வடகொரியாவின் நடவடிக்ைக அமெரிக்காவுக்கா? உலகத்திற்கா? வலியைக் கொடுக்கும் | தினகரன் வாரமஞ்சரி

வடகொரியாவின் நடவடிக்ைக அமெரிக்காவுக்கா? உலகத்திற்கா? வலியைக் கொடுக்கும்

கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்...   
யாழ் பல்கலைக்கழகம்   

வடகொரிய விவகாரம் மேலும் உலக நெருக்கடிக்கு காரணமாக அமைந்து வருகின்றது. மேலும் பல ஏவுகணை பரிசோதனைகள் ஜப்பானையும் தென் கொரியாவையும் அதிரவைக்கும் ஏவுகணை வீச்சுக்கள் என்பனவற்றை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றது. இது படிப்படியாக யுத்தத்தை தீவிரப்படுத்தும் நடவடிக்கையாக மாறிவருகின்றது. முடிந்த வாரத்தில் அமெரிக்கா மிகப்பெரிய வலியை சந்திக்குமென வடகொரியா தலைவர் ஹிம் ஜோங் உன் தெரிவித்தார். இதன் உண்மை அர்த்தத்தை தேடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சோஸலிசத்தின் நடைமுறை அர்த்தம் சர்வதிகாரம் என்பதை கடந்த நூற்றாண்டு பல தலைவர்கள் நிறுவிச் சென்றார்கள். அதனை முதலாளித்துவம் மிக நீண்ட வரலாறு முழுவதும் அத்தகைய சர்வாதிகாரத்தை பின்பற்றியது ஆனால் இருபத்தியோராம் நூற்றாண்டிலும் தாராண்மைவாதச் சக்திகளும் சோஸலிஸ சக்திகளும் சர்வாதிகாரத்தை தவிர்க்க முடியாது பின்பற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் நியாயப்பாடும் உண்டென புலமையாளர்களும் வாதிடுகின்றனர்.

சர்வாதிகாரம் இல்லாத தலைமைகள் தோற்ற வரலாறு கடந்த காலம் முழுவதும் பதிவானது. அதே நேரம் ஜனநாயகமோ தாராள ஜனநாயகமோ பேசிய தலைவர்கள் சர்வதிகாரிகளாக செயல்பட்டு தேசங்களையும் தேசியப் பொருளாதாரத்தையும் கட்டி வளர்த்துள்ளனர். அந்த வகையில் சோஸலிச சர்வதிகாரத்தின் தலைவர்களில் ஒருவராகவே வடகொரியத் தலைவர் காணப்படுகின்றார். ஏறக்குறைய பெயரளவு சோஸலிசத்தின் இறுதி நாடாகவும் தலைவராகவும் விளங்கும் உன்னின் சர்வதிகாரப் போக்கு உலக நாடுகளை நெருக்கடிக்கு தள்ளியுள்ளது.

அணுக்குண்டு பரிசோதனையை நடத்தியதற்காக ஐக்கிய நாடுகள் சபை மீண்டுமொரு பொருளாதார தடையை வடகொரியா மீது ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வடகொரியாவின் பிரதான ஏற்றுமதிகளான நிலக்கரி கனிமப்பொருட்கள் மற்றும் கடல் உணவுகளை ஏற்றுமதி செய்வதற்கு ஐ.நா தடை விதித்துள்ளது. பெற்றோலியப் பொருட்கள் உட்பட ஹிம் ஜோங் உன்னின் சொத்துக்கள் முடக்கம் என்பன அடங்கிய தீர்மானமாகவும் அதனை அமெரிக்கா முன் மொழிந்துள்ளது.

இத்தகைய தீர்மானத்திற்கு ஐ.நா சபையின் பாதுகாப்பு சபையிலுள்ள 15 உறுப்பு நாடுகளும் ஒப்புதல் அளிந்துள்ளன. பல தடவை பல தீர்மானங்களை ஐ.நா.சபை முன்வைத்த போதும் எதனையும் வடகொரியா பின்பற்றாத வகையில் நாடுகளும் தலைவர்களும் அதிருப்தியில் விழிபிதுங்கியுள்ளன. இதன் விளைவுகள் தனிப்பட்ட அமெரிக்காவுக்கோ அமெரிக்க மக்களுக்கோ உரியதாக அமையாது. ஒட்டு மொத்த உலகத்தின் மீதான நடவடிக்கையாக அமைவதற்கான வாய்ப்பு அதிகமாக உண்டு. காரணம் ஐ.நா வின் புதிய தீர்மானத்தை உடனடியாக புறந்தள்ளிய வடகொரியா அதன் விளைவுகளை அமெரிக்காவே எதிர் கொள்ளுமென எச்சரித்துள்ளது.

