தொழில் நுட்பத்தின் மூலம் கோலோச்சும் - "ஹுவாவே" எனும் சக்கரவர்த்தி | தினகரன் வாரமஞ்சரி

தொழில் நுட்பத்தின் மூலம் கோலோச்சும் - "ஹுவாவே" எனும் சக்கரவர்த்தி

ஹூவாவே பெய்ஜிங் கண்காட்சி நிலையத்தின் வெளிப்புறத் தோற்றம்

சதீஷ் கிருஷ்ணபிள்ளை...

இலங்கை ஊடகவியலாளர்களின் சீன விஜயத்தில் சில முக்கியமான நிறுவனங்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இவற்றில் முக்கியமானதொரு தொழில்நுட்ப நிறுவனம் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

பெய்ஜிங் நகரிலுள்ள ஹுவாவே சர்வதேச காட்சியறை. அங்கு செல்லப் போகிறோம் என்று அறியக் கிடைத்ததும், நல்லதொரு ஸ்மார்ட்போனை குறைந்த விலைக்கு வாங்க வேண்டும் என்று சக செய்தியாளர்கள் கூறினார்கள். ஹுவாவே என்றால் நாம் திறன்பேசியைத் தாண்டி சிந்திப்பதில்லை.

காட்சியறை அமைந்துள்ள கட்டட வளாகத்தை அடைந்தோம். சுற்றிலும் மயான அமைதி. கண்ணுக்கு புலப்படாவிட்டாலும், கட்டடத்தைச் சுற்றி தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்ததை அவதானித்தோம். எல்லாம் ஒழுங்குமுறைக்கு அமைய இடம்பெற்றன. சொகுசு பஸ் வண்டியில் இருந்து இறங்கியதும் பிரதிநிதியொருவர் வந்து முகமன் கூறினார்.

உங்களுக்கு அபூர்வமான வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றார், பொதுவாக உலகத் தலைவர்கள், ராஜதந்திரிகள் போன்ற முக்கியஸ்தர்கள் மாத்திரமே காட்சியறைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அவர் கூறினார். நுழைவாயிலைத் தாண்டி, வரவேற்புப் பீடத்திற்குள் நுழைந்ததும் அந்த உத்தியோகத்தரின் கூற்றுக்கு அர்த்தம் புரிந்தது.

எதிர்காலத்திற்கு செல்ல வழிவகுக்கும் ரைம்-மெஷினில் இரு தசாப்தங்கள் முன்னால் சென்று விட்டோமே என்ற பிரமை. இலங்கை செய்தியாளர்களை ஹுவாவேவரவேற்கிறது என்ற எழுத்துக்களுடன் மிளிரும் அறிவிப்புப் பலகைக்கு இடப்புறத்தில், பெரும் நீர்வீழ்ச்சி. அதில் இருந்து கொட்டும் ஒவ்வொரு நீர்த்துளியிலும் சூரியக்கதிர் பட்டுத் தெறிக்கும் ஒளிஜாலத்தின் துல்லியம்.

இன்னொரு அதிகாரி வந்தார். நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது தொலைக்காட்சியின் அடுத்த பரிணாமம் என்றார். சுமார் 10 அடி உயரம். 30 அடி அகலம். அந்த சுவரை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது தொலைக்காட்சித் திரை என்பதை புரிந்து கொள்ள சிறிது நேரம் எடுத்தது. இது செறிவான காட்சித்திறன் தொழில்நுட்பம் என்றார், அதிகாரி.

அந்த பரந்த மண்டபத்திற்குள் இருபக்க சுவர்களிலும் தொலைக்காட்சித் திரைகள். அது தவிர, சில உபகரணங்கள். ஒவ்வொரு திரையிலும் தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியை சித்தரிக்கும் வரைபடங்களும், காட்சிகளும் ஓடிக் கொண்டிருந்தன. Augmented Reality என்ற தொழில்நுட்பம் கணினியில் தெரிபவற்றை முப்பரிமாணத்தில் கண்முன் நிறுத்தியது.

