![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2017/10/01/f0_0.jpg?itok=JIopimMH)
கலாநிதி
கே. ரீ. கணேசலிங்கம்
ருபத்தியோராம் நூற்றாண்டில் தனியரசு அமைப்பதற்கான ஓர் அணுகுமுறையாக மக்கள் வாக்கெடுப்பு அமைந்து வருகிறது. இது ஜனநாயகத் தன்மையில் ஏற்பட்டு வரும் பிந்திய அபிவிருத்தியாகக் கொள்ளப்படலாம். அத்தகைய வரிசையில் 2014 இல் ஸ்கொட்லாந்திலும், 2011 தென் சூடானிலும், 1995 இல் கனடாவின் கியூபெக் மாநிலத்திலும் பெரியளவான எதிர்பார்ப்பினை சிறுபாண்மையினர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இந்த வரிசையில் குர்திஸ் மக்களின் தனியரசுக்கான அல்லது சுதந்திர நாட்டுக்கான மக்கள் வாக்கெடுப்பின் தனித்துவங்களை நோக்குவோம்.
குர்திஸ் மக்களின் தனியரசுக்கான போராட்டம் பல நூற்றாண்டுகளை கடந்தது. குர்திஸ் மக்களின் வரலாறும், வாழ்வும் அதிக நெருக்கடிகளைக் கொண்டது. குர்திஸ் இனக்குழுமம் ஓட்டமன் சாம்ராஜ்சியத்தின் ஓர் அலகில் தனித்துவமாக வாழ்ந்தாலும் முடியாட்சி பாரம்பரியத்தினால் சுதேசிய அடையாளத்தையும், தனித்துவத்தை பேண முடியாதவர்களாக விளங்கினர் மேற்காசியாவின் ஈரான், சிரியா, துருக்கி ஆகிய நாடுகளில் சிதறி வாழ்ந்த போதும் அந்தந்த நாடுகளின் குர்துக்களின் ஒருமைப்பாட்டை பேணிவந்தனர். காலப்போக்கில் இந்நாடுகளின் பகுதிகளை உள்ளடக்கி தனிநாட்டுக்கான கோரிக்கையை முன்வைத்து போராடிவந்தனர். அதனால் அனைத்து நாடுகளாலும் ஒடுக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்டு, சித்திரவதையும், படுகொலைக்கும் உள்ளாக்கப்பட்டனர். இது இருபதாம் நுற்றாண்டு வரையும் அனுபவித்தனர். இத்தகைய துயரம் அவர்கள் வாழ்ந்த எல்லா நாடுகளிலும் எதிர்கொண்டனர். 1970 களில் மட்டும் ஈராக்கின் அல் அன்பால் பிராந்தியத்தில் மட்டும் 18,2000 குர்திஸ்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஈராக் மீதான அமொிக்க கூட்டுப்படையின் படையெடுப்புக்கு பின்னர் குர்திஸ்தான் பிராந்தியம் தன்னாட்சிப் பகுதியாக மாறியது.
ஏனைய நாடுகளை விட ஈராக் அவர்களுக்கு சாதகமான ஜனநாயகச் சூழலை ஏற்படுத்தியது. குர்துக்கள் சிரியா, ஈரான், ஈராக், மற்றும் துருக்கியை உள்ளடக்கி குர்திஸ்தான் அரசை உருவாக்க முயற்சித்ததை ஈராக்கில் சதாம் ஹுசைனின் வீழ்ச்சிக்குப் பின்னர் சாத்தியப்படுத்த திட்டமிட்டனர்.
