அன்று ஜெயலலிதா –ஜானகி இன்று சசிகலா –தீபா | தினகரன் வாரமஞ்சரி

அன்று ஜெயலலிதா –ஜானகி இன்று சசிகலா –தீபா

நிஜமும் நிழலும்

அருள் சத்தியநாதன்

 

இ வ் வருடம் தமிழகத்தில் செய்திகளுக்கே பஞ்சமிருக்கவில்லை. கடந்த டிசம்பரில் சென்னை பெருவெள்ளம் தொடங்கி பல செய்திகள், பல புயல்கள் – சில உண்மையானவையும் கூட. மறைந்த முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 22ஆம் திகதி அபல்லோவில் அனுமதிக்கப்பட்டது ஒரு புயல் என்றால், அவருக்கு என்ன நடந்தது, நடக்கிறது, நடக்கும் என்ற மர்மம் அடுத்த புயலாக மக்களை அலைக்கழித்தது. அதே சமயம் 500, 1000 ரூபா நோட்டுகள் நவம்பர் எட்டாம் திகதி வெறும் ஐந்து மணித்தியால இடைவெளியில் செல்லாக் காசாக்கிய மத்திய அரசின் உத்தரவால், முழு இந்தியாவுமே திணறிப்போனது. அந்தப் புயல் இன்றைக்கும் மக்களை அலைக்கழித்துக் கொண்டுதான் இருக்கிறது. ரூபா நோட்டு விவகாரத்தால் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடக்கப்பட்டன. அடுத்ததாக ஜெயலலிதாவின் மரணம் என்ற புயல் சுழன்றடித்தது. இதற்கு முன்னதாக சென்னையைத் தாக்கவுள்ளதாகக் கருதப்பட்ட ‘நடா’ என்ற சூறாவளி பிசுபிசுத்துப் போய், குளிரை மட்டும் கொட்டி விட்டுச் சென்றது. இடையே கலைஞருக்கு சுகவீனம் என்றொரு புயல், இறுதியாக வர்தா புயல் வட்டியும் முதலுமாக சென்னையை உலுக்கிப் போட்டுவிட்டுச் சென்றிருக்கிறது. இப்புயலின் வேகமும் சேதமும் அடங்குமுன் இன்னொரு அரசியல் புயல் கிளம்பியிருக்கிறது. ஜெயலலிதாவுக்குப் பின்னர் கட்சியை நடத்தப்போவது யார்? ஓ. பன்னீர் செல்வம்தான் தொடர்ந்தும் முதலமைச்சராக இருப்பாரா அல்லது ஆர். கே. தொகுதியில் அ. தி. மு. க வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெறப் போகிற அந்த முக்கிய நபர்தான் முதலமைச்சராக தொடர்வாரா?

இது ஒரு கேள்வி என்றால் இன்னும் பல உபகேள்விகளும் எழுகின்றன. இன்று ஜெயா டி. வியை ஒன் செய்தால், ஒரே சின்னம்மா புராணத்தைதான் திகட்டத் திகட்ட பார்க்க முடிகிறது. இரு நீண்டகால கனவை நனவாக்குவதற்கான எல்லா ஏற்பாடுகளும் திட்டமிட்ட ரீதியாக நிறைவேற்றப்பட்டு வருவதாகவே தெரிகிறது. ஒன்றரைக் கோடி அ. தி. மு.க தொண்டர்களின் ஒரே கோரிக்கை சின்னம்மா சசிகலாதான் கட்சியின் பொதுச் செயலாளராக வரவேண்டும் என்பதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொன்னையன் பேச ஆரம்பித்திருக்கிறார். மற்றொரு அ. தி. மு. க பிரமுகரான சரஸ்வதி சின்னம்மாவை தெய்வமாகவே வர்ணிக்கும் அளவுக்கு சென்று விட்டார்.

