![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2017/06/11/w1.jpg?itok=nJlL69Jf)
அருள் சத்தியநாதன்
தமிழக அரசியலில் தற்போது ஏற்பட்டிருக்கும் சூழல், சுதந்திர இந்தியாவில் முன்னொருபோதும் ஏற்பட்டிராத ஒரு நிலையாகவே அரசியல் அவதானிகளால் கணிக்கப்படுகிறது. தமிழக சட்ட மன்றத்தில் 135 தொகுதிகளையும், பாராளுமன்றத்தில் 37 உறுப்பினர்களையும் தன் வசம் வைத்திருக்கும் கட்சியே அ.தி.மு.க. முழு இந்தியாவிலும் மூன்றாவது பெரிய கட்சி எனப் பெயரெடுத்துள்ள கட்சியும் இதுதான்.
எம்.ஜி.ஆரினால் தொடக்கப்பட்ட இக் கட்சி இதற்கு முன்னர் இப்படி ஒரு வாமன அவதாரம் எடுத்ததில்லை. கட்சியின் இந்த வளர்ச்சிக்கு முழுக்காரணமும் ஜெயலலிதா அம்மையாருக்கும் தனி மனிதத் துதியில் ஆழ்ந்து போயுள்ள தமிழக மகாஜனங்களுமே உரித்தானது என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.
எதுவானாலும் அதன் உச்ச பட்ச வளர்ச்சியின் பின்னர் சரிவு ஏற்டவே செய்யும். ஜெயலலிதாவின் மறைவு அச்சரிவை ஏற்படுத்தி இருக்கிறது. ஜெயலலிதாவின் மரணத்தையடுத்து இக்கட்சி துண்டு துண்டாகச் சிதறும் என்பதுதான் பொதுவான எதிர்பார்ப்பாக இருந்தாலும், ஆள்வதற்கு இன்னும் நான்கரை ஆண்டுகள் பாக்கியிருந்ததால் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளாளுக்கு முதுகில் குத்திக்கொண்டாலும் ஆட்சியைக் கவிழ்க்க முற்படவில்லை. ஏனென்றால் இன்றைய திகதிக்கு ஆட்சி கவிழ்ந்து புதிய தேர்தல் வந்தால், பெரும்பாலான அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கோட்டைக்கு செல்லமாட்டார்கள். தமிழக வாக்காளர்கள் மிகுந்த கோபத்துடனும் எரிச்சலுடனும் தான் இந்த அரசியல் நிகழ்வுகளை அவதானித்து வருகிறார்கள்.
இவ்வளவு பெரிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஒரு தண்டிக்கப்பட்ட குற்றவாளி. இன்றைய பொதுச் செயலாளர் தண்டனை அனுபவித்துவரும் குற்றவாளி. துணைப் பொதுச் செயலாளர் அந்நிய செலாவணி மோசடி வழக்கில் தண்டப் பணம் செலுத்த வேண்டியவர் என்பதோடு லஞ்ச வழக்கில் சிக்கி ஒரு மாதம் திஹாரில் கழித்துவிட்டுத் திரும்பியிருப்பவர். இடைத் தேர்தலில் தில்லு முல்லு செய்ததால் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் இடைநிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஒரு கட்சியையும் பொறுப்பாளர்களையும் வேறெங்காவது பார்க்க முடியுமா? இவர்களது இக்குற்றப் பின்னணியை தனது மாநில அரசியல் இலட்சியங்களுக்காப் பயன்படுத்திக் கொள்ள பா.ஜ.க டெல்லி தலைமை பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கலங்கிய குட்டையில் மீன்பிடிப்பதுதானே அரசியல்!
ஆளும் எடப்பாடி அணியானாலும் சரி, எதிர்பார்த்திருக்கும் பன்னீரணியானாலும் சரி இரு பிரிவினருமே இன்று மோடியின் சட்டைச் சபைக்குள் என்பது பகிரங்க இரகசியம்.
