இது சசிகலாவின் அஸ்தமன காலம் | தினகரன் வாரமஞ்சரி

இது சசிகலாவின் அஸ்தமன காலம்

அருள் சத்தியநாதன்  

தமிழ்கத்தில் கொதித்துக் கொண்டிருந்த அரசியல் எரிமலை கொஞ்சம் அடங்கிய மாதிரித் தோன்றினாலும் அடுத்த கட்ட நகர்வுக்காக தி.மு.க.வும், தீபா, பன்னீர் கோஷ்டிகளும் காத்திருப்பதாலேயே ஒரு அமைதி தென்படுவது போலத் தோன்றுகிறது.

தி.மு.க ஒரு மனுவை சென்னை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்திருக்கிறது. தமிழக சட்ட சபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டப்படி செல்லாது என்றும் முறைப்படி அந்த வாக்கெடுப்பு நடைபெறவில்லை என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றிவிட்டு ஆளுங்கட்சி மட்டும் நடத்திய வாக்கெடுப்பு முறைக்கேடானது என்றும் நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்று தி.மு.க.தன் மனுவில் கேட்டிருக்கிறது. இம் மனு நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டு விசாரணை நடைபெறவுள்ளது. அன்றைய சட்டசபை நிகழ்வுகள் தொடர்பான வீடியோ ஆதாரங்களை தி.மு.க சமர்ப்பித்துள்ளது. மேலும், ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட வீடியோ பதிவுகள் சபாநாயகரினால் எடிட் செய்யப்பட்டவை என தி.மு.க தெரிவித்துள்ளதால், எடிட் செய்யப்படாத பதிவை வழங்குமாறு கேட்டிருக்கிறது. தி.மு.க வழக்கறிஞர்களின் கூற்றுப்படி இவ் வழக்கின் தீர்ப்பு தி.மு.க.வுக்கே சாதகமாக அமையும். அவ்வாறானால் மற்றுமொரு நம்பிக்கை வாக்கெடுப்பு நீதிமன்ற கண்காணிப்புடன் நடத்தப்பட வேண்டியிருக்கும்.

இதே சமயம், சபாநாயகரின் தீர்ப்பில் நீதிமன்றம் குறுக்கிடலாமா? சட்ட சபையின் மாண்பு காக்கப்பட வேண்டாமா? என்றெல்லாம் அ.தி.மு.க சசிகலா பிரிவு பிரிச்சனைகளைக் கிளப்புவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

முன்னர் எம்.ஜி.ஆர். காலத்தில் சபாநாயகராக இருந்த பி.எச். பாண்டியன் (இன்று பன்னீர் அணியில்) ஆனந்த விகடனில் வெளியான முன்பக்க நகைச்சுவை படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கேலிச் சித்திரம் சட்ட சபையின் மாண்பைக் குலைப்பதாக இருக்கிறது என்று சொல்லி தீர்ப்பு வழங்கினார்.

இத் தீர்ப்பின் பிரகாரம் ஆனந்த விகடன் ஆசிரியரான பால சுப்பிரமணியம் சட்ட சபைக்கு வந்து மன்னிப்பு கோர வேண்டும். ஆனந்த விகடனையும், ஜெமினி ஸ்டூடியோவையும் ஆரம்பித்த எஸ். வாசனின் மகனே பாலசுப்பிரமணியம். அவர் மன்னிப்பு கோர மறுத்து விட்டார். இதையடுத்து வாசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவ்விவகாரம் முழு இந்தியாவிலும் தீயாகப் பரவ, மொழி பாரபட்சமின்றி சகல பத்திரிகைகளும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்தன.

அப்போது முதல்வராக இருந்தவர் எம்.ஜி.ஆர். அவர் வாசனின் நண்பர் மட்டுமல்ல: பாலசுப்பிரமணியனுக்கு நெருக்கமானவரும் கூட. ஜெமினி எடுத்த படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தும் இருக்கிறார். பால சுப்பிரமணிய விவகாரம் எம்.ஜி.ஆருக்குத் தெரியாது. சிறையில் தள்ளப்பட விஷயத்தை கேள்விப்பட்ட எம்.ஜி.ஆருக்கு அதிர்ச்சி!