ஒவ்வொரு திரைக்கு அருகிலும் சென்று அதிகாரி விளக்கம் அளித்த சமயத்தில், தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி உலகத்தை நிலைமாற்றச் செய்வதில் ஹுவாவேநிறுவனத்தின் கடுமையான முயற்சி தென்பட்டது. அந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றிகளும் எம்மைப் பிரமிக்க வைத்தன. இந்நிறுவனம் சமகாலத்தில் கால்களை பதித்திருந்தாலும் எதிர்காலத்தின் மீது கண்வைத்திருப்பதை பிந்திய தயாரிப்புகள் பிரதிபலித்தன.

இவற்றில் சிலவற்றைக் குறிப்பிடலாம். ஒட்டுமொத்த உலகையும் இலவச வை-பை வலயமாக மாற்றும் திட்டம். செய்மதிகளைப் பயன்படுத்தி உலகின் மூலை முடுக்கெங்கும் வை-பை வசதிகளை வழங்கும் தொழில்நுட்பத்தை வடிவமைத்து விட்டோம் என்றார், ஹுவாவே அதிகாரி. அதற்குரிய உபகரணங்களும் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அடுத்து ஸ்மார்ட் சிற்றி என்ற கோட்பாடு. இதனை மிடுக்கு நகர் எனலாமா? மிடுக்கு நகரின் சகல சேவைகளும் கணினிமயப்படுத்தப்பட்டிருக்கும். உங்கள் காரை பார்க் பண்ண வேண்டுமாயின், திறன்பேசியில் செயலியை சொடுக்கினால் போதும். வெற்றிடத்தை நோக்கி காரை செலுத்த செயலி வழிகாட்டும்.

தண்ணீர் கட்டணத்தை செலுத்த வேண்டுமா? அதற்கும் செயலி. மாபெரும் பெய்ஜிங் நகரில் வாழ்கிறீர்கள். வீட்டுக்குத் தண்ணீர் வரவில்லை. சிரமம் இல்லை. செயலியின் ஊடாக முறையிட்டால்போதும். எந்தக் குழாயில் சரியாக எந்த இடத்தில் கசிவு உண்டு என்பதைக் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் ஹுவாவேயிடம் உள்ளது. பழுதைத் திருத்தி சில நொடிகளில் விநியோகத்தை சீர்செய்யலாம். இதில் மனிதவலுவின் பங்கு மிகச்சிறியது.

ஒரு நகராட்சியின் சகல விடயங்களையும் ஒருங்கிணைத்த நவீன தொழில்நுட்பத்தின் மாதிரியை விபரித்தார்கள். இதில் முக்கியமான விஷயம் யாதெனில், இந்தத் தொழில்நுட்பம் ஐரோப்பிய நகரொன்றில் பரீட்சார்த்த ரீதியில் அமுலாவது தான். எதிர்காலத்தில் இன்றே கால்பதித்த ஹுவாவேநிறுவனம், அரசியல் முட்டுக்கட்டைகளைத் தாண்டி, ஐரோப்பிய நகரொன்றில் தமது பிந்திய தொழில்நுட்பத்தை பரீட்சித்துப் பார்த்திருக்கிறது.

ஹுவாவே நிறுவனத்தின் ஒவ்வொரு தயாரிப்பும் தந்த ஆச்சர்யத்தில் இருந்து மீள்வதற்கு முன்னர், அதன் உயரதிகாரியொருவர் செய்தியாளர்களுடன் உரையாடினார். ஒரு வணிக நிறுவனம் என்ற ரீதியில், ஹுவாவேயின் வெற்றிகளைப் பட்டியலிட்டார். இந்நிறுவனம் உலகம் முழுவதும் எங்ஙனம் வியாபித்துள்ளது என்பதையும் அந்தப் பெண்மணி சுட்டிக்காட்டினார்.