மாட்டிறைச்சி விவகாரத்தை எடுத்துக் கொண்டால் அது தொடர்பாக மத்திய அரசு பிறப்பித்திருக்கும் சட்டத்தை மழுங்கடிக்கச் செய்யும் பதில் சட்டத்தை கேரள அரசு பிறப்பித்துள்ளது. ஏனெனில் அங்கே மிகப் பெரும்பாலான கேரளவாசிகள். மாட்டிறைச்சி பிரியர்கள், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பெனர்ஜி மத்திய அரசின் சட்டத்தை நிராகரித்து விட்டார். அச்சட்டத்தை செல்லுபடியற்றதாக்கும் மாற்றுச் சட்டவரைவை விரைவில் வங்க சட்ட சபையில் தாக்கல் செய்யப்போகிறார்கள். திரிபுரா, மணிப்பூர் போன்ற மாநிலங்களும் மாட்டிறைச்சி சட்டத்தை ஏற்க மாட்டோம் எனக் கூறி விட்டன.
ஆனால் மிக முக்கிய மாநிலமான தமிழக அரசோ இது குறித்து வாயே திறக்கவில்லை. அ.தி.மு.கவின் இரு அணிகளைத் தவிர ஏனைய தமிழகக் கட்சிகள் அனைத்துமே தமது எதிர்ப்பை வெளியிட்டு விட்டன. தி.மு.க போராட்டமொன்றையும் நடத்தியது. இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் முதல்வர் எடப்பாடியிடம் கேட்டபோது, மத்திய அரசின் சட்டத்தைத் தான் இன்னும் பார்க்கவில்லை என்றும் முழுமையாய் படித்து பார்த்த பின்னர் கருத்து சொல்வதாகவும் மழுப்பினார். பன்னீர் செல்வம் இல் விவகாரத்தைக் கண்டு கொள்ளவே இல்லை.
தமிழகத்தின் மிகப் பலம் வாய்ந்த கட்சியை தன் சட்டைப் பைக்குள் போட்டு வைத்திருக்கிறார் நரேந்திர மோடி. பன்னீர் செல்வத்தை ஏற்கனவே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்ட மோடி, தினகரன் கைது விவகாரத்தோடு தினகரன் அணியையும் கட்டுக்குள் கொண்டுவந்து விட்டார். இனிமேல் டில்லிபேச்சை இரண்டு அணிகளும் மீறப் போவதில்லை!
இது இப்படி இருக்க, ஜெயிலில் இருந்து பிணையில் வெளியே வந்திருக்கும் துணைப்பொதுச் செயலாளர் தற்போது தன்னைக் கட்சியில் நிலை நிறுத்தும் வேலையில் இறங்கி இருக்கிறார். அவர் டில்லிக்கு விசாரணைக்காகச் செல்வதற்கு முன்னர் எடப்பாடி அணியினர் ஒரு தீர்மானம் எடுத்தனர். சசிகலா குடும்பம் அரசின் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என்பதே அந்தத் தீர்மானம். தினகரனும் அதற்கு ஒத்துக் கொண்டார். நான் அரசு வேலைகளில் தலையிட மாட்டேன் ஒதுங்கிக் கொள்கிறேன் என்று கூறிவிட்டே டெல்லி சென்றார்.
அவர் திரும்பி சென்னை வந்ததும் அவரது ஆதரவாளர்கள் விமான நிலையத்தில் பெரும் வரவேற்பு கொடுத்தனர். அப்போது ஊடகங்களுடன் பேசிய அவர், நான் ஒதுங்கித்தான் இருக்கிறேன் என்றும் கடந்த ஒரு மாத காலத்தில் அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் ஒன்றிணைந்திருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தான் சென்னை வந்ததாகவும் நக்கலாகக் கூறினார். இரு அணிகளும் இணைவதில் தனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்று கூறிய அவர் மறுதினமே பெங்களூர் சிறைக்கு தன் சிந்தியைப் பார்த்து ஆலோசனை பெறச் சென்றார். ஆலோசனைப் பெற்றுத் திரும்பியவர், இரு அணிகளும் ஒன்றிணைய இரண்டு மாதகால அவகாசத்தை சின்னம்மா வழங்கியிருப்பதாகச் சொன்னார்.
அவர் சின்னம்மாவைப் பார்க்கச் சென்றிருந்த சமயம், எடப்பாடி அணியின் முக்கியஸ்தராகத் திகழும் நிதியமைச்சர் விஜயகுமார், தமது அணி சசிகலா குடும்பத்தை சேர்த்துக் கொள்ளப்போவதில்லை என்று ஏற்கனவே எடுக்கப்பட்டத் தீர்மானத்தில் மாற்றமில்லை என்று காட்டமாகவே ஊடகங்களுக்கு தெரிவித்தார். ஆனால் அவரது நண்பரான முதல்வர் எடப்பாடி, விஜயகுமார் குறித்து எதுவுதே பேசவில்லை. இரு அணிகள் இணைவது குறித்து நடக்கும் பேச்சுவார்த்தை, தினகரனின் பங்களிப்பு, மாட்டிறைச்சி விவகாரம், நீட் தேர்வு பற்றிய நிலைப்பாடு, வரட்சி நிவாரணம் என எந்தப் பிரச்சினை பற்றியும் எடப்பாடி எந்தக் கருத்தும் கூறாமல் அரசை நடத்திக் கொண்டிருக்கிறார்.
அடிப்படையில், சசிகலா, குடும்பத்தை அரசியலில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்பதில் இரு அணிகளுமே ஒத்த கருத்து கொண்டவையாக இருக்கின்றன. அதற்கு, ஒரே ஒரு காரணமே காணப்படுகிறது. ஜெயலலிதாவும் சசிகலாவும் கொள்ளைக்காரிகளாக இருந்ததால், ஜெயின் அமைச்சர்கள் முதல் வட்டச் செயலாளர்கள் வரை கமிஷன், ஊழல், கொள்ளை என ஊரைச் சுருட்டி உலையில் போடுபவர்களாகவே இருந்தார்கள். ஜெயலலிதாவுக்கு அவர்கள் காட்டிய அந்த அளவற்ற மரியாரதயும் விசுவாசமும் மிகவும் போலியானவை என்பதை ஜேயே அறிந்து வைத்திருந்தார். இது ஒரு கொள்ளைக் கூட்டத் தலைவனுக்கு அடியாட்கள்காட்டும் மரியாதைக்கு சமமாகும். இந்த ‘விசுவாசம்’. காரியம் பிழைத்தால் தலையை சீவிவிடுவார்கள் என்பதை அடியாள் அறிவான். ஜெயலலிதாவின் அமைச்சர்களும் அதற்குத்தான் பயந்தார்கள்.
ஜெயலலிதாவின் பின்னர் சின்னம்மாவுக்கு அவர்கள் கட்டுப்பாட்டார்கள் என்றால் காரணம் அதேதான். சின்னம்மா அவர்கள் மீதும் கட்சியின் மீதும் ஒரு சர்வாதிகார ரீதியான கட்டுப்பாட்டைச் செலுத்தும் அளவுக்கு அமைச்சர்களினதும் எம்.எல்.ஏ.மார்களினதும் ஊழல்களை ஆதாரபூர்வமாக அறிந்தவராக இருந்தார்.
அதனால் தான் அவரை பொதுச் செயலாளராக ஏற்றதோடு முதல்வராக வருவதற்கு சின்னம்மா ஆசைப்பட்டபோது அதற்கு, பன்னீர்செல்வம் உட்பட, சட்டமன்ற உறுப்பினர்கள் ஏகமானதான ஆதரவை வழங்கினார்கள். மற்றொரு கொள்ளைக்காரி முதல்வராக இருந்தால், ஊரை அடித்து உலையில் போடும் வேலைக்கு தடையே இருக்காது என்பது அவர்களுக்கு புரிந்த கணக்காக இருந்தது.
இதே சமயம் தற்போது இந்த அமைச்சர்களும் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும் ‘மரியாதை’ நிமித்தம் டி.டி.வி தினகரனை சந்தித்து வருகிறார்கள். இதுவரை 32 பேர் அவரை சந்தித்திருக்கிறார்கள். அ.தி.மு.கவில் தினகரன் அணி என்ற மூன்றாவது அணி உருவாகிறதா என்ற சந்தேகத்தை இது எழுப்பி இருக்கிறது. ஆனாலும் முதலில் அமைசசர் பெருமக்களின் மனதில் சசி குடும்பத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டிருக்க வேண்டும்?
