தமிழகத்திலிருந்து நாடு திரும்பிய 12,500 இலங்கை தமிழருக்காக யாழ், கிளிநொச்சியில் நடமாடும் சேவை | தினகரன் வாரமஞ்சரி

தமிழகத்திலிருந்து நாடு திரும்பிய 12,500 இலங்கை தமிழருக்காக யாழ், கிளிநொச்சியில் நடமாடும் சேவை

தமிழகத்திலிருந்து நாடு திரும்பிய 7,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 12,500க்கும் அதிகமான இலங்கையர் வடமாகாணத்தில் குடியேறியுள்ளதாக தகவல்கள் பதிவாகியுள்ளன. அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் நடமாடும் சேவைகளை நடத்த நீதி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு இந்தியாவிலிருந்து நாடு திரும்பி வடமாகாணத்தில் குடியேறியுள்ள 12,500க்கும் மேற்பட்டோருக்கு இலங்கை பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொடுப்பது உள்ளிட்ட நீதித்துறை, சிறைச்சாலை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் இந்த நடமாடும் சேவையூடாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சர் கலாநிதி விஜேயதாச ராஜபக்ஷ மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோரின் பங்கேற்புடன், அமைச்சுக்கு சொந்தமான நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகள் இதனை ஏற்பாடு செய்துள்ளனர்.

நாளை 31 ஆம் திகதி திங்கட்கிழமையும் நாளை மறுதினம் 01 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும் இந்த நடமாடும் சேவைகள் நடத்தப்படவுள்ளன.

நாளை 31 ஆம் திகதி காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணிவரை யாழ். மாவட்ட செயலகத்திலும். நாளை மறுதினம் மாதம் 01 ஆம் திகதி காலை 09. 00 மணி முதல் மாலை 04.00 மணிவரை கிளிநொச்சி திறன் அபிவிருத்தி மத்திய நிலையத்திலும் நடத்தப்படவுள்ளதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது.

பிரஜாவுரிமை பெற்றுக் கொள்ளல், பிறப்பு, இறப்பு பதிவுச் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளல், அது தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வு, தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ளல், புதிய மற்றும் தொலைந்த, திருத்தங்கள் செய்தல் போன்ற விடயங்களும் இந் நடமாடும் சேவையூடாக பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன் காணிகள் தொடர்பான பிரச்சினை, மீள் குடியேற்றம் தொடர்பான சிக்கல்கள் தொடர்பில் இதன்போது தீர்வு வழங்கப்படவுள்ளன.

புதுக்குடியிருப்பு விசேட நிருபர்
 

Comments