![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2017/11/18/Untitled-12.jpg?itok=KjgwhGcm)
ஆபிரிக்க நாடுகளின் அரசியலில், நீண்ட காலம் ஆட்சி புரிந்த சிம்பாப்வேயின் ஜனாதிபதி றொபேட் கப்ரியல் முகாபேயும் அவரது குடும்பத்தினரையும் அந்த நாட்டு இராணுவம் வீட்டுக்காவலில் வைத்துள்ளது. ஏறக்குறைய 93 வயதான முகாபே 1980 களிலிருந்து இன்று வரை ஆட்சியதிகாரத்தில் தொடர்ச்சியாக அங்கம் வகிப்பதுடன் சர்வாதிகார அணுகுமுறைக்குள்ளால் ஆளுமை அரசியலை பயன்படுத்தும் ஆட்சியாளனாகவும் காணப்படுகிறார். முகாபேயின் வீட்டுக்காவல் ஏற்படுத்தியுள்ள அரசியலை தேடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
முகாபேயின் ஆட்சிக்காலம் 37 வருடங்கள். சுதந்திரத்திற்கான போராட்டத்தின் போது 11 வருடங்கள் சிறையிலிருந்த முகாபே 1980 முதல் 2017 வரை ஆட்சியிலுள்ள தலைவராக விளங்குகிறார். சிம்பாப்வேயின் தேர்தல்களும், அரசியல் கட்சிகளும், ஜனநாயகத்தின் சுலோகங்களை உச்சரித்துக் கொண்டனவேயன்றி உண்மையான ஜனநாயகம் பேணப்படவில்லை. ஜனாதிபதி தேர்தல் பாராளுமன்ற தேர்தல் அனைத்திலும் எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு ஏற்படும் அழுத்தங்களால் அவர்கள் நாட்டைவிட்டு ஓடிய சம்பவங்களே அதிகமாகும். 2009 களில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டுமே முகாபேயின் அரசியல் கட்சியான – ZANU தனித்தே அதன் கூட்டான PF உடனோ சேர்ந்து பெரும்பான்மையை பெறமுடியவில்லை இதனால், MDS கட்சியுடன் இணைந்து ஆட்சியை உறுதிப்படுத்திக் கொண்டது.
பிரதானமாக சிம்பாப்வேயின் வறுமை, பொருளாதார வாய்ப்புக்களுக்கான போட்டித்தன்மை, சரியான சம பங்கீட்டின்மை, தொழில் வாய்ப்பின்மை, இளைஞர்களுக்கான வேலையின்மை போன்ற பல நெருக்கடிக்குள்ளால் பயணிக்கும் சிம்பாப்வே அதிக நிலச்சீர் திருத்தம் பற்றிய சர்ச்சையிலும் சிக்கியுள்ளது. குறிப்பாக முகாபேயின் அரசாங்கம் 2000 ஆண்டுக்கு பின்னர் பாரிய நிலச்சீர்திருத்த சட்டம் ஒன்றினை முன்வைத்தது. அதன் பிரகாரம் வெள்ளையர்கள் சிம்பாப்வேயின் மண்ணிலிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கையாக அமைந்திருந்தது. இதனால் ஏற்பட்ட முரண்பாடு கொமன்வெல்த் அமைப்பிலிருந்தும், மேற்கு நாடுகளுடனான உறவிலிருந்தும் விலகியிருக்க வேண்டிய நிலை முகாபேவுக்கு ஏற்பட்டது.
இத்தகைய நிலச்சீர்திருத்தச் சட்டம் மேற்கு நாடுகளுடனான உறவைப் பாதித்ததுடன் பாரிய குற்றச் செயலுக்குரியவராக உலகம் முழுவதும் முகாபே பற்றிப் பிரசாரம் வலுவடைந்தது. ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்ய முடியாத நிலையும் அவருக்கு ஏற்பட்டது. உள்நாட்டு அரசியலில் நிலைத்திருப்பதற்கான அடக்குமுறைகளைக் கடைப்பிடித்த முகாபேயால் சர்வதேச அரசியலுக்குள் பிரவேசிக்கவே பொருளாதார, இராணுவ, ஒத்துழைப்புக்களை பெறமுடியாதவராக காணப்பட்டார். இதனால் எல்லையற்ற வறுமையும், பொருளாதார ஏற்றத்தாழ்வும், உரிமையோ அற்ற மக்கள் கூட்டத்தின் ஆதங்கமும் உடைய நாடாக சிம்பாப்வே மாறியது.
இத்தகைய சூழலே முகாபே மீது பிராந்திய சர்வதேச மட்டத்தில் அதிக நெருக்கடி ஏற்பட ஆரம்பித்தது. அவரை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கு மேற்கு நாடுகள் அதிக அக்கறை எடுத்திருந்தன. எவ்வாறு அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் முகாபேயை குற்றவாளி எனக்கருதுகின்றனவோ அவ்வாறே சிம்பாப்வே இராணுவமும் கருதுகிறது. குற்றவாளியை வீட்டுக்காவலில் வைத்துள்ளதாகவே சிம்பாப்வே இராணுவம் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளது. ஆனால், இராணுவம் ஆட்சிமாற்றத்துக்கான நடவடிக்கையாகவே இதனைக் கருதுகிறது. குறிப்பாக இதனை ஓர் இராணுவ சதிப் புரட்சி என அழைப்பதில் இராணுவம் விரும்பாத நிலையும் காணப்படுகிறது. அதே நேரம் அவரை பதவியிலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கையாக கருதுகிறது.
