ஜனாதிபதித் தேர்தல்களுக்கான பரப்புரை ஆரம்பத்தது முதல் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றது வரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சீனா தொடர்பிலான வெளியுறவுக் கொள்கைகள் பல்வேறுபட்ட விமர்சனங்களை எதிர்நோக்கின. குறிப்பாக சீனாவுடனான ட்ரம்பின் போக்கு வெளிப்படையாகவே பல்வேறு எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிட்டது. நாற்பது ஆண்டு காலமாக சீனாவிடனான சுமுகமான உறவு வளர்தெடுக்கப்பட்ட நிலையில் அதற்கு பாதகம் ஏற்படும் வகையில் அவர் செயல்வபடுவதாக அரசியல் அவதானிகள் கண்டனம் தெரிவித்தனர்.
தைவான் நாட்டின் ஜனாதிபதி சாய் இங் வென், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதற்காகத் தனக்குத் தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்ததை ட்ரம்ப் ஏற்றுக்கொண்டதையே சீனா கடுமையாக ஆட்சேபித்தது. தைவான் தனி நாடல்ல, தன்னுடைய நாட்டின் ஒரு அங்கமே என்பதை சீனா மீண்டும் நினைவுபடுத்தியது.
தென் சீனக் கடலின் அடிப் பரப்பில் ட்ரோன் (ஆளில்லா நீர்மூழ்கி உளவு சாதனம்) ஒன்றை சீனக் கடற்படை கடந்த மாதம் கைப்பற்றியது. அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் தேர்வுசெய்யப்பட்ட பிறகு, சீன - அமெரிக்க உறவுகள் புதிய நிலை நோக்கிச் செல்வதை உணர்த்துவதைப் போல, இதையொட்டிய வார்த்தைப் பரிமாற்றங்கள் இருந்தன. இந்த ட்ரோனை அமெரிக்கக் கடற்படை வீரர்கள் தற்செயலாக ஏவினார்களா அல்லது சீனப் பகுதியை உளவு பார்க்கவோ, சீண்டவோ மேற்கொள்ளப்பட்ட முயற்சியா என்று தெரியவில்லை. ஆனால் ட்ரோனைத் திருப்பித் தந்துவிடுவதாக சீனா தெரிவித்தாலும் தன்னுடைய சீன எதிர்ப்பு நிலைப்பாட்டை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக ட்ரம்ப் இதைப் பயன்படுத்திக்கொண்டார். கடலின் அடியில் விழுந்த தங்களது ட்ரோனை சீனா திருடிக்கொண்டுவிட்டது என்று டரம்ப் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.இவையெல்லாம் சீனாவுடன் அமெரிக்கா அதுவரை காலமும் வளர்த்து வைத்திருந்த உறவைக் குலைக்கும் ட்ரம்பின் செயல்களாகவே பார்க்கப்பட்டன.
ஒரே சீனா கொள்கையை சீனா வலியுறுத்துகின்றது. சீனத்தோடு அமெரிக்கா கொண்டுள்ள உறவை மறுபரிசீலனை செய்வேன்” என்று தேர்தல் பிரச்சாரத்தின்போதே சொல்லி வந்தவர் ட்ரம்ப். அவரது பேச்சு தேர்தல் பிரச்சார உத்தியா அல்லது புதிய வெளியுறவுக்கொள்கையின் திசை மாற்றமா என்று அப்போது பலருக்குத் தெரியவில்லை. வணிகம், தென்சீனக் கடல் விவகாரம், வட கொரிய அணுசக்தி அபாயம் உள்ளிட்ட முக்கியமான சர்வதேசப் பிரச்சினைகள் தொடர்பில் அமெரிக்காவுக்குச் சாதகமான சூழலை உருவாக்க விரும்புவதாக ஒரு பேட்டியில் ட்ரம்ப் சொல்லியிருக்கிறார். தைவான் விவகாரத்தைக் கையில் எடுப்பதன் மூலம் சீனாவோடு அவர் புதிய பேரங்களுக்குத் ஆயத்தமாகவதாக குற்றம்சாட்டப்பட்டது.
சீனாவைப் பொறுத்த அளவில் அதன் அடுத்த கட்ட பாய்ச்சலுக்குக் கடல்வழி வணிகம் சார்ந்து நிறையத் திட்டங்களைக் கைவசம் வைத்திருக்கிறது. ஆனால் தென் கிழக்கு சீனக் கடல் பகுதியில் ஜப்பான், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளின் தீவுகள் இருப்பதால், சீனக் கடற்படைக்கு தடையில்லாமல் அங்கு உலவுவது சாத்தியமில்லை. தைவான் விவகாரத்தை மிகவும் உணர்ச்சிபூர்வமாக சீனா எடுத்துக்கொள்வதற்கு இன்னொரு முக்கிய காரணம், தன் கடல் பகுதியில் என்ன செய்ய வேண்டும் என்று பிற நாடுகள் கட்டளையிடுவதைச் சீனா விரும்புவதில்லை என்பதுதான்.
ட்ரம்ப் ஒருவேளை இதே பாணியில் தனது வெளியுறவுக் கொள்கையைக் கொண்டுசென்றால் கடந்த 40 ஆண்டுகளாக அமெரிக்காவும் சீனாவும் உருவாக்கிவந்த உறவுப் பாதையைச் சிக்கலுக்கு உள்ளாக்குவார்.
