சூது செய்யும் குறுநில மன்னர்கள் | தினகரன் வாரமஞ்சரி

சூது செய்யும் குறுநில மன்னர்கள்

அருள் சத்தியநாதன்

ஒருபுறம் அ.தி.மு.க அணிகளிடையே ஒருவரையொருவர் தாக்கி வீழ்த்தி முடிந்தவரை அதிகாரத்தில் நீடிக்கும் போட்டா போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்க, யார் ஆண்டால் என்ன, எப்படி ஆண்டால் என்ன; நமக்கு காரியம் ஆகும்வரை அ.தி.மு.க ஆட்சி தமிழகத்தில் நீடித்திருந்தால் போதும் என புதுடில்லி கணக்கு போட்டுக் கொண்டிருக்க, ஒடு மீன் ஓடி உருமீன் வரும்வரை வாடியிருக்குமாம் கொக்கு என்பதாக தி.மு.க அடுத்தடுத்து வியூகங்களை வகுத்து காத்திருக்க,

எப்போதடா ஆட்சி கலைந்து தேர்தல்வரும் என்று மாநிலமெங்கும் தமிழக வாக்காளர்கள் காத்திருக்கிறார்கள். ஜெயலலிதாவை நம்பி அ.தி.மு.கவுக்கு அமோகமாக அளிக்கப்பட்ட ஆதரவு இவ்வாறு திருப்பித்தாக்கும் என வாக்காளர்கள் ஒரு போதும் நினைத்திருக்க மாட்டார்கள்.

டில்லிக்கு எது தேவையாக இருந்தாலும், தமிழ் வாக்காளர்களுக்கு இன்று தேவையாக இருப்பது ஒரு தேர்தல். ஆனால் முடிந்தவரை ஆண்டு அதற்குள் திரட்ட வேண்டியதை எல்லாம் கையகப்படுத்திக் கொண்டுதான் ஊர்களுக்குத் திரும்புவோம் என்ற மனநிலையில் இருக்கிறார்கள், எடப்பாடி, பன்னீர் அணியினர். ஆனால் இந்த சட்ட மன்ற உறுப்பினர்கள் இடையேயும் ஒரு மனக்கிலேசம் இருக்கத்தான் செய்கிறது. தேர்தல் விரைவிலேயே வரத்தான் போகிறது. அப்போது தமக்கு வேட்பாளராக நிற்கும் வாய்ப்பு கிடைக்குமா, கிடைத்தாலும் வெற்றி வாய்ப்பு சாத்தியமா? என்பதே இம் மனக்கிலேசம். ஆசை வெட்கமறியாது என்பது போல சில அ.தி.மு.க சட்ட மன்ற உறுப்பினர்கள் வெற்றி வாய்ப்புகள் அதிகமுள்ள தி.மு.கவுக்கு தாவுவதற்கு தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சி கலையுமானால், கட்சி தாவல்களும் அரங்கேறும்.

இத்தகைய ஒரு பின்னணியில்தான், 18 அ.தி.மு.க சட்ட மன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் தனபாலினால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர் இதைச் செய்வதற்கு தேர்ந்தெடுத்த சட்ட நடைமுறைகள் தவறானவை என்றும் பக்கச் சார்பாக நடந்து கொண்டார் என்றும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டாலும், சபாநாயகரின் முடிவு என்ற வகையில் தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் தகுதியீனம், தகுதி யீனம் தான்!

அ.தி.மு.க விசுவாசிகளும், அக்கட்சிக்கு வாக்களித்தவர்களும் இன்று கட்சியும் ஆட்சியும் சென்று கொண்டிருக்கும் பாதை தற்கொலைக்கு ஒப்பானது எனப் பிரலாபித்தாலும், அவர்கள் அடிப்படையில் தவறு. இழைத்திருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஒப்புக் கொண்டால்தான் இனிமேலாவது நேர்மையான ஒரு ஆட்சியை அவர்களால் தமிழகத்தில் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.

