![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2017/04/09/32.jpg?itok=a9jZuBft)
விசு கருணாநிதி...
சிரியா மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதல் உலகளாவிய ரீதியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. மீண்டும் ஓர் உலக யுத்தத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வித்திட்டிருக்கிறாரோ! என்ற ஓர் அச்சமும் உலகைக் கௌவியிருக்கிறது.
இதற்கு மத்தியில் அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பல உலக நாடுகள் வரவேற்று கருத்துகளைத் தெரிவித்துள்ளன. சிரியாவும் ரஷ்யாவும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அது மாத்திரமன்றி சிரியா மீது மீண்டும் தாக்குதல் நடத்துவதைத் தடுக்கும் பொருட்டு ரஷ்யா தனது போர்க்கப்பலை மத்திய தரைக் கடற்பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது. இதனால், போர்ப்பதற்றம் உருவாகியிருக்கிறது.
சிரிய அரச படைகள் நடத்திய இரசாயனத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான பொது மக்கள் பலியானதையடுத்து அந்நாட்டின் மீது அமெரிக்கா நேற்று முன்தினம் அதிகாலை அதிரடியாகத் தாக்குதல் நடத்தியுள்ளது.
மத்திய தரைக் கடலில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் போர்க்கப்பலில் இருந்து சிரியாவின் ஹோம்ஸ் நகரில் உள்ள விமானத்தளத்தை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிரியாவின் போர் விமானங்கள் இந்தத் தளத்தில் இருந்தே புறப்பட்டுச் சென்று கான் ஷிக்ேகான் நகரில் இரசாயனத் தாக்குதலை நடத்தியிருந்தன. எனவே, ஹோம்ஸ் நகரிலிருந்து சுமார் 20 மைல் தூரத்தில் உள்ள அந்தத் தளத்தைத் துவம்சம் செய்துவிட்டதாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது.
சிரியாவின் விமானப் படைத்தளம் மீது சுமார் நான்கு நிமிடங்களில் 59 ஏவுகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. "சிரியா மீது தாக்குதல் நடத்தினால், மிகப்பெரிய விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்" என்று ரஷ்யா அறிவித்த ஒருசில மணி நேரங்களில், மத்திய தரைக்கடல் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அமெரிக்கப் போர்க்கப்பல்களில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை, (இலங்கை நேரம் 1.15 அளவில்) சிரியா நேரப்படி 3.45-க்கு ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் மூலம் சிரியாவின் விமானப்படை மற்றும் ஆயுதக் கிடங்கு பாரிய அளவில் பாதிப்படைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இனி, இரசாயனத் தாக்குதல் நடத்த முடியாத அளவுக்கு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவத் தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்தத் தாக்குதலை "மிகப்பெரிய ஆக்கிரமிப்பு" என்று சிரியா தெரிவித்துள்ளது.
'ரொம்ஹோக்' என்ற ஏவுகணைகள் தாக்குதலுக்குப் பயன்படுத்தியமை மிகப்பொருத்தமான தெரிவு என்று சில உலக நாடுகள் அமெரிக்க ஜனாதிபதியைப் பாராட்டியுள்ளன. இந்த ஏவுகணை 18 முதல் 20 மீற்றர் நீளமானவை. சுமார் 1500 மைல்கள் சென்று இலக்குகளைத் தாக்கக்கூடியவை. ஆயிரம் இறாத்தல் வெடி பொருள்களைக்ெகாண்டு ராடாரைத் தவிர்த்துச் சென்று இலக்குகளைத் தாக்கக்கூடியவை. இடைமறித்துத் தாக்கியழிக்க முடியாதவை.
அதன் ஓர் அலகின் பெறுமதி 832,000 அமெரிக்க டொலர். முதன் முதலாக 1991ஆம் ஆண்டு வளைகுடா போரின்போது முன்னெடுக்கப்பட்ட 'பாலைவனப் புயல்' நடவடிக்ைகயில் பயன்படுத்தப்பட்டவை. இந்த ஏவுகணைகளைப் பிரிட்டனும் அமெரிக்காவிடமிருந்து கொள்வனவு செய்திருக்கிறது.
எனினும், அமெரிக்கா தற்போது வீசிய ஏவுகணைகளில் பல இலக்ைக அடையாமல் தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஓர் ஏவுகணையே இலக்ைகத் துல்லியமாகத் தாக்கியிருக்கிறது. இதில் சிரியாவின் சிறிய போர் விமானங்கள் ஒன்பது முற்றாக அழிவடைந்துள்ளதுடன் ஆயுதக்கிடங்குகள், இரண்டு மைல் நீளமான இரண்டு ஓடு பாதைகள் உள்ளிட்டவற்றுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது.
