![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2017/06/25/w0-1.jpg?itok=n5G-8rxR)
-“All muslims are not terrorist . but ,unfortunately most of the terrorists are muslims “
இது இன்று உலக அளவில் மிகப்பரவலாக உலவவிடப்பட்டுவரும் ஓர் வாசகம்...
சந்தேகத்தின் நிழல் படர எவராலும் ஒருபோதும் இயல்பாக இயங்க முடிவதில்லை . ஆனால், ஒரு தேசத்தில் நிகழக்கூடாத ஏதேனுமோர் துர்சம்பவம் நிகழ்ந்துவிட்டால் அதற்குக் காரணமாக இருப்பவர்களின், இனத்தைச் சேர்ந்தவர்கள், மொழியைப் பேசுபவர்கள், மத்ததை பின்பற்றுபவர்கள் என்பதற்காக ஒன்றுமறியா ஜீவன்கள் உயிர்வதை செய்யப்படுவது, வாழத் தகுதியற்றவர்களாக, நாடற்றவர்களாக, உடமைகள் பறிக்கப்பட்டவர்களாக ஆக்கப்படுவதென்பது நியாயமற்றவொன்றல்லவா? போகின்ற இடமெல்லாம் நம் பின்னந்தலையில் விரலொன்று அழுத்தியபடி நம்மை அச்சுறுத்துவதுபோல சந்தேகத்தின் கண்கள் கவ்விப்பிடிப்பதும், ஏளனப் பார்வை, அலட்சிய அல்லது போலிப் புன்னகை வீசப்படுவது என ஒவ்வொன்றுமே ஒரு தனிமனிதனின் வலியை எவ்வளவுதூரம் அதிகப்படுத்துகிறதென்பது அவனது நிலையில் இருந்து பார்த்தால்தான் புரியும்.
உதாசீனத்தின் வலியென்பதும், அவமானத்தின் அடையாளமாய் இருப்பதும் எத்தனை துயர்மிக்கது என்பது அப்படியாக இருப்பவர்களுக்குத்தான் புரியும். ஏளனப் பார்வைகளுக்கும், சந்தேக வளையத்துக்கும் ஆளாகும் எல்லா மனிதர்களின் மனவலியும் சக மனிதர்களால் உணரப்படவேண்டிய ஒன்றல்லவா? எல்லை தாண்டி வேவு பார்க்கவந்த உளவாளியைப்போலவும், உலகையே குண்டு வைத்து தகர்க்கவந்த தீவிரவாதியைப்போலவும் குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் மீது உருவாகும் சித்திரம் அவர்களை கூனிக் குறுக வைப்பதுடன், பல நேரங்களில் ஆத்திரத்தின் உச்சத்துக்கு கொண்டு செல்லக்கூடியது, இல்லையா? சந்தேகத்தின் சூழலில் நாம் இருக்கவேண்டியதென்பது முதலை வாயில் பிடிபட்ட இறைபோல உள்ளேயும் தள்ளப்படாமல், வெளியேயும் துப்பப்படாமல் உயிரின் வலியை ஒவ்வொரு அணுவும் அனுபவிப்பதுபோல் துயரமானது என்பது இலங்கையில் வாழும் நமக்கு புரியாதவொன்றல்லவே.
சில நிமிட சந்தேகப் பார்வைகளையே நம்மால் சகித்துக்கொள்ள முடியாதபோது, வாழ்கின்ற வாழ்க்கை முழுதும் பிறருடைய சந்தேகக் கணைகளுக்கு இலக்காகி ரத்தம் கசியும் நொடிகளை ஒரு இனமே நகர்த்துவது என்பது கொடுமையானது.
2011 -செப்டம்பர் 11 தாக்குதலுக்குப்பின் பெரும்பான்மையான நாடுகளில் இஸ்லாமியர்கள் இப்படியான நரக வேதனையோடுதான் வாழ வேண்டியிருக்கிறது. இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள்தான், அவர்கள் சதா சர்வகாலமும் குண்டு வைக்கும் திட்டத்துடன்தான் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைப்போன்ற பார்வை, படித்தவர்களிடம்கூட இன்று அப்பட்டமாய் நிலவுகின்றது. இத்தகைய பார்வையானது எவ்வகையிலெல்லாம் கட்டியெழுப்பப்படுகிறது? இதனால் இஸ்லாமியர்கள் அனுபவிக்கும் சிக்கல்கள் எத்தகையவை?
