குழந்தைகளை குறிவைக்கும் அமெரிக்க துப்பாக்கிகள்... | தினகரன் வாரமஞ்சரி

குழந்தைகளை குறிவைக்கும் அமெரிக்க துப்பாக்கிகள்...

அமெரிக்க வரலாற்றில் துப்பாக்கி கலாசாரம் என்பது ஒன்றும் புதியதோ, புதினமானதோ அல்ல என்பதும் பிரித்தானியர் ஆட்சி செய்த காலம் தொட்டே துப்பாக்கிப் பாவனை அங்கே சாதாரணமான ஒன்று என்பதும் உலகறிந்த சமாச்சாரம். இதனை மெய்ப்பிக்கும் வெளிப்பாடாக அமெரிக்காவின் பல பாகங்களிலும், மக்கள் மத்தியில் குறிப்பாக மாணவ சமூகத்தினரிடையே  துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அரங்கேறி உலகையே பரபரப்பில் ஆழ்த்தி வருகின்றன.  

இதன் தொடர்ச்சியாகவே கடந்த வாரம் அமெரிக்காவின் TEXAS மாநிலத்தில் உள்ள தனது பள்ளிக்கூடத்தினுள் துப்பாக்கியுடன் புகுந்த 18வயது மாணவன் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தைப் பார்க்க வேண்டும். இக் கொடூர தாக்குதலில் அங்கு கல்வி பயிலும் 19குழந்தைகள் மற்றும் பணியாற்றும் இரண்டு ஆசிரியைகள் உட்பட 21அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டனர். 

கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்காவில் நடந்த மிகப்பெரிய துப்பாக்கிச் சூடு இது என்பதும் கொல்லப்பட்ட அனைத்து குழந்தைகளும் 11வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட மாணவன் வேண்டுமென்றே இந்த இளம் குழந்தைகளை குறிவைத்துள்ளான் எனவும் மக்கள் மத்தியில் குறிப்பாக அந்த குழந்தைகளின் பெற்றோர் மனதில், அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த கொடூரத்தை அவன் அரங்கேற்றி உள்ளான் எனவும் ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் கருத்து வெளியிட்டுள்ளனர், 

அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் இருந்து 2,700கிலோமீட்டர் தொலைவில் உள்ள டெக்சாஸ்(TEXAS) மாநிலத்தின், 600குழந்தைகள் படிக்கும் பள்ளி ஒன்றிலேயே இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. இந்த கொடூரத்தை அரங்கேற்றிய இளஞனான Salvador Ramos என்பவன் துப்பாக்கி பிரயோகத்திற்கு ஒரு நாள் முன் தனது பிறந்தநாளின் போதுதான் இரண்டு துப்பாக்கிகளை வாங்கியுள்ளான் எனவும் வாங்கிய அந்த துப்பாக்கிகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத் தளங்களில் வெளியிட்டி ருந்தான் எனவும் தெரிவிக்கப் படுகிறது.அமெரிக்காவில் இதுபோன்ற படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவது சகஜம் என்பதாலும், ஆயுதங்கள் ஒரு பொருட்டாக மக்களால் பார்க்கப் படுவதில்லை என்பதாலும் இந்தப் படங்கள் எவராலும் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.  

அமெரிக்காவில் 18வயதுக்கு மேற்பட்டவர்களில் 44சதவீதம் பேர் தமது வீடுகளில் துப்பாக்கி வைத்துள்ளனர். அங்கே அன்றாட பொருட்களை மளிகைக் கடைகளில் வாங்குவது போல் அங்குள்ள துப்பாக்கி கடைகளில் துப்பாக்கிகளை வாங்குவது சாதரணமான ஒன்றே. அதனால் தான் இந்த Salvador Ramos இரண்டு துப்பாக்கிகளை எளிதாக வாங்கி தன் வீட்டில் வைத்திருந்து புகைப்படமும் எடுத்து தனதும் நண்பர்கள் சிலரினதும் சமூக வலைத்தளங்களில் பிரசுரித்துவிட்டு, மறுநாள் கடந்த மே 24ம் தேதி அன்று இப்பள்ளிக் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளான். இந்தத் தாக்குதலுக்கு சற்று முன்னர் அவன் தனது பாட்டி ஒருவரையும் சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது.  

அதன்பிறகு அதே துப்பாக்கியுடன் அங்குள்ள, தான் முன்னர் படித்த பள்ளிக்குள் சாதாரணமாக நுழைந்து அங்கே வகுப்பறை ஒன்றில் இருந்த சிறு குழந்தைகளை நோக்கி சரமாரியாக சுட்டதில் 19குழந்தைகள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். இடையில் சிக்கிக் கொண்ட இரண்டு ஆசிரியைகள் பலத்த காயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னர் மரணமானார்கள். மேலும் பல குழந்தைகள் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருகின்றன. 