காரணம் மக்கள், அதாவது வாக்காளர்கள். அவர்கள் ஜெயலலிதா என்ன செய்தாலும் மன்னிக்கத் தயாராக இருந்தார்கள் ஏனெனில் தனிநபர்த் துதியில் முழு இந்தியாவிலுமே தமிழர்களை விஞ்சுவதற்கு வேறு சமூகமே கிடையாது. சினமாவில் ஒரு நட்சத்திரம் செய்யும் சாகஸங்களை அவரது தனிப்பட்ட வாழ்க்கையுடன் பொருத்தி ஒரு அசகாயசூரன் என்ற பிம்பத்தை வடிவமைத்து, விடாப்பிடியாக தனிநபர் துதி பாடுவதில் தமிழனை விஞ்ச எவருமே இல்லை. இந்த ஒரு பலவீனமே எம்.ஜி.ஆரை அதிகாரத்துக்குக் கொண்டுவந்ததோடு அதே பிம்பத்தை அவருடைய ஆசை நாயகி மீதும் பொருத்திப் பார்க்கச் செய்தது. அதன்பின்னர் அந்தப் பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஜெயலலிதா சில ஆளுமைகளை தன்னில் வளர்த்துக் கொண்டார் என்பது வேறுவிஷயம். இந்த ‘ஜெயமாயை’ அவருக்கு இறுதிவரை உதவியதோடு அவரது ‘லீலை’களை மறைப்பதற்கு உதவவும் செய்தது.
எனினும் ஜெயலலிதா வளர்த்துக் கொண்ட இந்த ஜெயமாயையை சசிகலாவினால் கடனாகவும் பெறமுடியாமற் போனது. ‘தங்கமான எங்கம்மாவை கெடுத்தவரே இந்த சசிகலாதான்’ என்ற அபிப்பிராயம் வாக்காளர்களிடம், குறிப்பாகப் பெண்களிடம், படிந்து போனது. இதை சசிகலாவினால் துடைத்தெறிய முடியவில்லை. இதுதான் இந்த மாயப்பிம்பங்களில் உள்ள வெற்றியும் தோல்வியும், தமிழகத்தில் லஞ்சம், ஊழல் தலை விரித்தாடுவதற்கு அம்மா ஒரு பெருங்காரணம் என்பதை மக்கள் நம்புவதற்கு எப்படி இந்தப் பிம்பம் இடம் தரவில்லையோ அதேபோல சசிகலாமீது உருவான, ‘அம்மாவை கெடுத்தவள்’ என்ற பிம்பத்தையும், ஜெயலலிதா நினைத்திருந்தால் கூட உடைத்தெறிந்திருக்க முடியாது! அதனால்தான் சசிகலாவை நேரடி அரசியலுக்குள் ஜெயலலிதா கொண்டு வரவில்லை என்பதோடு சசி குடும்பத்து உறுப்பினர்கள் பலருக்கு போயஸ் கார்டன் பக்கம் தலைகாட்டுவதற்கும் தடை விதித்திருந்தார்.
அம்மாவின் மறைவின் பின்னர் சசி மீதான மக்களின் வெறுப்பு வெளிப்படையாகவே தெரிந்தது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மீது மக்கள் அபிமானம் திரும்புவதற்கான ஒரே காரணம், சசிகலாவின் மீதான வெறுப்பே தவிர வேறில்லை. ஆனால் இந்த பிம்பம் சார்ந்த வெகுஜன உளவியலை சரியாக எடைபோட்டுப் பயன்படுத்திக் கொள்ள தீபா தவறிவிட்டார். ஜெயலலிதா போல வேஷம் போட்டால் போதும் என அவர் நினைத்தார். கணக்கு தவறானது. பிம்பம் உடைந்தது. தீபா விழுந்தார், எழுந்திருக்கவே முடியாதபடி!
சசிகலா குடும்பத்தை வாக்காளர்கள் வெறுக்கிறார்கள் என்பதால்தான், அக்குடும்பத்தில் இருந்து விலகி நிற்பதாகக் காட்டிக்கொண்டால் தமக்கு ‘புனிதப் பசு’ என்ற பிம்பம் கிடைக்கும் என்பது பன்னீரும் எடப்பாடியும் போடும் கணக்கு. கணக்கு தவறானதாகவே இருக்குமானாலும் அவர்கள் இந்தக் கணக்கைப் போட்டு வாக்காளர்களை நம்பச்செய்யத்தான் வேண்டும்.
