![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2017/07/02/w0.jpg?itok=URQahk01)
கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ்பல்கலைக்கழகம்
மிக நீண்ட காலமாக சோவியத் யூனியன் தரப்பில் இணைந்திருந்த இந்தியா பனிப்போர் முடிந்த பிற்பாடு அமெரிக்கா பக்கம் சாய ஆரம்பித்துவிட்டது. இந்தியா அமெரிக்கா பக்கம் சாய்ந்ததை விட அமெரிக்கா இந்தியா பக்கம் சாய்ந்துள்ளதே அதிகமெனலாம். காரணம் இந்தியாவின் சந்தை அமெரிக்காவின் பொருட்களுக்கு அவசியமானது. அந்த வகையில் இந்திய பிரதமர் மோடியின் அமெரிக்க விஜயம் உணர்த்தும் அரசியலை தேடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இரண்டு நாள் விஜயமாக அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா - இந்திய நட்புறவைப் பலப்படுத்தியுள்ளார். அமெரிக்கா வாழ் இந்தியப் பிரஜைகளையும் அமெரிக்க முதன்மைச் செயலாளரைச் சந்தித்த போதும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது. இருவரும் சேர்ந்து ஊடகங்களுக்கு முன்தோன்றி பாகிஸ்தானுக்கு எதிராக முன்வைத்த கருத்துக்கள் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தவுள்ளது.
ஏனைய நாடுகளைத் தாக்கும் தீவிர வாத நடவடிக்கைக்கு பாகிஸ்தான் தனது நாட்டில் இடமளிக்காது என்பதை உறுதிபடத் தெரிவிக்க வேண்டும் எனவும், மும்பை பயங்கரவாதத் தாக்குதல், பதான்கோட் தாக்குதல், மற்றும் இந்திய எல்லையை அத்துமீறும் தாக்குதல்களை நடத்தும் தீவிரவாதக் குழுக்களைப் பாகிஸ்தான் நீதியின் முன் நிறுத்த வேண்டும் என இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டாக கோரிக்கை விடுத்தனர்.
இரண்டாவது ட்ரம்ப் இந்திய பிரதமர் அமெரிக்க வருகை பற்றி குறிப்பிடும் போது, அமெரிக்காவுக்கு இந்தியா உண்மையான நண்பன். அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கிடையிலான நட்பு இரு நாடுகளுக்கிடையே பகிர்ந்து கொள்ளப்பட்ட மதிப்புக்களால் கட்டப்பட்டது எனவும், தேர்தல் பிரச்சாரத்தின் போதும் இதைத்தான் கூறினேன். அதாவது நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கபட்டால் இந்தியா என் உண்மையான நண்பனாக இருக்கும் என்றேன் எனக் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய மோடி அமெரிக்காவுக்கு இடையிலான உறவு, வணிகம் உட்பட பல்துறைகளில் மேலும் வலுவடையும் என்றார்.
இரு தலைவர்களும் சந்தித்த போது உரையாடிக்கொண்ட முக்கிய விடயம் பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு துணைபோகக் கூடாது என்பதும் இரு நாட்டுக்குமான வர்த்தகத் தொடர்புகளை அதிகரிக்க வேண்டும் என்பதுமாகும்.
இதில் இந்தியாவின் தரப்பில் மோடியின் பிரதான நோக்கம் பாகிஸ்தானை கட்டார் போன்று தனிமைப்படுத்த வேண்டும் என்பதாகும். அதற்கான உத்திகளை வகுத்து செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தானிலிருந்து எல்லைப்பகுதியிலிருந்து செயல்பட்டு வரும் நெருக்கடிகள் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக மாறிவருகின்றது. குறிப்பாக காஷ்மீர் எல்லையில் பாகிஷ்தான் மட்டுமன்றி சீனப்படைகளும் எல்லையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ளமை இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
இந்தியாவின் கிழக்குப் பகுதியும் மேற்குப் பகுதியும் பாகிஸ்தானை வளர்த்துவிடும் தீவிரவாத அமைப்புக்களின் தாக்குதலாலும், பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கையாலும் அதிக ஆபத்தினை எதிர்நோக்கிவருகிறது. இதனால் பாகிஸ்தானின் உறுதிப்பாடு இராணுவ, பொருளாதார வளர்ச்சி என்பன இந்தியாவைப் பாதிக்கும் விடயமாக உள்ளது.
