நவாஸ் ஷெரிபின் தலைவிதியை தீர்மானிக்கும் ரஹீல் ஷெரிபின் ஓய்வு | தினகரன் வாரமஞ்சரி

நவாஸ் ஷெரிபின் தலைவிதியை தீர்மானிக்கும் ரஹீல் ஷெரிபின் ஓய்வு

சிங்கத்தை வைத்து வித்தை காட்டுபவனுக்கு எந்த சிங்கம் எப்போது கடித்து குதறிவிடும் என்ற பயம் இருக்கத்தான் செய்யும். ஆனால் வேடிக்கை பார்ப்பவர்களை பொறுத்தவரை அந்த நபர் சிங்கத்தையே ஆட்டிப்படைக்கும் வீராதி வீரன்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிபும் அப்படித்தான். இராணுவத்தை வைத்துக் கொண்டு அவர் செய்யும் குட்டிக்கரண வித்தைகளை பார்க்க ஆச்சரியமாக இருக்கும். ஆனால் அதன் கஷ்டம் நவாஸ் ஷெரிபுக்குத் தான் தெரியும்.

ஆனால் இப்போது நவாஸ் ஷெரிப் தனது உச்ச கட்ட வித்தையை காட்ட நேரம் வந்துவிட்டது.

பாகிஸ்தான் இராணுவத் தளபதி ரஹீல் ஷெரிப் ஓய்வு பெறுகிறார். அதுவும் இன்னும் இரண்டு நாட்களில் - நவம்பர் 29 ஆம் திகதி விடைபெற்றுச் செல்வார். எனவே அந்த ஆபத்தான இராணுவத் தளபதி பதவிக்கு புதிய ஒருவரை தேர்வு செய்யும் பொறுப்பு நவாஸ் ஷெரிபுக்கு கழுத்தில் கத்தியாக வந்து நிற்கிறது.

ஜனாதிபதி உட்பட நாட்டில் எந்த பதவிக்கும் கண்ணை மூடிக்கொண்டு யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்து விடலாம். ஆனால் பாகிஸ்தான் இராணுவ தளபதி பதவிக்கு பார்த்துக் கேட்டு, அலசி ஆராய்ந்த கொஞ்சமேனும் பிசகு இல்லாத தேர்வாக இருக்க வேண்டும்.

அதனை நவாஸ் ஷெரிபுக்கு சொல்லி புரிய வைக்க வேண்டி இருக்காது. கடந்த காலங்களில் அவர் அந்த கயிற்றின் மேல் நடக்கும் வித்தையால் பட்ட கஷ்டங்கள் ஏராளம்.

1947 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் அதன் தலையெழுத்தை இராணுவமே எழுதி வருகிறது. அங்கு நுளம்பு கடித்தால் கூட ஒரு இராணுவ சதிப்புரட்சி நிகழ்ந்துவிடுமோ என்ற பயம் எப்போதும் ஆட்சியாளர்களிடம் இருக்கும். கடந்த 69 ஆண்டுகளில் நிகழ்ந்த இராணுவ சதிப்புரட்சிகளின் எண்ணிக்கை மூன்று.

அதாவது பாகிஸ்தான் என்ற நாட்டின் வரலாறு ஆரம்பமானது தொடக்கம் அங்கே நான்கு இராணுவ சர்வாதிகாரிகள் பாதிக்காலத்தை ஆட்சி புரிந்திருக்கிறார்கள்.

எனவே அங்கு இராணுவத்தை தட்டிக்கேட்க யாரும் இல்லை. இராணுவம் வசமிருக்கும் தனியார் பொருளாதாரத்தின் மதிப்பு 20 பில்லியனுக்கு மேல். எனவே பணத்துக்கு யாரிடமும் கையேந்த வேண்டியதில்லை.