தனி மனிதர்கள், குழுக்கள் ஒரு இழி செயலைச் செய்தால் பெரும்பாலும் அந்த நபர்களை சார்ந்த மதம் வெளியில் தெரிவதில்லை அல்லது பெரிதாக கண்டுகொள்ளப்படுவதில்லை. குறிப்பிட்ட தனிமனிதனின் அல்லது குழுக்களின் செயல் மட்டுமே விமர்சிக்கப்படும் கண்டிக்கப்படும். 2011 செப்டம்பர் நியுயோர்க் இரட்டைக்கோபுர தாக்குதல்வரை அப்படித்தான் இருந்தது. அதன்பின் தீவிரவாதிகள் மீதான பார்வை பெயரை வைத்து மதம் சார்ந்ததாக கண்ணோட்டம் உருவாக்கப்பட்டது. உலக தீவிரவாதத்தில் முஸ்லீம்களை மட்டுமே ஒப்பு நோக்கி அதில் பொருத்தும் மனப்பான்மைக்கு காரணம் என்ன? தீவிரவாதம் இஸ்லாமியர்களின் குலச்சொத்தா என்ன?
*தமிழ் சினிமாவும் இஸ்லாமிய (?!) தீவிரவாதமும்,
தமிழ் சினிமா வரலாற்றில் எப்போதெல்லாம் ஒரு தீவிரவாதியின் கதாபாத்திரத் தேவை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் அந்தக் கதாபாத்திரம் ஒரு அப்துல்லாவாகவோ, அப்துல் ரஹ்மானாகவோ, அல்லது ஒரு இப்ராஹிம் ஷேக் முகமதுவாகவோ தாடி வைத்து குல்லா போட்ட முழுநீள அங்கியணிந்த ஒருவராகத்தான் காட்சியமைப்பு அமைக்கப்படும். காரணம் இஸ்லாமியர்கள்தான் இந்தியாவிற்கு மட்டுமல்ல முழு உலகத்திற்குமேயான பொதுவான தீவிரவாதிகள் என்பது நம் சினிமாத்துறையினரின் தாற்பர்யம். ஆரம்பகாலத்தில் சாம்பிறாணித் தூபம் போடுபவர்களாகவும், தர்காக்களில் மந்திரிப்பவர்களாகவும், பேய் ஓட்டுபவர்களாகவும், கறிக்கடை வைத்திருக்கும் Òபாய்Óகளாகவும் காட்டப்பட்ட இஸ்லாமியர்கள், இன்று தெட்டத் தெளிவாக தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள் என்பதை மறுக்கவியலாது தீவிரவாதிகள் என்றாலே இஸ்லாமியர்கள்தான் என திரைப்படம் எடுப்பது நம் சினிமாக்காரர்களுக்கொன்றும் புதிதல்ல, அர்ஜுன் விஜயகாந்த் என ஆரம்பித்து கமல், விஜய் எனத் தொடரும் இவ்வகையான சினிமாக்கள் மக்கள் மனதில் விதைக்க நினைப்பது எதனை? ஒரு சமுதாயத்தின் இருப்பையே சந்தேகப்படுத்தும் அளவுக்கு திரைப்படங்கள் இன்று அடிக்கடி வெளியிடப்படுவதென்பது எந்த அளவுக்கு உகந்தது? இஸ்லாமியர்கள்தான் இந்தியாவையும் இந்த உலகத்தையும் அழிக்கப் பிறந்தவர்கள் அதனால் (கதாநாயகனால்) அவர்கள் கொல்லப்படவேண்டியவர்கள்தான் என்ற சிந்தனையை மக்கள் மனதில் பரப்புவதன் பின்னணி என்ன?
