![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2017/08/14/w0.jpg?itok=5gNoH-td)
கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்
ஊழல் உலகத்தை ஆதிக்கம் செய்யும் அம்சமாக மேலெழுந்துவிட்டது. அதனைக் கட்டுப்படுத்த சட்ட நடைமுறை போதாது என்பதுடன் அரசியலை தோற்கடிக்கும் ஒரு இலகுவான வழிமுறை ஊழலாகிவிட்டது. பொருளாதாரம் செழிப்படைந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது மிக மோசமான நிலையில் பின்தங்கிய நாடுகளில் ஊழல் மலிந்துள்ளது. இவ்வாரம் பாகிஸ்தான் பிரதமர் நவாப் ஷரீப்க்கு ஏற்பட்ட பனாமா ஊழல் நெருக்கடியை நோக்குவோம்.
பனாமா ஊழல் நெருக்கடியானது பாகிஸ்தானின் ஆட்சி அதிகாரத்திலிருந்து பிரதமரை அகற்றிவிட்டது. உலகில் மிகப் பிரதான புள்ளிகளாக அரசியல் வாதிகளும் ஏனைய அரச உயர் அதிகாரிகளும் பனாமாவிலுள்ள போலி நிறுவனங்களை பயன்படுத்தி முதலீடுகளை செய்வது தொடர்பான தகவல் கசிந்ததன் விளைவாக எழுந்ததே பனாமா ஊழல் விவகாரம். இதில் நவாப் ஷரீப்ன் குடும்ப உறுப்பினர்கள் இலண்டனில் அத்தகைய போலி நிறுவனங்களைப் பயன்படுத்தி சொத்து சேர்த்தமையே சர்சை ஏற்படக்காரணம். அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி அத்தகைய சொத்துக்களை வாங்குவதற்கு பிரதமர் நவாப் ஷரீப் உடந்தையாக இருந்துள்ளார் எனவும் பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் குற்றத்தை நிறுவியுள்ளது.
பாகிஸ்தானின் நீதித்துறை சுதந்திரமானது, பக்கச்சார்பற்றது என்பது கவனிக்கத் தக்கது. குறிப்பாக தென்னாசிய நாடுகளிலேயே பாகிஸ்தான் நீதித்துறை ஒப்பீட்டளவில் வலிமையானது. ஊழலுக்கு பின்னாலுள்ள வலிமையான காரணங்களை பாகிஸ்தான் நாட்டில் மட்டுமல்ல ஏனைய தென்னாசிய நாடுகளிலும் இனங்காண முடியும். ஏனைய அம்சங்களைப் போன்று இந்தியாவும் பாகிஸ்தானும் ஊழலில் முதன்மை வகிக்கும் அரசியல் வாதிகளை கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் ஊழலுக்கான பிரதான காரணங்களை தேடுவது சிறப்பானதாக அமையும்.
அரசியல் உயர்குழாத்தினருக்குரியது என்ற கருத்து நிலையை குடியேற்றவாத கால ஆட்சியாளர்கள் முதன்மைப்படுத்தினர். அவர்களின் உயர்குழாம் என்பது ஆசிய நாடுகளில் வளர்ந்திருந்த சாதி, மத, சொத்து வல்லமையுடன் ஆங்கிலக் கல்வியையும் இணைந்த ஒரு பிரிவினரை அடையாளப்படுத்தியது. பாகிஸ்தானைப் பொறுத்தவரை 1947 க்கு முன்பு இஸ்லாம் - இந்து என்ற அடையாளம் சார் போராட்டத்தை குடியேற்றகால பிரித்தானிய அரசு ஊக்குவித்ததனால் வலிமையான காரணியாக மதம் முதன்மை வகித்தது. ஆனால் சுதந்திர பாகிஸ்தான் ஷியா, சுன்னிப் பிரிவுகளை முதன்மைப்படுத்தி செயல்பட முனைந்த போதும் மீண்டும் இந்தியாவின் இந்துமத எதிர்ப்புவாதம் மதம் சார் எழுச்சிக்கும் மோதலுக்கும் காரணமாக அமைந்தது.
