சிரியா ஆளும் அரசாங்கம் மீதான ஐ.நா.சபையின் தீர்மானம் ஒன்றினை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்தது. ஐ.நா.சபையின் நிரந்தர பாதுகாப்பு சபை உறுப்பு நாடுகளான ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா என்பன கொண்டுள்ளன. இதில் எந்த நாடு ஐ.நா.சபை கொண்டு வரும் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்கின்றதோ அத்தகைய தீர்மானம் ரத்தாகும் மரபு காணப்படுகிறது. ஏனைய 10 தற்காலிக பாதுகாப்பு சபையின் உறுப்பு நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொண்டாலும் நிரந்தர உறுப்பு நாடுகளே தீர்மானம் எடுக்கும் சக்தியாக அமைந்து விடுகின்றன. சிரியா – ரஷ்யா உறவின் பலமும் உலக அரசியலில் காணப்படும் நிலையையும் தேடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இரசாயன தாக்குதல் குறித்து சிரியா அரசின் மீது விசாரணை செய்யும் நோக்குடன் ஐ.நா.சபை விசாரணைக் குழுவை அமைத்து நடவடிக்கையில் ஈடுபடத் திட்டமிட்டது. சிரியா விவகாரத்தைப் பொறுத்தவரை அமெரிக்க கிளர்ச்சியாளரையும் ரஷ்யா சிரியா அரசாங்கத்தையும் ஆதரித்து செயல்பட்டு வருகின்றன. இரண்டு தரப்புமே தீவிர அணுகுமுறைக்குள் செயல்படுவதுடன் மூன்றாவது தரப்பாக ஐ.எஸ் மீதான நடவடிக்கையில் அமெரிக்க – ரஷ்யத்தரப்பு கூட்டாக செயல்படப்போவதாகவும் கூறி வருகின்றன.
அரபு வசந்தம் மேற்காசிய முழுவதும் மிகத் தீவிரமான மாற்றத்தை ஏற்படுத்தி வந்தது. பெருமளவுக்கு அமெரிக்காவுக்கு எதிரான தரப்புக்களை அழித்து சார்பான தரப்பினை ஆட்சியில் அமர்த்துவதற்கான நடவடிக்கையாகவே அரபு வசந்தம் காணப்பட்டது. அதன் வேகத்தினை கட்டுப்படுத்தவும் சிரியாவின் அவசியப்பாட்டை உணர்ந்த ரஷ்யா, சீனா போன்ற பாதுகாப்பு சபை நாடுகள் அமெரிக்காவுக்கு போட்டியாக செயல்பட்டு வருகின்றன. ஏறக்குறைய சிரிய அமெரிக்க தரப்பின் மேற்காசியா மீதான எண்ணத்தை தடுக்கும் மையமாகவோ, சுவராகவோ மதிப்பிடப்படுகின்றது. சிரியாவை கடந்து அமெரிக்க அரபு வசந்தம் செயல்படமுடியாத நெருக்கடி நிலையானது ரஷ்யாவால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ரஷ்ய – அமெரிக்க நட்பு பற்றிய உரையாடல் அமைந்திருந்தாலும் பிராந்திய அடிப்படையில் ரஷ்யாவின் நலனுக்கு விரோதமாக எந்த நாடு செயல்பட்டாலும் அதனை எதிர்க்க தயாராகவுள்ளது. அதற்கான எந்த நடவடிக்கையும் ரஷ்யா மேற்கொள்ள விரும்புகிறது. இராணுவ ரீதியில் பதிலளிக்கும் திறனும் வல்லமையும் கொண்டிருப்பதுடன் சர்வதேச மட்டத்தில் சிரியாவுக்கு உத்தரவாதம் அளிக்கும் எல்லா நடைமுறைகளையும் பிரயோகித்து வருகிறது.
இது அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு தடைபோடும் விடயமாகும். ரஷ்யாவுடன் சீனாவும் கூட்டுச் சேர்நதுள்ளது.
ஆனால் ஐ.நா.வின் தீர்மானத்தில் வாக்களிக்காது வெளிநடப்புச் செய்யும் மரபினை சீனா இன்றுமே கைவிடவில்லை. அது வெளிப்படையான சர்வதேச வல்லரசுக்கான போட்டியினை தவிர்க்க விரும்புவதாகவே தெரிகிறது. ஆனாலும் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.