சினிமா என்பது ஓர் கட்டற்ற ஊடகம். சமூகத்தில் பல்வேறு பரிணாமங்களை ஒரே நேரத்தில் நிகழ்த்தும் ஆற்றல் சினிமாவுக்கு உண்டு. திரையரங்குகளோடு முடிந்துவிடுகிற முடங்கிவிடுகிற மீடியம் அல்ல சினிமா. அந்த வகையில், வானொலி, தொலைகாட்சி, பத்திரிகைகள், இணையதளம், என அனைத்து ஊடகங்களிலும் சினிமாவின் கரங்கள் நீள்கின்றன எனலாம். சினிமா இன்றி மேற்க்கூறிய எதுவுமே இயங்குவதில்லை. எனவே, ஒரு திரைப்படமானது ஒரே ஒருநாள் திரையில் ஓடினால்கூட, இத்திரைப்படத்தின் விடயங்கள் மறு நொடியே மற்ற ஊடகங்கள் அனைத்துக்குமே போய்ச் சேர்ந்துவிடுகிறது. அத்திரைப்படம் முன்வைக்கும் கருத்துக்கள் முழு வீச்சுடன் மக்களை சென்றடைந்துவிடுகிறது.
திரையரங்களுக்கு சென்று பார்க்கவியலாதவர்களுக்கு வீட்டு வரவேற்பறைக்கே தொலைகாட்சி அதைக் கொண்டுவந்து சேர்ந்துவிடுகிறது. உலகத்தின் எந்த மூலையில் இருந்துகொண்டும் இணையத்தின் வழியாக திரைப்படங்களை பார்க்கவும் அடுத்தவரோடு பகிரவும் தொழில்நுட்பம் வழிவகுக்கிறது. ஏன், ஓர் திரைப்படம் வெளிவரும்போது பிறக்காதவர்கள்கூட பின்னாளில் அதனைக் கண்ணுறும் வாய்ப்புக்களை தினமும் திரைப்படங்களை ஒளிபரப்பும் நம் தொலைகாட்சி அலைவரிசைகள் ஏற்படுத்திக் கொடுக்கின்றன. எனவே, இவையெல்லாமுமே சற்று சிந்திக்கக்கூடிய விடயங்கள்தான் போலும், ஏனெனில் ஓர் இனத்தினை வன்முறையாளர்களாக சித்தரிக்கும் திரைப்படங்கள் கருவிலேயே முடக்கப்படவேண்டும் என்ற எண்ணமும் போராட்டங்களும், எதிர்ப்புணர்வுகளும் இதனால்தான் ஏற்படுகின்றனவோ?
ஷாரூக்கானின் my name is khan, பாகிஸ்தானிய திரைப்படமான khuda ke liye போன்ற ஒருசில திரைப்படங்களே இன்றைய இஸ்லாமியர்களின் அடையாளாச் சிக்கல்களை எடுத்துக்கூறும் திரைப்படங்களாக வெளிவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. ஆனால், தமிழில் இத்தகைய முயற்சிகள் ஏதேனும் எடுக்கப்பட்டதாய் தெரியவில்லை!
இஸ்லாமிய நாடுகளில் மட்டும் ஏன் இவ்வளவு பிரச்சினைகள்?
இஸ்லாமிய நாடுகளில் ஏன் அமைதியிருப்பதில்லை எப்போதும் துப்பாக்கி, போர், வெடிகுண்டு, தற்கொலைப்படை தாக்குதல் என வன்முறையும், பதற்றமுமாக வளைகுடா நாடுகள் முழுதும் ஒரு வித ரத்தச்சகதிக்குள் சிக்கிக் கொண்டிருப்பதன் காரணமென்ன? அபரிமிதமான எண்ணெய் வளங்களைக் கொண்டிருந்தாலும் செல்வச் செழிப்பில் திளைத்துக் கொண்டிருக்கின்றன என நாம் நினைத்துக் கொண்டிருந்தாலும் ஏன் இவ்வளவு பிரச்சினைகள்? ஒருபுறம் ISIS தீவிரவாத இயக்கத்தின் தலையிடி, இன்னொருபுறம் காலந்தோறும் இடம்பெற்றுவரும் இஸ்லாமிய நாடுகளுக்கிடையேயான உள்நாட்டு யுத்தங்கள், அவற்றை சாக்காக வைத்து அத்துமீறும் மேற்குலக நாடுகளின் அடாவடி!
