![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2017/02/05/06.jpg?itok=PWTXQLSz)
ஜனாதிபதியாக பதவியேற்று ஓரிரு வாரங்களுக்குள், டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் கடும் விமர்சனத்திற்குள்ளாகி உள்ளன.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக கடந்த 20 ஆம் திகதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார். சட்ட விரோதமான குடியேற்றங்களை தடுக்க மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் அமைக்க ஒப்புதல் அளித்தார்.
இதையடுத்து, ஏழு இஸ்லாமிய நாடுகளில் இருந்து மக்கள் அமெரிக்காவுக்குள் வருவதை முற்றிலும் தடை செய்யும் உத்தரவுக்கும் அவர் ஒப்புதல் அளித்துள்ளார். அடிப்படைவாத இஸ்லாமிய தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டை காக்கும் நடவடிக்கையாக இவர் இதனை வர்ணித்துள்ளார்.
ஈரான், ஈராக் உட்பட இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கும் உத்தரவில் அண்மையில் டிரம்ப் கையெழுத்திட்டார்.
இந்த உத்தரவால் அகதிகள் மட்டுமின்றி அமெரிக்காவில் பல ஆண்டுகளாக வசித்து வருவோரும் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். வெளிநாடு சென்றுவிட்டு மீண்டும் அமெரிக்கா திரும்பிய தடை விதிக்கப்பட்டுள்ள 7 நாடுகளை சேர்ந்தவர்கள், விமான நிலையத்தில் சிறைபிடிக்கப்பட்டனர். அவர்களை திருப்பி அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நியூயோர்க் உட்பட விமான நிலையங்களில் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்லாமியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் பதாகைகளையும் அவர்கள் ஏந்தி இருந்தனர். இதனிடையே விமான நிலையத்தில் பிடித்து வைத்துள்ளவர்களை திருப்பி அனுப்ப கூடாது என்று நியூயோர்க்கை சேர்ந்த நீதிபதி ஒருவர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
டிரம்ப்பின் இந்த நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த ஐ.நா.வும் அகதிகளை வரவேற்கும் அமெரிக்காவின் நீண்ட பாரம்பரியம் தொடர வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் சர்ச்சைகுரிய 'குடியேறிகள் தடை' உத்தரவால், அகதிகள் விரக்தியில் உள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதைத் தொடர்ந்து, பல நாடுகளின் தலைவர்கள் அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தனர். அந்த வகையில் அவுஸ்திரேலிய பிரதமர், மால்கம் டர்ன்புல்லிடம் டிரம்ப் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது அவுஸ்திரேலியாவிடம் தஞ்சம் புகுந்த சிரியா உட்பட மேற்காசிய நாட்டு அகதிகளில் 1,250 பேரை அமெரிக்காவுக்கு அனுப்புவது பற்றிப் பேசியதாக தெரிகிறது.
மேலும் அகதிகளை ஏற்பது குறித்து விளக்கம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்குப் பதிலளித்த டிரம்ப் அகதிகளை ஏற்பது இன்னொரு பொஸ்டன் குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளை நாட்டுக்குள் அனுமதிப்பதற்குச் சமம் என்று ஆவேசமாக கூறியதாகத் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து ஆவேசமாக சில நிமிடங்கள் பேசிய டிரம்ப், 25-வது நிமிடத்தில் தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார். இதனால் அவுஸ்திரேலிய பிரதமர் அதிர்ச்சியில் உறைந்து போனார் என வாஷிங்டன் போஸ்ட் இதழ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்ட புதிய உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சான்பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கூகுள் இணை நிறுவனரும், ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் தலைவருமான செர்ஜி ப்ரின் கலந்து கொண்டுள்ளார்.
ஈராக், ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், யெமன் மற்றும் சிரியா உள்ளிட்ட ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சில தினங்களுக்கு முன் கையெழுத்திட்டார்.
உலகின் பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களின் அலுவலகங்கள் இயங்கி வரும் சிலிகான் வலியில் அமெரிக்க ஜனாதிபதியின் புதிய உத்தரவிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏற்கனவே கூகுள், ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட், ஆப்பிள் என பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றன.
சிலிகான் வலி மட்டுமில்லாமல் அமெரிக்கா முழுக்க இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு கிளம்பியிருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில் டிரம்ப்பின் நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில் கூகுள் இணை நிறுவனரும் கலந்து கொண்டார்.
தானும் ஓர் அகதி தான் என செர்ஜி ப்ரின் தனது ட்விட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார். 1979 ஆம் ஆண்டு தனது குடும்பம் சோவியத் யூனியனில் இருந்து அமெரிக்காவிற்கு குடியேறியது. தனது குடும்பத்தாரும் அகதிகள் என்பதால் தனிப்பட்ட முறையில் இப்போராட்டத்தில் கலந்து கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் மதத்தின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க வகை செய்யும் சட்டத்தினைக் கொண்டுவரவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
மெக்ஸிகோ எல்லையில் சுவர், அகதிகள், முஸ்லிம் பயணிகளுக்கு தடை என அடுத்தடுத்து சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் டிரம்ப், ‘மதச் சுதந்திரம்’ என்ற பெயரில் புதிய மசோதாவை வரையறுத்துள்ளார்.