இது போதாதென்று தனக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளில் பாதியை இராணுவம் விழுங்கிக் கொள்ளும். செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு பின்னர் அமெரிக்கா அள்ளி அள்ளி கொடுத்த உதவிகளில் இராணுவம் குளிர்காய்ந்தது. அந்த உதவி குறைந்த போது சீனாவின் பில்லியன் டொலர்களுக்கு பின்னால் போகிறது.

மறுபக்கம் பாகிஸ்தானின் சிவில் அரசுகளின் கையாலாகாத்தனம், ஊழல் எல்லாம் இராணுவத்திற்கு சாதகமாகப் போய்விட்டது. எனவே இராணுவம் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வீதிக்கு வந்தால் எந்த குடிமகனும் தட்டிக்கேட்கப் போவதில்லை.

எனவே பாகிஸ்தான் இராணுவ தளபதியின் ஓய்வு என்பது, அந்த நாட்டை பொறுத்தவரை முக்கியமான ஒரு திருப்பம். அது பாகிஸ்தானை கடந்து பிராந்திய மற்றும் சர்வதேச அளவிலும் தாக்கம் செலுத்தக் கூடியதாக இருக்கும்.

நான்கு நட்சத்திரங்கள் கொண்ட ஜெனரல் ரஹீல் ஷெரிப், இராணுவத் தளபதியாக இருந்த கடந்த மூன்று ஆண்டு காலத்தில் அவர் இராணுவ சதிப்புரட்சி ஒன்று செய்யவில்லையே என்ற அளவில் மாத்திம் நவாஸ் ஷெரிபுக்கு ஆறுதல் அடைய முடியும். மற்றபடி அவர் இராணுவ சதிப்புரட்சி செய்யாத ஒரு ஆட்சியாளராகவே வலம் வந்திருக்கிறார்.

2013 ஆம் ஆண்டு மகத்தான வெற்றி ஒன்றை பெற்றே நவாஸ் ஷெரிப் ஆட்சியை பிடித்தார். ஆனால் ஆட்சியை பிடிப்பதற்கு அவர் அளித்த வாக்குறுதிகள் புரட்சிகராமாக இருந்தன. நாட்டில் எப்பொழுதும் தொந்தரவு கொடுக்கும் பாகிஸ்தான் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக குறிப்பிட்டார். பாகிஸ்தான் பிரிவினைவாதிகளையும் பேச்சுவார்த்தை மூலம் வழிக்குக் கொண்டுவருவதாகச் சொன்னார். பரம எதிரி இந்தியாவோடு கூட அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறினார்.

ஆனால் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட ரஹீல் ஷெரிப் இந்த வாக்குறுதிகள் ஒன்றைக் கூட நிறைவேற்ற அனுமதிக்கவில்லை. 2013 நவம்பர் மாதத்திலே தளபதிப் பதவியை ஏற்று சில மாதங்கள் கூட போகவில்லை போராட்டக் குழுக்களின் கோட்டையாக இருந்த வசிரிஸ்தான் பிராந்தியத்தில் அதிரடி இராணுவ நடவடிக்கை ஒன்றை அறிவித்தார். அது பற்றி நவாஸ் ஷெரிப் அரசுக்குக் கூட சரியாகச் சொல்லிக் கொள்ளவில்லை.

இந்த அதிரடி தாக்குதல்கள் படு பயங்கரமாக இருந்தபோதும் வடக்கு பாகிஸ்தானில் ஆயுததாரிகளின் அட்டகாசம் குறைந்தது. இது நவாஸ் ஷெரிபை விஞ்சி ரஹீல் ஷெரிபுக்கு மக்களிடம் அதிக புகழை தேடிக் கொடுத்தது.

நாட்டின் தெற்கில் நடக்கும் வன்முறைகளையும் அவர் கைகட்டி பார்த்திருக்கவில்லை. இராணுவ தளபதியின் நேரடி கண்காணிப்பில் துணை இராணுவப் படை ஒன்று உருவாக்கப்பட்டது. இதன் முக்கியமான நோக்கம் நாட்டின் மிகப்பெரிய நகரான கராச்சியில் இயங்கும் ஆயுதக் குழுக்கள், குற்ற கும்பல்கள் மற்றும் சாக்கடையாகிப் போன அரசியல் ஊழல்களை ஒழிப்பதாகும்.