பாகிஸ்தானின் இராணுவ வளர்ச்சியானது இந்தியாவின் இருப்பினை ஆபத்துக்குள்ளாக்கிவிடுமென இந்தியத் தரப்பு அச்சடைந்தள்ளது. அமெரிக்க – பாகிஸ்தான் உறவினை எப்படியாவது முழுமையாக துண்டிக்க வேண்டுமென இந்தியா கருதுகிறது. அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆயுத தளபாடம் வழங்குவதையோ, யுத்தவிமானங்களை கையளிப்பதையோ, நிதி உதவிகளை வழங்குவதையோ இந்தியா நிராகரிக்கின்றது. இதனைத் தடுப்பதும் கட்டாரை அமெரிக்கா தனிமைப்படுத்த முயற்சிப்பதையும் அனுபவமாகக் கொண்டு பாகிஸ்தானை கையாள இந்தியா ஒரு எத்தனத்தை மேற்கொண்டுள்ளது.
இது தென்னாசிய அரசியலில் ஓர் இலகுவான விடயமாகாது. பாகிஸ்தானின் நட்பு என்பதை விட இந்திய எதிர்ப்பு வாதத்துடன் செயல்படும் தென்னாசிய நாடுகள் பாகிஸ்தான் மீதான நடவடிக்கையை ஒரு போதும் அனுமதிக்காத நிலையே ஏற்படும்.
பாகிஸ்தானுக்கும் சீனாவுக்குமான உறவானது மிக உயர்ந்ததாக உள்ளது. அணுவாயுதப் பரிசோதனையிலிருந்து குவாடர் துறைமுகம் அமைப்பதற்கான நிதி உதவி வரை சீனா பாகிஸ்தானுடன் நெருக்கமடைந்துள்ளது. கொரகொராம் உயர்பாதை ஏறக்குறைய 1300 கி.மீ நீளமுடைய சீன பாகிஸ்தான் வர்த்தகப் பாதையாக உள்ளது. இதனூடாக இரு நாட்டுக்குமான வர்த்தக உறவு மட்டுமன்றி மேற்காசியாவில் கொள்வனவு செய்யும் எண்ணெய்யினை பாகிஸ்தானூடாக பரிமாற்றிக் கொள்வதிலும் சீனா – பாகிஸ்தானுடன் நெருக்கடைந்துள்ளது.
எனவே பிரதமர் மோடி அமெரிக்காவிலிருந்து பாகிஸ்தானை எச்சரிப்தென்பது அமெரிக்க – பாகிஸ்தான் உறவினைப் பாதிப்பதாகும். மறுபக்கத்தில் பாகிஸ்தானுக்கு எதிர்த்து அதிக வளர்ச்சியை எட்ட வேண்டுமென இந்தியா கருதுகிறது. பாகிஸ்தானின் அணுவாயுதத் தொழில்நுட்பம் தீவிரவாதத்திடம் சென்றுவிட்டால், அதனால் ஏற்படும் பாதிப்பு இந்தியாவுக்கானது என்பதையே இந்தியா கருதுகிறது. மேலும் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நிகழ்ந்து வரும் இரு தரப்பு இராணுவத்தின் தாக்குதல்களும் இந்தியாவுக்கு அதிகமான பாதிப்பினை ஏற்படுத்திவருகிறது. இதனால் எதிர் காலத்தில் ஒரு யுத்தத்திற்கு போக வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதனை எப்படி எதிர்கொள்வதென இந்தியத் தரப்பு கருதுகிறது. அவ்வகை யுத்தம் சாத்தியப்படாமல் இருப்பதற்கு இந்திய – அமெரிக்க நட்பு உதவக்கூடியதாக அமையும். அவ்வாறே யுத்தம் ஒன்று ஏற்பட்டால் அமெரிக்காவுடனான இராணுவ உறவை பாகிஸ்தான் முற்றாக இழக்க வைப்பதும் இந்தியத்தரப்பினை பலப்படுத்துவதும் பிரதமர் மோடியின் விஜயத்திற்கு பின்னுள்ள தந்திரங்களாகும்.