ஆயினும், இரசாயன ஆயுதக் களஞ்சியத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லையெனத் தகவல்கள் கூறுகின்றன. இந்தத் தாக்குதலில் ஆறு படையினரும் ஒன்பது பொது மக்களும் கொல்லப்பட்டதாக சிரியா தெரிவித்துள்ளது. ஆனால், பொதுமக்கள் மீது இலக்கு வைக்கப்படவில்லை என்று பென்டகன் அறிவித்திருக்கிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பிரிட்டன் ஆதரவு தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்தப்படுவது பற்றி அமெரிக்கா பிரிட்டனுக்கு அறிவித்திருந்ததாகவும் ஆனால், தாக்குதலில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜேர்மன், ஜோர்தான், இஸ்ரேல், கனடா, ஜப்பான், அவுஸ்திரேலியா, பிரான்ஸ் முதலான நாடுகளும் வரவேற்றுள்ளன. சிரியாவில் மட்டுமன்றி உலகில் எங்கெல்லாம் பிரச்சினை நிலவுகிறதோ, அங்கெல்லாம் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு தெரிவித்துள்ளார்.
அதேநேரம், தாக்குதல் நடத்தப்படுவதற்குச் சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி ஓர் முட்டாள் என்றும் அவருக்கு ஐஎஸ்ஸைப் பற்றியோ இஸ்லாத்தைப் பற்றியோ எதுவும் தெரியாது என்றும் விமர்சித்திருந்த ஐஎஸ் அமைப்பு, ஏவுகைணத் தாக்குதலை வரவேற்றுள்ளது. மேலும் சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாத் பழிவாங்கும் வகையில் தொடர்ந்து சிவிலியன்களை இலக்கு வைக்கலாம் என்றும் அச்சம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதி ட்ரம்ப் உணர்ச்சிவசப்பட்டு தான்தோன்றித்தனமாக நடவடிக்ைக எடுத்து விட்டார் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜனாதிபதி ட்ரம்ப், "அழகிய பச்சிளம் குழந்தைகள் இரசாயனக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். மனித இனத்துக்கே இது மிகவும் அவமானகரமான சம்பவம். இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
தாக்குதலுக்குப் பிறகு, ''ஏன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது'' என்று விளக்கம் அளித்த டிரம்ப், "கடவுளின் குழந்தைகள் மீது எந்த ஒரு கொடூரத் தாக்குதலும் மேற்கொள்ளப்படக் கூடாது. நாகரிகமானவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஒவ்வொரு நாடும் இந்தத் தாக்குதலில் பங்கெடுத்து, சிரியாவில் இரத்த ஆறு ஓடுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், பயங்கரவாதம் அது எந்த வகையில் இருந்தாலும் சரி, அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்" என்றும் அழைப்புவிடுத்துள்ளார். மேலும், "சிரிய தாக்குதலில் காயம் அடைந்தவர்களுக்காகவும் உயிரிழந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்கிறோம். அமெரிக்கா எப்போதும் நீதியின் பின்னால் நிற்கும். பிரச்சினைக்கு முடிவுகட்டப்பட்டு, அமைதி, நல்லிணக்கம் நிலைநிறுத்தப்படும்" என்றும் தெரிவித்துள்ளார். தந்தை ஒருவர் விஷவாயுத் தாக்குதலுக்குப் பலியான தமது இரண்டு குழந்தைகளுடன் கதறும் காட்சி உலகை உலுக்கியது மட்டுமல்லாது ஜனாதிபதி ட்ரம்பையும் வெகுவாகப்பாதித்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார்.
இவரது இந்தத் திடீர் நடவடிக்ைக குறித்துக் கருத்து தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், 2013ஆம் ஆண்டு சிரியா இரசாயனத் தாக்குதலை மேற்கொண்டபோது, சிரியா மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என அப்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் வேண்டுகோள் விடுத்தவரான ட்ரம்ப், முற்றிலும் தலைகீழான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
ஆதலால், அவரது வௌிநாட்டுக்ெகாள்கை நேரத்திற்கு நேரம் மாற்றம் பெறுமோ? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஜனாதிபதியாகி 77 நாட்களே கடந்துவிட்டுள்ள நிலையில் அவர் இவ்வாறான ஒரு திடீர் நடவடிக்ைகயை எடுத்துள்ளமை, ஐக்கிய நாடுகள் சபையையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. அமெரிக்க பாராளுமன்றத்தின் அனுமதியையும் பெறாமல் அவர் தாக்குதலுக்கு உத்தரவிட்டுள்ளமை அந்நாட்டு அரசியலிலும் சலசலப்பைத் தோற்றுவித்துள்ளது. இதேவேளை, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஏவுகணைத் தாக்குதல் சிரியாவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடாது என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
சிரியாவில் ஆறு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது சிரிய அரச படைகள் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதனால், இலட்சக்கணக்கான மக்கள் சிரியாவைவிட்டு வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்துள்ளனர்.