உடனடியாக பி.எச். பாண்டியனை அழைத்து கடுமையாகக் கண்டித்து உத்தரவை வாபஸ் பெறுமாறு சொன்னார். மறுத்தால் எம்.ஜி.ஆரின் ஆக்ரோஷத்துக்கு இலக்காக வேண்டியிருக்கும் என்பதோடு தனது அரசியல் வாழ்வும் அஸ்தமித்து விடும் என்பதால் உத்தரவை வாபங் வாங்கி, பால சுப்பிரமணியத்தின் விடுதலைக்கு உத்தரவிட்டார் பி.எச்.பாண்டியன்.

அதன் பின்னர் ஆனந்த விகடன் ஆசிரியர் தமிழக அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து அதில் வெற்றியும் பெற்றார். நஷ்ட ஈடும் தரப்பட்டது. இதையடுத்து நஷ்ட ஈடாக ஆயிரம் ரூபாவுக்கான காசோலையை பெற்ற ஆனந்தவிகடன் ஆசிரியர், தன் அலுவலகத்தில் அந்த காசோலையை பிரேம் பண்ணி தன் இருக்கைக்கு மேலாக மாட்டிவைத்தார். ஆனந்த விகடன் ஆசிரியர் அலுவலகத்தில் இன்றைக்கும் அதைப் பார்க்கலாம். சட்ட சபை அதிகாரமா பத்திரிகை சுதந்திரமே என்ற கேள்வி எழுந்தபோது, பத்திரிகை சுதந்திரமேஎன்ற பதில் வந்தது. அது தான் தனக்குக் கிடைத்த பெரும் வெற்றி எனக் கருதினார் பாலசுப்பிரமணியம்.

இச் சம்பவம் நிகழ்வதற்கு முன் சபாநாயகர் என்ற வகையில் சட்ட சபையில் தான் தோன்றித்தனமாக நடந்த பி.எச். பாண்டியன், தனக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனந்த விகடன் விவகாரத்தின் பின்னர் அவர் அடங்கிப் போனார்.

இதை இங்கே ஞாபகப்படுத்தக் காரணம், நீதிமன்றத் தீர்ப்பு மறுவாக்கெடுப்புக்கு உத்தரவிடுமானால் சபாநாயகர் தன் ‘வானளாவிய’ அதிகாரத்தை பிரயோகிப்பாரா அல்லது மறுவாக்கெடுப்புக்கு செல்வாரா என்பதை கருத்திற் கொண்டுதான். ஹோட்டலில் தங்கியிருந்து குடி கூத்தி என்றிருந்த சட்டசபை உறுப்பினர்கள் எடப்பாடிக்கு வாக்களித்தார்கள். அதன் பின்னர் தத்தமது தொகுதிகளுக்குச் சென்று கள நிலவரங்களை அறிந்து கொண்டார்கள். சசிகலாவை தமிழக வாக்காளர்கள் வெறுக்கிறார்கள்.

சசிகலா பொதுச் செயலாளர் பதவி வகிப்பதை அ.தி.மு.க தொண்டர்கள் ஏற்க மறுக்கிறார்கள். அம்மாவுக்கு அளித்த கௌரவத்தை சின்னம்மாவுக்கு வழங்க அவர்கள் தயாரில்லை.

எனவே வாக்காளர்களினதும் தொண்டர்களினதும் நாடித் துடிப்பை அறிந்து வைத்திருக்கும் சட்டசபை அ.தி.மு.க உறுப்பினர்கள் இன்னொரு நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பன்னீர் செல்வத்துக்கு வாக்களிக்க முன்வரலாம். மேலும், எடப்பாடியும் ஒரு பிணைக்கைதிபோல செயற்பாடுவதையே காணமுடிகிறது.

இது இப்படி இருக்க, சசிகலா பொதுச் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டது அ.தி.மு.க யாப்பின் பிரகாரம் செல்லுபடியாகாது என்ற வழக்கும் நிலுவையில் உள்ளது. இவ்வழக்கை பன்னீர் செல்வம் தரப்பு தாக்கல் செய்துள்ளது. அ.தி.மு.க உறுப்பினர் ஒருவர் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடவும் தேர்வு செய்யப்படவும் வேண்டுமானால் ஐந்து வருட காலம் அவர் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். சசிகலாவுக்கு இத் தகுதி இல்லை. மேலும் பொதுச்செயலாளர் ஒருவர் தொண்டர்களினால் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற ஒரு விதியும் உள்ளது.

