![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2017/10/08/w0.jpg?itok=dGwGaC27)
கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்...
யாழ் பல்கலைக்கழகம்
உலகிலுள்ள சிறுபான்மை இனங்களின் விடுதலைக்கான புதிய உத்தியாக பொதுவாக்கெடுப்பு நடாத்தப்படுகிறது. இது பெருமளவுக்கு பிரிவினையாகவே உச்சரிக்கப்படுகிறது. இதன் முதல் அடையாளமாக கடந்த செப்ரெம்பர் 25 ஆம் திகதி குர்திஸ் இன ஈராக் வாழ் மக்கள் பிரிந்து செல்வதற்கான 92 சதவீத ஆணையை வழங்கினர். அவ்வாறே ஒக்டோபர் 01 ஆம் திகதி ஸ்பெயின் நாட்டிலிருந்து கற்றரலன் மாகாணம் 90 சதவீத மக்களின் ஆதரவுடன் பிரிந்து செல்வதற்கான ஒப்புதலை தந்துள்ளது. இக்கட்டுரை கற்றலின் மாகாண மக்களது பிரிவினைக்கான ஒப்புதலின் யதார்த்தத்தினை தேடுவதாகும்.
ஸ்பெயின் நாட்டின் ஒரு மாகாணமாக விளங்கும் கற்றலினா நான்கு பிரதான பிரிவுகளைக் கொண்டது.பர்சிலோனா கிரோனா லிலிடா மற்றும் தாரக்கோனா என்பனவாகும். இதில் பர்சிலோனா மிகப் பெரிய நகரமாகவும் கற்றலினாவின் நகரமாகவும் விளங்குகிறது.ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏழாவது மிகப் பெரிய மக்கள் தொகையுடைய நகரமாகவும் விளங்குகிறது. இந்த மக்கள் நீண்ட காலமாக பிரிந்து செல்வதற்கான கோரிக்கையுடன் பயணிக்கின்றது. அதற்கான முயற்சியில் பல ஆண்டுகள் முயன்றனர். 2003 முதல் 2017 வரை பல வாக்கெடுப்புக்கு திட்டமிட்டு நடாத்த முடியாத நிலையும், மக்களின் வாக்களிப்பு பலவீனமும் அவற்றை பிராந்திய ஆட்சியாளர் கைவிட்டிருந்தமையும் நடந்துள்ளது. ஏறக்குறைய 1939 – 1975 வரையான ஜெனரல் பாஸ்கோவின் சர்வாதிகார ஆட்சியினால் கற்றலினா அடிமைப்படுத்தப்பட்டிருந்தது. ஸ்பெயினின் பலமான பிடிக்குள் இயல்பான தேசிய அடையாளத்தினை சிதைத்ததுடன் மீட்சி பெறமுடியாது துயரத்துடன் கற்றலினியா காணப்பட்டது.
ஜனநாயகம், மனித உரிமை, என்பன பேசப்பட்டாலும் கற்றலினா மீது ஜெனரல் பாஸ்கோவின் அடக்குமுறை அவற்றை முற்றாகவே தகர்த்திருந்தது. ஜெனரலின் மறைவிற்குப் பின்னர் ஸ்பெயினின் அரசியலமைப்பை பெறுவதற்கான வாக்கெடுப்பை நடாத்தினர். இதில் தன்னாட்சி அதிகாரத்தை பெறுவதற்கான உடன்பாட்டிலும் அரசியல் கலாசார சுயாதீனத்தை மீட்பதிலும் வெற்றி கண்டனர்.
1978 ற்குப் பின்பு பொருளாதாரத்திலும் தொழில்துறையிலும் கணிசமான வளர்ச்சியை அடைந்தனர். அதே நேரம் 1978 ஆம் ஆண்டு ஸ்பெயினின் ஜனநாயக குடியரசின் உருவாக்கம் 1932 ஆம் ஆண்டு தன்னாடசி பிரகடனத்தை மீள கற்றலினா பெற்றுக் கொள்ள காரணமாகியது.
அதே சந்தர்ப்பத்தில் பொருளாதார பலமும் வளமும் உற்பத்தியில் பாரிய பங்கெடுப்புமுடைய பிராந்தியமாக கற்றலினா காணப்பட்டது. ஸ்பெயினின் வடகிழக்கு மாகாணமான கற்றலினா செழிப்பான பொருளாதாரத்தினால் ஸ்பெயின் அதற்கான பிரிவினனப் போராட்டத்தை நிராகரித்துவந்தது, அத்தகைய பிரிவினைக்கு எதிராக தனது இராணுவத்தினை பிரயோகிக்க முடியுமென்ற சட்டத்தையும் (151) கொண்டுள்ளது.
பிரிவினை கோரிக்கைக்கு 90 சதவீதமான ஆதரவு கிடைத்துள்ளதாக கற்றலினாவின் தலைமை கார்லஸ் புஸ்யமேசன் குறிப்பிட்டுள்ளார். ஸ்பெயினின் இராணுவ, பொலிஸ் மற்றும் அரச இயந்திரம் அதிகமான நெருக்கடியைக் கொடுத்ததினால் முழு மொத்த மக்கள் தொகையில் 42.3 சதவீதமான மக்களே வாக்கெடுப்பில் கலந்து கொண்டு தமது விருப்புக்களை நிறைவு செய்துள்ளனர். அந்த வாக்கெடுப்பில் பிரிவினைக்கு ஆம் அல்லது இல்லை என்ற விண்ணப்பமே கோரப்பட்டது. அதில் இல்லை என்று வாக்களிக்க வாய்ப்பிருந்த போதும் அதற்கான முடிவுகள் 8.04 சதவீதமாகவே காணப்படுகிறது. இதனால் கணிசமான கற்றாலனியர்களும் ஆம் என்றே வாக்களித்திருப்பார்கள். அதற்கு சூழல் தரப்பட்டால் அது சாத்தியமானதாகவே அமைந்திருக்கும்.
