ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் | தினகரன் வாரமஞ்சரி

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில்

எதிர்வரும் 23ஆம் திகதி டில்லி விசேட நீதிமன்றம் 2ஜி வழக்கின் தீர்ப்பைக் கூறவிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல், தமிழகத்தில் தேர்தல் வெறியோடு, காத்திருக்கும் தி.மு.கவுக்கு மிக முக்கியமானது. ஏனெனில் அ.தி.மு.க.வை ஊழல், முறைகேடு, துஷ்பிரயோகம் என்பனவற்றின் ஒட்டுமொத்த உருவமாக உருவகித்து அதில் பெருமளவு வெற்றியும் பெற்றிருக்கும் தி.மு.கவுக்கு ஊழல், முறைகேடு என்ற சாயத்தைப் பூசி, திராவிடக் கட்சிகள் என்றாலேயே அவை ஊழலின ஊற்றுக் கண்கள்தான் என்ற முத்திரையை குத்தும் வகையில் தீர்ப்பு அமைந்து விடுமோ என்ற கிலி தி.மு.கவுக்கு ஏற்பட்டிருப்பதில் வியப்பிருக்க முடியாதுதான்.

முன்னாள் தி.மு.க மத்திய அமைச்சர் ஏ.ராஜா மீதான குற்றச்சாட்டுகள் உண்மையென நிரூபிக்கப்படுமானால் தற்போது தனியாக ஊழல் குட்டையில் மூழ்கித் திளைக்கும் அ.தி.மு.கவுக்கு சகபாடியாக தி.மு.கவும் கிடைத்திருப்பதையிட்டு திருப்தி ஏற்படும்.

இவ்வழக்கு விசாரணையை அறிந்தவர்கள், 2ஜி ஊழல் வழக்கு பெருமளவில் அரசியல் காரணங்களுக்காக ஜோடிக்கப்பட்ட தென்றும் கலைஞரின் பாரியார் தயாளு அம்மாளும் கனிமொழியும் வழக்கில் சிக்க வைக்கப்பட்டவர்கள் என்பதால் அவர்கள் விடுதலை செய்யப்படுவதற்கான சாத்தியங்களே அதிகம் என்றும் கருதுகிறார்கள். ஆனால் முன்னாள் அமைச்சர் ராஜாவை பொறுத்தவரை தீர்ப்பு எவ்வாறு அமையும் என்று தெரியவில்லை. தி.மு.க தரப்பு, இவ்வழக்கு நீர்த்துப் போய் விட்டதாக நினைக்கிறது. தி.மு.கவுக்கு வழக்கு சாதகமாக அமையுமானால், அக்கினிப் பரீட்சையில் இருந்து வெளிவந்து விட்டதாகவும், அடுத்தாக தமிழகத்தில், ஆட்சி அமைக்கும் வாய்ப்பு, ‘மடிமீது வந்து விழுந்த கனியைப் போல அமையும் என்றும் தி.மு.க கருதும்.

இந்த இடத்தில்தான், நடிகர் கமல்ஹாசன் வந்து குட்டையைக் குழப்புகிறார் என்ற எரிச்சல் ஸ்டாலினுக்கு உண்டு. தமிழகத்தில் சட்ட சபைத் தேர்தல் வருமானால் தனக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் அ.தி.மு.கவை வேரடி மண்ணோடு வீழ்த்தலாம் என தி.மு.க.கருதுகிறது. இது சரியான கணக்குத்தான்.

ஏனெனில் தினகரன் – சின்னம்மா அணியினருக்கு அடுத்த தேர்தலில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு மட்டுமல்ல,கௌரவமான கூட கிடைக்கும் வாய்ப்பும் கிட்டாது. எனவே, அடுத்ததாக தி.மு.க ஆட்சி அமைத்தாலும் பரவாயில்லை; பன்னீர் எடப்பாடி அணி ஆட்சிக்கு வரவே கூடாது என்பதில் தினகரன் மிகத்தெளிவாக இருக்கிறார். தேர்தலில் அவர் தி.மு.கவுக்கு மறைமுக ஆதரவை நிச்சயமாக வழங்குவார். எனவே தி.மு.கவுக்கு வாய்ப்புகள் மிகப் பிரசாரமாகவே உள்ளன.