ஆசியாவில் அது பல மாற்றங்களுக்கு வித்திடும் என்றெல்லாம் விமர்சித்தவர்களை வாயடைக்கச் செய்துள்ளது ட்ரடம்பின அண்மைய சீன ஜனாதிபதியுடனான தொலைபேசி உரையாடல்.
சீன ஜனாதிபதி ஜின்பிங்குடன் சில தினங்களுக்கு முன்னர் தொலைபேசியில் உரையாடிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ‘ஒரே சீனம்’ என்ற சீனக் கொள்கையைத் தான் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.சீனாவை கண்டபடி எதிர்த்து வந்த ட்ரம்ப் திடீரென இப்படி ‘சரண்’ அடைந்ததற்கான காரணங்களை அரசியல் நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.தொலைபேசி உரையாடலில் ‘தைவான் சீனாவிலிருந்து தனிப்பட்டதல்ல’ என்ற கொள்கையை ‘மதிக்கிறோம்’ என்று ட்ரம்ப், ஜின்பிங்கிடம் தெரிவித்துள்ளது சீன ஊடகங்களில் வெற்றிப் பெருமிதங்களுடன் வலம் வந்து கொண்டிருக்கிறது.
வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றில், “ஜின்பிங்கின் கோரிக்கைக்கு இணங்க ஜனாதிபதி ட்ரம்ப் ஒரே சீனம் என்ற கொள்கையை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார், மேலும் ட்ரம்ப் சீனாவுக்கும், ஜின்பிங் அமெரிக்காவுக்கும் வருகை தருவதை இரு தலைவர்களும் வரவேற்றுள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.சீன அயலுறவு அமைச்சக அறிக்கையில், “ஒரே சீனம் என்ற கொள்கைக்கு ட்ரம்ப்பின் ஆதரவையும் கடப்பாட்டையும் ஜனாதிபதி ஜின்பிங் பாராட்டினார். அமெரிக்க -சீன உறவுகளின் அரசியல் அடித்தளம் ஒரே சீனம் என்ற கொள்கைதான்” என்று ட்ரம்ப் சரணாகதியை பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளது.
ட்ரம்ப் அமைச்சரவையில் உள்ள ரெக்ஸ் டில்லர்சன் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் ஆகியோர் சீனாவுடனான உறவுகள் பிரச்சினையானால் விளைவுகள் பற்றி விவரித்திருக்க வாய்ப்பிருக்கிறது.
எவ்வளவு வேகமாக சீனாவை அவர் எதிர்க்கத் தொடங்கினாரோ, அத்தனை வேகமாக அவர் சரணடைந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடியதே.மேலும் இது உடன்பாடான மாற்றமாக இருக்காது, அமெரிக்க மனோநிலையில் அடிநாதமாக இருக்கும் பயன்கருதிய, பயனீட்டுக் கொள்கையினால் ஏற்பட வாய்ப்பிருக்கிறது . இத்தகைய சரண் நடைபெறவில்லையெனில் இருதரப்பினரும் எப்படி பேச்சை தொடங்குவது என்பதிலேயே சிக்கல் ஏற்பட்டிருக்கும் உறவுகளுக்கு இருந்த தடையை இந்த ஆதரவு அகற்றியிருக்கலாம், ஆனால் இருதரப்பு உறவுகள் அர்த்தமுள்ள வகையில் முன்னேற்றமடையும் என்றால் சந்தேகமே. சிவில் யுத்தம் முடிந்த பிறகு 1949-ல் தைவான் தனியாக ஆட்சி அமைத்தது. ஆனால் தைவானின் சுயாட்சியை பெய்ஜிங் ஒத்துக் கொள்ளவில்லை. தைவானை பிரச்சினைக்குரிய பிரதேசமாகவே சீனா கருதுகிறது, தேவைப்பட்டால் ஒருநாள் பலவந்தமாக சீனாவுடன் அதனை மீண்டும் இணைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.தைபேயுடன் அமெரிக்கா தனது உறவுகளை 1979-லேயே முறித்துக் கொண்டாலும் தைவானுக்கு அமெரிக்காதான் ஆயுதங்களை பெருமளவில் வழங்கி வருகிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக ஒரே சீனம் கொள்கையை எதிர்த்து ட்ரம்ப் செய்த ட்வீட்களெல்லாம் அவரது சொந்தக் கருத்துகளே. ஆனால் இப்போது அவர் அமெரிக்க ஜனாதிபதி. எனவே அரசின் பார்வையை அவர் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும். எனவே அவர் ஏற்கெனவே இருக்கும் நிலவரங்களை தொடர்ந்தேயாக வேண்டும் என்பது சில அரசியல் அவதானிகளின் கருத்தாகவுள்ளது.
ட்ரம்பின் இந்த அந்தர்பல்டியை வர்ணிக்கும் சீன சமூகவலைத்தளம், “ட்ரம்ப் கடைசியில் வெளிச்சத்தைக் கண்டுள்ளார். சீனாவுடன் நல்லுறவு பேணுவதால் என்ன கெட்டு விடப்போகிறது?’ என்று சொல்கின்றது. மொத்தத்தில் ஜனாதிபதி ட்ரம்பின் இந்த பின்வாங்கல் சீனா தரப்பில் ஓர் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.