சீனர்களின் உணவும் வாழ்வியலும் | தினகரன் வாரமஞ்சரி

சீனர்களின் உணவும் வாழ்வியலும்

சதீஷ் கிருஷ்ணபிள்ளை...

இலங்கை போன்ற நாடுகளில் இருந்து சீனா செல்லும் ஒருவரின் கட்புலனுக்கும், செவிப்புலனுக்கும் விருந்தளிக்கக்கூடிய விடயங்கள் ஏராளம். இருநாடுகளையும் ஒப்பிட்டுப் பார்த்து சிந்திக்க வேண்டிய விடயங்களும் ஏராளமாக இருக்கின்றன. இவற்றில் சிலவற்றை கடந்த வாரங்களில் பேசினோம். ஒருவர் எதிர்கொள்ளும் முக்கியமான சவால் உண்டாயின், அது நாவிற்கு விருந்தளித்தல் தொடர்பானதாகும். சீனர்களின் கலாசாரத்தில் உணவிற்கு மிகவும் முக்கியமான இடமுண்டு. ஒருவரை மனத்திற்குப் பிடித்து விட்டால், சீனர்கள் விதவிதமான நளபாகங்கள் படைத்து திக்குமுக்காட வைப்பார்கள்.

தமது செழிப்பான உணவுக் கலாசாரம் பற்றி சீனர்களுக்கு அதீத பெருமை உண்டு. உணவைப் படைத்தால், அதன் சுவையை மாத்திரமன்றி, மணம், நிறம் பற்றியும் சிலாகிப்பார்கள். இந்த முக்குணங்கள் சிந்தைக்கு விருந்தளிக்கலாம். ஆனால், எமது நா ஒத்துக் கொள்ள மறுத்தால் என்ன செய்வது? ஷங்ஹாய் நகரில் உய்குர் முஸ்லிம்கள் நடத்தும் உணவகத்திற்கு சென்றோம். சீன பாரம்பரிய நூடில்ஸ் சாப்பிட வேண்டும் என சக நண்பர் கூறினார். வாயில் வைத்ததும், சமையற்காரரை இலங்கைக்கு அனுப்பி எவ்வாறு ருசியாக நூடில்ஸ் சமைப்பது என்று கற்றுக் கொடுக்க வேண்டும் என்றார்.

இதேபோல் இன்னொரு அனுபவம். பெய்ஜிங்கில் சீனர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான உணவகம். அதனை ஹொட்-பொட், அதாவது கொதிக்கும் பாத்திர உணவகம் என்பார்கள். இங்கு மேசைகளை ஒதுக்கிக் கொள்வதற்காக பல மணித்தியாலங்களுக்கு முன்னர் ஓர்டர் செய்ய வேண்டியிருந்தது.

மேசையின் நடுவில் கொதிக்கும் பாத்திரம். கீழே கொழுந்து விட்டெறியும் தீச்சுவாலைகள். உணவுப் பதார்த்தங்களைத் தருவார்கள். அவற்றை கொதிக்கும் பாத்திரத்தில் இட்டு உணவு அவிந்தவுடன் எடுத்து சாப்பிட வேண்டும். உணவாக தரப்படுபவை மெலிதாக வெட்டப்பட்ட மீன்பாகங்கள், இறைச்சித்துண்டுகள். நீங்கள் சைவ உணவை சாப்பிடுபவர் என்றால், கவலையே வேண்டாம். முட்டை முட்டையாக காளான்கள் இருக்கும். இலை வகைகளைத் தருவார்கள். அவற்றை ஹொட்-பொட்டில் அவித்து சாப்பிடலாம். தவிர, சைவ உணவு கேட்டால், மீன் சைவம் அல்லவா என்பார்கள், சீனர்கள். கொதிநீரில் அவித்தெடுக்கப்பட்ட உணவை தோய்த்து உண்பதற்காக ஒரு மூலையில் இருக்கும் சோஸ்கள் தான் உணவகத்தின் சிறப்பு. இதில் மிளகாய் முதற்கொண்டு மிஞ்சி வரை 32 வகையான சோஸ்கள் உண்டு. சீனர்கள் சப்புக் கொட்டிக் கொண்டு சாப்பிடுவதை பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும். ஹோட்டல் மேலாளர் எமது மேசைக்கு வந்து மிகப் பெருமிதத்துடன், எப்படி இருக்கிறது எமது உணவு என்று கேட்டார். சங்கடத்தை மறைத்துக் கொண்டு, சுப்பர் என்று சக நண்பர் சொன்னார். அந்த சமயத்தில் அவரது முகம் போன போக்கு இருக்கிறதே, அதனை வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாது.