ஆனால், மிகவும் செல்வாக்கு கொண்ட அந்தக் கட்சியின் இரு பிரதான பதவிகளிலும் அமர்ந்திருப்பவர்கள் சசிகலாவும், டி.டி.வி தினகரனுமாகவே இருப்பதே இப்போது முளைத்திருக்கும் பிரச்சினையாக உள்ளது. கட்சியின் அதிகாரம் மிக்க பதவி, பொதுச்செயலாளர் பதவி. அடுத்தது துணைப் பொதுச்செயலாளர் பதவி. பன்னீருக்கும் எடப்பாடிக்கும் முதலமைச்சர் பதவிகளை வழங்கியதே சசிகலாதான். யார் யார் அமைச்சர்களாக இருக்க வேண்டும் எனத் தீர்மானித்ததும் அவர்தான். எடப்பாடியை, , கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் கூட நீக்கிவிடக்கூடிய அதிகாரம் படைத்தவராக சசிகலா விளங்குகிறார். பொதுச்செயலாளாராகவும் முதல்வராகவும் பதவி வகித்த ஜெயலலிதா, ஒருவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய உடனேயே ஏனைய அமைச்சர்களுக்கு ஒரு அறிவிப்பு வரும்சம்பந்தப்பட்ட அமைச்சருடன் எந்தத் தொடர்பும் இனி வைத்துக் கொள்ளக்கூடாது என்று. அமைச்சர்களும் சம்பந்தப்பட்டவரின் குடும்ப நிகழ்வுகளிளும் கலந்துகொள்ள மாட்டார்கள். இவ்வாறான ஒரு இராணுவ கட்டுக்கோப்புடன் தன் கட்சியை வைத்திருந்தவர் ஜெயலலிதா.
எனவே எடப்பாடி அணி வெளியே காட்டிக்கொள்வதுபோல சசியையும் தினகரனையும் அவர்களால் உதாசீனம் செய்ய முடியாது. சசிகலா சிறை செல்லாமல் வெளியே இருந்திருந்தால் இந்தப் பிரச்சினைகள் எதுவுதே எழுந்திருக்காது. பன்னீரை முட்டைப் பூச்சியைப் போல நசுக்கியிருப்பார். மோடி அரசின் பக்க பலம் இருப்பதால்தான் பன்னீர் சசிகலாவை எதிர்ந்து வெளியேறினார் என்பது கவனிக்கத்தக்கது ஆனால்,
மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதும் அவர்களது தீர்ப்பு எவ்வாறிருக்கும் என்பதும் முற்றிலும் வேறானது. தேர்தல் வந்தால் தான் அவர்கள் தீர்ப்பு சொல்வார்கள். ஆனால் ஊடகங்கள் மேற்கொண்ட மதிப்பீடுகளின் பிரகாரம், தி.மு.கவுக்கு ஏறுமுகமும் அ.தி.மு.கவுக்கு இறங்கு தசையுமே காணப்படுவதாக அறிய முடிகிறது. இதை உடனடியாக சரி செய்வதற்கு எடப்பாடியாலோ அல்லது தினகரனினாலோ முடியாது. சசிக்கும் தினகரனுக்கும் குற்றவாளிகள் என்ற பிம்பம் ஏற்பட்டுவிட்டது. எடப்பாடியும் பன்னீரும் பா.ஜ.கவின் கைக்குள் என மக்கள் நினைக்கிறார்கள்.
இலங்கை சிங்கள மக்களின் நாடு என்பது உலக அங்கீகாரம் பெற்ற ஒன்று, இங்கே சிங்களவர்கள்தான் பெரும்பான்மை இனம். இதை எவரும் மறுப்பதில்லை. ஆனாலும் கூட, பக்கத்து இந்தியாவுடன், குறிப்பாகச் சொன்னால் தமிழ் நாட்டுடன், ஒப்பிட்டுப் பார்த்து நாமொரு சிறுபான்மை இனமோ என்றொரு உணர்வு, பரவலாக சிங்கள மக்கள் மத்தியில் காணப்படுகிறது. தமிழர்கள் மீதான சந்தேகம் கூட இந்த சிறுபான்மை உணர்வில் இருந்துதான் வேர்பிடிக்கிறது.