இதனடிப்படையிலேயே கடந்த செப்ரெம்பர் 25 (2017) ஆம் திகதி தனியரசுக்கான பிரகடனத்தின் கீழ் பொது வாக்கெடுப்பொன்றினை நிகழ்த்தியது அதில் 92 சதவீதமான மக்கள் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
வாக்களிப்புக்கு பின்னர் ஈராக் அரசாங்கம் அதிருப்தி அடைந்துள்ளது. வாக்கெடுப்பினை இரத்து செய்யுமாறும், ஈராக்கில் வசிக்கும் குர்துகளுக்குரிய உரிமையும், சுதந்திரமும் வழங்கப்படுமென அறிவித்துள்ளதுடன், இராணுவத்தினை குர்திஸ்தான் பகுதியை நோக்கி நகர்த்தி நகர்த்தி வருகிறது. ஈராக் பாராளுமன்றத்தில் பிரதமர் ஹய்டர் அல் அஹாடி உரையாற்றும் போது அப்பகுதிக்கு உடனடியாக இராணுவத்தினை அனுப்புவதாக உறுதியளித்தார்.
அதே நேரம் அப்பகுதியில் வாழும் குர்திஸ்தானியர்கள் ஈராக் பிரஜைகளுடன் தாம் போரிடப் போவதில்லை என அறிவித்துள்ளன. குர்திஸ் பிராந்திய தலைவரான மேசாட் பஸானி வாக்கெடுப்புக்கு பலத்த ஆதரவாக செயல்பட்டதுடன் ஈராக்கிலிருந்து பிரிந்து செல்வதற்கான பேச்சு வார்த்தையில் ஈராக்குடன் மேற்கொள்ள கோரிக்கை விடுத்திருந்தார்.
இதே நேரம் ஈராக்கின் அரசியல் கட்சிகளும் தலைவர்களும் இராணுவ நடவடிக்கையை குர்துகளுக்கு எதிராக மேற்கொள்ளுமாறும் குறிப்பாக குர்து பிராந்தியத்தின் உடனடி இராணுவ நடவடிக்கைக்கு அனுமதியளித்துள்ளனர். தேசிய பாராளுமன்றமும் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. அதாவது 13 வது தீர்வுக்கு அமைவானதாக தனிநாட்டுக்கான வாக்கெடுப்பு எதிராக அதனை நிராகரித்து செயல்ப்படுமாறு குறிப்பிட்டுள்ளது.
குர்துகள் வாழும் பிரதேசம் எண்ணெய் வளம் பொருந்தியதாக அமைந்திருப்பதுடன் குர்திஸ்களே துருக்கியுடன் எண்ணெய் குழாய்கள் அமைத்து அதன் மூலம் ஏற்றுமதி செய்கின்றன. குறிப்பாக Mediterranean துறைமுகமூடாக எண்ணெய் ஏற்றுமதியை சாத்தியப்படுத்தி வருகின்றது. இதனால் தெளிவான பொருளாதார வாய்ப்பும் வளமும் காணப்படுகின்றது. எண்ணெய் ஏற்றுமதியால் ஆண்டு ஒன்றுக்கு 7 பில்லியன் ஸ்ரேலிங் பவுண் வருமானமாக கிடைக்கிறது.
குர்துக்களது மொழி, பண்பாட்டுத்தன்மைகள், தொடர்ச்சியாவும், அந்தந்த நாடுகளுக்குள் கூட்டாகவும் வாழும் பிரதேசத்தினை தக்க வைத்துக்கொள்ளும் அரசியல் தலைமையும் காணப்படுகின்றன. வாய்ப்புக்களை சாியாகப் பயன்படுத்தும் அரசியல் தலைவர்கள் குர்திஸ்களிடம் காணப்படும் சிறந்த பண்பாடாகும். இதுவே அவர்களது சுய நிர்ணய வாக்கெடுப்புக்கான முடிபுகளுக்கு காரணமாக அமைந்தது.