கமல்ஹாசனை எடுத்துக் கொண்டால், ஒரு கட்சியை உருவாக்கி எப்போது வேண்டுமானாலும் வரக் கூடிய ஒரு சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்சியைத் தயார் நிலையில் வைப்பதற்கு அவருக்கு அவகாசம் போதாது. தமிழக ஒரு பரந்த மாநிலம். எட்டுக் கோடி மக்களிடம் தன் கட்சியையும் சின்னத்தையும் கொண்டுபோய்ச் சேர்ப்பது அவ்வளவு எளிதான விடயம் அல்ல. எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்த ஆறுமாதத்தில் திண்டுக்கல் இடைத்தேர்தல் வந்தது. தன் கட்சிச் சார்பாக மாயத்தேவரை ஆவர் நிறுத்தினார். அச் சமயத்தில் ஆட்சியில் இருந்த தி.மு.க ஊழல் மலிந்த தன் நிர்வாகம் காரணமாக மக்கள் செல்வாக்கை இழந்திருந்தது. இன்றைய அ.தி.மு.க ஆட்சியைப் போல.

ஏற்கனவே தமக்கு அரசியல் ரீதியாகவும் அறிமுகமாகியிருந்த எம்.ஜி.ஆருக்கு ஆதரவு தருவதில் வாக்காளர்களுக்கு எந்தத் தயக்கமும் இருக்கவில்லை. கருணாநிதிக்கு பாடம் புகட்ட வேண்டுமானால் அவரது எதிரியான எம்.ஜி.ஆருக்கு (மாயத் தேவருக்கு) வாக்களிக்க வேண்டும் என்பதை அறிந்து வைத்திருந்ததால், திண்டுக்கல் தேர்தலில் மாயத்தேவர் அமோக வெற்றியீட்டினார்.

இப்போது நிலைமை அதுவல்ல. இப்போதும் கூட ஒரு இடைத்தேர்தல் ஆர்.கே. நகர்த் தொகுதியில் காத்திருக்கிறது. டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் அங்கு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்திரவு போட்டியிருப்பதால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மீண்டும் சூடு பிடித்துள்ளது. அ.தி.மு.க அம்மா அணி சார்பாக அங்கே தான் களமிறங்கவுள்ளதாக தினகரன் அறிவித்திருக்கிறார்.

இவ்வளவு நடந்த பின்னரும் கூட, தான் மீண்டும் வேட்பாளராகக் களமிறங்க இருப்பதாக தினகரன் அறிவித்திருப்பது அவரது தன்னம்பிக்கையையும் அபார துணிச்சலையும் காட்டுகிறது. இதே சமயம், அச் சமயத்தில் இரண்டாகப் பிரிந்து தனி அணியாக நின்ற பன்னீர்செல்வம் அணி, எம்.ஜி.ஆர் காலத்து அ.தி.மு.க பிரமுகரான மதுசூத னனை தன் வேட்பாளராக நிறுத்தியிருந்தது. எடப்பாடியுடன் இணைந்து ஒரே அணியாக மாறிவிட்ட தற்போதைய சூழலில், மதுசூதனனை எடப்பாடி - பன்னீர் தரப்பு மீண்டும் ஆர்.கே.நகர் களத்தில் இறக்குமா அல்லது எடப்பாடி விரும்பும் ஒருவரை நிறுத்துமா என்ற கேள்விக்குறி தற்போது எழுந்துள்ளது.