தமிழக மக்களும் இத்தகைய ஒரு உணர்வில்தான் இன்று இருக்கிறார்கள். அ.தி.மு.க தம்மை ஆளுகிறதா அல்லது பா.ஜ.க. ஆள்கிறதா? என்ற சந்தேகம் பலரிடம் உள்ளது. தமிழக அரசியல் பாரம்பரியம், திராவிடம் சார்ந்தது. காமராஜர், பெரியார் அண்ணா, எம்.ஜி.ஆர். கலைஞர் என்ற வழி வந்தது. இன்னொரு புறத்தில் கம்யூனிஸ்ட் ஜீவா, சாதி மறுப்புக்கு எதிராக முதல் குரல் எழுப்பிய அயோத்திதாச பண்டிதர், ரெட்டைமலை சீனிவாசன் முதல் வை.கோ, திருமாவளன் வரை ஒரு சமூக எழுச்சி பாரம்பரியத்தையும் கொண்டதாக தமிழகம் விளங்குகிறது. இத்தகைய பாரம்பரியம் கொண்ட தமிழகத்தில், இறைச்சிக்காக மாடுகளை அறுக்கக் கூடாது என்று சட்டம் கொண்டுவந்தால் அதை வைதீக இந்துக்களே ஏற்க மாட்டார்கள். ஏனெனில் மேலோட்டமாக அது சரி போலப் பட்டாலும் சமூக நீதியின் படி அது தவறு என்பதை அவர்கள் அறிவார்கள். ஆனால் இது பற்றி, ஒரு முக்கியமான புரத உணவு தொடர்பாக, – தமிழக அரசு வாய்திறக்காமல் இருப்பதில் இருந்தே எடப்பாடி அரசின் கையாலாகாத்தனத்தை மக்கள் புரிந்து வைத்திருப்பார்கள். நேருவின் காலத்தி்ல் இருந்தே இந்தி திணிப்பை மூர்க்கமாக எதிர்த்து வந்த மாநிலம் தமிழகம். தமிழர்களைக் கொன்று குவித்த இந்திய சமாதான படையை வரவேற்க மாட்டேன் என்று துணிச்சலுடன் சொன்னவர் கலைஞர் கருணாநிதி. மெட்ராஸ் மாநிலத்துக்கு தமிழ் நாடு என அடையாளம் கொடுத்தவர் அறிஞர் அண்ணா. சமஸ்கிருதத்துக்கு இருந்த செம்மொழி அந்தஸ்தை தமிழுக்கும் வாங்கிக் கொடுத்தவர் கலைஞர். அத்வானிக்கு செலக்டிவ் அம்னீஷியா நோய் (மறதி நோய்) இருப்பதாக துணிச்சல் காட்டியவர் ஜெயலலிதா, அவர் இருக்கும்வரை, மம்தா பெனர்ஜியைப்போல, மோடியுடன் சமரசம் செய்து கொள்ளவே இல்லை.
இந்தப் பாரம்பரியத்துடன் இன்றைய தமிழக அரசை ஒப்பிட்டுப் பார்த்தீர்களானால் இந்த அரசு எவ்வளவு பலவீனமானது என்பது உங்களுக்குப் புரியும்.
பா.ஜ.க உடனடியாக ஒரு சட்ட சபைத் தேர்தல் வருவதை விரும்பவில்லை. அடுத்த நான்காண்டு காலத்தை இந்த பொம்மை அரசுடனும் அதன் பூசல் பிணக்குகளுடனும் முன்நகர்த்திச் சென்று இக்காலப்பகுதியில் தன்னைத் தமிழ் நாட்டில் காலூன்றச் செய்ய வேண்டும் என பா.ஜ.க கணக்கு போடுகிறது. எனினும் உள்ளூராட்சித் தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடத்தப்படுமானால், மக்களின் மனநிலையை ஓரளவுக்கு எடைபோடக் கூடியதாக இருக்கும்.
தி.மு.கவும் இந்த உள்ளூராட்சித் தேர்தலைத்தான் வழிமேல் விழி வைத்துப் பார்த்திருக்கிறது!