நெருக்கடிக்குள் கற்றலோனியா- குர்திஸ்தான் | தினகரன் வாரமஞ்சரி

நெருக்கடிக்குள் கற்றலோனியா- குர்திஸ்தான்

கலாநிதி 
கே.ரீ.கணேசலிங்கம் 
யாழ்.பல்கலைக்கழகம்
 

தேசிய இனங்களுக்கு பாதுகாப்பினைக் கொடுக்கும் சட்டமூலங்கள் காணப்பட்டாலும் நடைமுறையில் அவை பேணப்படுவதில்லை என்பது தொடர்கிறது. ஐக்கிய நாடுகளின் வரைபுகளை சர்வதேச விதிகளாகக்கருதும் நிலை கடந்த நூற்றாண்டு முழுவதும் காணப்பட்டது போன்று 21 ஆம் நூற்றாண்டிலும் பின்பற்றப்படுகிறது. ஆதிக்க அரசுகளின் இடமாற்றம், அல்லது அவற்றின் நலன்கள் மாறுதல் அடையும் வரை தேசிய இனங்களின் இருப்பு சவால் மிக்கதாக அமையும். கடந்த இரண்டு மாத காலத்தில் குர்திஸ்தான், கற்றலோனியா தொடர்பில் நிகழ்ந்த பொதுவாக்கெடுப்பின் பிந்திய நிலையை நோக்குவதே இக்கட்டுரையின் அவதானிப்பாகும்.

இருபத்தியோராம் நூற்றாண்டில் தேசிய இனங்கள் சுயநிர்ணயத்துடன் வாழ்வதற்கு பொதுவாக்கெடுப்பு சிறந்த வாய்ப்பினை ஏற்படுத்தியிருந்தது. அத்தகைய முயற்சி ஏனைய ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கு முன்னுதாரணமாக அமைந்ததுடன் ஜனநாயக விரும்பிகளுக்கும் அவர்கள் பாணியில் பதிலளிப்பதாக அமைந்திருந்தது. அது மிகச்சிறப்பான அனுபவமாக அமைந்தது. ஆனால் கற்றலோனியர்களும், குர்திஸ்தான்காரரும் தனித்துவமிக்க வலிமையுடனேயே பொதுவாக்கெடுப்புக்கு சென்றிருந்தனர் என்பது கவனத்திற்குரியது. குறிப்பாக கற்றலோனியர்கள் முழுமையான சுயாட்சி முறைமையை அனுபவித்திருந்தனர். தனித்துவமான ஆளுகையின் திறன்களை ஸ்பெயின் 1978 இற்குப் பின்பு வழங்கியிருந்தது. அத்தகைய சுயாட்சி வல்லமையில் தான் பிரிந்து செல்வதற்கான கோரிக்கையை முன்னெடுத்தனர்.

இரண்டாவது, குர்திஸ்தானியர் வலிமையான ஆயுதப் போராட்டத்தினைக் கொண்டிருந்தனர். அவர்களது நீண்ட கால போராட்டம் ஆயுதப் போராட்ட வழிமுறையுடன் சுயாட்சிப் பிராந்தியமாக அடையாளம் காணுமளவுக்கு வலிமையான தேசிய இனமாக விளங்க வழிவகுத்தது. அதன் வலிமையிலேயே பிரிந்து செல்வதற்கான பொதுவாக்கெடுப்புக்குச் சென்றிருந்தனர்.

இரு தேசிய இனங்களும் ஓரளவு வலிமையான அரைகுறை ஆளுகைக்குரிய வல்லமையுடனேயே பிரிந்து செல்வதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தி வெற்றிபெற்றன. அது மட்டுமன்றி பிராந்திய அரசியல் சூழலும் அவ்வினங்களுக்கு சாதகமானதாக அமைந்திருந்தது. அந்தந்த நாடுகள் நிராகரித்தாலும் ஏனைய பிராந்திய அரசுகள் அதற்கு எதிரான அணுகுமுறையைப் பின்பற்றவில்லை. அவ்வாறு நிராகரிப்பதென்பது ஜனநாயகத்தினை நிராகரிப்பதாக அமையும். அதனால் தான் இரண்டு தேசிய இனங்களின் பொதுவாக்கெடுப்பினையும் உள்நாட்டு விடயம் எனக்கூறிவிட்டு மறைமுகமாகச் செயல்படுகின்றன. ஸ்பெயினை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மேற்கு ஐரோப்பியருக்கு எழுந்தது போல் ஈராக்கினைப் பாதுகாக்கும் பொறுப்பு அமெரிக்காவுக்குரியதாக அமைந்துள்ளது. ஆனால், வெளிப்படையாக அன்றி மறைமுகமாகப் பிராந்திய நாடுகள் தமது தேசங்களிலுள்ள தேசிய இனங்கள் பற்றிய சிந்தனையிலேயே செயல்படுகின்றன.