இசுலாமியர்கள் என்றாலே வன்முறையாளர்கள், பயங்கரவாதிகள், காட்டுமிராண்டிகள் என்ற தோற்றம், அமெரிக்க மேற்குலக ஊடகங்களால் உலகெங்கும் பரப்புரை செய்யப்பட்டு, இவர்கள் இப்படித்தான் அடித்துக் கொள்வார்கள் என்று அலட்சியமாக, இத்தகைய வன்முறைகள் கண்டும் காணாமல் செல்லும் போக்கிற்கு ஏனைய உலகம் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது. அல்லது எல்லாவற்றிற்கும் அமெரிக்கா தான் காரணம் என்ற ஒரு விவாதமும் முன் வைக்கப்படுகிறது.
அமெரிக்கா, வளைகுடா நாடுகளில் கிடைக்கும் எண்ணெய் வளத்தை அபகரிப்பதன் பின்னணியிலேயே இதெல்லாம் நடக்கின்றன என்றும் பேசப்படுகிறது. இதை மறுப்பதற்கில்லை என்றாலும், இதை அமெரிக்காவுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் இடையேயான போட்டியாக பார்ப்பதில், அழுத்தமான ஒரு தொள்ளாயிரம் ஆண்டுகால வரலாற்றுத் தொடர்ச்சி இருப்பதாக அண்மையில் நானொரு இணையக்கட்டுரையில் வாசித்தறிந்தேன். இந்தப் பழம்பெரும் பகைமையும், பெட்ரோலுக்கான தேவையும், கிறிஸ்தவம் இஸ்லாம் என்ற உலகின் மிகப் பிரதான மதங்களுக்கிடையேயான போட்டியும் விஸ்வரூபமெடுத்து இன்று இஸ்லாம் என்றால் தீவிரவாதம் என்ற கருத்துருவாக்கம் வலுபெற்றுவருகிறது.
2001 செப்டம்பர் 11 ஆம் நாள், உலக வர்த்தக மைய கட்டிடத் தாக்குதல், அமெரிக்காவின் “கெட்ட அரசுகள்” முத்திரைக்கு, “பன்னாட்டு பயங்கரவாத எதிர்ப்பு” என்ற வண்ணம் தீட்டத் துவங்கியது. ”பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற கோலை வைத்துக் கொண்டு மெல்ல மெல்ல ஒவ்வொரு இஸ்லாமிய நாடுகளுக்குள்ளும் தந்திரமாக அமெரிக்கா பிரவேசித்தபின் இஸ்லாமிய நாடுகளுக்குள் பிரச்சினைக்கு பஞ்சமேது?
அமெரிக்காவின் பொருளாதாரத் தேடல்களுக்கு, விரிவாதிக்க நலன்களுக்கு, தொடர்ந்து இசுலாமிய நாடுகள் குறி வைக்கப்படுகின்றன என்பதும், தொடர்ந்து இஸ்லாமிய நாடுகளுக்கிடையேயான தனது போரை, பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்று அறிவித்துக் கொண்டு, மேற்குலக ஊடகங்களை தன் கையில் வைத்திருப்பதன் மூலம், உலக மூளைகளைச் சலவை செய்து, இசுலாமியர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்ற பரப்புரையைத் திட்டமிட்டு அமெரிக்கா செய்துவருகிறது என்பதும் யாருமறியா ரகசியமல்லவே! வளைகுடா பகுதியில் அமைதியைக் கெடுப்பதற்கும், அரபு நாடுகளை ஒன்றிணைய விடாமல் தடுப்பதற்கும், அவர்களின் அருகிலேயே இருந்து கண்காணிப்பதற்கும், தன் கைப்பிள்ளையாக இஸ்ரேல் என்ற அரசை இன்றளவும் நம் பெரியண்ணன் அமெரிக்கா பேணிப்பாதுகாப்பது உலகறிந்தவொன்று. போதாக்குறைக்கு, பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த சவூதி அரேபிய அரசுக்கு உதவுவது போல, நீண்ட காலத்துக்கு சவூதி அரசை தன் கைக்குள் போட்டுக் கொண்டு அதன் மூலம் மற்ற அரபு நாடுகளையும் அடிபணியச் செய்யத் தவறவில்லை நம் கழுகுக் கொடிக்காரர். அரபு நாடுகளுக்கிடையேயான ஒற்றுமையைக் குலைக்கவேண்டும், அவர்கள் என்றுமே ஒன்றுபட்டுவிடக்கூடாது,