ரஹீல் ஷெரிபின் முயற்சி வீணாகவில்லை. கராச்சியும் கடந்த காலங்களை விட சுத்தமானது. காரச்சியில் அன்றாடம் நடக்கும் மிரட்டிப் பணம் பறிப்பது, பணத்திற்காக திட்டமிட்ட கொலைகள் மற்றும் கடத்தல்கள் காணாமல்போய்விட்டன.

ஒட்டுமொத்தத்தில் ரஹீல் ஷெரிபின் பதவிக் காலத்தில் நாட்டிலே தீவிரவாதத் தாக்குதல்கள் குறைந்தன. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் அது 70 வீத வீழ்ச்சியாக இருந்தது.

இதற்கு தோதாக இராணுவ ஊடகப் பிரிவு தேர்தல் பிரசாரங்கள் போல ஜெனரல் ஷெரிபை புகழ்ந்து செய்தி வெளியிடாத நாட்கள் இல்லை. குறிப்பாக பாகிஸ்தான் பத்திரிகை, தொலைக்காட்சி செய்திகளில் ரஹீல் ஷெரிப் பற்றிய நல்ல செய்தி ஒன்றாவது கட்டாயம் இருக்கும். இராணுவத்தின் புகழை உயர்த்த அதன் ஊடகம் பிரத்தியேகமாக பாடல்கள், படங்களை தயாரித்து வெளியிட்டு மக்களிடம் புகழை வளர்த்துக் கொண்டது.

இதனால் நாட்டிலே நவாஸ் ஷெரிபை விட ரஹீல் ஷெரிபின் பேச்சுத் தான் அதிகம். ஒரு கட்டத்தில் ரஹீல் ஷெரிபுக்கு இராணுவ சதிப்புரட்சி ஒன்றை செய்யும்படி கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் கூட நடத்தி இருக்கிறார்கள்.

உள்நாட்டில் இப்படி என்றால் வெளிநாட்டு விவகாரங்களிலும் நவாஸ் ஷெரிப் வெறுமனே பொம்மை பிரதமராகவே இருக்கிறார். நவாஸ் ஷெரிப் எப்போதும் இந்தியாவோடு அமைதிக்கு முயற்சிப்பவராகத் தான் இருந்திருக்கிறார். ஆனால் இராணுவமோ அந்த பேச்சுக்கே இடமில்லை என்று அவரை கட்டிப்போட்டு விட்டது. அண்மைக் காலத்தில் காஷ்மிர் விடயத்தில் இரு நாட்டுக்கும் இடையில் யுத்தம் ஒன்று வெடிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது.

பாகிஸ்தானில் இப்போது சொல்லிக் கொள்ள வெளியுறவு அமைச்சர் என்று யாரும் இல்லை. அந்த வேலையை பிரதமர் நவாஸ் ஷெரிபே பார்த்துக் கொள்கிறார் என்று வெளியே சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் பார்ப்பதற்கு அப்படித் தெரியவில்லை.

ரஹீல் ஷெரிப் நாட்டின் வெளியுறவு அமைச்சராகவும் செயற்படுகிறார் போல் தெரிகிறது. அவர் பாட்டுக்கு அமெரிக்கா, சவூதி அரேபியா, சீனா என்று முக்கியமான நாடுகளுக்குப் போய் பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஒப்பந்தங்கள் செய்கிறார், உதவிகள் பெறுகிறார். நாட்டின் கொள்கைகளை கூட மாற்றுகிறார்.

எனவே ரஹீல் ஷெரிபின் ஓய்வு என்பது பாகிஸ்தான் மக்கள் மட்டுமல்ல உலகமே உற்று நோக்கு விடயமாகவும் இருக்கிறது. குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது.