கற்றலோனியா

கற்றலோனிய தலைவர், வன்முறையைத் தூண்டியவர்கள் என்ற அடிப்படையில் கற்றலோனிய பிரிவினைக்கு ஆதரவளித்த இரு தலைவர்களை ஸ்பெயின் சிறையிலடைத்துள்ளது. பொதுவாக்கெடுப்புக்கு ஆதரவு திரட்ட அவர்கள் எடுத்த பிரசார நடவடிக்கைகள் வன்முறையைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. அத்தகைய நடவடிக்கைக்கான பேச்சுக்களை ஆதாரமாகக் கொண்டு அவர்கள் மீது வழக்கினை ஸ்பெயின் பொலிஸார் பதிவு செய்தனர். அவர்கள் மீதான விசாரணைகளை மேற்கொண்டு அவர்களது அலுவலகங்கள் சோதனை இடப்பட்டு அதில் கிடைத்த தரவுகளையும் ஆதாரப்படுத்தி நீதிமன்றம் பிணையில் வெளிவரமுடியாத சிறைத்தண்டணை விதித்துள்ளது. குறிப்பாக கற்றலோனியாவின் தலைவர்களான ஜோர்டி சன்செஸ் மற்றும் ஜோர்டி கியுசார்ட் ஆகியோரே சிறையிலடைக்கப்பட்டவர்கள்.

கற்றலோனியா மீதான ஸ்பெயின் நடவடிக்கை அதன் பொருளாதாரம் மீதானது என்ற கருத்துநிலையை அதிகம் பதிவாகியுள்ளது. கற்றலோனியா பிரிந்து செல்வதென்பது ஸ்பெயினின் பொருளாதாரம் முழுமையாக சரிந்துவிடும் ஆபத்திலுள்ளது. அதனை தவிர்ப்பதற்கான நடவடிக்கையையே ஸ்பெயின் முன்னெடுத்து வருகிறது. முதலில் கற்றலோனியாவின் தலைநகரமான பர்சிலோனியாவை ஸ்பெயின் கோரியிருந்தது. பர்சிலோனியா மிக முக்கியமான பொருளாதார மையம். சந்தைக்கான இருப்பிடம் என்பதற்காகவே ஸ்பெயின் அதனை கைவிட மறுக்கின்றது. அவ்வாறே கற்றலோனியர்களும் கருதுகின்ற னர். சர்வதேச மட்டத்திலும் ஐரோப்பாவுக்குள்ளும் பிரபலமான நகரம் பர்சிலோனியா. அதனை இருதரப்பும் தக்கவைக்க வேண்டுமெனக் கருதுகின்றது. பொதுவாக்கெடு ப்பின் அடுத்த கட்ட நகர்வுக்கு நெருக்கம் ஏற்பட்டதற்கு பொருளாதார காரணியே முக்கியமானதாகும்.

குர்திஸ்தான்

குர்திஸ்தான் தன்னாட்சிப்பகுதிக்குள் ஈரான் இராணுவம் நுழைந்துள்ளது. பொதுவாக்கெடுப்பினால் அச்சமடைந்த ஈராக், அதற்குப் பதில் வழங்கும் விதத்தில் குர்து இனத்தின் படையினருக்கு எதிராக தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இத்தாக்குதல் வாயிலாக பொதுவாக்கெடுப்பினை நிராகரிப்பதை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த வாரம் ஆரம்பித்த படை நடவடிக்கையானது குர்திஸ்தானின் முக்கிய நகரமான குர்திக்கில் கணிசமான பகுதிகளை கைப்பற்றிவிட்டதாக ஈராக் கூட்டுப்படை இராணுவத்தின் தலைமையகம் அறிவித்துள்ளது. இது பாரிய நகரமெனவும் முக்கிய அரச இயந்திரம் அமைந்திருப்பதுடன் தொழிற்சாலை மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் தொழில் மையங்கள் உள்ள பகுதி என்ற விதத்தில் மிக முக்கியமான பிரதேசமெனக் கூறுகின்றது. இவை முழுமையான மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும் கூட்டுப்படைத் தலைமையகம் அறிவித்துள்ளது.