அப்பகுதியின் நிலைத் தன்மையை நிரந்தரமாகக் குலைக்க வேண்டும் என்கிற வியூகத்தைத் தானே, மறைமுகமாக தன்னுடைய வெளியுறவுக் கொள்கையாக அமெரிக்க அரசு கொண்டிருக்கிறது? கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இஸ்லாமிய வெறுப்புணர்வும், அவர்களது சமகாலப் பிரச்சினைகள் சிலவும் –
காலங்காலமாக சக மதத்தவர்களது மனதில் கட்டியெழுப்பப்படும் இஸ்லாமிய வெறுப்பு மற்றும் முஸ்லிம்களுக்கும் மேற்கத்தைய அரசுகளுக்கும் இடையில் உள்ள முரண்பாடுகளால் இப்போது ஏற்பட்டிருக்கும் காழ்ப்புணர்வு போன்றனவும் தாண்டி, இன்று தீவிரவாதத்தின் மறுபெயர் இஸ்லாம் என்ற அளவுக்கு இஸ்லாம் மார்க்கத்தின் பெயர் மாசுபடுத்தப்பட்டுள்ளது.
இஸ்லாம் என்றாலே வெட்டுக்குத்து, வெடிகுண்டு என்பதுபோல் அதன் தோற்றம் கறைபடுத்தப்பட்டுள்ளது இஸ்லாம் என்றால் கலவரம், இஸ்லாமியன் என்றால் கலகக்காரன் என்ற அளவில் அமைதியை அடிப்படையாகக்கொண்ட ஓர் மதத்தின் முகம் கோரமாக சிதைக்கப்பட்டுவருவதை ஒப்புக்கொண்டேயாகவேண்டும். நெற்றியில் திருநீறு பூசிய யாரும் இந்து தீவிரவாதி அல்லர் நெஞ்சில் சிலுவை அணிந்த எவரும் கிறிஸ்தவ தீவிரவாதி அல்லர், ஆனால், தொப்பி அணிந்து தாடி வளர்ந்திருந்தால் அவர் முஸ்லீம் தீவிரவாதி என்பதனை நமது தொலைகாட்சி, அச்சு ஊடகங்கள் தீர்மானித்து வைத்திருக்கின்றன.
குறைந்தபட்சம் இஸ்லாமிய பெயர் ஒன்றேபோதும் ஒருவரை தீவிரவாதி என அடையாளப்படுத்த என்பதுபோல நம் இந்திய மற்றும் உலக தொலைத்தொடர்பு ஊடகங்கள் செயற்படுவது சிந்திக்கவேண்டிய ஒன்று. முஸ்லீம்கள் என்றாலே பயங்கரவாதிகள் சந்தேகத்துடன் பார்க்கப்படவேண்டியவர்கள் என்ற அபிப்பிராயம் இன்று மக்களின் பொதுப்புத்தியில் பதியவைக்கப்பட்டுள்ளது போலும். இதனால்தானோ என்னவோ, இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்கா, லண்டன், பிரான்ஸ், பாரீஸ் என எங்கே குண்டு வெடித்தாலும், குண்டு வைத்தவர்கள் இஸ்லாமியதீவிரவாதிகள்தான் என ஊடகங்கள் சட்டென தீர்ப்பெழுதி விடுகின்றன.
இதே சமயம் இன்று பல முஸ்லீம் இயக்கங்களின் அச்சுறுத்தல்கள் எரிச்சலூட்டும் வகையில் அரங்கேறிவருவதென்பது உண்மைதான். ஆனால், சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்படும் இஸ்லாமிய இளைஞர்கள் அத்தனைபேரும் குற்றவாளிகளாகத்தான் இருப்பார்கள் என்பதில்லையே? இஸ்லாமியர் என்ற ஒரே குற்றத்திட்காக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு, பலவருட சிறை வாசத்தின் பின்னர் ஏதோவொரு தருணத்தில் வழக்கிற்கும் அவர்களுக்கும் இடையே எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டாலும், அவர்கள் இழந்தவற்றில் எதையேனும் நம்மால் மீள திரும்பிக்கொடுக்க இயலுமா?