பாகிஸ்தானியரின் அரசியல் என்பது இந்திய எதிர்ப்புவாதத்தில் கட்டப்பட்டது என்பது தவிர்க்க முடியாததாகும். இதில் மிதவாதம், இராணுவவாதம் என்ற வேறுபாடின்றி இந்திய எதிர்ப்புவாதத்திற்கு எதிராக முறியடிப்பு ஆட்சியை பாகிஸ்தானியர் அங்கீகரித்தனர். குடியேற்றவாதம் சுதந்திரத்திற்கு பின்பும் அத்தகைய அம்சங்களை நிராகரிக்கவில்லை மேற்குலகம் இந்தியா – பாகிஸ்தான் என்னவகை ஆட்சி நிகழ்ந்தாலும் பரவாயில்லை இரண்டு நாடுகளும் மோதிக்கொண்டிருப்பது இலாபமெனக் கருதியது. அதனை பயன்படுத்திய இராணுவ ஆட்சியாளரும் மிதவாத தலைமைகளின் எழுச்சியை கட்டுப்படுத்திக் கொண்டு எழுச்சி பெற்றனர். அத்தகைய இராணுவ அரசுகளுடன் மேற்குலக நாடுகள் உறவு வைத்துக் கொண்டன. இராணுவ ஆயுத உடன்பாடுகளில் கைச்சாத்திட்டன.
இராணுவவாதம் புரிந்த அனைத்து மேட்டுகுடிகளும் மேற்குலகம் துணைபோனது. அதனைக்கட்டுப்படுத்தும் எந்த உத்தியையும் கைக்கொள்ளவில்லை. இதனால் மிதவாத தலைமைகளும் அத்தகைய ஊழலை மேற்கொள்வதில் எந்த விதமான அசௌகரியமாக கருதவில்லை. மாறாக மேட்டுக்குடி அரசியல் இராணுவவாதத்தினால் தகர்ந்து போக புதிய மத்தியதர வர்க்கம் அரசியலை கைப்பற்ற முனைந்தது. அதனிடம் பொருளாதாரம் சார் பலவீனம், ஆளுமைக்குறைபாடும், புலமைசார் வல்லமையின்மையும் காணப்பட்டது. அதனால் ஆட்சியை சரியாக கையாளும் தகைமை இல்லாத நிலை எப்படியாவது பொருளாதாரத்தை அடைவது சாத்தியமான வழிமுறை என கருதியது. தனது சுய இருப்புக்கு பொருளாதாரம் அவசியமானதென அத்தகைய மத்தியதர வர்க்கம் கருதியதே ஊழல் மேலெழுவதற்கான அடிப்படையாகும். இதற்கு வழிகாட்டியாக மேட்டுக்குடியின் அரசியல் காணப்பட்டது என்பதை நிராகரித்துவிட முடியாது.
மேட்டுக்குடி அரசியலின் விதேசியப் போக்கும் மத்தியதர, கீழ்நிலை வர்க்கம் மேலெழுவதற்கு வழிவகுத்தது. அத்தகைய மேலெழுகை அரசியல் அதிகாரத்திற்கு உட்படும் போது தெளிவற்ற இராஜதந்திரமில்லாத அயல் நாடுகளுக்கும் உலகத்திற்கும் கட்டுப்பட வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது. இது பாகிஸ்தானுக்கு மட்டுமுரியதல்ல. முழு ஆசிய நாடுகளிலும் நிகழ்ந்துவருகிறது.
தேசியம் பற்றிய எந்த பிரக்ஞையுமில்லாத மேட்டுக்குடியும், தேசியத்தை உதட்டில் பேசிக்கொண்ட மத்தியதர வர்க்கத்தின் எழுச்சியும் ஊழலை முதன்மைப்படுத்தியது. நாடு தேசம் என்ற நோக்கன்றி செயல்ப்படும் அரசியல் தலைமைகள் மக்களை ஏமாற்ற விளைவது புதியதல்ல.