இத்தேர்தலை நடத்தவிடாது தடுப்பதற்காக ஏறக்குறைய நான்காயிரம் பொலிஸ்சை ஸ்பெயின் பயன்படுத்தியது. ஏறக்குறைய 400 பொதுமக்கள் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
கற்றலினா மக்கள் ஸ்பெயின் இப்படியான தடுக்கு நடவடிக்கையை மேற்கொள்ளப்போகின்றனர் என்ற செய்தியை அறிந்ததுடன் வாக்குச் சீட்டுக்களுடன் வாக்குச் சாவடிகளில் குவிந்திருந்து வாக்களித்தனர் என்பது அவர்கள் நீண்ட கால தேசிய உணர்வை பிரதிபலிக்கின்றது. அது மட்டுமன்றி 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குச் சீட்டுகளை ஸ்பெயின் பொலிஸார் கைப்பற்றி வீணடித்துமுள்ளனர். அனேகமானவர்கள் வாக்களிக்க விடாது தடுக்கப்பட்டனர். அரசும், அரசியலமைப்பு நீதிமன்றமும் பொது வாக்கெடுப்புக்கு அனுமதியளிக்காமையை மேற்கொண்டதுடன் வாக்கெடுப்பை தடுக்க அதிகமான நடவடிக்கைகளை கையாண்டனர்.
கணிசமான இடங்களில் வாக்குப்பெட்டிகளையும், வாக்குச் சீட்டுக்ளையும் பொலிஸார் கைப்பற்றி அழித்தனர். வாக்கு சீட்டுக்களுடன் நின்ற மக்கள் மீது தீவிர நடவடிக்கை எடுத்தனர். இதனால் மாகாண அரசு வெளியிட்ட அறிக்கை எந்த வாக்குச் சாவடியிலும் வாக்களிக்கமுடியுமென தெரியப்படுத்தியது. இதனை எல்லாம் கடந்து மிகத் தீவிரமான உணர்வுடன் தனியாக பிரிந்து செல்ல கற்றலினா மக்கள் முடிவெடுத்துள்ளனர்.
மக்களது முடிவுக்கு பின்னர் ஸ்பெயின் அரசின் தொடர்ச்சியான பாரபட்சம், அவர்களது உரிமை மறுப்பு, வளங்களை சரியாக பங்கிடாமை, போதிய சுயாட்சி வழங்கப்பட்ட போதும் அவர்கள் மீதான அடக்குமுறையை தொடர்ந்தமை என்பன காரணங்களாக சொல்லிக் கொள்ள முடியும்.
உலகிலுள்ள சிறுபான்மை தேசிய இனங்களுக்கு மீளவுமொரு மீட்சியும் வாய்ப்பு உலக அரங்கில் ஏற்பட்டுள்ளது. இதனை ஏனைய சிறுபான்மை தேசிய இனங்கள் அனுபவமாகக் கொண்டு செயல்படுத்தல் அவசியமானது. இந்த சந்தர்ப்பத்தில் கற்றலினாவின் அரசியல் தலைமையின் முடிவு மிக சிறந்ததாகவும், உத்தி நிறைந்ததாகவுமே கொள்ளப்பட வேண்டும். அதற்காக கார்லஸ் பாராட்டப்படவேண்டியவர். எப்படி குருதிஸ் தலைமையோ அவ்வாறே கார்லஸ்ன் நடவடிக்கையும் அமைந்துள்ளது.
குறிப்பாக ஐரோப்பிய யூனியன் நெருக்கடி, பிரித்தானிய வெளியேற்றம், கிரேக்கத்தின் பொருளாதார நெருக்கடி, அகதிகள் பற்றிய ஐரோப்பியக் கொள்கையின் பதற்றம், ஐரோப்பிய தேசிய வாதத்தின் மீள் எழுச்சி என்பன கற்றலினாவை விடுதலைப்பாதைக்கு தூண்டிய விடயங்களாகும். பிரித்தானியர் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதற்கு எடுத்த பொதுவாக்கெடுப்பே மிகப்பிரதான ஐரோப்பிய மாற்றங்களுக்கு காரணமாக கொள்ளமுடியும். இதனை சரியானதும் சாதுரியமானதாகவும் பயன்படுத்தும் தலைமைத்துவங்கள் சிறுபான்மை தேசிய விடுதலைக்கு வலுச்சேர்க்கின்றன. இவ்வாறு ஐரோப்பாவுக்கு புதிய அரசுகளுக்கான கோரிக்கை வலுவானது தவிர்க்க முடியாததாக மாறுகின்ற காலப்பகுதியாக எழுச்சி பெறுவது தவிர்க்க முடியாததாகும்.
ஸ்பெயின் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தி விடுதலையை தடுக்க திட்டமிடுகிறது. பொது வாக்கொடுப்பினை செலலாது என அறிவித்ததன் மூலம் அதன் முடிவினை அறிவித்துள்ளது. ஆனால் ஐரோப்பாவுக்குள் எழுந்திருக்கும் தேசிய வாத உணர்வானது மேலும் அரசுகளை உருக்க முனையும் என்பதையே கற்றலினாவின் நடவடிக்கை வெளிப்படுத்தியுள்ளது.