இந்த வழக்கைப் பொறுத்தவரை, தீர்ப்பு சசிகலாவுக்கு சாதகமாக வரப்போவதில்லை என்ற கவலை மன்னார்குகடி வட்டாரத்தில் உண்டு. இவ் வழக்கு தொடர்பான நீதிமன்ற நோட்டீசை பொறுப்பெடுத்துக்கொண்ட துணைப் பொதுச் செயலாளர் தினகரன், அதற்கு பதிலளித்திருந்தார். ஆனால் இதை நீதிமன்றம் ஏற்கவில்லை.

சசிகலாவுக்கு அனுப்பப்பட்ட நீதிமன்ற அறிவித்தலுக்கு அவர்தான் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இவ் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்ப்பு பாதகமாக வருவதற்கு முன்னரேயே சசிகலா, பொதுச் செயலாளர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்துவிடுவது கௌரவமானதாக இருக்கும் என்று அ.தி.மு.கவின் ஒரு தரப்பினர் கருதுகின்றனராம்.

அவ்வாறு சசிகலா ராஜிநாம செய்தால் அந்த இடத்துக்கு வரப்போவதுயார் என்ற கேள்வி எழுகிறது அல்லவா? தினகரனுக்கு அந்தத் தகுதி இருக்கிறதா என்ற கேள்வியை ஒரு பக்கம் வைத்துவிட்டுப் பார்த்தாலும், இந்த நியமனத்தை அ.தி.மு.க தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்பதே பெரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.

எனவே, மொத்தத்தில், இது சசிகலாவின் அஸ்தமன காலம் என்று தான் தடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர் பரோலில் வருவதும், விடுதலைப் பெறுவதும் சாத்தியம் இல்லை. ஏனெனில் ஊழல் குற்றச்சாட்டில் உள்ளே தள்ளப்படுபவர்களை கொலைக் குற்றவாளிகளைப் போலவே சட்டம் கருதுவதால் ஏனைய குற்றங்களுக்காக சிறை செல்பவர்களுக்குக் கிடைக்கக்கூடிய சலுகைகளும் வாய்ப்புகளும் ஊழல் குற்றவாளிகளுக்கு கிடைப்பதில்லை.

பெங்களூரு சிறையில் இருந்து தமிழக சிறைக்கு மாற்றும்படி கோரிக்கை எதனையும் முன்வைக்கவில்லை என்று தினகரன் கூறியிருப்பதோடு, மின் விசிறியைத் தவிர வேறு எந்த வசதியும் செய்துதரவில்லை என்று பரப்பன அக்ரஹாரா ஜெயில் சுப்பிரிண்டன் தெரிவித்திருக்கிறார்.

அ.தி.மு.கவுக்கு இரு ஒரு பெரும் இழுக்கு. இருந்த முதல்வரும் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா இன்றைக்கு ஒரு தண்டனைக் குற்றவாளி. அவர் மறைந்தாலும், தண்டப்பணமான நூறு கோடி ரூபாவை செலுத்த வேண்டும்.

செலுத்தத்தவறினால் சொத்துகள் முடக்கப்படும். அவருக்குப் பின் பொதுச் செயலாளரான சசிகலா, பெங்களூரு சிறையில். எளிமையாகச் சொல்வதானால், மக்கள் பணத்தை சூறையாடினார் என்பது தான் அவர் மீதான நிரூபணமான குற்றச்சாட்டு, நிலமை இவ்வளவு கேவலமாக இருக்க, இதை பூசிமெழுக நினைக்கும் சசிகலா ஆதரவு தரப்பு, காந்திஜி, நேரு எல்லாம் சிறை செல்லவிலையா? என்று கேள்வி எழுப்பி சமாளிக்க முயல்கிறது. ஜெயலலிதா மறைந்ததும், அவருக்கு இந்திய மத்திய அரசு ‘பாரத ரத்னா’ கௌரவ விருது வழங்க வேண்டும் என்ற ஒரு வேண்டுகோள் முன்வைக்கப்பட்டதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

அ.தி.மு.க. செயலாளரின் தலைக்கு மேல் இன்னும் சில கத்திகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன.

தி.மு.க.வின் ஸ்டாலின், தி.மு.க ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார், பன்னீர் செல்வம் ஆட்சி அமைத்தாலும் விசாரணை கமிஷன் வைப்பார்கள்.