பாகிஸ்தானின் இஸ்தாபகர் ஜின்னாவிடம் உள்ள பிரதான குறைபாடாக கூறப்படுவது அவரால் பாகிஸ்தானுக்கென உடனடியான அரசியலமைப்பு ஒன்று வரையாமையாகும். அதன் பிரதிபலிப்பே ஜனநாயகம் மறு இராணுவ ஆட்சிக்கு துணைபோனது. அயூப் கான், யஷியாக் கான், ஷியா உல்-ஹக், முஷாரப், போன்றவர்களின் எழுச்சி இலகுவானது. அலி பூட்டோவின் அரசியல் பிரவேசம் மித வாத அரசியலுக்கு சாதகமான விளைவைத் தந்தாலும் அவரது ஆட்சியில் நிலவிய இந்திய தொடர்பான போக்கு ஷியா உல் ஹக்ன் எழுச்சிக்கு காரணமாக அமைந்தது.
பாகிஸ்தானின் இராணுவ ஆட்சியானது ஊழலை அங்கீகரித்தது ஊழலுக்கு எதிரான குற்றச்சாட்டில் அகப்பட்ட இராணுவ ஆட்சியாளராக முஷாராப் மட்டுமே காணப்பட்டார். அப்படியான நிலையினை மிதவாதிகளும் சாதகமானதாக எடுத்துக்கொண்டனர்.
அரசியலுக்கு வருவதே ஊழலை செய்வதற்காகவே என்ற எண்ணத்துடன் அரசியல் ஆசியா முழுவதும் பரவலடைந்து வருகிறது. நாவப் ஷரிப் ஆரம்ப கால ஆட்சியிலும் எதிர்க்கட்சிகள் இத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்தனர். ஆனால் ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. பனாமா கசிவு மட்டும் சாத்தியப்படாது விட்டால் நவாப் ஷரீப் ஒரு ஊழல் வாதியாக இனங்காண முடியாக நிலை ஏற்பட்டிருக்கும். அத்தகைய போக்கு ஆசிய அரசியல் வாதிகளுக்குள்ளே காணப்படும் இயல்பாகவே கொள்ள முடியும்.
அப்படி நோக்கினால் நிறைய அரசியல் வாதிகள் ஊழல்வாதிகளாகவே உள்ளனர் என்பது தெளிவாகும். அவர்கள் பற்றிய ஆதாரங்கள் வெளிவராதவரை கௌரவமான அரசியல் வாதிகளாக கணிக்கப்படுவார்கள். ஆதாரங்களை வெளியே கொண்டு வருவதில் “விக்கிலிக்ஸ்” போல் ஊடகங்கள் செயல்பட்டால் பனாமா கசிவு போன்று பல கசிவுகள் அரசியல் வாதிகளின் முகத்தினை அடையாளம் காட்டும். அதற்கான காத்திருப்பு சாதாரண பொதுமக்களது விருப்பமாவுள்ளது. ஊடகங்களும் அவற்றின் பணிகளும் கூட ஊழலால் கட்டுப்படுத்த முடியுமென்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புக்களும், கட்டற்ற தீவிரவாத அமைப்புக்களும், ஆயுதக் கலாசாரமும் முஸ்லீம்களின் தோற்றப்பாட்டை அடியோடு தகர்த்துள்ளது. இஸ்லாத்தின் போதனைகற்ற முஸ்லீம்களின் எழுச்சி பாகிஸ்தானில் ஊழல் நிலைக்கு வித்திட்டுள்ளது. உண்மையான இஸ்லாமியன் தேசத்தையும் மக்களையுமே நேசிப்பவனாவான். திருகுரானின் போதனைகள் மிகச் சிறந்த வாழ்க்கை முறைமையாகும். அந்த வரைபுக்குள் இல்லாத சூழலே இன்றைய பாகிஸ்தானின் இருப்பில் எழுந்துள்ள நெருக்கடியாகும்.
பாகிஸ்தானின் நீதித்துறை எப்படி பலமானதோ அவ்வாறே கட்சி அரசியலும். அத்தகைய அரசியலுக்குள்ளேயே நவாப் ஷரீப்ன் பதவி நீக்கமும் அரசியல் மாற்றத்திற்கும் காரணமாக அமைந்தது. இந்திய எதிர்ப்பு வாதத்தினால் காட்டப்பட்ட அரசியலின் விளைவுகளை பாகிஸ்தானியர் மிக நீண்ட காலமாக அனுபவித்து வருகின்றனர். அது இருபத்தியோறாம் நூற்றாண்டிலும் தொடரள்ளது துயரமானதுதான்.