![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2017/05/07/w0-0.jpg?itok=NP71_5KQ)
லக்ஷ்மி பரசுராமன்
ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனம் செய்யப்பட்டுள்ள வெசாக் பண்டிகையை அங்குரார்ப்பணம் செய்து வைப்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி எதிர்வரும் 11 ஆம் திகதி வியாழக்கிழமை இலங்கை வரவுள்ளார்.
இந்தியப் பிரதமர் மோடியை இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்கவுள்ளார்.
இவ்வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் மோடி விமான நிலையத்திலிருந்து நேரடியாக கொழும்பு கங்காராம
பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் வெசாக் வலயத்திற்கு வருகை தந்து,அந்நிகழ்வை அங்குரார்ப்பணம் செய்து வைப்பாரென வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரியொருவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.
அன்றைய தினம் இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு விசேட இராப்போசண விருந்தளித்து கெளரவிப்பதற்கும் ஏற்பாடாகியுள்ளது.
இதனையடுத்து மறுநாள் காலை 12 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை பிரதமர் மோடி, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகும் ஐ.நா வெசாக் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு நிகழ்வை அங்குரார்ப்பணம் செய்து வைப்பார். பிரதமர் மோடி அங்கு விசேட உரை நிகழ்த்துவார்.
இந்நிகழ்விற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரும் கலந்து கொள்வர்.
அதனையடுத்து இந்தியப் பிரதமர் மோடி டிக்கோயா செல்லவுள்ளார். அங்கு இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள வைத்தியசாலையை அவர் திறந்து வைப்பார்.
பின்னர் அன்றையதினம் மலையகக் கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளி மக்களின் மாபெரும் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ளார்.
இக்கூட்டத்தையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவை பிரதமர் மோடி தனித்தனியாக சந்திக்கவுள்ளார். இதன்போது இலங்கையில் வாழும் மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடி விரிவாக கேட்டறிவார் என நம்பப்படுகின்றது.
இச்சந்திப்புகளையடுத்து பிரதமர் மோடி அன்றையதினமே கண்டி செல்லவுள்ளார். கண்டி ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடிக்கு மதியபோசண விருந்தளிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்பாடுகளை செய்துள்ளார்.
மதியபோசனத்தைத் தொடர்ந்து கண்டி தலதா மாளிகைக்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்கே மத வழிபாடுகளில் கலந்து கொண்டதன் பின்னர் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை தனித்தனியே சந்தித்து பேசுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.அத்துடன் கண்டியிலுள்ள இந்திய நூதனசாலையில் இந்திய நிதியுதவியுடன் திறந்து வைக்கப்படவுள்ள கண்டிய நடன நிறுவனத்துக்கான பெயர்ப்பலகை பிரதமர் மோடியினால் திரை நீக்கம் செய்து வைக்கப்படும்.
கண்டியிலிருந்து பிரதமர் மோடி, மீண்டும் இந்தியா சென்றடைவதற்காக கட்டுநாயக்கா விமான நிலையம் வந்தடைவார்.
இதேவேளை ஐ.நா வெசாக் பண்டிகையை கண்டி தலதா மாளிகையில் நிறைவு செய்து வைக்கும் முகமாக நேபாளத்தின் ஜனாதிபதி Bidhya Devi Bhandari எதிர்வரும் 13 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.
இவர் 14 ஆம் திகதியன்று கண்டியில் இடம்பெறவுள்ள வெசாக் பண்டிகையில் கலந்து கொள்வார். பின்னர் 15 ஆம் திகதி கொழும்பில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து உரையாடிய பின்னர் மீண்டும் நாடு திரும்புவார்.
ஐ.நா வெசாக் பண்டிகையை சிறப்பிக்கும் வகையில் பல நாடுகளில் இருந்தும் கலாசார அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் குழுவினர் எதிர்வரும் 11ஆம் திகதி முதல் இலங்கை வரவுள்ளனர்.
அதனடிப்படையில் மியன்மார், கம்போடியா, சீஷெல்ஸ் ஆகிய நாடுகளின் கலாசார அமைச்சர்கள் வருகை தரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி கூறினார்.
சீனாவின் பிரதி கலாசார விவகார அமைச்சர், தாய்லாந்தின் பிரதமர் விவகாரத்துக்குப் பொறுப்பான அமைச்சர் லாவோஸ் நாட்டின் பிரதிநிதிகள் குழுவினர் மற்றும் வியட்நாமின் பிரதிநிதிகள் குழுவினர் ஆகியோர் இக்காலப்பகுதியில் இலங்கை வந்து சிறப்பிக்க ஏற்பாடாகியிருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.