அமெரிக்காவில் மத அமைப்புகள், மதம் சார்ந்த அறக்கட்டளைகள், தேவாலயங்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில மத அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று இந்தத் தடையை நீக்க டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
இது குறித்து அண்மையில் உரையாற்றிய டிரம்ப், அமெரிக்காவில் மதச் சுதந்திரம், உரிமை பறிக்கப்பட்டுள்ளது. அந்தத் தடை விரைவில் நீக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக புதிய சட்டமூலமும் வரையறுக்கப்பட்டுள்ளது அதன் நகல் சில ஊடகங்களில் வெளியாகியுள்ளது.. அதன்படி, மத அமைப்புகள் அரசியல் ஈடுபடலாம். அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கலாம். நிதியுதவி செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிநபர் மற்றும் நிறுவனங்கள் மதத்தின் அடிப்படையில் ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாகவும் மதவாத கொள்கைகள் புகுத்தப்பட்டிருப்பதாகவும் நடுநிலையாளர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர்.
அமெரிக்க பணியாளர்களுக்கு மாற்றாக வெளிநாட்டைச் சேர்ந்த உயர் திறன் பணியாளர்களை நிறுவனங்கள் பணிக்கு அமர்த்துவதை கட்டுப்படுத்த, அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் புதிய சட்ட மூலமொன்று முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை தகவல் தொழில்நுட்ப துறைக்கான பின்னடைவாக இந்திய ஊடகங்கள் விவரித்துள்ளன. இந்திய அரசு இது குறித்து அமெரிக்க நிர்வாகத்திடம் தனது கவலையை தெரிவித்துள்ளது.
எச்-1 பி என்ற ஒரு வகை விசா, திறமைவாய்ந்த வெளிநாட்டினர் குறிப்பாக, தொழில்நுட்ப வல்லுநர்கள் அமெரிக்காவில் பணிபுரிய வழிவகை செய்கிறது.
ஆண்டு தோறும் அமெரிக்காவில் 85,000 எச்-1 பி விசாக்கள் வழங்கப்படுகின்றன, அதற்கு விண்ணப்பிக்க குறைந்த பட்சம் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும், அதில் 20,000 விசாக்கள் பட்ட மேற்படிப்பு படித்தவர்களுக்கு வழங்கப்படும்.
குடியேற்றம் அல்லாத இந்த விசாவின் மூலம், ஒரு நிறுவனம் அமெரிக்கர்களை பணியில் அமர்த்த முடியாத பட்சத்தில் வெளிநாட்டவரை ஆறு வருட காலம் வரை பணியில் அமர்த்திக் கொள்ள முடியும்
எச்-1 பி விசா பெற்றவர்கள், அமெரிக்காவில் நிரந்தர குடியிருப்பிற்கு விண்ணப்பிக்க முடியும் மேலும் அவர்கள் அங்கு சொத்துக்களை வாங்க முடியும். எச்-1 பி விசா திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வரவும் அதில் கட்டுப்பாட்டை அதிகரிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
1989 ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட, எச்-1 பி விசா வைத்திருப்பவர்களின் குறைந்த பட்ச ஊதியமான 60,000 டாலர்களை இரண்டு மடங்குக்கும் மேலாக, அதாவது 130,000 டாலர்களாக அதிகரிக்க அது பரிந்துரை செய்கிறது. விதிவிலக்குகளுக்கு அனுமதி வழங்கப்பட்டாலும் அது அரிதாகவே உள்ளது. முன்மொழியப்பட்ட புதிய சட்ட மூலம், அமெரிக்காவிலிருந்து இயங்காத, விசாக்களின் மூலம் வெளிநாட்டு பணியாட்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களை இலக்கு வைக்கிறது.
எச்-1 பி விசா பணியாளர்களுக்கான குறைந்த ஊதியத்தை இரட்டிப்பாக்குவது எச்-1 பி விசா ஊழியர்களை சார்ந்த நிறுவனங்களுக்கு பொருந்தும் அல்லது எச்-1 பி விசாவில் 15 சதவீதத்திற்கும் அதிகமான அமெரிக்க ஊழியர்களை கொண்ட நிறுவனங்களுக்கும் அது பொருந்தும்.
இது குறிப்பாக இந்திய நிறுவனங்களை இலக்கு வைப்பதாக உள்ளது. தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்கள் கூட்டமைப்பான நாஸ்காம் இது பாரபட்சமானது என விவரித்துள்ளது.
இந்த சட்ட மூலத்தின் நோக்கம் அமெரிக்க பணியாளர்களை பாதுகாப்பது என்றால் அது இதன் மூலம் நிறைவேறாது. எச்-1 பி விசாவை நம்பியிராத நிறுவனங்கள் குறைந்த ஊதியத்தில் திறன் வாய்ந்த பணியாளர்களை பணிக்கு அமர்த்தி அமெரிக்க பணியாளர்களை பாதுகாக்கும் நோக்கத்தை முறியடித்துவிடும் என்பது பலரது கருத்தாக உள்ளது.
எச்-1 பி விசாவின் மூலம் பணியாளர்களை பணியமர்த்தும் அமெரிக்க நிறுவனங்கள் விசா சார்பு நிறுவனங்களிலிருந்து விலக்கப்படும்.
சீனா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் இதனால் பாதிக்கப்படும்,ஆனால் பாதிப்பின் அளவு குறைவாகவே இருக்கும் மேலும் அவர்களுக்கு பிற மாற்று வழிகளும் உண்டு.
அமெரிக்க நிறுவனங்களான கூகுள், டெல், ஹெவ்லெட் - பாக்கர்ட், மைக்ரோசாஃப்ட் மற்றும் ஆப்பிள் மேலும் சேவை நிறுவனங்களான ஐபிஎம் மற்றும் ஆக்ஸன்சர் ஆகியவை இந்தியாவின் தொழில்நுட்ப சந்தையின் பெரும் பகுதியின் மேலாதிக்கம் செலுத்துவதால் இந்த சட்டம் இயற்றப்பட்டால் இந்தியா இதற்கான பதிலடி நடவடிக்கையை எடுக்க முடியும்.