ஒரு உடல் உபாதையை ஏன் பரம ரகசியமாகவும், நோயாளியை யாரும் பார்த்துபேச முடியாத 
நிலையிலும் வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? மரணம் எப்படி நிகழ்ந்தது? நடமாடிப் பழகுகிறார், இட்லி சாப்பிட்டார், பேசுகிறார், கையெழுத்து போடுகிறார் என்றெல்லாம் சொல்லப்பட்டதே, அவ்வாறான நோயாளி எப்படி இறந்தார்? என்ற கேள்வியும் பொது மக்களால் கேட்கப்படுகிறது. 
 
   
   

முதல்வர் பன்னீர் செல்வம் சின்னம்மாவின் தயாரிப்பு என்ற வகையில் சசிகலாவை அவர் எதிர்க்கமாட்டார் என்ற அபிப்பிராயமே நிலவுகிறது. இதுவரை அவர் அடங்கிய பிள்ளையாகத்தான் நடந்து வருகிறார். அமைச்சரவைக் கூட்டம், முக்கிய அரசு ஆலோசனைக் கூட்டங்கள், கட்சி நிர்வாகிகள் சந்திப்புகள் எல்லாம் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து வீட்டில் தான் பன்னீரால் நடத்தப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை ஜெயலலிதா மறைந்த 11ஆவது நாள் போயஸ் தோட்டத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. பின்னர் கட்சி பிரமுகர் கூட்டமும் நடைபெற்றது. அடுத்த பொதுச் செயலாளராக சின்னம்மாவை தெரிவு செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பொன்னையன் ஒருபடி மேலே சென்று, சின்னம்மா பொதுச் செயலாளராவதற்கு யாப்பு ரீதியான தடை இருக்குமானால் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் என்று பேசியிருக்கிறார்.

இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், சசிகலாவுடன் நேரடித் தொடர்பில் இருக்கக்கூடிய அமைச்சர்கள், கட்சி முக்கியஸ்தர்களில் பெரும்பாலானோர் சசிகலா ஆதரவாளர்களாக உள்ளனர் அல்லது அப்படி இருக்கும்படி நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்பதுவே. ஜெயலலிதாவுக்கு முன்பாக எவ்வாறு ஆமாம் சாமி மந்தைகளாக இருந்தார்களோ அதே சேவிப்பை இப்போது இவர்கள் சின்னம்மாவை நோக்கித் திருப்பி இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் தோழியாகவும், அவருடனேயே 30 ஆண்டுகளாக கூட இருந்தவரும், தன் சொல்படி ஜெயலிலதாவை நடக்க வைப்பதன் மூலம் அரசில் செல்வாக்கு செலுத்தும் நபராக மாறியவருமான சசிகலா, இதுவரை வாய் திறந்து அரசியல் பேசியதில்லை. ஜெயலலிதாவைப் பயன்படுத்தி பெரும் கோடீஸ்வரராக மாறிய இவரை ஏற்கனவே ஜெயலிலதா மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுகள், தொடர்புப்பட்ட வழக்குகளில் எல்லாம் சேர்ந்திருக்கிறார்கள். இப்போது உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் நிரூப்பிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறைவாசத் தண்டனை பெற்றவரும் கூட.

இந்தத் தீர்ப்பு வெளிவந்து, தண்டனை உறுதிப்படுத்தப்படுமானால் சசிகலா சிறைசெல்ல வேண்டியிருக்கும். ஆனால் இன்றைக்கும் சசிகலாவினால் கட்சியிலும் அரசியலிலும் செல்வாக்கு செலுத்தமுடிகிறது. வாய் திறந்து பேசாத அவர் திரைமறைவில் கயிறு இழுப்பது எப்படி என்பது நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்.

மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் அ. தி. மு. க. வில் எல்லாம் ஒழுங்காகவும் அமைதியாகவும் இருப்பது போலத் தோன்றினாலும் அப்படி அல்ல என்பது தெரிகிறது.

சசிகலா எந்தத் தகுதியுமின்றியும், கட்சிப் பணி எதையும் ஆற்றாமலும் இருந்துவிட்டு, ஜெயலலிதாவின் தோழி என்ற ஒரே தகுதி அடிப்படையில் ஒரு பிரதான கட்சியின் பொதுச் செயலாளராக வருவதற்கு அமைச்சர்கள் ஆதரவு தருகிறார்கள் என்றால், பன்னீர் செல்வமும் அதற்கு உடந்தை என்றால், எங்கோ ஏதோ பிசிறடிக்கிறது என்றுதான் பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது.