ஒரு குடும்பத்துக்கும், மாநில நிர்வாகத்துக்கும் இடையே பெரிய வித்தியாசம் கிடையாது. ஒரு குடும்பத் தலைவன் தன்சம்பாத்தியத்தை சேமிக்காவிட்டால் அல்லது வீணாக செலவு செய்தால், வருமானத்தை தவறான வழிகளில் தேடினால் அக் குடும்பம் சிறப்பாக வாழாது. பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பெற்றோரே வீட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சி கஞ்சாவையும் பிள்ளைகள் மூலம் விற்பனையும் செய்தால், நாளடைவில் குடும்பம் சீரழிந்து பேகும்.

இந்த உதாரணம் ஒரு நாட்டுக்கும் பொருந்தும். ஒரு காலத்தில் திருட்டு நாடுகளும், கடற்கொள்ளையரின் நாடுகளும் உலகில் இருந்தன. அவை பேரழிவை சந்தித்தன. ஒரு மாநிலத்தை ஆள்வதற்கான சில உயர் பண்புகளோடு, தலைவராக இருக்கக்கூடியவருக்கான தகுதிகள், பண்புகளும் உள்ளன. அத் தகுதி கொண்டவர்களால்தான் ஒரு நாட்டை, ஒரு மாநிலத்தை செல்வம் கொண்டதாகவும் நீதி நியாயத்தை பாதுகாக்கும், முன்னணியில் திகழும் மாநிலமாகவும் வைத்திருக்க முடியும். இதனால்தான், சிறந்த ஆட்சியாளருக்கான பண்புகளை வகுக்கும் போது, ஒரு சிறந்த ஆட்சியாளன் ஒரு யோகியைப் போல, தத்துவ ஞானியாக இருக்க வேண்டும் என்று வரையறை செய்தான் அறிஞன் பிளேட்டோ.

மகாத்மா காந்தி இதை அறிந்திருந்தார். அடிப்படையில் ஒரு துறவியாக இருந்ததால் மிகப் பெரும் பாரத நிலத்தை தன் நாவினால் அசைக்க முடிந்தது. தனது நாட்டை பிரித்துகொடு என்று எவராவது சொல்வாரா? அவரால் சொல்ல முடிந்தது. எப்போதும் ராம், ராம், எனப் பாராயணம் பண்ணிக்கொண்டிருந்தவரால்தான் நாட்டின் ஒரு பகுதியை முஸ்லிம்களுக்கு பிரித்துக் கொடுப்பதோடு கொடுக்கப்பட வேண்டிய நிதி வளங்களையும் கொடு என்று சொல்லமுடிந்தது. ராம் என்று ஜெபித்த வாய்தான், நாடு மதச் சார்பற்றதாக இருக்க வேண்டும் என்றும் சொன்னது. இவற்றுக்கான விளைவாக மரணத்தையும் ஏற்க வேண்டியதாயிற்று!

ஒரு தலைவன் தன்னலமற்ற துறவியாக இருந்தால் அந்த நாடு உருப்படும் என்பதற்கு சிங்கப்பூர் சிற்பி லீக் வான் யூ இன்னொரு நம் காலத்து உதாரணம், புதிய தென்னாபிரிக்காவின் சிற்பி நெல்சன் மண்டேலா, தன்னை 25 ஆண்டுகளாகக் கொடிய சிறையில் தள்ளியவர்களை மன்னித்தார்! ஆட்சி மாற்றம் நிகழும்போது வெள்ளையர்களான போயர்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் கட்டவிழ்க்கப்படாமல் பார்த்துக் கொண்டார். உருவாக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு சட்டம் போயர்களுக்கு அநீதி இழைக்காமல் இருக்கும்படி பார்த்துக் கொண்டார். ஆபிரகாம் லிங்கன் இன்றளவும் பேசப்படுவதற்கான காரணம் அனைவரும் அறிந்ததே. இவ்வாறான பேராளுமைகள் இலங்கையிலும் வாழ்ந்திருக்கிறார்கள். எஸ்.ஜே.வி செல்வநாயகம், டட்லி சேனநாயக்க, எஸ். டபிள்யூ. ஆர். டீ பண்டாரநாயக்க, என்.எம். பெரேரா, அ. அமிர்தலிங்கம் என்று நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் சேவையாற்ற தமது சொத்துகளையும், உயிரையும் இழந்திருக்கிறார்கள்.

இந்தப் பின்னணியில் தமிழகத்தை எடுத்துக் கொள்வோம். அங்கே, அப்பழுக்கற்ற காமராஜர், அறிஞர் அண்ணா, ஓமத்தூர் ரெட்டியார் போன்ற சிறந்த தலைவர்கள் ஆட்சி செய்துள்ளனர். இவர்கள் கும்பல் ஆட்சி நடத்தி பொதுச் சொத்தில் கை வைத்தவர்கள் அல்ல. தந்தை பெரியார் இறுதிவரை அரசியல் கட்சி ஆரம்பிக்கவே இல்லை.

இவற்றை எல்லாம் நன்கு அறிந்திருந்தும் கொஞ்சமும் கூச்ச நாச்சமில்லாமல் கொள்ளையடிக்கவெனவே ஆட்சி பீடமேறி, தன் கொள்ளைக் கும்பலுடன் காட்டாட்சி நடத்தியவரே ஜெயலலிதா. தலைவன் எவ்வழி தொண்டனும் அவ் வழியே என்பது போல கொள்ளையையே குறியாகக் கொண்டு ஆட்சி நடத்தியதால், அமைச்சர்கள், அதிகாரிகள் முதல் சிற்றூழியர்வரை தமிழகத்தில் ‘காசு பார்ப்பதை’யே முதல் இலக்காகக் கொண்டார்கள்.

இன்று தமிழகத்தை ஆளும் எடப்பாடி, பன்னீர் இருவரையும் எடுத்துக் கொண்டால் இருவருமே ஊழலில் திளைப்பவர்கள். அவர்களின் அமைச்சர் பெரும்மக்களும் பொதுச் சொத்தை சுரண்டி வாழ்பவர்களே. தமிழக அரசு இயந்திரமே ஊழலில் சிக்கிக் கிடக்கிறது. லஞ்சம் கொடுக்காமல் எதுவும் ஆகாது என்றாகி விட்டது. லஞ்சம் வாங்காமல் எவராவது கடமை உணர்வுடன் செயற்பட்டால் அவரை முட்டாள் எனக் கருதும் அளவுக்கு தமிழகம் சீரழிந்து விட்டது. இது அதிகப்படியான விமர்சனம் அல்ல, உண்மை நிலை இதுதான்.

இதற்கெல்லாம் காரணம் இரண்டு கழகங்களின் தொடர்ச்சியான ஆட்சி தான். மத்திய அரசு பெரும் முறைகேடுகளுக்கு பழகிப் போவதற்கு எப்படி இந்திரா காந்தி அம்மையார் காரணமானாரோ அவ்வாறே, காமராஜரினாலும் அண்ணாவினாலும் உதாரண மாநிலமாகக் காட்டப்பட்ட தமிழகம், ஊழலில் ஊறிப் போவதற்கு கலைஞர் கருணாநிதி காரணமானார். அதுவே எம்.ஜி.ஆர். ஆட்சியிலும் பின்னர் பன்மடங்காக ‘ஒரு திருடர் மாநிலம்’ என அழைக்கப்படுமளவுக்கு ஊழல்களிலும் முறைகேடுகளிலும் திளைப்பதற்கு செல்வி ஜெயலலிதா காரணமானார். இது, ஜெயலலிதா பற்றி இருக்கக் கூடிய சகல நற் கருத்துக்களையும் பண்புகளையும் ஏன் நல் நினைவுகளையும் கூட வேரடி மண்ணோடு அகற்றி விட்டன.

இன்று ஜெயலலிதா, குற்றவாளி என்ற முத்திரையோடு மறைந்து விட்டார். அவர் அடக்கப்பட்ட இடத்தில் இருந்து அவருடல் அகற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுமளவுக்கு அவர் பெயர் கெட்டுக்கிடக்கிறது. தி.மு.கவிடம் கணக்கு கேட்ட ஒரு கட்சி, தவறான கணக்குகள் 

காரணமாக சீரழிந்துகிடப்பதோடு, பா.ஜ.க என்ற இந்துத்வ கட்சியின் பிடியில் சிக்கியும் கிடக்கிறது. தமிழகத்தைத் தற்போது ஆள்பவர்கள் அனைவருமே மோசடிக்காரர்கள் என்பதை மட்டுமே துரும்புச் சீட்டாக வைத்து பா.ஜ.க. தனது நிழல் ஆட்சியை தமிழகத்தில் நடத்தும் அளவுக்கு அ.தி.மு.க சீரழிந்து போனதற்கு ஜெயலலிதாவே காரணம். சசிகலா அல்ல. ஏனெனில் சசிகலா என்ற பேராசைக்காரியை வளர்த்து ஆளாக்கியவர் ஜெயலலிதா மட்டுமே!

இன்று தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியும், அதைச் சுற்றி நிகழும் வேடிக்கைகளும் அவலச் சுவை தருபவை, தமிழனுக்கு மானக் கேடானது. ஏனெனில் ஜெயலலிதாவின் ஊழலைத் தெரிந்து தெரிந்தே, ஜெ – சசி உறவின் அடிப்படைக் காரணத்தைத் தெரிந்து தெரிந்தே, ஜெயலலிதா இலவசங்களை அள்ளி வழங்குவது ஏன் என்பதைத் தெரிந்து தெரிந்தே, அம்மா என்ற அடையாளத்தை ஒரு தவறான பெண்மணிக்கு இட்டு, அவரைக் கடவுளாகச் சேவித்து, திரும்பத் திரும்ப அரியணையில் தூக்கி வைத்து அழகு பார்த்தார்கள் தமிழக வாக்காளர்கள். இப்போதாவது தாம் செய்த தனிமனித ஆராதனை எவ்வளவு பெரிய தவறு என்பது இவர்களுக்கு விளங்கியிருக்கிறதா என்பதை இன்னும் அனுமானிக்க முடியவில்லை.

அடுத்து ஒரு தேர்தல் வருமானால், ஜெயலலிதாவுக்குப் பதிலாக, வாக்காளர்கள் தமது கையில் வைத்திருக்கும் தனி மனித ஆராதனை என்ற படிமத்தை ஸ்டாலின் மீது ஏற்றி பூஜிப்பார்களா என்ற அச்சம் நடுநிலைப் பார்வையாளர்களிடம் இருக்கிறது. அடுத்தாக வரப்போகின்ற ரஜினி, கமலையும் தனிமனித ஆராதனைகளால் உச்சாணிக் கொம்பில் ஏற்றி வைத்து அவர்களிடம் இருக்கக் கூடிய செயலாற்றும் திறமையையும், நோக்கங்களையும் சிதறடித்து குறுநில மன்னர்களாக்கிக் கெடுத்து விடுவார்களோ என்ற அச்சமும் இருக்கிறது. ஓவியா என்ற மிகச் சாதாரண நடிகையிடமும், ஜிமிக்கி கமல் என்ற பாட்டுக்கு நடனமாடிய ஒரு கேரள பெண்ணிடமும் இத் தமிழ் இளைஞர்கள் காட்டும் முகநூல் பரபரப்பும் ஆராதனையும், அண்ணாந்து பார்த்து ஆராதிக்கும் இக் கேடு கெட்ட கலாசாரத்தில் இருந்து இத் தமிழர்கள் இன்னமும் விடுபட்டதாகத் தெரியவில்லை என்று சமூக ஆர்வலர்கள் வருத்தப்படுகிறார்கள்.

தமிழனின் இந்த ஆராதிக்கும் பொதுப் புத்தியால்தான், அசகாய சூரர்களான தமிழக ஆட்சியாளர்கள், நான்கு வருடங்களை அடுத்தடுத்து ‘மெஜிக் அரசியல்’ செய்வதன் மூலம் கடத்தி விடலாம் என்ற நம்பிக்கையுடன் காய் நகர்த்தி வருகிறார்கள்.

ஜெலலிதா மறைந்ததும், அரசியலுடன் எந்த நேரடி சம்பந்தமும் இல்லாத சசிகலாவை, ‘இவரது தோழி அவர்’ என்ற ஒரே காரணத்தினால், கட்சியின் பொதுச் செயலாளராக்கியவர்கள் தான் பன்னீரும் எடப்பாடியும், சசிகலாவின் காலில் விழுந்து விழுந்து இவர்கள் அவரை ஆராதித்தார்கள் என்றால் கூட்டுக்கொள்ளை பங்காளிகள் என்பதைத்தவிர வேறு விசேட காரணங்கள் ஏதும் இருந்திருக்க முடியுமா? பின்னர் தினகரன் துணைப் பொதுச் செயலாளரானதற்கும் அவரிடம் விழுந்து விழுந்து ஆசி பெற்றதற்கும் ஊழல் என்பதைத்தவிர வேறு காரணம் நிச்சயம் இருக்க முடியாது.

சசிகலா இன்று சிறை செல்லாது இருந்திருந்தால் இவர்கள் அனைவருமே இவர் காலடியில்தான் இருந்திருப்பார்கள். ஏனெனில் இவர்களின் மொத்தக் குடுமியும் சசிகலாவின் கைகளிலேயே இருந்தது. சசிகலா சிறை சென்ற பின்னரேயே, சசிகுடும்பத்துக்கு மக்களிடம் செல்வாக்குக் கிடையாது என்பது புரிந்து பின்னர், ஜெயலலிதாவின் ‘ஆவி’யுடன் பேசுகிறார் பன்னீர். தனி வழிப் போகிறார். எடப்பாடியின் ஆடசியை ஊழல் ஆட்சி என்கிறார். அச் சமயத்தில் தினகரன் எடப்பாடிக்கு ஆதரவாக நிற்கிறார்.

எடப்பாடியின் அணியை சாய்க்க இயலாது என்பதைக் கண்டு கொண்ட பின்னரேயே, மோடியின் விருப்பத்துக்குரியவராக தினகரன் இல்லை என்பது புரிந்ததுமே எடப்பாடியும் பன்னீரும் இணைகிறார்கள். இத்தனையையும் பின்நின்று இயக்குவது அவர்கள் புரிந்திருக்கும் ஊழல்களும் மோசடிகளும் தான். எனினும் வெண்ணெய் திரளும் போது தாழி உடைந்ததைப் போல 19 சட்ட மன்ற உறுப்பினர்களை தினகரன் ‘கடத்தி’க் கொண்டு போனதோடு, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுமானால் தி.மு.கவுடன் இணைந்து ஆட்சியைக் கவிழ்க்கவே செய்வேன் என ‘அடிபட்ட புலி’ யான தினகரன் உண்மையாகவே மிரட்டல் விடுத்த பின்னரேயே அந்த 19 சட்ட மன்ற உறுப்பினர்களையும் தகுதிநீக்கம் செய்து சட்ட சபையில் இருந்து வெளியேற்றுவது என்ற முடிவை எடப்பாடி எடுக்க வேண்டியதாயிற்று.

சபாநாயகர் தனபால் ஆரம்பத்தில் இதை விரும்பவில்லையானாலும் தனது இருப்புக்கே ஆபத்தாகிவிடுமே என்ற அச்சத்தின் பேரிலும், அம்மா போதித்த செம்மறித்தனமும் சேர்ந்து கொள்ளவும், தினகரன் ஆதரவு சட்ட மன்ற உறுப்பினர்களான 18 பேரை (ஒருவர் மனம்மாறி அணி மாறினார்) அவர்களின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியிருக்கிறார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட செய்தி வெளியான உடனேயே, இதை எதிர்பார்த்திருந்த டி.டி.வி தினகரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் இந் நடவடிக்கையை எதிர்த்து மனு தாக்கல் செய்தார். மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், சபாநாயகரின் உத்தரவு அப்படி அமுலில் இருக்கும் என்று தெரிவித்ததோடு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் மற்றும் இடைத் தேர்தல் நடத்துமாறு தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்தல் விடுப்பதையும் தடை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெரும்பாலும் இம்மனு மீதான இறுதித் தீர்ப்பு அக்டோபர் முதல் வாரம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முற்றிலும் சட்டம், விதிகள் சம்பந்தப்பட்டது என்பதால் அனேகமாக தினகரனுக்கு சார்பாக தீர்ப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் இதே மாதிரியான வழக்குகளில் அளிக்கப்பட்ட தீர்ப்புகள் முன் உதாரணங்களாக உள்ளன. தீர்ப்பு சபாநாயகருக்கு சாதகமானால், ஊழலுக்கு ஆயுள் கெட்டி என்று தான் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும். 

Comments