பெய்ஜிங் நகரின் தனித்துவமான உணவாக சீன வழிகாட்டி விஸ்தரித்த பீக்கிங் வாத்து சமையலும் இதே அனுபவத்தைத் தான் தந்தது. முழுவடிவில் வந்த வாத்தை மெலிதான துண்டுகளாய் வெட்டி, அதனை சுருட்டி சோஸ் சேர்த்து வாயில் போட வேண்டும். வழிகாட்டியிடம் பெருவிரலை உயர்த்திக் காட்டிய செய்தியாளர், அதனை விழுங்குவதற்கு எவ்வளவு சிரமப்பபட்டார் என்பதைக் கண்டோம். சீனர்களின் பாரம்பரிய உணவுகள் பிராந்தியத்திற்குப் பிராந்தியம் வேறுபடுகின்றன. கரையோரப் பிரதேசங்களில் வாழும் சீனர்கள் காரமான உணவுகளை விரும்பி உண்கிறார்கள். இனிப்புப் பதார்த்தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பிரதேசங்களும் உண்டு. உப்பும், காரமும் நிறைந்த உணவுகள் தான் தேவையாயின், பெய்ஜிங், ஷங்ஹாய் நகரங்களில் இந்திய உணவகங்கள் இருக்கின்றன. வேறு நாட்டவர்கள் விரும்பி நாடும் இடங்கள்.

பெய்ஜிங்கில் சிறப்பான உணவகம் உண்டு. இங்கு பரிமாறப்படும் அசைவ உணவின் வடிவில் பரிமாறப்படுவது முற்றுமுழுதான சைவ உணவாகும். இங்கு ஒரு டிஷ் பரிமாறப்பட்டது. இதில் முழுமையாக அவிக்கப்பட்ட பாறை மீன் இருந்தது. சைவ உணவகத்தில் அசைவமா என சக நண்பர் கொதித்தார். ஹோட்டலின் மேலாளர் வந்து, இது பன்னீர் (டொஃபு) செய்த உணவு என்றார். சுவைத்துப் பார்த்தாலும் நம்ப முடியவில்லை. நளபாகங்களை உருவாக்குவதிலும் சீனர்கள் உச்சத்தில் இருக்கிறார்கள். நமக்கும் சீனர்களுக்கும் இடையிலான பிரதான வித்தியாசம் யாதெனில், நாம் சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். சீனர்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கரிசனை காட்டுகிறார்கள். சீனர்களின் தேனீரை உதாரணமாகக் காட்ட முடியும்.