கடந்த மாதம் ஜெயலலிதாவின் பிறந்த நாளின் போது ‘எம்.ஜி.ஆர், அம்மா தீபா பேரவை’ என்ற கட்சியை தீபா ஆரம்பித்தார். ஜெயலலிதாவின் மரணம் விசாரிக்கப்பட வேண்டும் என தீபாவும் கருதுகிறார். தமிழக மக்களும் உண்மை தெரியவர வேண்டும் என்றே கருதுகிறார்கள். சில வாரங்களுக்கு முன்னர் தீபா மன்ற கூட்டமொன்றில் உரையாற்றிய அபல்லோ மருத்துவமனை பெண் மருத்துவர், ஜெயலலிதா செப்டம்பர் 22ஆம் திகதி மருத்துவ மனைக்கு கொண்டுவரப்பட்ட போது அவர் ஏறக்குறைய இறந்த நிலையிலேயே இருந்தார் என்றும் லண்டனில் இருந்து வந்த ‘விசேட சிகிச்சை நிபுணர்’ பிரேதத்தை நீண்ட நாட்களுக்கு கெடாமல் வைத்திருப்பதற்கான ‘சிகிச்சை’யை செய்வதற்காகவே வரவழைக்கப்பட்டார் என்றும் பேசினார். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆனால் தீபா உத்தியோக பூர்வமாக கட்சியை ஆரம்பித்த மறுதினமே அம் மருத்துவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அபல்லோ மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பெயரிலேயே இக் கைது இடம்பெற்றது.

சசிகலாவின் சதிகளுக்கு அபல்லோ நிர்வாகமும் உடந்தையா? என்ற கேள்வியை மக்கள் மத்தியில் இச்சம்பவம் எழுப்பி இருக்கும். அதே சமயம், சசிகலா குடும்பத்துக்கு அபல்லோவில் பங்குகள் இருப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன.

மேலும், ஜெயலலிதா திட்டமிட்டே கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற ஒரு தகவலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவரைப் பார்க்க முக்கிய பிரமுகர்களுக்கு அனுமதி வழங்கியிருந்தால் அல்லது வெளிப்படைத் தன்மையுடன் ஜெயலலிதா விவகாரத்தில் சசி தரப்பு நடந்து கொண்டிருந்தால் ஊகங்கள் ரெக்கை கட்டிப் பறப்பதைத் தடுத்திருக்கலாம்.

இந்த விவகாரத்தில் அபல்லோ வைத்தியசாலையின் பெயரும் இன்று களங்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா அஞ்சா நெஞ்சம் கொண்ட இரும்பு மனுஷியாக வெளியே தோற்றமளித்தபோதும், போயஸ் கார்டனில் அவர் ஒரு கைதியைப் போலவும், நம்பகமான துணையற்ற நபராகவும், தனிமையிலும், தன் பேச்சுக்கு மதிப்பற்ற நிலையிலுமே வாழ்ந்திருக்கிறார் என்பதையே இவை அனைத்தும் சுட்டுவதாக உள்ளன.

பேரரசர்களும் இப்படி இராணிக்கும் தன் அடிமைக்கும் பயந்தும் கட்டுப்பட்டும் வாழ்ந்திருப்பதாக வரலாற்றில் படித்துள்ளோம். அரசன் சயனித்திருக்கையில் அவரது அடிமையே அவரைக் குத்திக் கொன்றுவிட்டு அரசனாகி இருப்பதை மோகலாய அரச வரலாற்றில் பார்த்திருக்கிறோம்.

ஜெயலலிதா என்ற வெற்றி நாயகியை நினைக்கையில் பரிதாபமாகத்தான் இருக்கிறது. அவர் திருமணம் செய்து குழந்தை குட்டியாக வாழ்ந்திருந்தால், சிலசமயம், இன்னும் அவர் உயிரோடு இருந்திருக்கலாம்.

தன் குடும்பத்தவர் 60க்கு மேல் வாழ்வதில்லை என்று அவர் கூறியிருக்கிறார். அவர் 68வரை வாழ்ந்தார். அதையும் அவர் தாண்டியிருக்கலாம். கூடா நட்புமட்டும் இல்லாதிருந்தால்! 

Comments