அண்மையில் நம் நாட்டில் திருகோணமலையில் நடைபெற்ற பாலியல் வல்லுறவுச் சம்பவமொன்றில் Òஇஸ்லாமிய காமுகர்கள்Ó என்பதுபோன்ற பல மோசமான வாசகங்களை மதத்துடன் தொடர்புபடுத்தி சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியிடப்படுவதை அவதானித்தேன். உண்மையில் இங்கே நாம் ஓர் விடயம்தனை சிந்திக்கவேண்டும், குற்றம் என்பது யார் செய்தாலும் அது குற்றமே.
அதில் எந்த வகையான மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், ஒருவரது குற்றம் அவரவர் தனிமனித செயலாக மற்றவர்கள் விடயத்தில் கருதப்பட்டு செய்திகள் வெளியிடப்படும்போது, முஸ்லீம்களில் ஒருவனது குற்றத்தை மாத்திரம், அவனது மதத்தோடு தொடர்புபடுத்தி அவனோடு சேர்த்து அவனது மதத்தினையும் இழிவுபடுத்துவது சரியானதுதானா? ஒரு முஸ்லிம் செய்த குற்றத்தை வைத்துக்கொண்டு Òமுஸ்லிம்களே இப்படித்தான்Ó என்று பொதுமைப்படுத்துவதும், ஒரு தமிழர் செய்த குற்றத்தை, ஒரு சிங்களவர் செய்த குற்றத்தை வைத்துக்கொண்டு Òதமிழர்களே இப்படித்தான்Ó, Òசிங்களவர்களே இப்படித்தான்Ó என்று பொதுமைப்படுத்துவதும் ஒருவகையான பார்வைக்குறைபாடுதான் இல்லையா? இவ்வகையான பொதுமைப்படுத்தல் என்பது நல்ல சமூகத்தை உருவாக்கக்கூடியதா? இஸ்லாம் பற்றிய மற்ற இனங்களுக்கிடையேயான புரிதலின்மையினைப் பயன்படுத்தி Òஜிகாத்Ó என்ற பெயரில் இஸ்லாம் அவர்களை தீவிரவாதிகளாக பயிற்றுவித்திருக்கிறது என்றும், என்னதான் இருந்தாலும் முஸ்லீம்கள் எல்லோருமே ஜிகாதிகள் தான் என்றும் மதரஸாக்கள் அனைத்தும் தீவிரவாதத்தை உட்பதிசெய்யும் தளங்கள் எனவும், இஸ்லாம் என்பது வாளோடு வந்த மதம் அது ஈவிரக்கம் அற்றது எனவும் கருத்துருவாக்கம் கட்டவிழ்க்கப்பட்டு அது இன்று ஆழமாக பதிந்துபோவிட்டது என்றால் மறுபதட்கில்லை . இந்த விரோத எண்ணங்களால் இஸ்லாமியர்கள் இழந்துவரும் விடயங்கள் எவையெவை தெரியுமா?
மாநகரங்களில் குடியிருக்க அவர்களுக்கு வாடகை வீடு கிடைப்பதில்லை (இலங்கையிலும்கூட), தகுதி திறமை என்றிருந்தும் முஸ்லீம் என்ற காரணத்திட்காகவே பெரு நிறுவனங்களில் அவர்களுக்கு வேலை கிடைப்பதில் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். உலக அளவில் பொது இடங்களில் இஸ்லாமியர்கள் சந்திக்கும் யதார்த்த பிரச்சினைகள் பல பாஸ்போர்ட் அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், போன்ற அரச அலுவலகங்களில்கூட சந்தேகப்பார்வைகளையும், சில பிரத்தியேக கேள்விகளையும் இவர்கள் சந்திக்கவேண்டியுள்ளது. ஒரு பேரூந்துப் பயணத்தினையோ, ரயில் பயணத்தினையோ இவர்களால் நிம்மதியாக கடந்துவிட இயலுகிறதா? Òஷாரூக்கான்Ó என்கிற இஸ்லாமிய பெயரைக் கொண்டிருப்பதனாலேயே அமெரிக்க விமான நிலையத்தில் நடிகர் ஷாரூக்கான் பல மணி நேரங்களாக விசாரணைக்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்தாராம் ஒருதடவை.