சிரியாவில் 2014 – 2015 காலப்பகுதியிலிருந்து 20-17 வரையான காலப்பகுதியில் பல இரசாயனத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் தாக்குதலில் மட்டும் 100 க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். அதில் பெண்கள் குழந்தைகள் அதிகம். சிரியா அரசாங்கம் அத்தாக்குதல்களை கிளர்ச்சியாளரோ, ஐ.எஸ் அமைப்பினரோ தாக்கியிருக்குமெனவும் அமெரிக்காவும் கிளர்ச்சியாளரும் சிரியாவின் அரசாங்கம் மீதும் குற்றம்சாட்டி வருகின்றன. இது தொடர்பாக ஐ.நாவின் கூட்டு விசாரணைக்குழு மேற்கொண்ட விசாரணையில் சிரியாவின் அரச படை குளோரின் வாயுவை பயன்படுத்தி தாக்கியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது என அறிவித்தது. அதன்பின்பே கான்ஷோக்கான் பகுதியில் சரின் வாயுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதனை அடுத்தே சிரியாவில் நிகழ்ந்து வரும் இரசாயனத் தாக்குதலுக்கான விசாரணையை ஆரம்பிக்க விசாரணைக்குழு அமைப்பதற்கான தீர்மானம் முன்வைத்து ஐ.நா வாக்கெடுப்புக்கு விடுத்தது.
ஆனால் ஈராக் விடயத்தில் அமெரிக்காவும் ஐ.நாவும் எத்தகைய தீர்மானம் எடுத்து சதாம் ஹுசைனை முடித்தார்களோ அதே பாணியில் சிரியாவின் ஜனாதிபதி அல் ஆசாத்தையும் அவரது ஆட்சியையும் முடிவுக்கு கொண்டுவர இத் தீர்மானத்தில் திட்டமிடப்பட்டது. ஈராக்கின் அனுபவத்தினை சிரியாவில் மேற்கொண்டுவிடக்கூடாது என்பதில் ரஷ்யா கவனமாக செயல்படுகிறது. இது மேற்காசிய அரசியலில் சமநிலையை ஏற்படுத்தியுள்ளதை வெளிப்படையாக காட்டுகிறது.
அதிகாரச் சமநிலை குறைவடைவது உலகளாவிய அரசியலுக்கு சாதகமானது கிடையாது. இதில் ரஷ்யத் தரப்பு அமெரிக்கத் தரப்பை விட சிறப்பானதோ இல்லையோ என்பதல்ல வாதம். ஆனால் உலகம் சமநிலைக்குள் பயணிக்கும் போதும் சில நாடுகள் தனித்து உலகத்தினை அழித்துவிட முடியாது. அதுமட்டுமன்றி மேற்குலகத்தின் கடந்த கால அனுபவங்கள் நம்பிக்கையற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது. சதாமை வீழ்த்துவதற்கு அமெரிக்கா பாவித்த மிகப் பிரதான ஆயுதம் இரசாயனத் தாக்குதல் எனும் பொய்யான தகவலே இறுதியில் ஏதுமில்லை எனக் கைவிரித்தது ஐ.நா சபை
எனவே சிரியா விடயத்தில் ரஷ்யாவின் கவனம் மேற்காசியாவை அமெரிக்கா தனித்து கைப்பற்ற முடியாது என்பதாகும். ரஷ்யாவின் வளங்களும் கடற்படை துறைமுகங்களும், கப்பல் போக்குவரத்தும், நீர்முழ்கிகளின் நடமாட்டத்துக்கான வாய்ப்புக்களையும் இழக்க விரும்பாது என்பதுடன் அமெரிக்காவின் ஆதிக்க கிழக்கு ஜரோப்பாவையும், மத்திய ஆசியக் குடியரசுகளையும் நோக்கி நகர்ந்துவிடும் அமெரிக்காவின் ஆதிக்கத்தை தடுப்பதே ரஷ்யாவின் பிரதான திட்டமிடலாக உள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்காவின் நகர்வு சிரியாவில் சாத்தியப்படாமைக்கு ரஷ்யாவின் நடவடிக்கைகளே காரணமாகும்.
மேற்காசியாவின் அரசியல் நிலையைத் தீர்மானிப்பதில் அமெரிக்க – ரஷ்ய போட்டி பிரதானமான அம்சமாக மாறியுள்ளது. ஆரம்பத்தில் அமெரிக்காவின் தனித்துவம் நிலவிய போதும் தற்போது ரஷ்யா சமவலுவை கொண்டு செயல்ப்படுகிறது. புட்டினும்−அசாத்தும் மேற்காசிய அரசியலை நிர்மாணிக்கும் பலமான நட்பு நாட்டின் தலைவர்களாக உள்ளனர்.