இதே நேரம் மேற்காசிய நாடுகளான ஈராக், ஈரான், துருக்கி, போன்ற நாடுகள் மட்டுமன்றி ரஷ்யா, இஸ்ரேல், அமெரிக்கா என்பனவும் பொது வாக்கெடுப்பினை நிராகரித்துள்ளன. துருக்கி, ஈராக் என்பன பாரிய முரண்பாடுடைய தீர்மானங்களை முன்னெடுக்க முயலுகின்றன. இது குருத்திஸ் விடுதலைக்கான சர்வதேசத்தின் பங்கெடுப்பினை தேடும் சந்தர்ப்பமாகும். அதனூடாக ஏனைய நாடுகளிலுள்ள குருதிஸ் மக்களும் யூதர்கள் போன்று ஒன்றிணைந்து குர்திஸ்தானை பலப்படுத்தும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
சிறுபான்மை இனங்களுக்கு கிடைத்துள்ள புதிய வாய்ப்பாக பொது வாக்கெடுப்பு அமைந்துள்ளது. இதனை சரிவர அடக்குமுறைக்கும் அடிமைத் தனத்துக்குள்ளும் அகப்பட்டுள்ள சிறுபான்மை இனங்கள் பொது வாக்கெடுப்புக்கு செல்வதனை தவிர வேறு எந்த வாய்ப்பும் ஏற்படப் போவதில்லை.
பெரும்பான்மை இனங்களின் அரசியல் அதிகாரத்துவமும், ஆதிக்கமும் தொடர்ச்சியான ஏமாற்றமும் சுயாட்சிக்கான வாய்ப்புகளை அதிகரிக்க செய்யவுள்ளது. ஐரோப்பாவில் கற்ரலோனியா போன்று, மேற்காசியாவில் குர்திஸ் மக்களின் பொது வாக்கெடுப்பு சிறுபான்மை இனங்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்துள்ளது.
இதனை இலங்கைத் தமிழரும் பின்பற்ற வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் உள்ளார்களா என்பது தேடப்பட வேண்டிய அம்சமாகும். இதுவரை காலமும் நம்பிக்கையின்மையால் கட்டிவளர்க்கப்பட்ட இலங்கைத் தமிழர் தமது சுயாட்சிக்கான வாய்ப்புக்களை சா்வதேச அனுபவங்களைக் கொண்டு கையாளுதல் பொருத்தமானதாக அமையும்.
எனவே குருதிஸ் மக்களின் எழுச்சிகரமான பொதுவாக்கெடுப்பானது சர்வதேச மட்டத்தில் அதிக அதிருப்தியை வல்லரசுகளுக்கு ஏற்படுத்தும். ஆனால் சிறுபான்மையினருடன் பெரும்பான்மை அரசுகள் கடைப்பிடித்துவரும் கொள்கையில் மாற்றம் செய்ய வேண்டும் என்பது தவிர்க்க முடியாதது. அவ்வகை வாய்ப்புக்களை மேற்கொள்ள தவறுமாறின் சிறுபான்மையினர் பொதுவாக்கெடுப்புக்கு செல்லவும், அதன் பயன்பாடுகளை அனுபவிக்கவும் தயாராகிவிட்டனர். இவை எதுவும் சர்வதேச விதிகளுக்கு முரணானவை அல்ல.
குர்திஸ் விடுதலைக்கான போராட்டம் பல நூற்றாண்டுகளை கடந்தது. ஒட்டமன் சாம்ராஜ்ஜியம் சரிந்தபோது அந்தந்த நிலப்பகுதியில் வாழ்ந்தவர்கள் அந்தந்த நாடுகளின் பிரைஜகளானார்கள். அதனால் அவர்கள் வாழ்ந்த நாட்டின் எல்லைகளைக் கொண்டு குர்திஸ்தான் தனிநாட்டி கோரினர். தற்போது ஈராக்கில் அவர்கள் ஏற்படுத்தியிருக்கும் பொதுவாக்கெடுப்பும் சுயாட்சி அறிவிப்பும் அவர்களது போராட்டத்தின் புதிய அணுகு முறையாகும். அதனைப் பின்பற்றி சிறுபான்மை இனங்கள் செயல்படுவது அவற்றின் எதிர்கால இருப்புக்கு வாய்ப்பானதாக அமையும்.