சிரிய கிளர்ச்சியாளர்கள் பகுதிகளில், தடைவிதிக்கப்பட்ட இரசாயனக் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தப்படுவதாகக் கூறப்பட்டாலும் இதுவரை நடத்தப்பட்ட எந்த ஒரு தாக்குதலுக்கும் சிரியா பொறுப்பேற்கவில்லை. ஆனால், தன்னிடம் எந்த ஒரு இரசாயன ஆயுதமும் இல்லை என்று கூறுகிறது.
இரசாயனக் குண்டுத் தாக்குதல் நடத்துவது போர்க்குற்றம். இருந்தும் மூன்றாவது தடவையாக சிரியா இதனைப் பரீட்சித்திருக்கிறது. உலகக் கண்டனங்களையெல்லாம் பொருட்படுத்தாமல், பொது மக்கள் பலியாகுவதைப்பற்றிக் கவலை கொள்ளாமல், ஐஎஸ் மட்டுமே இலக்கு என்கிறது சிரிய அரசு.
ஏற்கனவே, மோதல்களுக்குள் சிக்குண்டு கிடக்கும் மக்களுக்கு செவ்வாய்க்கிழமை கான் ஷிக்ேகான் நகரில் நடந்தது ஒரு பேரவலம். திடீரெனப் பறந்து வந்த விமானமொன்று குண்டை வீசியதும். மக்கள் நிலத்தில் சரிந்து வீழ்ந்தார்கள். மூச்சுவிட முடியாமல் திணறினார்கள். அநேகருக்குக் கபம் வௌியேறியது. சிறுவர்கள் பரிதாபமாகக் கிடக்கிறார்கள். பெரும்பாலும் ஒரு வகை இரசாயனப் புகைக் குண்டு வீசப்பட்டிருக்கலாம் என்பது ஊகம்! தாக்குதலால் வீழ்ந்தவர்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் அந்த வைத்தியசாலை மீதும் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதல் இடம்பெற்ற பகுதி ஜனாதிபதி பசர் அல் அசாத்துக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள குழுவினரின் கட்டுப்பாட்டுப்பகுதி. அதனை அல்குவைடா இயக்கம் கட்டுப்படுத்தி வைத்திருப்பதாக சிரியா கூறுகிறது. சிரியாவின் உள்நாட்டுப்போர் ஆரம்பமாகி ஏழாண்டை எட்டும் இந்தவேளையில், அண்மைய காலத்தில் இடம்பெறும் மிக மோசமான யுத்தம் இதுவென்பது கவலையளிக்கும் விடயம். ஒரு தரப்பில் ஜனாதிபதி பசர் அல் அசாத்தும் மறுபுறத்தில் அவரை எதிர்த்து நிற்கும் பல்வேறு கிளர்ச்சிக்குழுக்களும் சிரியாவில் அசாத்தின் ஆட்சியைக் கவிழ்க்கும் போராட்டத்தில் இணைந்துள்ளன.
ஆரம்பம் தொட்டு மேலைத்தேய சக்திகளுடன் அல்லாமல் ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளுடன் நெருக்கத்தைப் பேணுபவர் அசாத். அதனால், இந்த யுத்தம் பிராந்தியத்தின் பலசாலி யார் என்பதைவிட வல்லரசுகளுக்கிடையிலான அதிகார யுத்தமாகவும் மாறிவிட்டிருக்கிறது. அத்துடன் அசாத்தின் தரப்பு தற்போது பலமடைந்து வருவதாக அவதானிப்பாளர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில், ரஷ்யா, துருக்கி, ஈரான், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின் தலைமையில் சமாதான முன்னகர்வும் இடம்பெற்று வருகிறது. எனினும் இதில் சம்பந்தப்பட்ட தரப்பினர் பங்குபற்றுவதில்லை எனத் தெரிகிறது.
இதுவரை சிரிய யுத்தத்தில் சுமார் நான்கு இலட்சம்பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் பதினொரு மில்லியன்பேர் இருப்பிடமின்றி நிர்க்கதி நிலைக்குள்ளாகி உள்ளனர். இதில் ஆறு மில்லியன் மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்து அல்லலுறுகின்றனர்.
(16ம் பக்கம் பார்க்க)