இதே பிரச்சினையை நடிகர் கமல்ஹாசனும் சந்தித்திருப்பதாக நான் ஒருமுறை வாசித்தறிந்தேன். ஆக, உலக அளவில் பிரபலமானவர்களுக்கே இந்தக் கதி என்றால் சாமான்ய இஸ்லாமியர்களின் கதி?
இந்த வெறுப்புணர்வுக்கான அடிப்படை காரணங்கள்
120 கோடி மக்களுக்குமேல் அனுசரிக்கும் ஒரு மதம் மிகவும் பழமையான கொள்கைகளுடனும், சீர்திருத்தங்களை அனுமதிக்காமலும் மிக மிக இறுக்கமான காலத்துக்கொவ்வாத சில சட்டதிட்டங்களை, வாழ்வியல்களை கொண்டதாகவே இன்னும்கூட அனுசரிக்கப்படுவதால் உலகெங்கிலும் மத சச்சரவுகளை கட்டுப்படுத்த இயலாத நிலைக்கு சென்றிருக்கிறது. இதனை ஆராயும் இஸ்லாமியர்களும் இஸ்லாமியர் அல்லாத பலரும் சீர்திருத்தங்களை அறிவித்த வண்ணம் உள்ளனர். ஆனால், அவை நியாயமானதாக இருந்தால்கூட அதனை ஏற்கும் பக்குவம் தீவிர இஸ்லாமியக்கொள்கையுடையவர்களுக் கு இருப்பதில்லை. ஒரு உதாரணதிற்கு மற்றைய மதங்களில் உள்ளவர்கள் தத்தம் மதங்களில் உள்ள குறைபாடுகளை மிகத் தாராளமாக பொதுவெளியில் விமர்சிக்கவோ, அல்லது சீர்திருத்தங்களை மேற்கொள்ளவோ, அல்லது அவற்றை கடைபிடிக்காது வெளியேறவோ தாராளமாய் முடிகிறது. ஆனால், இஸ்லாத்தில் மட்டும் அவர்கள் யாருடைய விமர்சனங்களையும் ஏற்கத் தயாராய் இருப்பதில்லை. சிலரிடத்தில் மாற்றுக்கருத்து இருந்தால்கூட ஏதோ ஓர் அச்சத்திற்காகவே அதனை அவர்கள் முன்மொழிவதுமில்லை. போர் புரிவது மட்டுமே ஜிகாதல்ல. ஆனால் இதன் உற்பொருளை தவறாக புரிந்துகொண்ட பல இஸ்லாமிய இளைஞர்கள் பலவிதமான துயரம்தாரும் நடவடிக்கைகளில் ஆங்காங்கே ஈடுபட்டு வருவதால் பயங்கரவாதத்தோடு மிக இயல்பாகவே இந்த சமூகத்தை இணைத்துப்பார்க்கும் நிலை ஏற்படுவது இன்று தவிர்க்க முடியாதாகி விடுகிறது.
மக்களின் தேவைகள் மிக எளிமையானவை . இஸ்லாமியர்களாக இருந்தாலும் சரி வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி தேவைகள் ஒன்றுதான். ஆனால், இஸ்லாமியர்களுக்கு எழும் பிரச்சினைகள் இந்த தேவைகளை கருத்தில் கொள்ளாமையாகவும் இருக்கிறது எனலாம்.
Òஇஸ்லாமிய இயக்கம் சமூக இயக்கத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளா விட்டால் கால ஓட்டத்தில் அது அழிக்கப்பட்டு விடும்Ó என கலாநிதி Òமுஹம்மத் முக்தார் ஷன்கீதிÓ கூறியுள்ள கருத்தை நான் இவ்விடத்தே குறிப்பிட விரும்புகிறேன். மேலும், தனியொருவரின் அல்லது குழுக்களின் குற்றங்களை ஏன் மதத்தோடு தொடர்புபடுத்துகிறார்கள் என முன்னைய பத்தியில் நான் குறிப்பிட்டேன் அல்லவா? அதற்கு பின்வறுமாறும் ஒரு மாற்றுக்கருத்து இருப்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அதாவது, 'நாங்கள் முஸ்லிம்கள்; நாங்கள் தேசிய இனம்' என்று சொல்லும்போது பெருமைப்படுகின்ற முஸ்லிம்கள், குற்றவாளிகளைச் சுட்டிக்காட்டும்போது எகிறவும் தேவையில்லை என்பது பலரது வாதம்!