வகுப்பறையில் இருந்த அமெரி என்ற 10வயது சிறுமி தனது கைத்தொலைபேசியில் அவசர உதவி எண்ணுக்கு அழைத்தபோதும் அவள் எதுவும் பேசுவதற்குள், தாக்குதல் நடத்தியவனின் துப்பாக்கி ரவைகள் அவள் உயிரையும் மாய்த்தது. இது தவிர, தள்ளுப்பாடுகளில் சிக்கி வகுப்பறையில் இருந்து வெளியேற முடியாமல் நான்கு குழந்தைகள் உயிரிழந்தனர். கொல்லப்பட்ட குழந்தைகளில் நால்வர் இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

அமெரிக்கா தன்னை உலகின் பழமையான ஜனநாயக நாடு என்றும், அமைதிக்கான உலகின் பாரம்பரிய தூதர் என்றும் தம்பட்டம் அடிக்கிறது. ஆனால் உலகை காக்கிறேன் என்று கூறும் அந்த வல்லரசில் 18வயதுக்கு மேற்பட்ட எவரும் துப்பாக்கிகளை வாங்கலாம் வைத்திருக்கலாம் என்கின்ற சட்ட நடைமுறையை எந்த அரசாங்கத்தாலோ அல்லது எந்த ஜனாதிபதியாலோ ரத்துசெய்ய முடியவில்லை என்பதுதான் வேதனை நிறைந்த வரலாறு.

கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் தலிபான் தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் அங்குள்ள இராணுவ பொதுப்பள்ளிக்குள் நுழைந்து அங்கே இருந்த. 132குழந்தைகளைக் கொன்றனர். இந்த பயங்கரவாதத் தாக்குதலை அமெரிக்காவின் தற்போதைய சம்பவத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இரண்டுக்கும் அதிக வித்தியாசம் இல்லை என்கிற யதார்த்தத்தை புரிந்துகொள்ள முடியும்.

பாடசாலைகளில் சிறு குழந்தைகள் குறிவைக்கப்பட்ட இந்த இரண்டு தாக்குதல்களின் நோக்கமும் கிட்டத்தட்ட ஒன்றுதான். அதாவது குழந்தைகளைக் கொன்று மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவது என்பதே. 

ஏனைய நாடுகளில் நடக்கும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பில் பெரும் கண்டனங்களை வெளியிட்டு அதற்கெதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் அமெரிக்கா போன்ற நாடுகள் தங்கள் நாட்டில் நடக்கும் இந்த அசிங்கங்கள் தொடர்பில் அடக்கி வாசிப்புகளை மேற்கொள்வதுடன் இது பற்றி பேசப்படும்போது, தாக்கியவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் அல்லது வழிதவறி வந்தவர் என்றும், தவறுதலாக நடாத்தப்பட்ட தாக்குதல் என்றும் செய்திகளை வெளிப்படுத்தி தனது கேவலங்களை மறைக்க முயல்கிறது. . 

கடந்த வார தாக்குதல் தொடர்பில் இதுவரை அமெரிக்க காவல்துறை எந்த ஆழமான விசாரனைகளையும் ஆரம்பிக்க வில்லை என ஆதங்கம் வெளியிடுகின்றனர் National Association for the Education of Young Children என்கிற அங்குள்ள சுயாதீன குழந்தைகள் நல அமைப்பினர். குழந்தைகள் மீதான பெஷாவர் தாக்குதல் போல இந்தத் தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தவில்லை என்கின்ற அமெரிக்க பாதுகாப்பு செயலகத்தின் அறிவிப்பு அமெரிக்காவின் ஏகாதிபத்திய இரட்டை நிலைப்பாட்டைக் வெளிப்படுத்தி நிற்கிறது. 

இந்த நிலையில் காவல்துறையின் துப்பாக்கிப் பிரயோகத்தில் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்ட இந்த கொலைகளை மேற்கொண்ட 18வயது Salvador Ramos ஒரு மனநோயாளி என்று செய்திகள் வெளியாகி உள்ளன. மேல்தட்டு நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்த அவன் வறுமையான தோற்றம் உடையவன் எனவும் அவனது தோற்றமும் அவன் அணியும் ஆடைகள் என்பனவும் அவன் படித்த அதே பள்ளியின் சக மாணவர்களால் கேலி செய்யப்பட்டதாகவும், இதனால் அவன் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் பொலிசார் கூறுகின்றனர். இந்த மன உளைச்சலால் அவன் படிப்பை கைவிட்டு பாடசாலையை விட்டு வெளியேறியதாகவும் தெரிவிக்கப் படுகிறது.

அமெரிக்க அரச நிர்வாகம் பழைய நிகழ்வுகள் போல் இந்த சம்பவத்தையும் திசை திருப்பி அடக்கி வாசிக்க முயல்வது, வெளியாகும் முரண்பட்ட செய்திகள் மூலம் அறியமுடிகிறது.  

கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்காவில் நடந்த மிகப்பெரிய இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு முன்பு 2012-ம் ஆண்டு இதேபோன்ற ஒரு சம்பவம் அமெரிக்காவின் கனெக்டிகட் (Connecticut) மாநிலத்து பள்ளி ஒன்றில் நடந்தது. அப்போது 19வயது இளைஞன் ஒருவன் 20மாணவர்களைக் கொன்றான். 1998ஆம் ஆண்டு மற்றொரு அமெரிக்கப் பாடசாலை ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 5பேர் கொல்லப்பட்டனர். இப்படி இதுபோன்ற கொலைகள் அவ்வப்போது நடந்தாலும் அமெரிக்க அரச நிர்வாகம் இந்த சம்பவங்களை பெரிதாக எடுத்துக் கொள்வதிலை என்பதும் குறிப்பிடத்தக்கது.. 

அமெரிக்காவில் பிரித்தனியர் ஆட்சிக் காலத்தில் பொலிஸ் மற்றும் நிரந்தர பாதுகாப்பு படை இல்லாத காரணத்தால் மக்கள் தங்களையும் தங்கள் குடும்பங்கள், உடமைகளை பாதுகாக்கவும் ஆயுதங்களை வைத்திருக்க அவர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது. இதற்காக 1791ம் ஆண்டு அங்கே இயற்றப்பட்ட சட்டம், குடிமக்கள் ஆயுதங்களை வைத்திருக்க அனுமதித்தது. இந்த சட்டமூலம் நாட்டின் அரசியல் சட்டத்திலும் சேர்க்கப்பட்டு அந்த அரசியல் அமைப்புச் சட்டம் இன்று வரை மாற்றப்பட முடியாமல் தொடர்கிறது.  

துப்பாக்கி கலாச்சாரம் நாட்டில் அமைதியை நிலைநாட்ட அனுமதிக்காது என்கிற கருத்து சற்று மேலோங்கிய, 19ஆம் நூற்றாண்டில், இந்த அரசியல் சட்டத்தை மாற்ற எடுத்த முயற்சிகள்  அமெரிக்க அரசியலில் செல்வாக்கு செலுத்தும் NRA என அழைக்கப்படும் தேசிய துப்பாக்கி பாவனையாளர்கள் சங்கம் (NATIONAL RIFLE ASSOCIATION) உட்பட்ட பெரும் செல்வந்த முதலாளிகள் சம்மேளத்தினால் முறியடிக்கப்பட்டது. இந்த NRA அமைப்பில் குடியரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியுமான டொனல்ட் ட்ரம்ப் (Donald Trump), TEXAS மாநில செனட்டர் Teal Cruz ஆகியோர் உட்பட பல அரசியல் வாதிகள் முக்கியஸ்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று, சராசரியாகெ அமெரிக்காவில் தினமும் 100பேர் இந்த துப்பாக்கி கலாசாரத்தினால் இறக்கின்றார்கள் என்கிறது புள்ளிவிபரம் ஒன்று.. 

இன்றைய உலகில் அமெரிக்கா, மெக்சிகோ, ஹைட்டி மற்றும் குவாத்தமாலா ஆகிய நான்கு நாடுகளில் மட்டுமே குடிமக்கள் ஆயுதம் வைத்திருக்க முடியும் என்கிற அரசியலமைப்பு உரிமையைப் பெற்றுள்ளனர்.

ஆனாலும் மனித உரிமைகள், உலக அமைதி என்பன பற்றியெல்லாம் உலகிற்கு போதனை செய்யும் அமெரிக்கா, இவற்றின் பெயரில் விருதுகளையும் பட்டங்களையும் சான்றிதழ்களையும் விநியோகிப்பதற்கான சர்வதேச சந்தையை விரித்துள்ள அமெரிக்கா, தனது நாட்டு மக்கள் ஆயுதங்களை வைத்திருக்கவும் அப்பப்போ அதனை பயன்படுத்தவும் முடியும் என்கின்ற அரசியலமைப்பு உரிமையை நீக்க முடியாமல் தவிக்கிறது என்பதுதான் வேடிக்கையான வினோதம்.  

பண்டைய காலத்துச் சூழலுக்கேற்ப இயற்றப்பட்ட, இன்றைய நவீன காலத்துக்கு ஏற்புடையதற்ற பல உளுத்துப்போன சட்ட மூலங்கள் பல நாடுகளில் மாற்றப்பட்டு வரும் சூழலில் இந்த மனிதநேயத்திற்கு சவால் விடும் சட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு முடியாத நிலையில் இருக்கும் ஒரே நாடு என்றால் அது அமெரிக்கா மட்டுமேஇந்த நிலைமை மாறும் வரை இது போன்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அந்த ஏகாதிபத்திய மண்ணில் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கப்போகிறது.   

கோவை நந்தன்

Comments