இதே சமயம், துணை முதல்வரான பன்னீர் செல்வம் கடந்த வாரம் திடீர்ப் பயணமாக புதுடில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஒரு மணித்தியாலயமாக அவருடன் பேசியது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களைக் கிளப்பி விட்டிருக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமியின் அணியுடன் பன்னீர் இணைந்ததற்கான பிரதான காரணங்கள் இரண்டு. இரு அணிகளும் ஒன்றுபட்டால்தான் இரட்டை இலைச் சின்னம் அந்த அணிக்குக் கிடைப்பது சாத்தியமாகும்.

தினகரன் அணியை மிகச்சிறிய அணியாக மாற்ற வேண்டுமானால் எடப்பாடியுடன் இணையவேண்டும். எடப்பாடியும் இதே கருத்தைத்தான் கொண்டிருந்தார்.

இரண்டாவது காரணம், சசிகலா குடும்பத்தை முற்று முழுதாக அரசியல் இருந்தே ஓரங்கட்ட வேண்டுமானால் இவ்விருவரும் இணைந்தேயாக வேண்டும் என இரு தரப்பினரும் கருதினர். இவை இரண்டுமே இணைப்புக்கான முக்கிய காரணங்கள். ஒரு தரப்பு அசிங்கங்களை மறுதரப்பு தோண்டி எடுத்து அப்பலப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என இரு அணிகளும் கருதியதை மூன்றாவது முக்கிய காரணமாகச் சொல்லலாம்.

இவ்வற்றின் அடிப்படையில் இவ்விரு அணிகளும் இணைந்தாலும் எடப்பாடிக்கும் பன்னீர் செல்வத்துக்கும் இடையே தீர்க்கப்படாத பல விஷயங்கள் அப்படியே தான் உள்ளன. தனது அணியினருக்கு போதிய கௌரவம் தரப்படவில்லை என்ற மனக்குறை பன்னீருக்கு உண்டு. அரசாங்கத்தில் தனக்கு திருப்தியளிக்கும் வகையில் இடம் தரப்படவில்லை என்றும் தனக்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்பு வெறுமனே பெயரளவில்தான் என்பதையும் பன்னீர் செல்வம் உணர்ந்துள்ளார். இணைந்த பின்னர், ‘பசியுடன்’ இருக்கும் தன் ஆதரவாளர்களுக்கு ‘தீனி’ போடுவதற்கான வாய்ப்புகள் தனக்கு வழங்கப்படவில்லை என்ற அங்கலாய்ப்பும் பன்னீருக்கு உண்டு.

இரட்டை இலைச் சின்னம் தொடர்பான தீர்ப்பு அ.தி.மு.க எடப்பாடி அணிக்கு சாதகமாக அமையுமானால், அதுதான் உண்மையான அ.தி.மு.க எனத் தேர்தல் ஆணையம் ஒரு முடிவுக்கு வருமானால் அதன் பின்னர் தனது நிலை என்னவாகும் என்ற நியாயமான கவலை பன்னீருக்கு உண்டு. முன்னர் ‘சுப்ரீம் லீடர்’ என்பதாக ஜெயலலிதா இருந்தார். அவரது நிழலின் கீழ் புல் பூண்டும் வளர்வது சாத்தியமில்லை.

இப்போது அனைத்து அதிகாரமும் எடப்பாடியிடம் செல்லுமானால், அவர்தன் சுயரூபத்தைக் காட்டுவாரானால் தனது நிலை அதோ கதியாகி விடும் என பன்னீர் நினைப்பது நியாயமே. ஏனெனில் ஒரு கட்சிக்குள் இன்னொரு தலைவன் இருக்க முடியாது. தனக்கு போட்டியாகவந்து விடலாம் என்ற கருணாநிதியின் அச்சமே எம்.ஜி.ஆரை வெளியேற்றியது. தான் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு விடலாம் என்ற அச்சமே காங்கிரஸை பிளந்துகொண்டு வெளியே வரும் துணிச்சலை இந்திராகாந்திக்குக் கொடுத்தது. ஜெயலலிதா என்ற பேராண்மை இல்லாததால்தானே அ.தி.மு.க நான்காக சிதறியது!