ஷங்ஹாய் நகரிலுள்ள பண்டைய அரண்மனைத் தொகுதியில் தேனீரின் சுவையை ருசிக்கக்கூடிய கூடம் இருந்தது. பல்வகைத் தேனீர்கள். அவற்றைத் தயாரிப்பதற்கும், சுவைப்பதற்கும் மாத்திரம் ஒன்றரை மணித்தியாலங்கள் சென்றன. தேனீர் என்றால் தேயிலை என்பது எமது புரிதல். குண்டுமல்லி, பவளமல்லி, தாமரைப்பூ, புதினா என்று சகல மூலிகைகளும் சீனர்களின் தேனீருக்கான மூலப்பொருளாகின்றன. ஒவ்வொரு மூலப்பொருளுக்கும் உள்ள மருத்துவ குணாதிசயங்களை விபரித்தபோது, சீனர்களின் உணவுப் பழக்கம் பற்றிய பிரமிப்பைத் தவிர்க்க முடியாதிருந்தது. ஊலோங் ரீ எனப்படும் தேநீர் மிகப்பிரபலமானது. இது உடலில் கொழுப்பை அகற்றுகிறதென சீன வழிகாட்டி கூறினார். சீனர்கள் உடல் மெலிந்தவர்களாக, தொப்பை அற்றவர்களாக இருப்பதற்கான காரணம் புரிந்தது. சீனர்களுக்கு சர்க்கரை நோய் இல்லாதிருக்கலாம். ஏனெனில், நாம் சென்ற சகல இடங்களிலும் எமக்குப் பரிமாறப்பட்ட தேனீர் வகைகளில் சர்க்கரை இடப்பட்டிருக்கவில்லை.

எமது சீன விஜயத்தில், நாம் பெரும்பாலும் பிரதான நகரங்களுக்கு மாத்திரமே சென்றிருந்தோம். தனியொரு கண்டமாகத் திகழக்கூடிய சீனாவின் பெருநிலப்பரப்பில் சகல இடங்களுக்கும் செல்வது சாத்தியமற்றது. மாறுபட்ட பிராந்திய கலாசாரங்களை அறிந்து கொள்தல் என்பது வாழ்நாள் முழுவதையும் செலவிட்டாலும் சாத்தியப்படாத விடயம். எனினும், நாம் சென்ற இடங்களில் நாம் கண்ட காட்சிகள் ஒவ்வொரு சராசரி சீனரும் திருப்தியானதொரு வாழ்க்கை வாழ்வதை நிரூபித்தன. பெரும்பாலும் மேற்குலக ஊடகங்கள் என்ற நிறந்தீட்டப்பட்ட சாளரத்தின் ஊடாக சீனா என்ற தேசத்தை அறிந்திருந்தோம். பொதுவுடைமைக் கோட்பாடுகளுக்குள் சுதந்திரம் பறிபோன நிலையில், வெளியுலகம் தெரியாமல் வாழும் மக்களின் பிற்போக்கான சமூகத்தைக் கொண்ட தேசம் என்ற சித்தரிப்பின் பொய்மையை எமது சீன அனுபவங்கள் உணர்த்தி நின்றன.

சீனர்கள் தாய்நாட்டை நேசிக்கிறார்கள். தேசப்பற்று உணர்வின் அடித்தளத்தில் தமக்காகவும், நாட்டுக்காகவும் கடுமையாக உழைக்கிறார்கள். தமது ஆட்சியாளர்கள் தமக்கு நன்மை செய்கிறார்கள் என்ற நம்பிக்கை சீனர்களுக்கு உண்டு. செழிப்பான பொருளாதாரத்தில் சிறப்பான வாழ்க்கையை வாழ்கிறார்கள். பெய்ஜிங் நகரில் ஒருநாள் இரவு. உணவகத்தை விட்டு வெளியே வந்தபோது, தாளக்கட்டுடன் மெலிதான இசை ஒலிக்கிறது. மெல்லென்ற நியோன் விளக்கொளியில் பூலோக சொர்க்கமாக காட்சியளிக்கும் ஒரு சதுக்கம். அங்கு வயோதிபர்கள் கூட்டம். சோடி சோடியாக நடனமாடுகின்றனர். அருகில் செல்கிறோம். ஏன் நடனம் என்கிறோம்.

இன்றைய நாள் முழுவதும் உழைத்துக் களைத்து விட்டோம். ஆரோக்கியமாக, நிம்மதியாக உறங்க வேண்டும் என்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளிலும் காண முடியாத காட்சி. அன்று உறங்கச் செல்லும் சீனர்களுக்கு விடியும் நாள் மிகச்சிறப்பானதாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கை சீன தேசத்தின் வெற்றி.

முற்றும்

Comments