எம். ஜி. ஆர் மறைந்ததும் எம். ஜி. ஆருக்கு விசுவாசமானவர்கள் ஜெலலிதா முதல்வராவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். நெடுஞ்செழியன், இராம வீரப்பன் போன்ற பெருந்தலைவர்கள் ஜெயலலிதாவை ஏற்காததற்கு நியாயமான காரணங்கள் உள்ளன. அதனால்தான் ஜானகி ராமச்சந்திரனை அவர்கள் முதல்வராக்கினர். அக்காலத்தில் கே. கே. எஸ். ராமச்சந்திரன், இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கும் திருநாவுக்கரசு ஆகிய இருவரும் ஜே பக்கம் நின்று வேலை செய்தார்கள். தமது சொந்த பணத்தை தண்ணீராக செலவு செய்து ஜெயலலிதாவுக்காகப் போராடினார்கள். ஆனால் ஜெயலிலதா முதல்வராக வந்த பின்னர், அனைத்தும் அவருக்கு சாதகமான பின்னர், அவர் என்ன செய்தார் தெரியுமா? கே. கே. எஸ். ராமச்சந்திரனையும், திருநாவுக்கரசரையும் முதல் வேலையாகத் தூக்கி எறிந்தார்! இதுதான் அரசியல்!

எம். ஜி. ஆர். தன் கட்சிப் பிரமுகர்களை அடக்கி வைத்திருந்தார். அதில் அன்பு செலுத்துதலும் அங்கியிருந்தது. அதனால், அவர் மறைவின் பின்னர் தமக்குள் மோதிக் கொண்டார்கள். ஆனால் ஜெயலலிதா அம்மையாரோ தனது அமைச்சர்களையும் கட்சி பிரதானிகளையும் ஆட்டு மந்தையை போலவே வைத்திருந்தார். ஆமாம் சாமியைத் தவிர வேறு எதுவுமே சொல்லத் தெரியாதவர்களாகவே அவர் வைத்திருந்தார். நடந்தது ஒரு அல்லி ராஜ்யம்தான்.

அவரது உயிர்த் தோழியும் அதே பாணியைத்தான் பின்பற்றுகிறார். ஆனால் ஜெயாவுக்கு பயந்தவர்கள் சசிகலாவின் காலங்களிலும் வீழ்வது, பழக்க தோஷத்தாலா அல்லது அவர்களின் மொத்தக் குடுமியும் சசி கையில் இருப்பதாலா என்பது தெரியவில்லை.

ஆனால் சசியை பொதுச் செயலாளராக தெரிவு செய்யும்போது அதற்கு கட்சி முக்கியஸ்தர்கள், மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ஆமாம் சாமி போடுவார்களா? ஒருவர் கூட எதிர்க்க மாட்டாரா? ஏனெனில் தற்போது சசி தரப்பு ஒரு மாயையை உருவாக்கி வருகிறது. சசிகலாவை விட்டால் வேறு ஆளே கிடையாது என்ற தோற்றத்தை கட்டமைத்து வருகிறார்கள். இதனால் உண்மைத் தோற்றம் புலப்பட மாட்டேன் என்கிறது.

இங்கே, குழம்பிய குட்டையில் தி. மு. க மீன் பிடிக்காது என்று உறுதியாகச் சொல்வதற்கில்லை. அது திரைமறைவில் என்னென்ன கயிறிழுப்புகளைச் செய்து வருகிறது என்பது இரகசியமாகவே இருந்து வருகிறது. இதேசமயம், ஒட்டு மொத்த அ. தி. மு. க தொண்டர்களும் சின்னமாவையே விரும்புவதாக வெளிவிடப்படும் செய்தி உண்மையாக இருக்க வாய்ப்பில்லை ஏனெனில், தமிழக மக்கள் ஜெயலலிதா மீது வைத்திருக்கும் அன்பும் மரியாதையும் வேறு, சின்னம்மாவை அவர்கள் பார்க்கும் விதம் வேறு.