எனவே, கட்சியில் தான் பழிவாங்கப்பட்டு செல்லாக் காசாகி விடலாம் என்ற அச்சம் காரணமாகவே தன் குருநாதர் டெல்லி பாதுஷாவிடம் சரணாகதியடைந்து யோசனை பெறுவதற்கு பன்னீர் செல்வம் டில்லி சென்றார் என்று இப்பயணத்துக்கு அரசியல் விளக்கம் அளிக்கப்படுகிறது.

இது நியாயமான வியாக்கியானமாகவேபடுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இரு அணிகளையுமே தன் சட்டைப் பைக்குள் வைத்திருந்தாலும் தனக்கு விசுவாசமான அரசியல் அடிமையாகக் கருதுவது பன்னீர் செல்வத்தைத்தான்.

ஏனெனில் மூன்றாவது தடவையும் கூட அவர் தன் முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தவர். மோடிக்கு இவ்வாறானவரே தேவை. எடப்பாடியை இந்த அளவுக்கு நம்ப முடியாது. உண்மையில், பன்னீர் செல்வம் முதல்வராக நீடித்திருந்தால், தமிழகம் தற்போது போராடிக்கொண்டிருக்கும் பல பிரச்சினைகளுக்கு மத்திய அரசு தீர்வுகளை எளிதாகப் பெற்றுத் தந்திருக்கும்!

எனவே, தற்போது மத்திய அரசின் ஆலோசனைகளைப் பெற்று சென்னை திரும்பியிருக்கும் பன்னீர் செல்வம் தன்னையும் தன் விசுவாசிகளையும் காப்பாற்றிக் கொள்வதற்கான மாற்று நடவடிக்கைகளை எவ்வாறு எடுக்கப்போகிறார் என்பதை அடுத்து வரும் கிழமைகளில் பார்க்கக் கூடியதாக இருக்கும். பன்னீரிடம் இருக்கும் ஒரே பிரம்மாஸ்திரம், டெல்லி பாதுஷாவின் முழுக் கருணையும் தன்பேரில் இருக்கிறது என்று அவர் ஏற்படுத்தி இருக்கும் தோற்றம்தான்! எனவே எந்த நேரம் வேண்டுமானாலும் மரீனாவில் உள்ள அம்மா சமாதிக்குச் சென்று அம்மாவின் ஆவியுடன் பன்னீர் ஆலோசனை நடத்தலாம்!

அ.தி.மு.க விவகாரம் இப்படி இருக்க, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் கமல் எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை என்ன? என்ற எதிர்பார்ப்பு சென்னையில் எகிறி இருக்கிறது. தீபாவளிக்குப் பின்னர் அல்லது இம்மாத முடிவில் கட்சியை ஆரம்பித்துவிட்டுத்தான் சாங்கோபாங்கமாக ஆர்.கே.தேர்தல் பற்றி பேசுவாரா அல்லது சுயேச்சையாக யாரையாவது களமிறக்குவாரா என்று தெரியவில்லை. தினகரனுக்கு இவ்விடயத்தில் இருக்கும் துணிச்சல் -– தானே நேரடியாக வேட்பாளராக போட்டியிடுவது – கமலுக்கு வரும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் இது திண்டுக்கல் இடைத்தேர்தலும் அல்ல. கமல் எம்.ஜி.ஆரும் அல்ல. ஆனாலும், ஆர்.கே இடைத் தேர்தலில் ஏதாவது ஒரு வகையில் கமல் தன் இருப்பை, தன் அரசியல் பளுவை வெளிப்படுத்தியேயாக வேண்டும். அதற்கான அவசியம் உள்ளது.