Òஜிகாத்Ó என்பதன் இஸ்லாமிய சமய பின்புலம் என்ன? இன்றைய தீவிரவாத போக்குகளில் சமயத்தின் தாக்கம் எத்தகையது? உலகம் முழுவதும் ஏன் Òஇஸ்லாமிய தீவிரவாதம்Ó என்ற சொற்றொடர் நாளுக்குநாள் வலுத்து வருகிறது?
Òஜிகாத்Ó என்பது காபிர்களை கொன்று குவிப்பது இல்லை என்றால் அதற்கு இஸ்லாமிய சமய கண்ணோட்டத்திலேயே வேறு ஏதாவது தத்துவார்த்தமான மறைபொருள் உள்ளதா? இல்லை என்றால் அமைதியை விரும்பும் இஸ்லாமியர்கள் தீவிரவாத சவாலை எதிர்கொள்ள என்ன செய்யப்போகிறார்கள்? சமய உண்மைகளை விளக்குவது என்பதை இஸ்லாம் அனுமதிக்கிறதா? இஸ்லாமிய சமய மரபில் இது நடந்திருக்கிறதா? சமய சீர்திருத்தம் என்பது இஸ்லாமில் நிகழ்வதென்பது சாத்தியமா? அல்லது அப்படியான திருத்தங்கள் Òஇஸ்லாத்தின் இறுதி உண்மைக்கு எதிரானது என்ற பெயரில் கருத்துசுதந்திரம் ஒடுக்கப்படுமா? இஸ்லாமியர்கள் Òகலாசாரக் கைதிகளாக 1400 ஆண்டுகளுக்கு முந்திய கலாசாரத்தையும், அரசியலையும் மாற்றமின்றி சுமந்துகொண்டிருக்கிறார்களா?' என இன்று இஸ்லாம் குறித்த சர்ச்சைகள் சர்வதேச அளவில் நடந்து கொண்டிருக்கின்றன.
எந்த ஒரு மனிதனும் தீவிரவாதியாக பிறப்பதில்லை. மற்ற மனிதர்களின் சுயநல மூளை நயவஞ்சகமாக தீட்டும் திட்டங்களினாலேயே தீவிரவாதிகள் உருவாகுகிறார்கள். மதவாதம், பிரிவினைவாதம், ஜாதியவாதம், ஆகியவற்றைவைத்து பிழைப்பு நடத்துகின்ற மனிதர்கள், வேலை வெட்டி இல்லாது சுற்றித் திரியும் பக்குவப்படாத இளைஞர்களை குறிவைத்து பிடித்து மூளை சலவை செய்து தீவிரவாதிகளாக மாற்றுகின்றார்கள் என்பதே உண்மை. ஓர் இயக்கத்தின் கொள்கைகளால் சித்தாந்தங்களால் கவரப்படுபவர்கள் ஓரிரு நபர்களே. ஆனால், அவர்கள் இயக்கங்களின் மூளையாக திட்டமிடுபவர்களாக செயட்படுவார்களே தவிர களப்பணியாற்றுபவர்கள் குறைவு. களம் இறங்கி செயலாற்றுபவர்களில் 90% இளைஞர்கள் வேலை வெட்டி இல்லாத, அறிவு வளர்ச்சி பெறாத உணர்ச்சிமயமான இளம் கும்பல்கள் என்பதுதான் நம் முகத்தில் அறையும் நிதர்சனம்! இது எல்லா இனங்களுக்கும், எல்லா மதங்களுக்கும் பொதுவானதே, ஆனால், அதை புரிந்துகொள்ளும் மனோபாவம்தான் இன்னுமே நமக்கில்லை.