இச்சர்ச்சையை சுமூகமாக தீர்த்துக் கொள்வதற்கு தென் ஆபிரிக்க நாட்டு தலைவர் ஜேக்கப் சுமோ முயற்சியெடுத்துள்ளார். தனது தூதுவர் ஒருவரை இராணுவத்துடன் சேர்ந்து முகாபேயை சந்திக்க அனுப்பியுள்ளார். அதே நேரம் நாட்டுக்குத் தேவையானதும், பொருத்தமானதுமான நடவடிக்கையை சிம்பாப்வே இராணுவம் எடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார். அதே நேரம் அரசியலமைப்புக்கோ, ஜனநாயகத்துக்கோ முரணான விடயம் எதனையும் மேற்கொள்ள வேண்டாமென இராணுவத்தினை சுமோ கோரியுள்ளார்.
இந்த விடயத்தில் சீனாவும் சம்பந்தப்பட்டதாக வெளியான தகவல்களை சீனாவின் வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது. காரணம் கடந்த வாரம் சீனாவுக்கு சிம்பாப்வே இராணுவத்தளபதி Constantino Chiwengo விஜயம் செய்திருந்தார். அவரே இப்புரட்சிக்கு தலைமை தாங்குவதனால் சீனாவின் வழிகாட்டல் ஆலோசனை அமைந்திருக்கலாமென கருதப்படுகிறது.
அதனை சீனா நிராகரித்துள்ளது. இருந்த போதும் ஆபிரிக்க கண்டம் முழுவதுக்குமான சுற்றுப்பாதையை அமைப்பதில் சீனா வெற்றி கண்டுள்ளது. ஏறக்குறைய ஆபிரிக்காவை ஒன்றிணைக்கும் நெடுஞ்சாலைகளை அமைப்பதில் கணிசமான வெற்றியை எட்டியுள்ளமை மட்டுமன்றி ஆபிரிக்க நாடுகளுடனான சீனாவின் பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம், தகவல் தொடர்பாடலின் தொழில்நுட்ப மையங்கள், உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றமை எனப் பல விடயங்களில் ஆபிரிக்க நாடுகளுடன் சுமூக உறவைப் பேணிவருகின்றது சீனா. அந்த வகையில் இக்கண்ட நாடுகளுடன் உள்ள உறவின் பிரதிபலிப்பாக சிம்பாப்வே விடயம் அமைந்திருக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது. முகாபேயின் நிலச்சீர்திருத்தச் சட்டம் ஒட்டுமொத்த அன்னிய தேசங்களுக்கும் ஆபத்தானதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முகாபேயின் அரசியல் பயணம் ஏறக்குறைய முடிபுக்கே வந்துள்ளது எனலாம். மிக நீண்டகாலம் ஆட்சியில் அமர்ந்திருந்தார் என்ற தகமையுடன் சிம்பாப்வேயை விட்டு வெளியேற விரும்புவதாக தகவல்கள் வெளிவருகின்றன. தென் ஆபிரிக்கத் தலைவர்களுடனான பேச்சுவார்த்தையின் போது முகாபே தரப்பிலிருந்தும் அவரது மனைவியிடமிருந்தும் அத்தகைய கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நீண்ட காலம் தென்கிழக்காசியத் தலைவர்கள் ஆட்சியில் அமர்ந்திருந்தார்கள். குறிப்பாக லிகுவான்யூ, சுகர்ட்டோ, போன்றவர்கள். ஆனால் அவர்கள் தெளிவான கொள்கையுடன் தமது தேசங்களைப் பொருளாதார செழிப்பிலும், தன்னிறைவிலும் சிறந்த வாழ்க்கை முறையைத் தமது மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதிலும் வெற்றி கண்டார்கள்.
ஆனால், முகாபே வறுமையையும், முரண்பாட்டையும், அடுத்த தலைவருக்கான வாய்ப்பின்மையையும் ஏற்படுத்திவிட்டு செல்லும் தலைவராக உள்ளமை கவனிக்கத் தக்கது. இராணுவத்தினை ஆட்சியில் அமர்த்தும் துயரத்தை சிம்பாப்வேக்கு ஏற்படுத்திவிட்டுச் செல்லும் தலைவராக உள்ளார்.
எனவே நெல்சன் மண்டேலாவுக்கு முன் ஆபிரிக்கா என்ற நியாயமான பதிவில் முகாபே கறையை ஏற்படுத்திவிட்டுச் செல்கின்றார். ஆபிரிக்க யூனியனதும் தென் ஆபிரிக்காவினதும் பிரதான நோக்கம் இராணுவ ஆட்சியைத் தவிர்ப்பதாகவே உள்ளது. முகாபே புரட்சிகரமான அரசியல் வாதியாக பிரவேசித்து கறைபடிந்த ஆட்சியாளனாக சிம்பாப்வேயைத் துயரத்திலும் இருண்ட யுகத்திற்குள்ளும் விட்டுச் செல்கின்றார்.
கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ்.பல்கலைக்கழகம்