இந்நகரத்தினை ஐஎஸ் கைப்பற்றியிருந்த போது அமெரிக்க மற்றும் ஈராக் இராணுவம் குர்த்து படைகளுடன் இணைந்தே கடந்த காலத்தில் கைப்பற்றியிருந்தது என்பது கவனிக்க தக்கது.

மேற்காசியாவில் மீண்டுமொரு இஸ்ரேல் உருவாவதை அனுமதிக்க முடியாதென ஈராக் பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை நினைவுகூரத்தக்கது. அந்தளவுக்கு ஆபத்தானவர்களாக குர்துகளை ஈராக்கியர்கள் கருதுகின்றனர்.

குர்திஸ்தானுக்கு ஆதரவாக பிராந்திய அரசுகள் குரல் கொடுக்காத போதும் நிராகரிப்பினை அயல்நாடுகள் வெளிப்படுத்தியுள்ளன. காரணம் குர்த்துகள் வசிக்கும் பிரதான நாடுகளில் அதிகமான அச்சுறுத்தலாக அமைந்து விடுவார்கள் என்ற எண்ணமேயாகும்.

எனவே, இரண்டு தேசிய இனங்களின் பொதுவாக்கெடுப்பு நெருக்கடியான சூழலை தந்துள்ளது. அரசுகளின் ஜனநாயகப் பேணுகைச் சூழலும் அதன் அரசியல் கலாசார மரபும் அதிக பிரதிபலிப்பை ஏற்படுத்தக்கூடியதவை. கற்றலோனியர்கள் ஜனநாயக ஆயுதங்களால் சிறையிலடைக்கப்பட குர்துக்கள் இராணுவ நடவடிக்கையால் அடக்கப்படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டுமே தேசிய இனங்கள் மீதான அடக்குமுறை என்பதை விளங்குதல் அவசியமானது. இது ஒன்றும் புதியதோ அல்லது அத்தகைய இனங்கள் அனுபவிக்காததோ இல்லை. ஆனால், அது ஒரு சாதகமான சூழலாக சர்வதேசத்திற்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச சட்டம் குறிப்பிடுவதுபோல் தேசிய இனங்களுக்கு சுயநிர்ணயம் உண்டென்ற விதியின் கீழ் தாம் பிரிந்து செல்ல விரும்புவதாக 90 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, அவர்களது கோரிக்கை நியாயமானது என்பதற்கு அப்பால் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்திலுள்ளது. ஐரோப்பியர் கூறுவது போல் இரு தேசிய இனங்களின் கோரிக்கையும் உள்நாட்டு விடயமாக அமையாது. வாக்கெடுப்புக்குப் பின்னர் குர்து ஒரு சர்வதேச விவகாரம். அதனைப் பின்பற்றும் பொறிமுறை ஒன்றும் உலகத்தில் இல்லை என விவாதிக்க முடியாது. 90 வீதமான ஆதரவு என்பது பதிவாகிய விடயம். அதனை ஆதாரமாகக் கொண்டு அவை எதிர்காலத்தில் நம்பிக்கையுடன் செயல்படும் என்பதற்கு அப்பால், ஆளுகை அரசுகள் அவர்களுக்கான தன்னாட்சி பரப்பினை அதிகரிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அடக்கு முறை அதிகரிக்கும் போது சர்வதேச மட்டத்திலுள்ள ஓர் அரசு அத்தகைய பொது வாக்கெடுப்புக்கு அமைவாக அங்கீகரிக்குமாயின் நி​ைலமை தலைகீழானதாக மாறும்.

ஆகவே, பொதுவாக்கெடுப்பானது இரு தேசிய இனங்களுக்கும் அதிக நெருக்கடியை ஏற்படுத்தினாலும் எதிர்கால உலக ஒழுங்கில் ஏற்படப் போகும் மாற்றங்களால் அவர்களது கோரிக்கை சாத்தியமானதாக அமையலாம். அதற்கான வாய்ப்பு இல்லை என்பது முடிவாக அமையாது.

Comments