இப்போதைய சூழலில் நவாஸ் ஷெரிபின் கையிலேயே அவரது தலைவிதி இருக்கிறது. ஏனென்றால் அடுத்த இராணுவத் தளபதியை அவர்தான் நியமிக்க வேண்டும். ஆனால் யாரை நியமிப்பது என்பதுதான் தெரியவில்லை.

இத்தனைக்கும் கடந்த காலங்களில் பல இராணுவத் தளபதிகளை நியமித்ததில் அனுபவம் கொண்டவர் இந்த நவாஸ் ஷெரிப். ஜெனரல் சியா உல் ஹக் தொடக்கம் ரஹீல் ஷெரிப் வரையான காலத்தில் நியமிக்கப்பட்ட 15 இராணுவத் தளபதிகளில் 8 தளபதிகளை நியமிப்பதில் நாவஸ் ஷெரிப் முக்கிய கதாபாத்திரம் வகித்திருக்கிறார்.

அதிலும் ஜெனரல் பெர்வெஸ் முஷாரப், ஜெனரல் சியா உத்தின் கவாஜா மற்றும் ரஹீல் ஷெரிப் மூவரும் நவாஸ் ஷெரிபினால் நியமிக்கப்பட்டவர்கள். அவரது இந்த மூன்று தேர்வும் திருப்தியானதாக இருக்கவில்லை. பெர்வஸ் முஷாரப் பற்றி கூறவே தேவையில்லை. நவாஸ் ஷெரிபுக்கே தண்ணிகாட்டி இராணுவ சதிப்புரட்சி செய்தவர். கடைசியில் நவாஸ் ஷெரிபால் சிறையில் தான் நிற்க முடிந்தது.

மற்றையவர் ஜெனரல் சியா உத்தின் கவாஜாவின் நியமனம் வெறுமனே செல்லாக்காசு. பெர்வஸ் முஷாரப்பிற்கு பயந்து 1999இல் அவசரத்திற்கு நியமிக்கப்பட்டவர்தான் இவர். ஆனால் இவரை முஷாரப் இராணுவத்தில் இருந்தே துரத்திவிட்டார். கடைசியாக ரஹீல் ஷரிபின் நியமனத்தில் தனது பதவிக்கு ஆபத்து வராதபோதும் அவரால் நவாஸ் ஷெரிபின் செல்வாக்கு போதுமாக சரிந்துவிட்டது.

இன்றைய தேதியில் ஓய்வு பெறும் ரஹீல் ஷெரிப் ஓட்டுக் கேட்க வந்தால் நவாஸ் ஷெரிபினால் கிட்டேயும் நிற்க முடியாது.

பாகிஸ்தான் இராணுவத் தளபதியாக தேர்வு செய்வதற்கு தகுதி கொண்ட பல நான்கு நட்சத்திர ஜெனரல்கள் அங்கே குவிந்து கிடக்கின்றார்கள். அவர்களிடையே தளபதி பதவிக்கு நீயா, நானா என்ற போட்டியும் இருக்கிறது.

ஆனால் ஆபத்தான பதவியை தூக்கிக் கொடுக்க தகுதி மட்டும் போதாது. நம்பிக்கை, விசுவாமும் தேவை. அதுவே யாரை நியமிப்பது என்பது பற்றி நவாஸ் ஷெரிப் இன்று வரை சூசகமாகக் கூட எதுவும் சொல்லாததற்கு காரணம்.

எப்படி இருந்தாலும் வரப்போகும் இராணுவத் தளபதி அந்நாட்டு அரசியலில் செல்வாக்கு செலுத்துபவராகவும், பொருளாதாராத்தில் கோலோச்சுபவராகவும், வெளிநாட்டு கொள்கைகளில் மூக்கை நுழைப்பவராகவும் தான் இருக்கப் போகிறார்.

ஆனால் என்ன தனது பதவிக்கு ஆபத்தில்லாதவராக இருக்க வேண்டும் என்பதுவே நவாஸ் ஷெரிபின் ஒரே கவலை.

Comments