பாரதீய ஜனதாக் கட்சியைப் பொறுத்தவரை தீவிர வலது சாரிக் கொள்கையையும் இந்துமதத்தினை இறுக்கமாகக் கொண்டது. பாரதீய ஜனதாக் கட்சியின் ஆட்சிக்காலம் முழுவதும் அதன் பொருளாதார -இராணுவக் கொள்கை முழுமையாக அமெரிக்கா சார்புத் தன்மை கொண்டதாக அமைந்திருந்தது. இதனால் காங்கிரஸின் ஆரம்ப காலக் கொள்கையிலிருந்த போக்கினை காங்கிரஸ் மாற்றிக் கொண்டதென்பது ஏறக்குறைய பாரதீய ஜனதாவின் கொள்கைக்கு அமைவாக செயல்பட்டதெனாலாம். புதிய உலக ஒழுங்கு உருவான பிற்பாடு உலகிலுள்ள எந்த அரசியல் கட்சியும் சமூக பொருளாதார - இராணுவ அரசியல் தளத்தில் ஒரே கொள்கையைப் பின்பற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அதனால் இந்தியாவும் அத்தகைய நிலைக்குள் தன்னை இணைத்துக் கொண்டது.
இந்தியாவின் பொருளாதார செழிப்புக்குப் பின்னால் வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) மிகப் பிரதான காரணியாக உள்ளது. இதற்குக் காரணம் இந்தியாவின் சந்தையை நோக்கிய உற்பத்திக்கான குவிவாகும். வர்த்தகமும் சந்தையுமே இன்றைய அரசியல் உலக பொருளாதாரம். இதனை சரிவரக் கையாளும் அரசியல் தலைமை இந்தியாவுக்குக் கிடைக்கும் போது அல்லது உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டுக்குக் கிடைக்கும் போது அந்த நாட்டின் பொருளாதாரம் செழிப்படையும். இதில் இந்திய முதல் நிலையைப் பேணக்கூடிய சந்தையைக் கொண்டிருப்பது அதன் வேகம் சீனாவை விட அதிகமாக காணப்படுவதற்கு காரணமாகும்.
ஆனால், இந்தியாவின் சமூக கட்டமைப்பும். அரசியல் உறுதிப்பாடும் சீனாவுக்கு நிகரானதாக இல்லை. ஒரு நாட்டின் வல்லரசுக் கனவானது பொருளாதாரச் செழிப்பினால் மட்டுமே சாத்தியப்படாது. அதன் இராணுவம், சமூகம், அரசியல் என்பனவும் சமதளத்தில் பலமடையவேண்டும். இந்திய சமூகம் சார் கொள்கைகள் சரிவரப் பின்பற்றப்படாமையும், சிதைவடையும் சமூக கட்டமைப்பும் இந்தியாவை முதல் தர நாடாக்க அனுமதிக்காது. அதில் அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகள் தெளிவும் உறுதியும் கொண்டுள்ளன. இதனாலும் இந்தியாவை வளர்ச்சியடைய உதவுவது போல் செயல்படுகின்றன. இதன் மூலம் தமது உற்பத்திகளின் குவியும் சந்தையாக இந்தியாவைப் பார்க்கின்றது.
இந்திய - அமெரிக்க நட்பில் ட்ரம்ப் அதிகமாக உரையாட விரும்புவதற்கு பின்னால் வர்த்தகமே முக்கியமாகும். இந்தியாவே உண்மையான நண்பன் என ரஷ்யா கூறுமாயின் அதனை காய்தல் உவர்த்தல் இன்றி ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அமெரிக்காவைக் கூறுவதென்பது இந்தியாவுக்கும் உலகத்திற்கும் பூச்சுற்றுவதற்குச் சமமானது.
