக முறையற்ற விதத்தில் எண்ணுக்கணக்கற்றவர்கள் இவ்வாறு புலம்பெயர்கின்றனர். ஆபத்தான கடுமையான பயணம் என்பதை அறிந்தும் சட்டவிரோத புலம்பெயர்வை நாடுகின்றனர். இதனால் செல்லுபடியான விசா அல்லது பயண ஆவணமொன்றைக் கொண்டிராமை, சென்றடையும் நாட்டின் மொழியை பேசத் தெரியாமை, வேலையொன்றை தேடிக்கொள்ள முடியாமை போன்ற காரணங்களினால் மனித வியாபாரத்தில் ஈடுபடுபவர்களிடம் சிக்கிக்கொள்ளும் சந்தர்ப்பங்களும் ஏற்படுவதுண்டு.  

இலங்கையை பொறுத்தவரை இலங்கையில் இருதசாப்தத்துக்கு மேற்பட்ட யுத்தம் ,பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களினால் பலர் சட்டவிரோதமாக ஐரோப்பா, அவுஸ்ரேலியா, கனடா போன்ற நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர். அதன்பின்னர் யுத்தம் முடிவடைந்த பின்னரும் பலர் உயிர் அச்சுறுத்தல், பாதுகாப்பு காரணங்களுக்காக சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு சென்றனர். இதில் பலருக்கு என்ன நடந்தது என்று இன்றுவரை அறியாது அவர்களுடைய உறவுகள் தவிக்கின்றனர். சிலர் பல்வேறு கனவுகளுடன் சென்று தோற்றுப் போனவர்களாக நாடு திரும்பி மீண்டும் பல்வேறு துயரங்களுக்கு நடுவே தமது சொந்த ஊர்களில் வாழ்க்கையைத் தொடங்குகின்றனர்.  இவையெல்லாம் ஒருபக்கமிருக்க தற்போது இலங்கையின் பொருளாதார நிலைமை நாளுக்கு நாள் மோசமடைவதால் மில்லியன் கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் தமது உயிரை பணயம் வைத்து சட்டவிரோதமாக கடல் வழியாக , படகுகளில் நாட்டை விட்டு வெளியேறும் நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். படகுகள் மூலம் கடந்த மாதங்களில் அவுஸ்திரேலியாவிற்கு சென்றவர்களை இரண்டு தடவை அந்நாட்டு அரசாங்கம் இலங்கைக்கு திருப்பி அனுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதத்தில் மட்டும் உரிய அனுமதியின்றி படகுமூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல முயன்ற 500ற்கும் மேற்பட்டோரை இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்தனர்.

தற்போது ஆட்கடத்தல்காரர்கள் அதிகளவில் சமூகவலைத்தளங்களின் ஊடாக சட்டவிரோத புலம்பெயர்வை ஊக்குவிக்கின்றனர். கனடா, அமெரிக்காவில் வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் சுற்றுலா விசாவில் செல்ல முடியுமென சமூகவலைத்தளங்களில் பல கும்பல்களினால் தகவல்கள் பகிரப்படுகின்றன. இதனால் பலர் ஏமாந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஐரோப்பிய கனவுகளுடன் ஆட்கடத்தல்காரர்களினால் ஏமாற்றப்பட்ட பலர் சொல்லெண்ணா துயரங்களை கடந்தே தமது இலக்கு நாட்டை அடைகின்றனர். இவர்களுக்கு ரஷ்யா, உஸ்பெக்கிஸ்தான் போன்ற நாடுகள் இடைத்தங்கல் நாடுகளாகவுள்ளன. அந்த நாட்டின் எல்லைகளை பனிப்பாறைகள், மலைகளில் உயிரை கையில் பிடித்துகொண்டு குளிரில் உடல்,கை, கால்கள் உறைந்து நடைப்பிணமாய் நடந்துசென்றே கடந்துசெல்வதாகவும் சிலசமயங்களில் பனிப்படலம் உடைந்து விழுந்து பனி ஆற்றில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்களும் ஏற்படுவதாகவும் ஐரோப்பிய நாடொன்றில் வசிக்கும் நபரொருவர் தெரிவிக்கின்றார். இன்னும் சில இடங்களில் கண்டெய்னர்களில் மறைந்து பலநாட்கள் பயணம் செய்து எல்லையை கடக்கின்றனர். இதன்போது அதிகளவானவர்கள் உயிரிழக்கும் சந்தர்ப்பங்களும் ஏற்படுவதுண்டு.

மனித வியாபாரத்தைப் போலன்றி ஆட்கடத்தல் தொடர்பான விசேட சட்டங்கள் எதுவும் இல்லை. 1948ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க குடிவரவு குடியகல்வு சட்டமானது மனித கடத்தலை ஊக்குவிக்கும் நபர்களுக்கு வழக்கு தொடர்வதற்கான சட்டவிதிகளை கொண்டுள்ளது.

எனவே வெளிநாடு செல்ல எதிர்பார்த்திருப்பவர்கள் மனித வியாபாரம், ஆட்கடத்தல் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். பெரும்பாலும் புலம்பெயர்தலில் முகவர்களின் பங்கு முக்கியமாக உள்ளது. எனவே வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், வெளிநாட்டு தூதரங்களினால் அங்கீகரிக்கப்பட்டு பதிவுசெய்யப்பட்ட தனியார் நிறுவனங்கள், முகவர்கள் ஊடாக புலம் பெயர்தலை மேற்கொள்ளவேண்டும்.

வசந்தா அருள்ரட்ணம் 

Comments