ஐ.நாவுக்கான வடகொரியா தூதுவர் ஹான் பேசாங் அரசியல் பொருளாதார மற்றும் இராணுவ மோதல் ஏற்படுவதை அமெரிக்கா விரும்புகிறது என்றார். தூதுவரின் கருத்துக்குரிய நகர்வின் மோதல்கள் ஆரம்பித்து விட்டது. அரசியலாகவும் பொருளாதாரமாகவும் வடகொரியா அதிக நெருக்கடியை எதிர் கொள்ள ஆரம்பித்து விட்டது. அமெரிக்காவின் கூட்டாளியானது இராணுவ ஒத்திகைகளும் அமெரிக்க இராணுவ குவிப்பும் அதிகமான இராணுவ மோதலுக்கான திட்டமிடலை தந்துள்ளது. பரஸ்பரம் தாக்குதல் நிகழ்த்தும் உத்திகள் அதனையே வெளிப்படுத்துகின்றன.

வடகொரியாவிடம் உள்ள அணுக்குண்டுகளே சக்தி மிக்கவையாக மாறியுள்ளன. அமெரிக்காவைப் பொறுத்தவரை வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளின் விருத்தி நிலை அமெரிக்காவை மட்டுமல்ல உலக நாடுகளையே தாக்குதல் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜப்பான் கடலில் வீழ்ந்து வெடித்த ஏவுகணையும் அண்மையில் மீண்டும் ஜப்பானிற்கு மேலால் சென்று கடலில் வீழ்ந்து வெடித்த ஏவுகணையும் பிராந்திய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. 2300 மைல் தூரம் சென்று பசுபிக் சமுத்திரத்தில் வீழ்ந்து வெடித்துள்ள ஏவுகணையால் அமெரிக்கா அதிக இராணுவ எச்சரிக்கையை வழங்கியுள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு துறை உடனடியாக கூட்டப்பட்டு அமெரிக்க பாதுகாப்பு மற்றும் ஏவுகணை அண்டவெளி தொழில்நுட்ப மையங்களுக்கு ஏற்படவுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் பற்றிய உரையாடலை செய்துள்ளது. இறுதியில் வடகொரியாவின் நடவடிக்கை பேச்சுவார்த்தைக்குரிய அனைத்து நடவடிக்கையையும் மூடியுள்ளதாகவும் இராணுவ நடவடிக்கைக்கு முதன்மை வழங்குவது தவிர்க்க முடியாததாகியுள்ளது எனவும் எச்சரித்துள்ளது.

ஜப்பான் பிரதமர் வடகொரியாவின் ஏவுகணைத் தாக்குதலை ஏற்றுக் கொள்ள முடியாதென தெரிவித்திருப்பதுடன் ஐ.நா.பாதுகாப்பு சபைக்கு முறையிட்டுள்ளார். தென்கொரிய ஆட்சியாளர்கள் இந்நடவடிக்கையை கண்டித்திருப்பதுடன் பொதுமக்கள் தாம் கொல்லப்படுவது நிச்சயம் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

அமெரிக்க தரப்பு ஆகாய, கடல்வழி இலக்குகள் மீது வடகொரியாவின் தாக்குதல் திறன் அதிகரித்துள்ளதாக கருதுகிறது. குறிப்பான குலாம் அமெரிக்க இராணுவத் தளம் தாக்கப்பட வாய்ப்பு அதிகரித்து வருவதாக பெண்டகன் எச்சரித்துள்ளது. 3700 கி.மீ தாக்கதல் திறனுடைய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையையே கடந்த வெள்ளிக்கிழமை வடகொரியா ஏவியுள்ளது. இது அமெரிக்க பாதுகாப்பு துறைக்கு அச்சுறுத்தலாகவே அமையும்.

வடகொரியாவைப் பொறுத்தவரை அணுவாயுவும் குறுந்தூர அதாவது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையையும் தாக்கும் திறனை கொண்டுள்ளது. வடகொரியாவின் அடுத்து இலக்கு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளில் அணுவாயுக்களை ஏற்றிச் செல்லும் வல்லமையை உருவாக்குவதாக அலையும். அதனை சாத்தியப்படுத்தியுள்ளதாக புலனாய்வுத் தகவல் ஏற்கனவே வெளியாகியுள்ளது. அப்படியாயின் உலகம் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வேண்டிய தேவை ஏற்படும்.