அரசியல் கட்சி என்ற வகையில் அமைப்பு ரீதியாகவும் தொண்டர் பலத்திலும் நிறைவாக நிற்பது தி.மு.கவே. ஆர்.கே தொகுதியில் இன்றைக்கு ஜெயலலிதா விசுவாசத்துடன் வாக்களிப்போர் தொகை சொற்பமாகவே இருக்கும்.

ஓராண்டுக்கு முன்னர் ஜெயலலிதா ஆர்.கே. நகரில் போட்டியிட்டபோது அந்த வெற்றி பிரமாண்டமானதாக இருக்கவில்லை என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அ.தி.மு.க இன்றைக்கு கலகலத்துப்போன நிலையில் தி.மு.கவுக்கான வெற்றி வாய்ப்பே அங்கு பிரகாசமாகக் காணப்படுகிறது. ஆனாலும் கூட தன் இருப்பை வெளிப்படுத்தும் வகையில், ஒரு அக்கினிப் பரீட்சையாகத் தன் சார்பாக கமல ஒருவரை சுயேச்சை வேட்பாளராக களமிறக்கிப் பார்க்கலாம். அது தவறான அரசியல் முடிவாக இருக்காது.

கமலின் தமிழகம் தழுவிய செல்வாக்கை எடுத்துக் கொண்டால், அதைத்தன் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்வதற்கு அவர் மிகுந்த பிரயாசைப்பட வேண்டியிருக்கும். எம்.ஜி.ஆரைப் போல கமலுக்கு அரசியல் பின்புலம் இல்லை என்பதோடு எம்.ஜி.ஆரைப் போல சினமாவை இவர் திட்டமிட்ட ரீதியாகப் பயன்படுத்திக் கொள்ளவும் இல்லை.

சினமாவைத் தனது அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தத் தவறியதே சிவாஜிகணேசன் விட்ட தவறு. மக்கள் மத்தியில் கமல் பற்றி நல்ல அபிப்பிராயம் உள்ளது.

சமூகப்பணி செய்பவர், தேர்ந்த நடிகர், மனதில் பட்டதைப் பேசுபவர், சாதி எதிர்ப்புணர்வும், திராவிட சிந்தனையும், சமய மறுப்புக் கொள்கையும் கொண்ட கறுப்புச் சட்டைக்காரர் என்பது மக்களுக்குத் தெரியும். இப் பண்புகள் மக்களுக்குப் பழகிப்போன திராவிட சிந்தனைகளுடன் ஒட்டிவருபவை என்பது கமலுக்கு சாதகமான அம்சம்.

ஆனால், தி.மு.க போன்ற ஒரு வலுவான, தொண்டர் பலம் மிக்க கட்சியை எதிர்த்து நிற்பதற்கு ‘சிறந்த நடிகர், நல்லவர்’ என்ற அடையாளம் மட்டும் போதாது. தேர்தல் என்று வரும்போது தி.மு.கவும், அ.தி.மு.கவும் செய்யும் உள்ளடி வேலைகள் எதிர்பாரா தாக்குதல்களாக இருக்கும். அவற்றைத் தாக்குப் பிடித்து நிற்பதற்கு அசுரபலம் அவசியம். கமல் அமைப்பு ரீதியாக தமிழகமெங்கும் தன்னைப் பலப்படுத்தி, பட்டி தொட்டியெங்கும் காலூன்றுவதற்கு கடுமையாக களப்பணியாற்ற வேண்டியிருக்கும். எக்கச் சக்கமான கோடிகளும் தேவைப்படும்.

கமல் என்ன செய்யப்போகிறார் என்பதை தமிழக வாக்காளர்கள் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்க,

வெற்றிக்கனியை கௌவி இழுத்துச் செல்ல எப்போது தேர்தலுக்கான அறிவிப்பு வரும் என்று வேட்டை நாயாக வெளியே காத்துக் கிடக்கிறது தி.மு.க! 

Comments