இலங்கையைப் பொறுத்தவரையில், ஹுவாவேபோன்களை மாத்திரம் தான் அறிந்திருப்போம். இங்குள்ள முன்னணி தொலைத்தொடர்பாடல் நிறுவனங்களுக்கு முக்கியமான தொழில்நுட்ப உபகரணங்கள், கருவிகள், வலைப்பின்னல்கள் இவற்றை இயக்கத்தைத் தேவையான மென்பொருட்கள் முதலான சகலவற்றையும் விநியோகிப்பது ஹுவாவேதான். இதனை செவிமடுத்தபோது இலங்கையின் ஒட்டுமொத்த தொலைத்தொடர்பாடல் துறையும் ஹுவாவேயில் தங்கியிருக்கும் உண்மை தெரியவந்தது.

இலங்கையில் மாத்திரமன்றி, இன்று அமெரிக்கா உள்ளிட்ட 130 இற்கு மேற்பட்ட நாடுகளில் ஹுவாவேவியாபித்துள்ளது. இந்நாடுகளின் தொலைத்தொடர்பாடல் துறைகளில் ஹுவாவேயின் கருவிகளும், தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படுகின்றன. இதன்காரணமாக சீன அரசாங்கம் ஹுவாவே ஊடாக சகல நாடுகளையும் வேவு பார்க்கின்றதோ என்ற அச்சம் பல நாடுகளுக்கு உண்டு. வேவு பார்த்தல் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பல நாடுகளில் வழக்குகளும் தொடுக்கப்பட்டுள்ளன. இது பற்றி ஹுவாவே அதிகாரி விளக்கம் அளித்தார். எந்தவொரு வெளிநாட்டு நீதிமன்றத்திலும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என அவர் கூறினார்.

இன்று ஒட்டுமொத்த உலகமும் வாய்பிளந்து வியக்கும் வண்ணம் வளர்ச்சி கண்டுள்ள ஹுவாவே நிறுவனம் உருவான விதம் சுவாரஷ்யமானது. முன்னேறத் துடிக்கும் தேசத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு, வெளிநாட்டு நிறுவனங்களின் தந்திரத்தில் இருந்து விடுபடுவதற்காக "மாத்தி யோசி"த்த தேசப்பற்றாளின் கதை.

இந்த மனிதனின் பெயர் ரென் ஸெங்க்ஃபி. சீன மக்கள் உயிரெனப் போற்றும் மக்கள் விடுதலைச் சேனை என்ற இராணுவத்தின் பொறியியலாளர். இந்த மனிதர் இராணுவத்திற்காக வேலை செய்த காலத்தில் சீன அரசாங்கம் தொலைத்தொடர்பாடல் துறையை முன்னேற்றுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்தது.

அந்தக் காலத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவை குறைந்த செலவில் தொழிலாளர்களின் வலுவைப் பெறக்கூடிய தேசமாகவே பார்த்தன. ஒரு முழுமையான பொருளை உற்பத்தி செய்ய விரும்பும் வெளிநாட்டு நிறுவனங்கள், சீன தொழிற்சாலைகளிடம் சில பாகங்களை தயாரிக்கும் பணியை ஒப்படைக்கும். மறந்தும் முழுமையான உற்பத்திக்கான தயாரிப்புத் தொழில்நுட்பத்தை வழங்க மாட்டாது.

இந்த நிலையில் பொறியியலாளர் ரென் சற்று மாத்தி யோசித்தார். முழுமையான தயாரிப்பைத் தருவித்து, அதன் தொழில்நுட்பத்தை அறிய முயன்றார். அதே தயாரிப்பை வேறு வழியில் தயாரிக்க முடியுமா என்று ஆராய்ந்தார். இந்த ஆராய்ச்சிக்கு சீன அரசாங்கம் பூரண உதவி வழங்கியது.

தொடரும் 

 

Comments