அமெரிக்காவோ ஏனைய நாடுகளோ வடகொரியா மீது தாக்குதல் மேற்கொள்ள தயங்குவதற்கான காரணம் அதன் அணுவாற்றலேயாகும். மேற்கு ஆசிய நாடுகளைப் போன்று வடகொரியாவை அமெரிக்காவால் கையாள முடியவில்லை. காரணம் அணுவாயுதம் மட்டுமல்ல வடகொரியாவின் தலைமைத்துவம், சோஸலிச திரை சீனா ரஷ்யாவின் மறைமுக ஆதரவு புவிசார் அரசியல் உறுதிப்பாடு இவை எல்லாம் வடகொரியா மீது தாக்குதலை உடனடியாக மேற்கொள்ளாது தடுக்கும் அம்சமாகும். ஆனால் தாக்கதலை மேற்கொள்வதே உகந்தது என அமெரிக்கத் தரப்பு கருதுகிறது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை கூட்டான தாக்குதல் ஒன்றுக்கு முனைகிறது. சீனா ரஸ்யாவின் இணைவு இந்த யுத்தத்தில் அவசியமென கருதுகிறது. ஆனால் இந்த இரண்டு நாடுகளும் அமெரிக்காவை யுத்தத்தில் இறக்கி விட்டால் அமரிக்கா மேலாதிக்கத்தை தடுக்க முடியுமென கருதுகின்றமையும் ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்ட கருத்தேயாகும். ஆனால் அதற்கான இழுபறி இன்னுமே தொடர்கின்றது.

அடுத்து வடகொரியா கூறுவது போல் அமெரிக்கா மீது ஒரு பாரிய அழிவைத்தரக் கூடிய தாக்குதல் நிகழ்த்தப்பட்டால் அது உலக மகாயுத்தமாக மாறுவதற்கான வாய்ப்பு அதிகமாகும். அதற்கு இன்றைய உலகு விட்டுக் கொடுக்குமா? என்பது கேள்விக்குரியதாகும். அப்படியாயின் வடகொரியாவின் எச்சரிக்கை சமாதானமான அணுகுமுறையை நோக்கியதாக அமைய வாய்ப்புள்ளது. இரண்டு தரப்புமே பரஸ்பரம் எச்சரிக்கையுடனேயே நகர்கின்றன. இரண்டு தரப்புக்கும் தாக்குதலுக்கு வாய்ப்புக்கள் அதிகம் வளர்ந்து போனது. ஆனால் எச்சரிக்கையுடன் அவை நடந்து கொண்டன. அமெரிக்க மண்ணில் தாக்குதல் நிற்பதைத் தவிர்ப்பதே அ​ெமரிக்காவின் பிரதான நோக்கம். அதற்காகவே உலகம் முழுவதும் அமெரிக்கா இராணுவ முகாங்களையும் தனது படைகளையும் குவித்து வைத்துள்ளது. போதாதற்கு கடற்படையையும் பாரிய கப்பல்களையும் அனைத்து சமுத்திரங்களிலும் குவித்துள்ளது.

இது மட்டுமன்றி ஜப்பானிலும் தென்கொரியாவிலும் ஏவுகணைத் தடுப்புக்களின் நடவடிக்கையை கொரியக் குடாவுக்குள் நிறுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. அது மட்டுமன்றி ஏவுகணைகள் மூலம் அமெரிக்க மண்ணைக் தாக்கும் முயற்சியை முறியடிக்கும் விதத்தில் ஏவுகணை தடுப்பு திட்டத்தை பிராந்திய மட்டத்தில் அமெரிக்கா நிறுத்தியுள்ளது. பெருமளவான தாக்குதல் உத்திகளும் தடுப்பு நடவடிக்கைகளையும் கொண்ட அமெரிக்க மண்ணை தாக்குவது கடினமானது. வேண்டுமாயின் கொரிய தீபகற்பத்திலுள்ள அமெரிக்க தளங்களை தாக்க வாய்ப்க்கள் அதிகம்.

அணுவாயுதத்தினை அமெரிக்கக் கண்டத்தை நோக்கி செலுத்துவதற்கு தொழில்நுட்ப உத்திகள் இடங்கொடுக்குமா என்பது கேள்விக்குரியதே. அதனை அடிப்படையாகக் கொண்டு தான் வடகொரியா அமெரிக்காவை எச்சரித்திருக்கின்றது என்றால் அது தனித்து அமெரிக்காவிற்கு மட்டும் உரியதல்ல. அணுவாயுத தாக்குதல் உலகத்திற்கானது.

எனவே வடகொரியாவுடன் எச்சரிக்கையும் தாக்குதலும் தன் மீதான பொருளாதார தடையை நிறுத்த சொல்வதாகவே உள்ளது. பசுபிக் கடலில் ஏவப்படும் ஏவுகணைகள் வடகொரியாவின் வல்லமையைக் காட்டுவதுடன் தன் மீதான தடையையும் அமெரிக்க தென்கொரிய ஜப்பான் நாட்டின் நடவடிக்கையையும் கண்டிப்பதாக உள்ளது. ஆனால் யுத்தத்தின் விளிம்பில் உலகமுள்ளது என்பது அதன் சாரமாகும். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments