​கைப்பொம்மையா.? | தினகரன் வாரமஞ்சரி

​கைப்பொம்மையா.?

கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்...  
யாழ் பல்கலைக்கழகம்   

 

ஐக்கிய நாடுகள் சபையின் 72வது கூட்டத்தொடரில் உலகத் தலைவர்களின் கவனம் குவிந்துள்ளது. அமெரிக்க நாட்டுத் தலைவர் உட்பட உலகத்தலைவர்கள் ஒன்றுகூடி உரையாற்றி எதிர்கால உலகத்தைத் தயார்படுத்திக் கொண்டு செயல்படுகின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தில் ஐ.நா.சபையின் பங்கு என்னவாக அமைந்தது என நோக்குவதே இக் கட்டுரையின் பிரதான இலக்கு.

1945 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஐ.நா.சபை இரண்டாம் உலக யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டுவரும் விதத்தில் உருவானது. இனிவரும் உலகத்தை சமாதானமானதாக அமைக்கும் விதத்தில் ஐ.நா.வின் தோற்றம் அமைந்து யுத்தத்தினை தடுக்கும் விதத்திலும் நாடுகளின் அமையத்தின் தோல்வியிலிருந்து விடுபடும் விதத்தில் உருவாக்கப்பட்டதே ஐ.நா.சபை.

ஆரம்பத்தில் உலகத்தை ஒன்றிணைப்பதை கடந்து மீள யுத்தத்தை தடுக்கவும் இடது வலது என்கின்ற பிரிவினையைக் கையாளவும் உலகத்தினை சமநிலைக்குள் வைத்திருக்கவும் முன்னெடுத்த அமைப்பாக விளங்கியது. காலப்போக்கில் அரசுகளின் தேவைகளும் நலன்களும் அதிகரிக்க, அதற்கேற்ற வகையில் சட்ட வரைபுகளையும் சர்வதேச சட்டங்களையும் தயார் செய்ய ஆரம்பித்தது.

மனித உரிமையையும் அரசியல் மற்றும் சிவில் உரிமைகளையும் முதன்மைப்படுத்திய ஐ.நா.சபை மனிதாபிமானச் சட்டத்தினையும் சிறுவர் பெண்கள் மாற்று வலுவுள்ளோர் முதியோர் எனச் சர்வதேச வரைபுகளின் முக்கியத்துவத்தினை உணர்ந்து விரிவாக்கம் செய்ய ஆரம்பித்தது. இதனால் வெற்றிகரமான சர்வதேச சட்டவரைபு முதன்மைப்படுத்தப்பட்டு உள்நாட்டுச் சட்டங்களால் அரசுகளின் இறைமையினைப் பலவீனப்படுத்தி ஆதிக்கம் செய்ய ஆரம்பித்தது. அவ்வகை ஆதிக்கத்தினை மேற்குலகம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு கீழைத்தேச அரசுகளை கட்டுப்படுத்தும் ஆயுதமாக ஐ.நா.வை கையாண்டனர். ஐ.நா.வை முன்னிறுத்திக் கொண்டு கீழைத் தேச நாடுகளின் இறைமையினை தமது ஆதிக்கத்திற்கு கீழ் அமெரிக்கா உள்ளடங்கிய மேற்குலகம் வைத்திருக்க முயன்று வெற்றிகண்டது.

குறிப்பாகப் பனிப்போர் வரையும் சோஸலிச அணியின் நிர்ப்பந்தங்களால் நாடுகளையோ அவற்றின் தேசிய இனங்களையோ சிறுபான்மை தேசிய இனங்களையோ அழிக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. ஆனால், பனிப்போர் முடிந்து சோவியத் யூனியனும் அதன் முகாமும் தகர்ந்த பின்பு அமெரிக்கா ஐ.நா.சபையைப் பொம்மையாகப் பாவித்து செயல்பட ஆரம்பித்தது. அத்தகைய நிலையிலே தேசிய இனங்களும் அவற்றின் ஆயுதப் போராட்டங்களும் அதிகரிக்கப்பட்டதுடன் அமெரிக்காவுக்கு விரோதமான தலைமைத்துவங்கள் கொன்றொழிக்கப்பட்டன.

அமெரிக்காவின் விருப்புக்கு உட்பட்டே உலகம் இணங்க வேண்டும் எனும் நிபந்தனையை ஐ.நா.வினூடாக மேற்குலகம் நிறைவு செய்தது. புதிய உலக ஒழுங்கின் பிற்பாடு பயங்கரவாதம் புதிய சித்தாந்தமாக பெருமெடுப்பில் அமெரிக்காவால் வளர்க்கப்பட்டது. அதன் அறுவடையை அமெரிக்காவே மேற்கொண்டது. இதற்கு மூலமான ஆதாரத்தை ஏற்படுத்தியது ஐ.நா.சபையாகும்.

அரசுகளின் அதிகார ஆசைக்கும் வெறிக்குள்ளும் அகப்பட்ட ஐ.நா.சபை தனித்து இயங்க முடியாத நிலைக்குள் அகப்பட்டுள்ளது. தனது இலக்குகளையும் நோக்கங்களையும் எல்லையற்ற விதத்தில் உருவாக்கி அவற்றை சட்ட வடிவமாக வரையறுத்துள்ளது அதனால், அதிக பயனும் மாற்றமும் உலகத்துக்குரியதாக ஆக்கும் வல்லமையும் காணப்படுகிறது.

குறிப்பாக மனித உரிமையை அடிப்படையாகக் கொண்டு உலகத்திலுள்ள மனித சமூகத்தினை முதன்மைப் படுத்தி ஐ.நா.சபை எடுத்த அனைத்து முயற்சிகளையும் அமெரிக்கா முறியடித்துள்ளது. அமெரிக்காவின் நலனுக்குட்பட்ட அனைத்து அம்சங்களை அடைவதற்காக அமெரிக்கா மீறும் மனித உரிமைகளை மறைத்துக்கொண்டு செயல்படும் ஐ.நா.சபை அதன் தனித்துவத்தினை அழித்துள்ளது.

இவ்வாறே ஐ.நாவின் பெயரால் பல யுத்தங்கள் அமெரிக்க நலனுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாதுகாப்புச் சபையின் பலத்தையும் மேற்குலகம் தமக்குச் சாதகமாக வைத்துக் கொள்வதும்அதிக மாற்றம் ஏற்படாது செயல்படுவதும் கடந்த ஒரு தசாப்தமாக நிகழும் ஐ.நா.அரசியலாகும். பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்புரிமையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னாள் பொதுச் செயலாளர் கொபி அனான் முன்வைத்த போதும் அதனைக் கடைப்பிடிக்க அரசுகள் மறுத்துவரும் நிரல் சமூகத்தை மேற்குலகத்குரியதாக அமைந்துள்ளதை அவதானிக்கலாம்.

குறிப்பாக கொபி அனான் இந்தியா, ஜப்பான், ஜேர்மனி, பிறேசில், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளை மேலாதிக்கமாகக் கொண்டதாக ஐ.நா.சபையின் பாதுகாப்புச் சபையை அமைக்க வேண்டுமெனும் சீர் திருத்தத்தினை 2000 ஆண்டுகளில் முன்வைத்தார். அத்தகைய திட்டத்தினை நிரந்தர உறுப்புரிமையுடைய நாடுகளே நிராகரிக்கும் சூழல் ஏற்பட, அவரது சீர் திருத்தம் கைவிடப்பட்டது. அணுவாயுத அரசியலும் அமெரிக்காவினதும் மேற்கினது நலனுக்குள் அகப்பட்டதனால் ஐ.நா.சபையால் எதனையும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. வடகொரியா விவகாரம் பெரியளவில் எழுச்சி அடைந்தமைக்குக் காரணம் சரியான அணுவாயுத தடைக்கான உடன் படிக்கை சரிவர கையாளப் படவில்லை என்பதேயாகும். வல்லரசுகளின் நலன்களுக்குள் கட்டுப்பட்டே அணுவாயுத அரசியலைப் பிரயோகப் படுத்தும் ஐ.நா.வின் நடவடிக்கை பக்கச்சார்பானது என்ற குற்றச்சாட்டினை ஏற்படுத்தியுள்ளது.

2000 ஆண்டு முதல் சுற்றுச்சூழல் சார்ந்த அனேக உடன்படிக்கைகளை ஐ.நா.சபை த​ைலமை தாங்கி செயல்படுத்திய போதும் ஐப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளது ஒத்துழைப்பின்மையால் அதன் முழுமை சாத்தியமற்றுப்போயுள்ளது. சமகாலத்தில் பாரிஸ் காலநிலை உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேறியமை பெரும் ஏமாற்றத்தை ஐ.நா.வுக்கு ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலத்தில் கெயாப்டே, கொப்பன்கேகன் மாநாடுகள் போன்றே பாரிஸ் மகா நாட்டுக்கும் ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஐ.நா.மகாநாட்டுக்கு முன்பு அதனை மிக மோசமாக விமர்சிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் வருகை தந்து உரையாற்றியுள்ளார். ஏறக்குறைய வடகொரிய மீதான தாக்குதலைப்பற்றிய உரையாகவே அது அமைந்திருந்தது. மீண்டும் ஓரு உலக பொலிஸ் காரனாக செயற்படவே அமெரிக்கா விரும்புகின்றதென்பதை ட்ரம்ப் உரையில் வெளிப்படுத்தியுள்ளார்.

2017 இதற்கான மிகப்பிரதான தொனிப்பொருளானது, உலகின் அனைத்து மனிதர்களும் கௌரவமாகவும் சமாதானமாகவும் வாழ்வதற்காக எடுக்கும் முயற்சியாகும் என்பதாக அமைந்துள்ளது. அதன் கீழ் உலக சமாதானம் நிலையான அபிவிருத்திக்கான 2030 இலக்கு வைத்தல், காலநிலை மாற்றத்தை எதிர் கொள்ளல், சிறுவர்கள் உரிமைகளைப் பராமரித்தல் அகதிகள் இடம் பெயர்வு பற்றியதாகவும் முதன்மை கொடுத்து உரிமைகள் வெளியிடப்பட்டன.

ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரை காலநிலை மாற்றம் தொடர்பில் அதிகக் கரிசனைையை வெளிப்படுத்தினர். குறிப்பாக ஜேர்மன் தலைவர் காலநிலை மாற்றம் தொடர்பில் அமெரிக்காவுடன் அணுகுமுறையில் புதிய நிலைப்பாட்டை எதிர்பார்த்ததுடன் ஏனைய நாடுகளின் ஒத்துழைப்புக்கு நன்றி உடையவர்களாகவும் காணப்பட்டனர்.

இம் மகாநாட்டில் சீனா, ரஷ்சியா, இந்தியா என்பன காலநிலை மாற்றத்திற்கான ஆதரவுடன் ஏனைய விடயங்களில் அகீதமான கவனத்தினைக் கொள்ளாத போக்கும் அமெரிக்காவை முதன்மைப்படுத்துவதாக ஐ.நா.கூட்டத் தொடர் அமைந்தது.

பொதுச்சபை பாதுகாப்புகளைப் பொருளாதார சமூக சபை சர்வதேச நீதிமன்றம் மனித உரிமை அமையம் என்பவற்றுடன் நூற்றுக்கணக்கான உரிமை சார்ந்தும் சட்டம் சார்ந்தும் மனித மேம்பாடு சார்ந்தும் உலக அமைதி பாதுகாப்பு ஆயதக்கட்டுப்பாடு பரவல் தடுப்பு மனிதாபிமான நடவடிக்கை எனப் பாரிய திட்டமிடலையும் அமுலாக்கள் நிறுவனங்களையும் கொண்டு இயக்குகிறது. ஐ.நா.வின் அரசியல் இராணுவ நகர்வுகளையும் பொருளாதார திறனையும் சேர்த்து மேற்குலகம் உள்ளடங்களாக அமெரிக்கா ஆதிக்கம் செய்து வருகின்றமையே ஐ.நா மீதான அதிருப்திக்கு காரணமாகும். பக்கச்சார்பாக ஐ.நா. செயல்படுவதென்பது பொதுவான விமர்சனமாக அமைந்துவருகிறது.

எனவே உலகளாவிய அமைப்பான ஐ.நா.வின் பங்கினைத் தனியொரு நாடும் அதன் மேற்குலக நலன்களும் தமக்குரியதாக ஆக்குவதென்பது அபாயகரமானதே. அதனைத் தவிர்க்கவும் சமவலுவுடைய அரசுகள் எழுச்சி பெறுவது தவிர்க்க முடியாத தேவையாகும். அமெரிக்காவின் பொம்மையாக ஐ.நா.செயல்படும் வரை அதனால் முன்வைக்கப்படும் எந்த வலுவான திட்டமும் வெற்றிகரமானதாக அமையாது. 

 

Comments