ஜனாதிபதி ட்ரம்ப்பைப் பொறுத்தவரை அவர் ஒரு பாரிய உற்பத்திகளையும், சந்தைவாய்ப்புக்களையும் நன்கு பயன்படுத்திக் கொண்ட வாத்தகர். அமெரிக்காவின் பிரதான வர்த்தகக் கூட்டாளி இந்தியா தான் என்பதை வரிந்து கொண்டவர் ட்ரம்ப். அதனால் இந்தியாவுடனான நட்பினை உண்மையானது எனக் கூறுகின்றார்.
2016, 2017 நடப்பு மாதம் வரையான பொருளாதார வளர்ச்சியில் சீனாவை விட இந்தியா முன்னிலை வகிக்கின்றது. அமெரிக்காவிடம் தெளிவான அரசியல் திட்டம் நகர்கிறது. அது சீன - இந்திய முறுகலும் பின்னரான மோதலுமாகும். அதனை அடைவதற்காக இந்தியாவை நெருக்கமாக வைத்துக்கொள்ள விரும்புகிறது. இதனால் இன்னொரு இலாபம் அமெரிக்காவுக்கு உண்டு. அதாவது இந்தியாவின் இராணுவ வளர்ச்சியை பக்கமிருந்து கண்காணித்துக் கொண்டிருப்பதாகும். ஏறக்குறைய 2050 அல்லது 2080 ஆண்டுகளில் இந்தியா உலகத்தில் பெருவல்லரசாகும் என்ற மதிப்பீட்டை உடைப்பதே அமெரிக்க நெருக்கத்திற்கான இன்னோர் காரணமாகும். இதனையே தடம் இரண்டு (TRACKII)) இராஜதந்திரம் என்பார்கள்.
அமெரிக்கா தரப்பின் இந்தியா பற்றிய பார்வை தூரநோக்குடையது. இந்தியாவைப் பொறுத்தவரை அமெரிக்காவின் எல்லை தென்னாசியாவுக்கு அப்பால் என்பது மட்டுமே ஆசியாவின் இதரபகுதிக்குள் இரண்டு தரப்பும் கூட்டாகப் பயணிக்கின்றன. குறிப்பாக தென்னாசியப் பிராந்தியத்தில் நிகழும் அனைத்திலும் அமெரிக்க -இந்தியக் கூட்டு நிலவுகிறது. மேற்காசியாவில் சற்று இந்தியா நிதானித்தாலும் அமெரிக்காவை நிராகரிக்கவில்லை. அவ்வாறே ஏனைய ஆசிய பகுதிகுயிலும் இந்தியா நடந்து கொள்கிறது. ஆசிய – பசுபிக் பிராந்தியத்தில் இந்திய – அமெரிக்க கூட்டு வலுவானதாகவே அமைந்துள்ளது. அதுமட்டுமன்றி இந்தியாவின் நிலைப்பாடானது சீனாவின் பிறிக்ஸ் (BRICS) ஆசிய உட்கட்டமைப்பு வங்கி (AID) மற்றும் ஒரே சுற்று ஒரே பாதை என்கின்ற அம்சங்களுக்குள் அதிக செல்வாக்கு பெறவும் தவிர்க்கவும் ஒரே சந்தர்ப்பத்தில் இந்தியா கொண்டு இயங்குகின்றது.
எனவே பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் பிராந்திய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் அதிகமான எதிர்பார்க்கையைத் தந்துள்ளது. இந்தியாவின் பிரசன்னம் அமெரிக்க பக்கம் இருப்பது சீனாவின் சர்வதேச மட்ட வலுவை பாதிப்படையச் செய்யவுள்ளது. பாகிஸ்தானை இலக்கு வைப்பதென்பது சீனாவையும் நெருக்கடிக்குள்ளாக்கும். மீண்டுமொரு யுத்தத்திற்கு இந்தியா தயாராகின்றதா பாகிஸ்தானுடன் என்ற கேள்வி எழுந்துள்ளது.