இதே சமயம் ஜெயலலிதாவின் 75 நாள் ஆஸ்பத்திரி வாழ்க்கை பற்றி கடுமையான சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. ஒரு உடல் உபாதையை ஏன் பரம ரகசியமாகவும், நோயாளியை யாரும் பார்த்துபேச முடியாத நிலையிலும் வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? மரணம் எப்படி நிகழ்ந்தது? நடமாடிப் பழகுகிறார், இட்லி சாப்பிட்டார், பேசுகிறார், கையெழுத்து போடுகிறார் என்றெல்லாம் சொல்லப்பட்டதே, அவ்வாறான நோயாளி எப்படி இறந்தார்? என்ற கேள்வியும் பொது மக்களால் கேட்கப்படுகிறது. இதனால் தான் மு. க. ஸ்டாலினும், தொல் திருமாவளவன், ராமதாஸ் போன்றோரும் ஜெயலலிதாவின் ஆஸ்பத்திரி வாழ்க்கைப் பற்றி வெள்ளை அறிக்கை விடப்பட வேண்டும் என்று கோரியிருக்கிறார்கள்.

இது இப்படி இருக்க, ஜெயல லிதாவின் அண்ணன் மகளும் சசிகலாவை எதிர்க்கத் துணிந்திருப்பவருமான தீபா, தன் அத்தை மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், உடற்கூறு பரிசோதனை நடத்தப்படாமலேயே அடக்கம் செய்யப்பட்டதில் சந்தேகம் எழுந்திருப்பதாகவும் தெரிவித்து, உடல் தோண்டி எடுக்கப்பட்டு சட்ட மருத்துவ அதிகாரிகளினால் ஆய்வு செய்ய வேண்டும் என்று நீதிமன்றில் மனுச் செய்திருக்கிறார். இவ்வாரம் இம்மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இங்கே, தமிழக அரசும் சசியும் இம்மனு விசாரிக்கப்படுவதைத் தடுப்பதற்கு எல்லா முயற்சிகளையும் செய்வார்கள் என்பதால், நீதிமன்றம் என்ன முடிவெடுக்கும் என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டிய ஒன்று.

தீபா தந்தி டி.விக்கு அளித்திருக்கும் பேட்டியில், அரசியலுக்கு வரதான் தயாராக இருப்பதாகவே குறிப்பிட்டுள்ளார். சசிகலா தரப்பின் மாய்மாலங்களை வெகு நேர்த்தியான வசனங்களால் அவர் எதிர்கொண்டு முறியடிக்கிறார். நிச்சயம் அவர் தனி ஆள்அல்ல. அவருக்குப் பின் பல சந்ததிகள் நின்று செயல்படுவதை அவதானிக்க முடிகிறது. அவர்கள் யார் என்று தற்போதைக்கு அடையாளம் காண முடியாதுள்ளது. ஆனால் தீபா, ஆர்ப்பாட்டம் செய்யாமல், அழுது வடியாமல் வெகு நேர்த்தியாகவும் ஒரு அரசியல் பின்புலத்துடன் காய் நகர்த்துவதாகவே தெரிகிறது.

முன்னர் ஜானகி ராமச்சந்திரனை எதிர்கொண்ட ஜெயலலிதா அவரை எளிதாக முறியடித்தார்.

இது தீபாவின் காலம். ஆனால் அவர் எதிர்கொண்டிருப்பது ஜானகியைப் போல அப்பாவி அல்ல. சூழ்ச்சிகளின் ராணியை. மூட்டைப் பூச்சியைப் போல தீபாவை நசுக்கலாம் என சசிகலா நினைக்கிறார். கட்சிக்குள் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். ஆனால் மக்கள் மன்றத்துக்கு ஒருநாள் வரத்தானே வேண்டும்! அப்போதுதான் தெரியும் மக்கள் சின்னம்மா பக்கமா அல்லது ஜெயாவின் மறுமகள் தீபா பக்கமா என்பது. 

Comments